படை என்ற வினைச்சொல்லுக்குப் புதியதாக ஒன்றை உருவாக்கு என்று பொருள். படை என்ற பெயர்ச்சொல்லுக்கு ராணுவம் என்று பொருள். மொழி இப்படித்தான் கோக்குமாக்காக உருவாகி விடுகிறது. இதற்குள் ஏதேனும் தொடர்பு இருக்க முடியுமா என்பது கேள்வி. நான் மொழியியல் வல்லுனர் இல்லையென்றாலும், இப்படியான ஒரு தூண்டுதலை முன்வைத்து இலக்கியத்திற்கும் அரசியலுக்குமான தொடர்பை சிந்திக்க விரும்புகிறேன். அதுவும்கூட மிகவும் நெருக்கமாக, தர்க்கரீதியாக கட்டமைக்கப்பட்ட சிந்தனையாக இல்லாமல், மனதில் எண்ணங்கள் உதிக்கும் விதத்தில் எழுதிக்கொண்டு செல்ல விரும்புகிறேன். படைப்பாளிகள் கைக்கொள்ளும் முறைதான் இது. முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணம்.
பிரச்சினை என்னவென்றால் இலக்கியத்திற்கும், அரசியலுக்குமான தொடர்பு மட்டுமல்ல. இலக்கியவாதிகளுக்கும், அரசியலுக்கும் உள்ள தொடர்பையும் சேர்த்துதான் யோசிக்கப் போகிறேன். வேறு வார்த்தைகளில் சொன்னால் படைப்புக்கும், படைப்பாளிக்கும் இடையில் உள்ள படைத்தல் என்னும் செயல்பாட்டிற்கும், எதிரிகளை வெல்வது என்ற அரசியல் செயல்பாட்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் என்ன, ஒற்றுமைகள் என்ன, தொடர்புகள் என்ன, விலகல்கள் என்ன என்றெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதே விருப்பம்.
வழக்கம்போல ஒரு உள்கட்டுமானத்தை கட்டுரைக்கு வழங்காவிட்டால் துரிதமாக சிந்தனையைத் தொகுக்க முடியாது. அதனால் நான்கு பகுதிகளை உருவாக்கிக்கொண்டு சிந்திப்போம். 1) படைப்பு செயல்பாடு; 2)படையெடுக்கும் செயல்பாடு; 3) படைப்பும், படையெடுப்பும் விலகும் காரணங்கள்; 4)படைப்பும், படையெடுப்பும் சிந்திக்கும் தருணங்கள் என நான்கு உட்பிரிவுகளை உருவாக்கிக் கொண்டுவிட்டால் அவற்றிற்குள் பிரச்சினைகளை விரிவாகப் பேசலாம் என்று அனுமானிக்கிறேன்.
படைப்பு என்னும் செயல்பாடு
மனிதனின் படைப்பு என்பது இயற்கையோ, கடவுளோ, பிரம்மனோ செய்ததாகக் கருதப்படுவது போல முற்றிலும் புதியதென ஒன்றைச் செய்வதல்ல. இருப்பவற்றிற்குப் புத்துருவம் கொடுப்பதுதான் மனிதர்கள் படைப்பு; கல்லைச் செதுக்கி சிலையாக்குவது போல. இதில் புதியதென கொள்வது கற்பனையின் பங்கினைத்தான். இருப்பது போலவே செய்தாலும் செய்வதன் போக்கில் ஒரு சிறிய வித்தியாசத்தை சமைப்பதுதான் கற்பனை. அதுவே அதிகம் விகசித்து புதிய சாத்தியங்களை நோக்கிச் செல்வது படைப்பின் எல்லைகளை விரிக்கும் செயல். இதன் அடிப்படையாக அமைவது மனித இனத்தின் நரம்பியல் சாத்தியமான நினைவு சேகரம். செயல் என்பது கடந்து போக அதன் நினைவு என்பது தங்கிவிடுவதால், அந்த நினைவுகள் தங்களுக்குள் வினைபுரிந்து புலன் அனுபவத்திற்கான எதிர்வினை என்பதைக் கடந்து புலனாவதற்கும், நினைவிற்குமான ஊடாட்டமாகப் புதிய சாத்தியங்களை உருவாக்குவதே படைப்பு. அதாவது “நேற்று இதுதான் நடந்தது, அந்த மிருகத்தைக் கொன்றேன்” என்பதைக் கடந்த “ஒருவேளை அது நம்மைக் கொன்றிருந்தால்” என்ற சாத்தியத்தை யோசிக்க வைப்பதிலிருந்து சாத்தியங்களின் கற்பித வெளி தொடங்குகிறது.
நினைவு சேகரம் என்பது ஒரு குறிப்பிட்ட உடலின் செயல்பாடு. எனவே நினைவு சேகரம் தனக்குள் வினைபுரிவதும் அகவயமானது. ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற நான்கு பேர் ஒரு பொருளைப் பார்த்தாலும் அதை நால்வரும் வரையும்போது அவர்கள் அகம் உள்வாங்கி கைகளை செயல்படுத்தும் விதமாகத்தான் வரைவார்கள் என்பதால் நான்கு வித்தியாசமான ஓவியங்களே கிடைக்கும். இப்படி புறப்பொருளை அகவயப்படுத்துவதில் உள்ள மாறுபாடு, ஒருவருக்கொருவர் அந்த மாறுபாட்டைப் பரிமாறிக்கொள்ளும்போது சமன்செய்யப்பட்டு ஒரு பொதுவான மனப்பதிவு சாத்தியப்படுகிறது. எனவேதான் கூட்டு செயல்பாடு என்ற தளத்திற்கும் புலன் அனுபவத்தை அகவயப்படுத்தி பகிர்தல் என்பதே அடிப்படையாகிறது. அப்படியான பகிர்தலின் பொருட்டே மொழி உட்பட அனைத்துவிதமான குறிகளும் பயன்படுகின்றன. அதாவது அகவயப்பட்ட புலன் உலகத்தை மீண்டும் ஒரு மனித உயிரி புலப்படுத்துவது (பிறர் புலனுக்கு ஆட்படுத்துவது, “வெளி”ப்படுத்துவது) பகிர்தலின் பொருட்டே. ஒரு மனித உயிரி புலப்படுத்துவதை இன்னொரு உயிரி உள்வயப்படுத்திக்கொள்வது புலன் அனுபவத்தின் நீட்சியாகிறது. அதாவது “நான் ஒரு பெரிய மிருகத்தைப் பார்த்தேன்” என்ற உள்வயப்பட்ட நினைவுசேகரத்தை ஒரு மனிதி, இன்னொரு மனிதியிடம் மொழியாகவோ, குறிகளாகவோ புலப்படுத்தவது அந்த இரண்டாவது மனிதிக்கு புலன் அனுபவமாகவே உள்வயப்படுகிறது; அந்த மிருகத்தை நேரில் பார்க்காதபோதும்.
இப்படி சிலையாகவோ, சித்திரமாகவோ, மொழியில் அமைந்த பாடலாகவோ, கதையாகவோ அனுபவங்களை ஒரு மனிதி பதிவு செய்துவிட்டால் அதன் பிறகு அந்தப் பதிவு அனைவருக்குமான ஒரு பதிவாக மாறுகிறது. அதாவது அந்த அனுபவம் பொது அனுபவமாகிவிடுகிறது. நான் என் அனுபவத்தைக் கூறக்கேட்ட ஒருவர் அதைத் தன் அனுபவமாகக் கூறுதல் சாத்தியம்தானே. வாட்ஸ் அப் மெஸேஜை ஃபார்வார்ட் செய்வதுபோலத்தான் யார் ஒருவர் புலப்படுத்தும் அகவெளி அனுபவமும் பல கை மாறிப் பயணிக்கிறது. அது ஒரு நினைவுசேகரத்தில் உருவாகும்போதுதான் அது அந்த நபருடையது; அதைப் புலப்படுத்திய உடனே அது பொதுத்தன்மை கொள்கிறது. நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், குகை ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் இவற்றிற்கெல்லாம் ஆசிரியர், படைப்பாளி கிடையாது. எல்லாமே பொதுத்தன்மை கொண்ட அனுபவங்கள்தான். அதேபோல பலர் அனுபவங்களும் ஒரு வகைப்பாட்டில் ஒரு குறிப்பிட்ட கையெழுத்தை ஏற்பதும் சாத்தியம். கபீரின் மொழியாகப் பாடப்பட்டதெல்லாம் ஒரே நபரே எழுதியதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கபீர் என்பது ஒரு சிந்தனைப் போக்கு; ஒரு தரிசன நிலை. இப்படியான பொதுத்தன்மையை எட்டிய பிறகு ஒரு நபரா, பலரா என்பதும்கூட முக்கியமல்ல.
இந்தப் பொதுத்தன்மை ஒரு சில அடிப்படை அனுபவங்களை, பண்புகளை கொண்டதாக இருக்கும்போது அது எழுதப்பட்ட காலத்தைக் கடந்தும் பொருள் தருவதாக இருக்கிறது. என்றோ எழுதப்பட்ட குறள் இன்றும் தெளிவாக அனுபவத்தைப் புலப்படுத்துகிறது. இதன் பொருட்டே இவ்வாறு தங்கள் நினைவுசேகர விளைபொருளைப் புலப்படுத்தியவர்கள் அது என்றென்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்று அவாவுதும் சாத்தியமாயிற்று. இந்த உலகில் மலைகள் உள்ள அளவும் ராமாயண கதை படிக்கப்படும் என்று வால்மீகி கூறுவதோ, மனிதர்கள் மூச்சு விடும்வரை, அவர்கள் கண்களுக்குப் பார்வை சாத்தியப்படும்வரை என்னுடைய கவிதை வாழும், அதனால் பாடப்பட்ட நீயும் வாழ்வாய் என ஷேக்ஸ்பியர் கவிதையில் சொல்வதும் இது போன்ற விளைவைத்தான். பொது அனுபவம் காலம் கடந்த அனுபவமாகவும் இருக்கிறது; இருக்க வேண்டும் என்ற விழைவும் இருக்கிறது. அந்த அனுபவத்தைப் புலப்படுத்திய, வெளிப்படுத்திய நபரின் பெயர் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் இன்று அதனால் பெரிய இழப்பு இல்லை. கணியன் பூங்குன்றனார் என்றால் அதுவும் பெயர் அவ்வளவுதான். அந்த நபரை நாம் எப்படியும் இனம் காண முடியாது. அது பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு அடையாளமே. எழுத்துரு எனலாம்.
அச்சு ஊடகத்திற்குப் பிறகான காலத்தில், அதுவும் அச்சு நூல்களின் வணிகம் பரவலான பிறகு, எழுத்தின் ஈவு முன்னம்போலவே பொதுமைப்பட்டாலும், ஒரு மீதம், எச்சம் எழுத்தாளன், படைப்பாளி என்ற அடையாளமாக மாறியது. அந்த எழுத்தாளன் யார், அவன் எழுதியது எவ்வாறு என்பது போன்ற கேள்விகள் முக்கியத்துவம் பெற்றன. காலப்போக்கில் எழுத்தை விட எழுத்தாளனின் கீர்த்தி தனியாக உலா வரத் துவங்கியது. பிக்காஸோ என்ற பெயர் அவர் ஓவியங்களை விட பிரபலமாக இருக்கிறது எனலாம். அந்தப் பெயர் தெரிந்த பலரிடம் மூன்று ஓவியங்களைக் காட்டி இதில் எது பிக்காஸோ வரைந்தது என்று கேட்டால் தெரியாமல் இருப்பது சகஜம். இது படைப்பாளியை ஒரு முக்கியமான சமூக இருப்பாக மாற்றுகிறது. எழுத்து வாசகனால் முழுமையாக வகுக்கப்பட்டுவிட்டால் எழுத்தின் ஈவு அவனுக்குள் சென்ற பிறகு எழுத்தாளன் மீந்திருக்க மாட்டான் அல்லது அந்த எழுத்தின் அடையாளமாக மட்டும் இருப்பான். ஆனால் அப்படி நடக்காதபோது அவன் சமூக அடையாளமாக மீந்திருப்பான். ஒரு சமூகப் பிரபலமான படைப்பாளி ஒரு “படை”-கலம்தான் என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு எழுத்தாளனின் சமூக அடையாளம் அவன் எழுத்து சுவீகரித்த பொதுத்தன்மைகளை, பொது அனுபவங்களைத் தனக்குள் சேகரித்துக்கொள்ள முற்படுகிறது. இது படைப்பின் துவக்ககால நடைமுறைக்கு எதிர்திசையில் செல்கிறது. அதாவது தன்னுடைய நினைவுசேகரம் தனக்குள் வினைபுரிவதைப் பொதுமைப்படுத்திய துவக்ககால செயல்பாட்டிற்கு மாறாக, நவீன எழுத்தாளன் பொதுவயப்பட்ட பல்வேறு பதிவுகளைத் துரிதமாக அகவயப்படுத்தி வெளியிட்டு அதன் மூலமாகத் தன்னை ஒரு சமூக அடையாளமாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் உருவாகிவிட்டது. ஈவு குறைவு, மீதி அதிகம். பரவலான நவீன கால பொது அனுபவ எழுத்தாளரை, பரவலான பொது அனுபவ வாசகர் அகவயப்படுத்தும்போது அதுதான் நடக்கிறது. எழுத்தாளரின் சமூக அடையாளம் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. பிரபலங்களின் கலாசாரத்தில் படைப்பாளிகளும் இடம்பெறத் துவங்குகிறார்கள். இதன் உபவிளைவாக படைப்பாளியை வைத்துப் படைப்பை இனம்காண்பதும், அதற்குப் பொருள்காண்பதும் நடக்கத் துவங்குகிறது. பொதுமைப்படும் படைப்பு மீண்டும் புலப்படுத்திய படைப்பாளியின் அக உலகத்திற்குள் துரத்தப்படுகிறது. படைப்பாளியே படைப்பின் விளக்கமாக மாறுவது நிகழ்கிறது. முதலீட்டியம் உருவாக்கும் மாயக்கண்ணிகளில் ஒன்றாகப் படைப்பாளி மாறுகிறான்.
இந்த நிலையினை எதிர்கொள்ள படைப்பு என்பதைப் பிரதி என்று கூறும் தேவை எழுந்தது. அதாவது அகவயப்பட்ட நினைவுசேகரத்தின் செயல் எதுவாக இருந்தாலும், அது பொதுவயப்பட்ட தன்மையே முக்கியம் என்பதால் அது படைப்பு என்பதைவிட ஒரு பனுவல் அல்லது பிரதி என்றே பார்க்கப்படவேண்டும் என்ற புரிதல் அவசியமாகியது. அது எப்படி ஆக்கப்பட்டது என்பதல்ல, அப்படியான ஆக்கத்தின் சாத்தியங்களே முக்கியம் என்று புரிந்துகொள்வது அவசியமாகியது. பிக்காஸோ என்பது பிக்காஸோ மட்டுமல்ல, மட்டீஸ்ஸெ கூடவும்தான் என்னும்போது படைப்பு ஒரு சமூகவியல் சாத்தியமாகிறது. மீண்டும் பொதுவயப்படுகிறது. அந்த வகையில் படைப்பின் துவக்ககால முக்கியத்துவத்தை மீட்டெடுக்க இடையில் படைப்பாளி பெறத்துவங்கிய முக்கியத்துவத்தைக் கேள்விக்கு உட்படுத்தி, படைப்பை முக்கியத்துவப்படுத்துவது தேவையாகிறது. என்னுடைய நினைவுசேகரத்தின் செயல்பாடுகளை “நான்” தூண்டினேனே, நான் அவற்றைப் புலப்படுத்தினேனே, வெளியிட்டேனே, நான் முக்கியமில்லையா என்று படைப்பாளிகள் கேட்பதும் சாத்தியம்தான். இதோ நானும் கூட இதை நள்ளிரவில் எழுதிக்கொண்டிருக்கிறேனே என்று தோன்றத்தான் செய்யும். ஆற்று நீரைக் கையில் ஏந்தி மீண்டும் ஆற்றில் விட்டபிறகு, ஓடுகிற நீரில் என் கை நீர் எது என்ற கேள்வியை கவிஞர் சுகுமாரன் எழுதினார். நம்முடைய நினைவு சேகரத்தில் எவ்வளவு தனித்துவ வினைபுரிந்திருந்தாலும் பொதுவிலிருந்து எடுக்கப்பட்டு, பொதுவிலேயே விடப்பட்டதுதான் அனுபவம்.
இந்தக் கோட்பாட்டை வலியுறுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஆப்த வாக்கியம்தான் ஆசிரியர் இறந்துவிட்டார் என்ற கூற்று. அதாவது அர்த்த உருவாக்கத்தின் சாத்தியம் பிரதியில், மொழியில்தான் அடங்கியுள்ளது என்பதால் அங்கே ஆசிரியரின் நினைவு சேகரம் என்ற விளைநிலத்திற்கு முக்கியத்துவம் எதுவுமில்லை என்பதுதான் இந்தக் கருத்து. கனியினுள் விதைகள் உள்ளன; அவை நிலத்தில் விழுந்து முளைத்து மீண்டும் கனியாகின்றன. கனிகளைத்தான் உண்போமே தவிர, வேர்கள் புதைந்துள்ள மண்ணை உண்பதில்லை. அது அவசியமுமில்லை. சொற்களிலிருந்து சொற்களும், கதைகளிலிருந்து கதைகள், அனுபவத்திலிருந்து அனுபவமும் பெருகுகின்றன. இதில் தனிப்பட்ட நினைவுசேகரங்கள் வெறும் கடத்திகள்தான். இந்த பொருளிலேயே நாம் ஆசிரியர் இறந்துவிட்டார் என்கிறோம். ஆனால் நமக்கு மண் இல்லாமல் மரமில்லை, கனியில்லை என்பது தெரியும். மண்ணை உழுவதும், பதப்படுத்துவதும், நீர் பாய்ச்சுவதும், உரமிடுவதும் கூட பல சமயங்களில் அவசியம் என்று தெரியும். ஆனால் மண் தானாகவே கனியை உருவாக்காது என்பதும், அதற்குக் கனியுள்ளிருக்கும் விதை தேவை என்பதும் தெரியும்.
அது மட்டுமல்ல, ஒரு ஆசிரியை ஒரு செயல்பாட்டை செய்கிறாள். அந்த செயல்பாடு தனித்துவமானது. கபீர் என்பது ஒரு பார்வையின், ஒரு தரிசனத்தின் வெளிப்பாடு என்பதுபோல, தனித்துவமிக்க ஒவ்வொரு வெளிப்பாடும் ஒரு ஆசிரிய செயல்பாடு. அந்த ஆசிரியரின் பெயர் என்பது அந்த செயல்பாட்டின் பெயர்தான். அதைத் தனிநபரின் பெயராகக் கொள்ள வேண்டியதில்லை. அது நபரின் பெயராக இருந்தாலும், அது செயல்பாட்டின் பெயராகவே மாறுகிறது. தன்னுடைய பொதுவான வெளிப்பாட்டு முறைக்கு மாற்றாக சில வெளிப்பாட்டு முறைகள் நிகழும்போது அந்த செயல்பாட்டிற்குத் தன்னுடைய பெயரைக் கொடுக்காமல், ஸ்ரீவள்ளி என்ற பெயரைக் கொடுத்தார் கவிஞர் பெருந்தேவி. பெருந்தேவி, ஸ்ரீவள்ளி இரண்டுமே ஆசிரிய செயல்பாட்டின் பெயர்கள்தான். அதில் ஒரு பெயர் அந்த நபரின் பெயராக இருந்தாலும் கூட இரண்டுமே வாசகர்களைப் பொறுத்தவரை செயல்பாட்டின் தனித்துவங்களைச் சுட்டி நிற்கும் பெயர்கள்தான். அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு அதைப் படித்த வாசகருக்கும் கூட அது செயல்பாட்டின் பெயராகத்தான் படைப்பைப் பொறுத்தவரை இருக்க வேண்டும்.
இப்படியெல்லாம் கூறிய பிறகும் ஆசிரியர் என்ற தனிநபர் ஒரு மாயக்கண்ணியாகத்தான் இருப்பார். தெரிதா பேசுகிறார் என்று விளம்பரம் செய்தபோது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அந்த அரங்கத்தின் வாசலில் நீண்ட வரிசை ஒரு சில மணி நேரங்கள் முன்பே அமையத் துவங்கியது. பிரசன்னத்தின் மீமெய்யியலை அவர் கேள்விக்கு உட்படுத்தியிருக்கலாம். ஆனாலும் அவரை நேரில் பார்ப்பதும், அவர் பேசிக்கேட்பதுமான அனுபவத்தை யார் புறக்கணிக்க முடியும்? அவர் நூலைப் படிப்பவர்கள் மட்டும்தான் என்பதல்ல, அவர் பெயரை அறிந்தவர்கள் கூட அதைத் தவிர்க்க முடியாதே. அவர் பேசுவது புரியாமல் போகலாம் என்றாலும் அவர் வணக்கம், நன்றி என்றெல்லாம் கூறாமலா போய்விடுவார்? இந்த மானுடவியல் யதார்த்தத்திலிருந்து தப்புவது சுலபமல்ல. முதலீட்டியம் இந்த மாயக்கண்ணியில்தான் ஜீவிக்கிறது. அது யாரையும், எதையும் மாயக்கண்ணியாக்கும் வல்லமை கொண்டது. இதனால் நாம் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். படைப்பு என்பதும், படைப்பாளி என்பவரும் சமூக இயக்கத்தின் உள்ளேதான் இருக்கிறார்கள். அதனை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்வதே பொறுப்பு.
படையெடுக்கும் செயல்பாடு
படை என்பது பொதுவயப்பட்ட இருப்பு. படையிலுள்ள ஒவ்வொரு வீரனும் தன் உயிர், பிற வீரர்களின் உயிரோடு பிணைக்கப்பட்டுள்ளதாக உணர வேண்டும். வீரச்செயல்பாடுகள் தனித்துவமிக்கவை என்றாலும், படை என்பது எண்ணிக்கைதான். வீரச்செயல்பாட்டை உயர்த்திச்சொல்வதானாலும் கூட முந்நூறு பேர், முப்பதாயிரம் பேரை எதிர்த்து வென்றார்கள் (ஸ்பார்ட்டா); ஐநூறு பேர் இருபத்தையாயிரம் பேரை எதிர்த்து வென்றார்கள் (பீமா கொரெகொன்) என்று எண்ணிக்கையை சொல்லித்தான் வீரத்தை விளக்க முடியும். பத்தாயிரம் பேர் கடும் போரிட்டு ஆயிரம் பேரை வென்றார்கள் என்றால் சிரிப்பாகப் போய்விடும். அடிப்படையில் படை என்பது எண்ணிக்கை; எண்ணிக்கையின் மொத்தத்துவம். வீரத்தின் தனித்துவத்தைப் படையின் மொத்தத்துவத்தின் பின்புலத்தில்தான் விளக்க முடியும். இந்த மொத்தத்துவம் ஆற்றல் மிக்கது. இருப்பைப் பாதுகாத்து, எதிரிகளை அழித்து ஒரு நாட்டை உருவாக்கவல்லது. ஆனால் உடலினாலும், பொருளினாலும் ஆனது. ஒவ்வொரு வீரனின் நினைவுசேகரமும் முழுக்க போரின் இயக்கத்திலேயே தன்னைக் குவித்துக்கொள்ள வேண்டும். அதன் தனித்துவம் மொத்தத்துவத்தைக் குலைக்கக் கூடாது. அதனால்தான் ஒரே போல சீருடை அணிய வேண்டும். ஒரு அசைவாக நடைபோட்டுச் செல்லவேண்டும்.
ஒரு படையின் செயல்பாடு என்பது எதிரிகளின் நாட்டைக் கைப்பற்றுவது. ஒரு மன்னரின் ஆட்சியின் எல்லைகளை விஸ்தரிப்பது. அதே போல வேறொருவர் படையெடுத்து வந்தால் நாட்டை, மன்னரைக் காப்பது. ஒவ்வொரு மன்னருமே முழு உலகையும், இன்னம் அலங்காரமாகச் சொன்னால் மூவுலகையும் ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்ய தகுதியுள்ளவர்தான். அதனால் அவர் படைகள் எந்த நாட்டையும் கைப்பற்றலாம். மானுட ஆற்றலை மொத்தமாகத் தொகுத்து அதை வழிநடத்தி பல நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவது, அங்கிருக்கும் வளங்களை சுவீகரிப்பது, மக்களை அடிமையாக்கிக் கொண்டு செல்வது என்பன போன்ற நடவடிக்கைகள் படையின் ஆற்றலால் சாத்தியமாகும். கிரேக்கத்திலிருந்த மாசிடோனியாவின் மன்னனான அலெக்ஸாண்டர் படையெடுத்து சிரியா, பாரசீகம் எனக் கடந்து இந்தியா வரை வந்தது இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்பது கருதத்தக்கது. பிற்காலத்தில் ஐயவாத தத்துவதரிசியாக விளங்கிய பைரோ இவர் படையில் இந்தியா வரை வந்தார் எனக் கருதப்படுகிறது. ஒரு படையை நடத்தி வரும்போது போர் தவிர பல்வேறு அனுபவ சேகரங்களும் சாத்தியம்தான்.
இப்படியாகச் செயல்படும் படையின் இன்றியமையாத தேவை எதிரி. யாருடன் போரிடுவது என்ற கேள்வி. வேறு எது இல்லாவிட்டாலும் படை என்பது சாத்தியம். யானைகள் இல்லாமல், குதிரைகள் இல்லாமல், தேர்கள் இல்லாமல், ஏன் ஆயுதங்களே கூட இல்லாமல் படைகள் இருக்கலாம். ஆனால் எதிரி இல்லாவிட்டால் அந்தப் படைக்குப் பொருளில்லை. துவக்க காலங்களில் மன்னர்கள் தங்களுடன் ஒரு சிறிய மெய்க்காவல் படையைத்தான் நிரந்தரமாக வைத்திருப்பார்கள். மற்றபடி படையெடுக்க வேண்டுமென்றால் படையைத் திரட்டுவார்கள். அதாவது குடிமக்களை வீரர்களாக வரச்சொல்வார்கள். அப்படியாகத் திரட்டப்படும் மக்கள் திரளே படையணியாக மாறி படையெடுப்போ அல்லது மாற்றார் படையெடுப்பிற்கான எதிர்ப்பாகவோ மாறும். இரண்டு மன்னர்களின் தலைநகரங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வசிக்கும் வாலிபன் ஒருவன் இருவரில் யார் படையில் வேண்டுமானால் சேரும் வாய்ப்பிருக்கும். உதாரணமாக, சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கும்போது காரைக்குடிக்கு அருகே வசிக்கும் இளைஞன் சோழர் படையிலும் சேரலாம்; பாண்டியர் படையிலும் சேரலாம் என்ற சாத்தியம் இருந்திருக்கும். குறுநில மன்னர்களே மாறி மாறி அணி சேர்வார்கள். என இந்த வீரர்கள் ஒன்றுபட்டுப் போர்புரிய வைப்பது எதிரி என்ற கருத்தாக்கம்தான்.
இதையடுத்து நாம் மேலும் ஒரு முக்கியமான கேள்வியைப் பரிசீலிக்க வேண்டும். அரசர்கள் தங்கள் நிலப்பகுதியை ஆட்சி செய்வதுடன் நில்லாமல் ஏன் படை திரட்ட வேண்டும்? ஏன் படையெடுக்க வேண்டும்? இது முக்கியமான மானுடவியல் கேள்வி. மற்ற உயிரினங்களில் கூட தலைமை என்பது உண்டு. யானைக் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட யானை வழிநடத்திச் செல்லும். ஆப்பிரிக்காவில் யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருட விரும்புபவர்கள் யானைக் கூட்டத்தை அணுக முடியாது. அதனால் அவர்கள் ஹெலிகாப்டரில் யானைக் கூட்டத்தை கண்காணித்து எந்த யானை தலைமை யானை என்பதை அடையாளம் காண்பார்களாம். அந்த யானையைச் சுட்டுக்கொன்றால் கூட்டம் சிதறிவிடுமாம். அப்போது தனியாக ஓடும் யானைகளைக் கொன்றோ, சிறைபிடித்தோ தந்தங்களைக் களவாடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி தலைமை என்பது இருந்தாலும் கூட, ஒரு யானைக்கூட்டம் இன்னொரு யானைக்கூட்டத்துடன் போரிடும், அந்த யானைக்கூட்டத்தைக் கொன்றொழிக்கும் என்பது கிடையாது. ஆனால் மனிதர்கள் படையெடுத்து எதிரிகளைக் கொன்று குவிப்பதும், நகரங்களை நாசம் செய்வதும் வழக்கம்.
இங்குதான் நினைவு சேகரத்தின் செயல்பாடு வருகிறது. மனிதர்கள் நினைவை சேகரிப்பதால் பொருட்களையும் சேகரிப்பது சாத்தியமாகிறது. தானியங்கள், இயற்கையின் பல்வேறு விளைப்பொருட்கள், விலங்குகளின் பயன்மிகு உடல் பாகங்கள், முத்துக்கள் என ஆதிவாசி வாழ்விலே சேகரிப்புகள் மிகுந்தன. படையெடுப்பில் இந்த சேகரங்களைக் கவர்ந்தால் அது பெரியதொரு ஆற்றல் குவிப்பாக மாறும். மனிதர்களை அடிமைப்படுத்தினால் அது உடலாற்றலாக, உழைப்பாக மாறும். இப்படிப் படையெடுப்பு என்பது சாத்தியமான பிறகு எதிரியை விட்டுவைத்தால், எதிரி மீண்டும் பழி வாங்கலாம். அதனால் எதிரிகளைக் கொன்று பலவீனப்படுத்துவதும் அவசியம். வேறு வார்த்தைகளில் சொன்னால் நினைவுசேகரம் என்பது அன்றாடத்தைக் கடந்து, வரலாறு, காலம் கடந்த இருப்பு என்பதாகவெல்லாம் உருமாற விழைவதால் அதற்கு எதிர் முனையில் கொன்று அழிப்பது என்பது சாத்தியமாகிறது. மிருகங்கள் பசிக்கும்போது மட்டுமே தான் புசிக்கக் கூடிய மிருகங்களைக் கொல்லும். தன் இனத்தையே கொல்லாது. ஆனால் மனிதர்கள் அத்தகைய உணர்வுரீதியான ஒருமைப்பாட்டை நினைவுசேகரத்தில் கடந்து விட்டதால் ஒரு படை அணியினர் இன்னொரு படை அணியனரை கொல்வது சாத்தியமாகிறது. மேனிதான் அழிகிறது, ஆன்மா நிரந்தரமானது போன்ற கற்பிதங்கள் கொல்வதை எளிமைப்படுத்துகிறது. கீதையில் கண்ணன் தர்மத்திற்காகக் கொல்லலாம் என்று கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும். தர்மயுத்தம் என்பது கொலையைத் தர்மத்துடன் இணைப்பதுதான்.
இப்படியாகப் போர் என்பது உபரிகளைக் கவர்வதும், அழிப்பதுமாக இருந்த பழக்கத்திலிருந்து உபரியைக் கூடுதல் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் உருவானது. இது தனிப்பட்டவர்களிடம் சேகரமாகும் உபரியைப் பொதுவாக சேகரித்து அதை முதலீட்டாக்கி, பொருள் உற்பத்தியை, அதன் விநியோகத்தை, நுகர்வைப் பரவலாக்கி மேலும் முதலீட்டை சேகரிப்பது என்ற நடைமுறையாக மெள்ள மெள்ள மாறியது. இப்படியான முதலீட்டிய நடைமுறையில் எல்லையற்ற போர்களை மட்டுப்படுத்த வேண்டி வந்தபோதுதான் தேசிய எல்லைகள், தேசிய அரசுகள் போன்றவை உருவாயின. அப்போது அரசு என்பது போரைவிட உள்நாட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. தனி நபரான அரசருக்குப் பதிலாக அல்லது அவருக்கு இணையாக, குடிமக்களின் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது என்பதும் வழக்கமாயிற்று. இப்போது நாட்டு நிர்வாகத்தை, அதிகாரத்தை யார் கையில் எடுப்பது என்பதில் புதிய அரசியல் பிறந்தது. இந்த அரசியலில் எதிரிகளைப் போர் செய்து அழிப்பதற்குப் பதிலாக கருத்து ரீதியாக எதிர்ப்பது என்ற நடைமுறை உருவானது.
சரியாகச் சொன்னால் அரசின் இறையாண்மை என்பது இரண்டாகப் பிரிந்தது. அந்நியரிடமிருந்து தேசத்தைக் காப்பது என்ற போர் இயந்திர இறையாண்மை அண்டை நாடுகளை எதிரிகளாக்கியது. உள்நாட்டில் மக்களை நிர்வகிப்பது, ஆட்சி செய்வது என்பதில் நாட்டிற்குள்ளே மக்கள் அணிகளாக மாறி தங்களுக்குள் ஆயுதம் ஏந்திப் போர் செய்வதற்குப் பதிலாக கருத்துக்களை உருவாக்கி, கருத்தியல்களை உருவாக்கி மோதலாம் என்ற புதிய நடைமுறை வந்தது. அந்தக் கருத்தியல் போர் சுயாட்சி இறையாண்மைக்கானது. போர் எந்திர இறையாண்மை என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுபட்டு எதிரி நாட்டுடன் போர் புரிய வேண்டும். காலனீய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபோது இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் தோன்றின. எல்லைப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை போன்றவற்றாலும், பிரிவினையின்போது நிகழ்ந்த கலவரத்தாலும் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்ந்து விரோதம் இருக்கிறது. இரண்டு நாடுகளுமே போர் இயந்திரங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வந்துள்ளன. இப்போது உள்நாட்டில் தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களை, இந்து பெரும்பான்மைவாதக் கட்சியான இந்துத்துவ கருத்தியல் கோண்ட பாரதீய ஜனதா கட்சி, பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று சொல்கிறது. இதன் மூலம் சுயாட்சி இறையாண்மைக்கான் கருத்தியல் யுத்தத்தை, போர் இயந்திர இறையாண்மை எதிரியான பாகிஸ்தானுடன் குழப்புகிறது. இது உள்நாட்டுக் கருத்தியல் போரை, வெளி எதிரியின் இருத்தலியல் போருடன் குழப்புவதால் பலராலும் கண்டிக்கப்படுகிறது. பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானியேகூட சமீபத்தில் கண்டித்துள்ளார். ஆட்சியை எதிர்ப்பவர்கள், தேசத்தின் எதிரிகள் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்நாட்டு அரசியலில் பெரும்பாலும் கட்சி அணிகள் உருவாவது என்பது முற்றிலும் தர்க்கரீதியான கருத்தியல் அடிப்படையில் அல்ல. கட்சிகளுக்குள் சில பல வேறுபாடுகள் இருக்கும் என்றாலும் அது ஒரு கட்சிக்குள்ளேயே கூட இருக்கும். அதனால் எப்படி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் காரைக்குடியில் வசித்த இளைஞன், சோழர் படையிலோ அல்லது பாண்டியர் படையிலோ சேர்வது சாத்தியமோ அதே போலத்தான் இப்போது தி.மு.க. விலோ, அ.இ.அ,தி.மு.க.விலோ சேர்வது சாத்தியம். சேர்ந்த பிறகு அதற்கான தர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். எதிரிதான் அணிகளுக்கு முக்கியமே தவிர ஏன் எதிரி என்பது அதற்குப் பிறகுதான். இதனால் எல்லா கட்சிகளுமே கொஞ்சம் கருத்தியல் அவியலாகத்தான் இருக்கும். தொழிலாளர் வர்க்க அரசியலை முன்னெடுக்கும் பொதுவுடைமைக் கட்சிகள் கூட தேசிய அடையாளத்தையும், மொழி அடையாளத்தையும் பேசத்தான் செய்யும். ஒன்றுக்கு மேற்பட்ட முரண்கள் நிலவும்போது பல்வேறு நிலைபாடுகளின் தொகுப்பாகத்தான் கட்சிகள் இயங்கும்.
இத்தகைய நிலையைக் கருத்தில் கொண்டுதான் அரசியல் என்பது எதிரி யார், நண்பர் யார் என்பதை தீர்மானிப்பதுதான் என கார்ல் ஷ்மிட் கூறினார்.
இதனைத் தொடர்ந்து யோசிக்கும்போது அரசு என்பது அருவமானது. அது அனைவருக்கும் பொதுவானது என்று கருதப்பட வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதுபோல. ஆனால் அரசியல் என்பது பிளவுபட்டது. கருத்தியல் மோதல்களால் ஆனது. எதிரிகள், நண்பர்கள் என்ற இருத்தலியல் முரணால் உருவாவது. இது கருத்தியல் சார்ந்ததாக இருக்கும்போது ஆயதங்கள், வன்முறை, கொலை ஆகியவை நேரடியாகத் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் எந்தக் கருத்தியல் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் என்பது தேர்தல் போன்ற நடவடிக்கைகளில் முடிவாகிறது. இருந்தாலும் ஆட்சி அதிகாரம் என்பதையும் கடந்து கருத்தியல் மேலாதிக்கம் என்பதும் முக்கியமான சக்தியாக இருக்கிறது. உதாரணமாக, ஆணாதிக்கம் என்பது அரசியல் அணிசேர்க்கைகளைக் கடந்த ஒரு அரசியல் மேலாதிக்கமாக நிலைபெற்றிருக்கிறது. இதைக் கணக்கில் கொள்ளும்போது, உண்மையான கருத்தியல் மோதல் என்பது கருத்தியல் மேலாதிக்கத்திற்கான மோதலாகத்தான் இருக்க முடியும். கட்சி அணிகள் இதில் பங்கு பெற்றாலும் அரசியல் கட்சி அணிகள் தேர்தல் என்ற நவீன கால ஆயுதமற்ற போரில்தான் ஆர்வம் காட்டும். கருத்தியலாளர்கள் கருத்தியல் மேலாதிக்கத்திற்காகப் போட்டியிடுவர்.
இத்தகைய விரிந்த பின்னணியில் பார்த்தால் அரசு என்பது ஒரு மாயக்கண்ணி. அது உண்மையில் ராணுவமாக, போலீசாக ஒரு வடிவம் கொள்கிறது. அதிகாரிகளாக, நிர்வாகிகளாக வடிவம் கொள்கிறது. கட்சி அணிகளாக, தேர்தலில் வென்று ஆட்சியாளர்களாக மாறுபவர்களாக இருக்கிறது. முதலீட்டிய சேகரிப்பில் முன்னணியில் இருக்கும் பெருமுதலீட்டிய அதிபர்களாக இருக்கிறது. கருத்தியல் மேலாதிக்கத்தை உருவாக்கும் கருத்தியலாளர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இப்படியாக ஒரு அதிகார வலைப்பின்னல் உருவாகிறது. அவற்றினூடாகச் செயல்படும் அரூப யந்திரமாக, மாயக்கண்ணியாக அரசு இருக்கிறது.
படைப்பும், படையெடுப்பும் விலகும் காரணங்கள்
நவீன அரசியலில் படையெடுப்பு என்பது கருத்தியல் அணிசேர்க்கை, கட்சி அணிசேர்க்கை என்று கொண்டால் அதுவும் எண்ணிக்கை சார்ந்தது. தனித்துவத்தை மொத்தத்துவமாக மாற்றுவது. அந்த மொத்தத்துவம் இறையாண்மை தன்மை கொண்ட தலைமைக்கு, தலைவனுக்கு வேண்டுமானால் தனித்துவத்தை வழங்கலாம். வீரச் செயல்பாட்டின் தனித்துவம் போன்றதுதான், தலைமைச்செயல்பாடு. அதனால்தான் தலைவர்கள் கையில் வில், வாள், தலையில் கிரீடம் ஆகியவற்றைக் கொடுத்தும் அணிவித்தும் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. தேர்தலைப் போராகவே கருதுவார்கள்; பேசுவார்கள். களம் காண்பது என்றுதான் கூறுவார்கள். தேர்தல் களம் போல போர்க்களம். பல்வேறு பேச்சாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் இந்தப் போரில் பங்கேற்கலாம்; ஆனால் அவர்கள் தனித்துவம் மொத்த எண்ணிக்கை திரட்சியினை நோக்கித்தான் செல்லவேண்டும். எண்ணத்தை, கொள்கையை, கருத்தியலைப் பரப்பும் நோக்கத்தில்தான் வெளிப்படுத்தல் நிகழமுடியும்.
ஒரு தனியான நினைவுசேகரம் தன் அகவெளி செயல்பாட்டின் விளைவுகளைத் தொகுத்து நுட்பமாக வெளியிடும் செயல் என்பது தனித்துவத்தை நோக்கிய செயல். அது மட்டுமல்ல; நாம் முதல் பகுதியில் கவனித்தபடி அதன் பொதுமைப்படுத்துதல் காலம் கடந்த பொதுமைபடுத்துதல். அரசியலின் மோதல்கள் செயல்களாக அன்றாடத்தின் தளத்தில் கரைந்து போகக் கூடியவை. அரசியல் அரசுகளை உருவாக்குவதால் வரலாறு என்று தன்னை சித்தரித்துக்கொண்டாலும் இந்த வரலாறு அன்றாடத்தின் பெரும்பரப்பில் தீட்டிய கோடுகளாக மங்கிவிடும். முதலீட்டிய சேகரிப்பு பெரும் ஆற்றல்களை, எரிபொருள் ஆற்றல்களை, இயந்திர ஆற்றல்களை விடுவித்து மனித வாழ்க்கைய முற்றிலுமாக மாற்றியமைத்து ஒரு வரலாற்று தோற்றத்தை தந்தாலும், மின்சாரமும், தானியங்கி ஊர்திகளும் இல்லாத காலத்தில் செம்புலப்புயல் நீரார் எழுதிய வரிகளும், ஷேக்ஸ்பியர் எழுதிய வரிகளும் இன்றும் நம் அகவுலகை சிலிர்க்கச் செய்கின்றன. ஏனெனில் இவை அவர்கள் நினைவுசேகரம் என்ற அகவுலகம் உருவாக்கிய தனித்துவ கூற்றுக்கள்.
ஒரு இலக்கியவாதியோ, கலைஞனோ சமகாலத்தை தன் எழுத்தில் கொண்டுவந்தாலும் அதை ஒரு தனித்துவமிக்க சாட்சியமாக செய்வதே காலம் கடந்து நிற்கிறது. கோயா என்ற ஓவியர் ஸ்பெயினில் நிகழ்ந்த மத விசாரணை சித்திரவதைகளை, தண்டிக்கப்பட்டவர்கள் தூக்கிலடப்படுவதை வரைந்த விதம் அந்த செயல்களின் சாட்சியமாக இன்றும் விளங்குகிறது. கோயாவின் ஆவிகள் என்ற திரைப்படத்தில் கோயாவின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் இதைத் துலக்கம் பெறச் செய்கிறது எனலாம். இதனால் இலக்கியம் தன் உள்ளடக்கத்தின் வடிவத்திலோ, வெளிப்பாட்டின் வடிவத்திலோ வெளிப்படுத்தும் அரசியல் என்பது தனித்துவத்தின் அரசியல். அது அன்றாடத்தன்மை கொண்டதல்ல. இலக்கியம் தன்னிச்சையாகச் செயல்பட்டு தனித்துவமான வெளிப்பாடுகளை செயல்படுத்தினால்தான் அரசியல் விழுமியங்களும் காக்கப்பட முடியும். இதனால் ஒரு கவிஞரைப் பார்த்து ஏன் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையை பற்றி, அதற்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு பற்றி எழுதவில்லை என்று கேட்பது பிழையானது. அந்த செய்திகளால் தன் நினைவுசேகரம் தூண்டப்பட்ட கவிஞர் தன் அகவெளிச் செயல்பாடாக அந்த உணர்வுகளை வெளிப்படுத்தலாம். ஆனால் இதை நிர்ப்பந்திக்க முடியாது. நாம் நிலத்தில் ஊற்றும் நீர் பழத்தின் சுவையைத் தீர்மானிக்காது.
இதனால் படைப்பாளிகள், கலைஞர்கள், தத்துவவாதிகள் எல்லாம் அன்றாட அரசியல் நிகழ்வுகளிலிருந்து விலகி நீண்ட கால நினைவு சேகரிப்பினை அக உலக அனுபவமாக்கி வெளிப்படுத்துவது என்பது முற்றிலும் அவசியமானது, நியாயமானது. கலாப்ரியாவின் அரசியல் என்பது சுயம்வரம், மற்றாங்கே, எட்டயபுரம் என்று நீளும் அவர் வெளிப்பாடுகள்தான். இதைத்தவிர அவர் எந்த அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கருத்துக்களை சொன்னாரா, தன் படைப்பில் பிரதிபலித்தாரா என்றெல்லாம் பரிசீலிப்பது அபத்தம். ஒரு வாத்திய இசைக்கலைஞர் அரசியல் நிகழ்வுகளால் சஞ்சலப்படலாம். அவர் என்னால் முடிந்தது உள்ளத்தை உருக்கும் இசையை என் வாத்தியத்தில், வீணையோ அல்லது சிதாரோ வெளிப்படுத்துவதுதான். அது மக்களின் அகவுலகை செழுமையுறச் செய்யும், வன்முறையைத் தவிர்க்கும் என நான் நம்புகிறேன் என்று சொன்னால் அதை ஆமோதிக்கத்தான் வேண்டும். அவர் ஏன் ஒரு அரசியல் கொள்கைப்பாடலுக்கு இசையமைக்கக் கூடாது என நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் கலை வெளிப்பாடுகள் தனித்துவமானவை. அந்த தனித்துவத்தைப் பேணுவதே அவற்றின் அரசியல்.
இந்த தனித்துவ வெளிப்பாடுகள் அன்றாடத்துடன் ஊடாடினாலும் பொதுமைப்பட்டு நிற்பதால் காலம் கடந்து தொடர்ந்து அந்த ஊடாட்டத்தை நிகழ்த்தவல்லவை. கோயாவின் ஓவியத்தைப் பார்க்கும் ஒருவருக்கு ஸ்பெயினின் வரலாறு தெரிந்திருக்க வேண்டியதில்லை. அந்த ஓவியத்தில் முயங்கும் இருளும், ஒளியும் எந்தக் காலத்திலும் யாருடைய அக உலகையும் தீண்டும். அதையே நாம் கவிஞர்களுக்கும். கதாசிரியர்களுக்கும் சொல்லலாம். இந்த சாத்தியத்தைப் பேணும் பொருட்டே அன்றாட அரசியல் தங்களிடம் கோரும் கவனத்தை, ஈடுபாட்டை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அப்படியே கவனித்தாலும் தங்கள் கலை இலக்கிய படைப்புச் செயல்பாட்டில் தங்கள் நினைவு சேகரத்தில் அக உலக செயல்பாட்டில் அவற்றை நேரடியாக அனுமதிப்பதில்லை.
படைப்பும், படையெடுப்பும் சந்திக்கும் தருணங்கள்
நவீன அரசியல் என்பது எதிரிகளாகவும், நண்பர்களாகவும் படை அணி சேர்ந்து கருத்துக்கள், கொள்கைகள், கோட்பாடுகள் மோதுவதுதான் என்று பார்த்தோம். இது அதிகாரத்தின், ஆற்றல்களின் திரட்சியாக வடிவம் கொண்டு, முதலீட்டிய திரட்சிகளுடன் வினை புரிந்து தொடர்ந்து முரண்களின் இயக்கத்தை சாத்தியப்படுத்துகின்றன. அதிகாரம் பல்வேறு பாதைகளில் அனைவர் ஊடாகவும் பயணிக்கிறது. அந்த மோதல்களின் விளைபொருள்கள் அன்றாடத்தில் முயங்கி சருகுகளாகப் படிகின்றன. படைக்கும் செயலோ, நினைவு சேகரத்தின் அக உலக வினைகளில் முகிழ்ந்து தனித்துவமிக்க வெளிப்பாடுகளாகி, பொதுமைப்பட்டு காலம் கடந்து நிற்க விழைகின்றன. இதை நாம் படை அணிகளின் எண்ணிக்கை சார்ந்த மொத்தத்துவத்தின் ஆற்றல் வெளிப்பாட்டிற்கும், நினைவு சேகரத்தின் அக உலக அதிர்வுகளின் தனித்துவக் குண வெளிப்பாட்டிற்குமான வித்தியாசமாகப் புரிந்துகொள்ளலாம்.
இவை இப்படியே என்றும் இருப்பதில்லை. அதிகாரத்தின் பல்திசை பயணங்கள், முரண் இயக்கம் தடைபட்டு ஆதிக்கமாகத் தேங்கும் விபரீதம் நிகழ்கிறது. அரசு என்ற மாயக்கண்ணி, கருத்தியல் மேலாதிக்கத்தை பெரும்பான்மை அடையாளவாதமாக மாற்ற முற்படும்போது அதிகாரச் சுழற்சி உறைந்து போய் ஆதிக்கம் பாறைவடிவமாக மாறுகிறது. வாலஸ் ஸ்டீவன்சின் கிஸீமீநீபீஷீtமீ ஷீயீ tலீமீ யிணீக்ஷீ என்ற கவிதை இந்த உயிர்ப்பற்ற உறைநிலைக்கு ஒரு நல்ல உருவகத்தை தருகிறது.
I placed a jar in Tennessee,
And round it was, upon a hill.
It made the slovenly wilderness
Surround that hill.
The wilderness rose up to it,
And sprawled around, no longer wild.
The jar was round upon the ground
And tall and of a port in air.
It took dominion everywhere.
The jar was gray and bare
It did not give of bird or bush,
Like nothing else in Tennessee.
இப்படியாக மொத்தத்துவ அணிகளின் முரண்களமான அரசியல், மொத்தத்துவ அரசாக மாறும்போது, அங்கே முரண் இயக்கம் உறைய வைக்கப்படும்போது, தனித்துவங்களின் கல்லறையுன் உருவாகிவிடும். அடையாளத்தின் பேயாட்சிகள் வித்தியாசங்கள் பொசுங்கி விடும். இலக்கியவாதிகளுக்கு இந்தப் பிரச்சினை புரிவதில்லை. ஒரு விளையாட்டில் இரண்டு அணிகள் மோதினால்தானே ஒவ்வொரு ஆட்டக்காரரின் தனித்துவமும் வெளிப்படும். அப்படி ஒரு மோதலே கிடையாது என்றால் விளையாட்டில் உயிர் இருக்காது. அதுபோல ஆதிக்கத்தின் பிடியில் அரசியல் மரிக்கும்போது, இலக்கிய வெளிப்பாட்டின் தனித்துவத்தைக் காக்க யாரும் இருக்க மாட்டார்கள். துவக்க காலத்தில் முசோலினியின் பாசிசத்தை தேசிய எழுச்சியெனவும், கம்யூனிஸத்திற்குத் தடுப்பணையாக விளங்கும் எனவும் ஆதரித்த நிலப்பிரபத்துவ கலாசாரவாதிகள், நாளிடைவில் பாசிசத்திற்கு கலாசார விழுமியங்களில் எந்த ஆர்வமும் கிடையாது என்பதை உணர்ந்தபோது அதிர்ச்சியடைந்தார்கள். பாசிசம் அரசியலுக்கு மட்டும் எதிரியல்ல; அதனால் எந்த தனித்துவ விகசிப்பையும் சகிக்க முடியாது. இன்று பத்ரி சேஷாத்ரி பார்ப்பனீய மீட்புவாதத்தாலோ, சந்தைப் பொருளாதார மோகத்தாலோ பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்கலாம். ஆனால் நாளை எந்த நூல்கள் வெளியாகலாம் என்பதை அர்ஜுன் சம்பத் மட்டுமே தீர்மானிப்பார் என்ற சூழ்நிலை வந்தால் என்ன நினைப்பார் என்று தெரியவில்லை. அப்போது எந்த தொலைக்காட்சியிலும் நேர்படப் பேச மாட்டார்கள். பாசிசம் மட்டுமே பலகுரலில் பேசும்.
சில நாட்கள் முன்பு குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்துப் பேசிய மனுஷ்ய புத்திரன், தமிழ் இலக்கியவாதிகள் சிறிதும் அரசியல் உணர்வின்றி இருப்பதைக் குறித்து மனம் நொந்து கடுமையாக விமர்சித்தார். அவரைப் பொறுத்தவரை பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஒரு நவீன இலக்கியவாதியாக, முற்போக்கு சிந்தனையாளராக, சமகால கவிஞர்களில் முக்கியமானவராக இலக்கியவாதிகளால் அங்கீகரிக்கப்பட்டவராக இருந்த நிலையில் ஒரு அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளராக, பேச்சாளராக செயல்படத் துவங்கினார். அதனால் அவருக்கு இன்று சக படைப்பாளிகளின் அரசியல் அக்கறையின்மை தெளிவாகப் புலனாகிறது. இப்போது மட்டுமல்ல. சில ஆண்டுகள் முன்பு ஆளும் சித்தாந்தத்திற்கு, இந்துத்துவத்திற்கு எதிராக எழுதியதால் பன்சாரே, கல்புர்கி, தபோல்கர் என்று சிந்தனையாளர்கள் வரிசையாகக் கொல்லப்பட்டபோது அகில இந்திய அளவில் பல முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் சாகித்ய அகடெமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகடெமி விருதுகளைத் திருப்பிக் கொடுக்காவிட்டாலும் ஒரு அரங்கக் கூட்டம் போட்டு கண்டிக்கக்கூட முன்வரவில்லை.
அது மட்டுமல்ல. தமிழில் முன்னணி எழுத்தாளர், இலக்கியவாதி எனக் கருதப்படும் ஜெயமோகன் பல சமயங்களில் இந்துத்துவ பெரும்பான்மை வாதத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளார். அவர் நேரடியாக அதைச் செய்வதில்லை. நயவஞ்சகமாக, அதற்கு எதிரானவர் போல சில வார்த்தைகள் கூறிவிட்டு மிக முக்கியமான, ஆதாரமான விஷயத்தில் பெரும்பான்மைவாத புனைவுகளை விதைப்பதுதான் அவரது பாணி. உதாரணத்திற்கு சமீபத்தில் பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறித்து கருத்து சொன்னார். பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதுதான் இந்துத்துவ மத அடையாளவாத, பெரும்பான்மைவாத பாசிசத்தின் எழுச்சிக்கான அச்சாரம் என்பதை அனைவரும் அறிவார்கள். அதற்குக் காரணம் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த மசூதி ராமர் பிறந்த இடத்தில் இருந்த பழைய கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவ சக்திகள் உருவாக்கிய ஒரு கதை. அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்றம் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்று திட்டவட்டமாக கூற முடியாது என்பதை ஏற்றது. மசூதி இடிக்கப்பட்டது குற்றம் என்று சொன்னது. ஆனாலும் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு, குழந்தை ராமருக்கே சொந்தம் எனத் தீர்ப்பளித்தது. முன்னுக்குப் பின் முரணான இந்தத் தீர்ப்பு நடைமுறை யதார்த்தம், நிர்ப்பந்தம் கருதி வழங்கப்பட்டதே தவிர, வரலாற்று நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது அதன் அப்பட்டமான உள்முரண்.
ஜெயமோகன் அதை சரிசெய்யும்பொருட்டு ஒரு வேலை செய்கிறார். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டக் கூடாது என்கிறார். ஏனெனில் அது பெரும்பான்மை வாதமாம். ஆனால் அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக குழந்தை ராமர் கோயில் இருந்தது ஒரு வரலாற்று உண்மை, அதை இடித்துதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று அறுதியிட்டு சொல்கிறார். மிக மேலோட்டமான விஷயத்தில் முற்போக்காகப் பேசிவிட்டு, அடிப்படையான கேள்வியில் இந்துத்துவ கற்பிதத்தை வரலாற்று உண்மையாக நிறுவுகிறார்.
தமிழில் இப்படி ஒரு இலக்கியவாதி தந்திரமாக அரசியல் கருத்துக்களை, பாசிசத்திற்குத் துணைபோகும் கருத்துக்களைக் கூறுவது முன்னுதாரணமற்றது என்றே நினைக்கிறேன். ஆனால் நாடு பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கத் துவங்கியுள்ள நேரத்தில் ஒரு சில முகநூல் பதிவர்களைத் தவிர ஜெயமோகனைக் கண்டிக்க எந்த இலக்கியவாதிக்கும் நேரமுமில்லை, அக்கறையுமில்லை. அது மட்டுமல்ல, ஜெயமோகன் அணியான விஷ்ணுபுரம் வட்டத்திற்கு அங்கீகாரம் நாடிச் செல்வதில் தயக்கமுமில்லை. இலக்கிய செயல்பாட்டின் மாயக்கண்ணியான எழுத்தாள பிம்பத்தை இறுகப்பற்றி அரசியலின் மாயக்கண்ணியான அரசின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதில் ஜெயமோகனுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. அதைக் கண்டுகொள்ளாமல் அவருடன் “இலக்கிய” உறவு கொள்வதில் பிறருக்கும் தயக்கம் இருப்பதில்லை.
தமிழ் இலக்கியவாதிகள் பலரால் பாசிசத்தின் பிடி இறுகுவதைப் புறக்கணிக்க முடிவது எப்படி என்பது உண்மையில் விரிவான ஆய்வுக்குரியது. என்னுடைய எண்ணம் என்னவென்றால் அவர்கள் நான் இந்தக் கட்டுரையின் மூன்றாவது பகுதியில் சொன்னபடி அன்றாட அரசியலிலிருந்து படைப்புச் செயல்பாடு அந்நியப்பட்டு இருக்க வேண்டிய நியாயத்தைக் கடந்து சிந்திக்க மறுக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு அன்றாட அரசியல் வேறு, பாசிசத்தின் எழுச்சி வேறு என்பது ஏன் புரிவதில்லை என்பதே கேள்வி. அறம் சார்ந்த கேள்விகளுக்குப் பழக்கப்படாத ஜாதீய மனம் காரணமா என்று பரிசீலிக்க வேண்டும் அல்லது சாதாரண அச்சமும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் தத்துவார்த்தரீதியாக அதிகார மோதலுக்கும், ஆதிக்கத்தின் உறைநிலைக்குமான வேறுபாட்டை அவர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். தியோடர் அடர்னோ என்ற ஜெர்மானிய சிந்தனையாளர் ஆஷ்சுவிட்ச் என்ற யூதப்படுகொலை நிகழ்ந்த இடத்தைக் குறிப்பிட்டு ஆஷ்சுவிட்சிற்குப் பின்னால் கவிதை எழுதுவது காட்டுமிராண்டித்தனம் என்று கூறியது பிரபலமாக மேற்கோள் காட்டப்படுவது உண்டு. விநோதமான, கொந்தளித்த மனநிலையில் வெளிப்பட்ட அந்தக் கூற்றின் பொருள் என்னவென்று தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும். நினைவுசேகரத்தின் அகச் செயல்பாடான படைப்பும், கருத்தியல் மோதலை முக்கிய செயல்பாடாகக் கொண்ட அரசியல் அணிகளும் சமகாலத்தில் மிகவும் நெருங்கி வருவதற்குக் காரணம் என்னவென்றால், அரசு என்ற மாயக்கண்ணியும், படைப்பாளி என்ற மாயக்கண்ணியும் சுலபமாக இணைவதும்தான். அதனால்தான் அரசு வழங்கிய பரிசுகளை இந்தியப் படைப்பாளிகள் பலரும் திருப்பியளித்தார்கள். தங்கள் படைப்புகளின் தனித்துவம் காக்கப்படவேண்டும் என்றால், வித்தியாசங்கள் தொடர்ந்து மலரவேண்டும், அதிகாரத்தின் சுழற்சி ஆதிக்கமாக உறையக்கூடாது என்பதைப் படைப்பாளிகள் உணரவேண்டும். அப்படி உறைந்தால், படைப்பிற்கும், படையெடுப்பிற்கும் பொதுவான அறத்தை, தர்மத்தைக் காக்க படைப்பாளிகளும் அணிதிரள வேண்டும். மற்றவர்களுக்காக அல்ல. படைப்புச் செயல்பாட்டைக் காப்பதற்காக.