ஊருக்குள் நாராயணனைப் பற்றிப் பலவிதமான பேச்சுகள் உண்டு. இத்தனைக்கும் நாராயணன் ஒன்றும் ஊர்பெரிய மனுஷனல்ல. ஊர்ப் பெரிய மனுஷர் என்று கி.மு.வெங்கடாசலமய்யரைச் சொல்லலாம். கணக்கப்பிள்ளை சண்முகம்பிள்ளையையும், பஞ்சாயத்துப் போர்டு சேர்மன் கொம்பத் தேவரையும்கூட ஊர்ப் பிரமுகர்களென்று சொல்லலாம். இவர்களைப் பற்றியெல்லாம் ஏதாவது பேச்சுகள் அடிபட்டால் அதில் அர்த்தமுண்டு. ஆனால், இவர்களுக்குச் சமதையாக வடக்குத் தெரு நாராயணனையும் ஊர்க்காரர்கள் கருதியதுதான் ஆச்சரியம். குறிப்பாகப் பெண்கள் மத்தியில் நாராயணன் ரொம்பப் பிரபலமாக இருந்தான். அவர்களுக்கு நாராயணனைப் பற்றி ஏதாவது பேசாவிட்டால் பொழுதே போகாது. அதுவும் தவிர, எடுத்ததுக்கெல்லாம் அவர்கள் நாராயணனைத்தான் தேடுவார்கள்.

பெண்கள் சேலை முந்தானையை மாராப்பாகப் போட்டிருக்கிற மாதிரி, நாராயணனும் தனது கருத்த வெற்று மார்பை ஒரு துண்டினால் மூடி, அதன் முந்தியை இடுப்பில் சொருகியிருப்பான். வேட்டி அல்லது சாரத்தை கரண்டைக் காலுக்கு மேல் கட்டுவதுதான் அவன் பழக்கம். மாடசாமியின் பொஞ்சாதி செவத்தையாபுரத்துக்காரி மாதிரியே இடுப்பை ஆட்டி ஆட்டி நடப்பான். பேசும்போது, குறிப்பாக அவன் நின்றுகொண்டு பேசும்போது பெண்களைப் போலவே கைகளையும், இடுப்பையும் ஆட்டிஆட்டித்தான் பேசுவான். குரல்கூடப் பெண்ணின் குரல் போலத்தான் இருக்கும். ஆனாலும், அவன் வேட்டி கட்டிய ஆண். தங்களைப்போலவே அவனுடைய நடையுடை, பாவனை பேச்செல்லாம் இருப்பதால் பெண்கள் நாராயணண்னையும் ஒரு பெண்ணாகவே கருதினார்கள். அவனும் ஆண்களைவிடப் பெண்களுடனே அதிக நேரம் இருந்தான். பழகினார். ஊரிலுள்ள ஆண்கள், அவனுடைய பெண் சகவாசத்தைப் பார்த்து அவனைப் ‘பொன்னாஞ்சட்டி’ என்றார்கள். அதற்காக நாராயணன் வருத்தப்பட்டதில்லை.

பெண்களோடு பழகிப் பழகி, அவனுடைய உடம்பிலும் ஆடைகளிலும் பெண்ணுடம்பின் வாசனை வீசியது. பால்கார கிருஷ்ணம்மாக்கா வீட்டிலிருந்து வந்தால் அவளுடம்பிலிருந்து வீசுகிற பால்கௌச்சி வாசனை அவனுடம்பிலும் வீசும், பாக்கியத்து மதினி குட்டிக்கூரா பௌடர்தான் போடுவாள். அவள் வீட்டில் போய் நாராயணன் குழம்புக்கு அரைத்துக் கொடுத்து விட்டுப் பேசிக்கொண்டிருந்து விட்டுவந்தால் அவனுடம்பிலிருந்து அந்தப் பௌடர் வாசனை அடிக்கும்.

கிரைண்டர், மிக்ஸியெல்லாம் வராத காலம் அது. நாராயணனுக்குத் தோசைக்கு மாவு அரைக்க ரொம்பப் பிடிக்கும். ஆட்டுரலில் ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை கால் மயிர்கள் தெரிய பெண்களைப் போலவே நீட்டி வைத்துக்கொண்டுதான் நாராயணனும் தோசைக்கு அரைப்பான். ஒருபடி அரிசி போட்டாலும், சளைக்காமல் அரைத்துக்கொடுப்பான். கல்யாணம் அல்லது இழவென்றால் ஊரே அந்த வீட்டில்தான் சாப்பிடும். அந்தமாதிரி சமயங்களில் நாலு படி, ஐந்து படி என்று அரிசியையும், உளுந்தையும் ஊறப்போட்டுத் தோசைக்கு அரைக்க வேண்டியதிருக்கும். பெண்களோடு பெண்களாக நாராயணனும் தோசைக்கு அரைக்க உட்கார்ந்துவிடுவான்.

குளிக்கிறபோது பெண்கள் தங்கள் புருஷமாரைக்கூட புறவாசல் பக்கம் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அந்த உரிமை நாராயணனுக்கு மட்டும் இருந்தது. அவனைக் கூப்பிட்டு முதுகு தேய்த்துவிடச் சொல்வார்கள். தீண்டலுக்குக் கட்டியிருந்த சேலையைக்கூட அவனிடம் கொடுத்து வாய்க்காலில் துவைத்துவிட்டு வரச் சொல்லுவார்கள். பங்குனி சித்திரையில் வாய்க்காலில் தண்ணீர் ஓடாது. சில வருஷங்களில் வைகாசியில்கூட தண்ணீர்விட மாட்டார்கள். ஊரில் பாலத்துப் படித்துறை, இசக்கியம்மன் கோவில் படித்துறை என்று இரண்டு படித்துறைகள் இருந்தன. இரண்டு படித்துறைகளிலுமே ஆண்களும் பெண்களும் சேர்ந்தே குளித்தார்கள். வாய்க்காலுக்குக் குளிக்கப்போகிறபோது வடக்குத் தெரு பெண்கள் துணைக்கு நாராயணனைத் தேடுவார்கள்.

அவனிடமும் ஒரு குடத்தைக் கொடுத்துவிடுவார்கள். அவர்களைப் போலவே நாராயணனும் இடுப்பில் குடத்தை வைத்துக்கொண்டு நடப்பான். பெண்கள், துணிகளை எல்லாம் துவைத்துவிட்டுக் குளிக்கப்போகும் முன்பு குடத்தைக் குறு மண்ணால் விளக்குவார்கள். சேலையின் ஒரு முந்தியை உடம்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு மீதமுள்ள சேலையை அப்படியே தண்ணீரில் நீளமாகவிட்டு விடுவார்கள். பாகம் பிரியாளும், சடைச்சியும் தங்களுடைய குடங்களைத் தண்ணீரில் குப்புறக் கவிழ்த்துப் போட்டு அவை தண்ணீரோடு சென்றுவிடாமலிருக்க சேலை முந்தியைக் குடத்தின்மீது போட்டு மூடிக்கொண்டே முங்கி முங்கி குளிப்பார்கள், குடம் சேலைக்குள் மிதந்துகொண்டே அவர்களுடைய முதுக்குக்குப் பின்னால் தண்ணீரில் அலைந்துகொண்டிருக்கும். நாராயணனுக்கு அந்தமாதிரி சேலையைப் போட்டுக் குடத்தை மூடித் தண்ணீரில் அலையவிட்டுக் குளிப்பது ரொம்பப் பிடிக்கும், அதற்காகவே தானும் சேலை கட்ட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றும்.

ஒருநாள், ரொம்ப நாளைக்கு முன்பு, தெண்டிக்க தேவியம்மன் கோவிலுக்குப் பின்னாலிருந்த இரட்டைப் பனையின் தூரில், பெண்களைப் போலவே குத்தவைத்து ஒன்னுக்குப் போனதை சங்கையா பார்த்துவிட்டான். “என்னையே பொம்பள ஒன்னுக்குப் போறமாதிரி போறே…” என்று நாராயணனிடம் கேட்டான். அதைச் சங்கையா ஊர்க் கடைத்தெருவிலும் போய்ச் சொல்லிவிட்டான், ‘பொம்பளமாதிரி ஒன்னுக்குப் போறான் டோய்…’ என்று ஊருக்குள் ஒரே பேச்சாகிவிட்டது. அன்றிலிருந்து நாராயணன் யார் வீட்டு அங்கணாக் குழியிலாவதுதான், அந்த வீட்டு பெண்களைக் கேட்டுக்கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான். பெண்களும் பாவமென்று, தங்கள் வீட்டு அங்கணாக் குழியில் சிறுநீர் கழிக்க அவனை அனுமதித்தார்கள். உலகத்தில் எதற்கெல்லாம்தான் கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது.

அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல், அவன் அந்த வடக்குத் தெருவில்தான் வளர்ந்து வருகிறான். சிலர் அவன் கொங்கராயகுறிச்சியிலிருந்து வந்தான் என்கிறார்கள். சிலர் அவனைச் சேரகுளத்திலிருந்து வந்ததாகச் சொல்லுகிறார்கள். அவன் கார்சேரிக்காரன் என்று சொல்கிறவர்களும் உண்டு. தெற்குத் தெரு ராமையா பிள்ளை, நாராயணனைப் பெற்றது பெரிய வீட்டுத் தங்கம்மாதான் என்று சொல்வார். ஆறேழு வயதுவரை அவன் பெரிய வீட்டில்தான் வளர்ந்தான் என்பார். அவன் கன்னங்கரேலென்று இருக்கவே, தங்கம்மா யாரோ வெளியாட்களுடன் கூடி அவனைப் பெற்றுவிட்டாள். அவன் பெரிய வீட்டு வாரிசே இல்லை என்று, ஒருநாள் ராவோடு ராவாக நாராயணனை வடக்குத் தெருவில் தெண்டிகாதேவி கோயில் முன்னால் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்று ராமையா பிள்ளை அடித்துப் பேசுவார். அதற்குச் சாட்சியாக இன்றைக்கும் தீபாவளி, பொங்கலுக்கெல்லாம் பெரிய வீட்டிலிருந்து வேட்டிகளும் சாரங்களும் துண்டுகளும் கொடுப்பதை ராமையாபிள்ளை சுட்டிக்காட்டுவார். அதில் உண்மை இல்லை என்று சொல்லவும் முடியாது.

வெள்ளை சுப்பையா வீட்டில் அவனுக்கென்று ஒரு ஒழுக்கரைப் பெட்டி உண்டு. அதில்தான் அவன் தன்னுடைய துணிமணிகளை எல்லாம் வைத்திருப்பான். ராத்திரி எந்த வீட்டில் வேண்டுமானாலும் படுத்துக்கொள்வான். மெட்டூர் காரி வீட்டுத் திண்ணை மாதிரி வேறு யார் வீட்டுத் திண்ணையும் வராது. அவ்வளவு வழவழப்பு அந்தத் திண்ணை. பட்டி பக்கமிருந்து வீசுகிற காற்றும் நிலா வெளிச்சமும் மனசை அள்ளிக்கொண்டு போகும். நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவான். அதுவும் பாம்படத்தாச்சி வீட்டில் மொச்சை போட்ட புளிக்குழம்பும் மோரும்விட்டுச் சாப்பிட்டுப்படுத்தால், அந்தத் தூக்கமே தனிதான். எந்தவீட்டில் படுத்துக்கிடந்தாலும், ராத்திரி மழைபெய்தால் அவனை உள்ளே கூப்பிட்டுக் கதவோரத்தில் படுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அவனுக்கு எந்தக் குறையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், அவனுடைய பல்லில் இரண்டு பற்கள், மூக்கின் கீழே வெளியே துருத்திக் கொண்டு தெரிவது ஒன்றுதான் குறை என்று அவன் நினைத்தான். வாயை மூடியிருந்தாலும் அந்த இரண்டு முன்னம் பல்லும் வெளியே தெரியும். பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகளெல்லாம் ‘மூஞ்சுரு பல்லன், மூஞ்சுரு பல்லன்’ என்று அவனைக் கேலி செய்யும். யார் வீட்டுக்காவது சாமான்கள் வாங்க கடைத்தெருவுக்குப் போனால் அங்கேயும் ஆணும் பெண்ணும் அவனைக் கேலி செய்வார்கள்.

வேறு யார் கேலி செய்தாலும் பரவாயில்லை. இந்த வெள்ளை சுப்பையா வீட்டுச் செல்லம்மாவுடைய கேலியைத்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செல்லம்மா சுப்பையாவுடைய மகள். அவள் கையால் எத்தனைதடவை அவனுக்குச் சாப்பாடு போட்டிருக்கிறாள்? அவளுக்காக அவன் என்னவெல்லாமோ செய்திருக்கிறான். வீட்டுக்குப் பின்னாலுள்ள வைக்கோல் படப்பில் கந்தையாவும் அவளும் வீட்டுக்குத் தெரியாமல் எத்தனையோ நாள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதையெல்லாம் அவன் பார்த்திருக்கிறான். அவள் கந்தையாவை அடிக்கடி வீட்டுக்குப் பின்னால் சந்திக்கிறதைப் பற்றி அவன் அவளுடைய வீட்டில் யாரிடமும் சொன்னதில்லை. அப்படியெல்லாம் இருந்தும் அவள்கூட அவனை ‘மம்பட்டிப் பல்’ என்று கேலி செய்கிறாள். அதைத்தான் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவனுடைய அந்த முன்னம் பற்களின் மீது அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ஒருநாள் வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுத்து வருகிறபோது, வேறு யார் வீட்டுக்கு? அந்தச் செங்குளத்துக்காரி வீட்டுக்குத்தான் லஸ்கர் பெருமாளைப் பார்த்தான். அவனிடம் “மாப்பிள்ளை… என் பல்லைச் சரி பண்ணனும். அதுக்கு என்ன பண்ணலாம்னு ஒரு யோசனை சொல்லேன்…” என்று நாராயணன் கேட்டான்.

“இது ஒரு விஷயமாடா? கொல்லாசாரிகிட்டே போ. அவரு அரத்தை வச்சு ராவி விட்டுருவாருடாஞ் அதுக்கப்புறம் ஒம் பல்லு சரியாகிரும்டா…” என்றான் பெருமாள். நாராயணனுக்கு ஒரே சந்தோஷம். இவ்வளவு சீக்கிரமாக அந்தப் பல்லுகளுக்கு விமோசனம் பிறக்குமென்று அவன் நினைத்ததே இல்லை. தண்ணீர் குடத்தைச் செங்குளத்தாள் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு அவளிடம், “சித்தி… நான் பல்லை ராவிட்டு வாரேன்…” என்று சொன்னான். “அடக் கரிமுடிவான்… பல்லை ராவப் போறீயா?” என்று அவள் ஆச்சரியப்பட்டாள். “ராவிட்டு வந்தப்புறம் பாரு… இனிம என்னையாரும் கேலி பண்ணமுடியாது…” என்று சொல்லிக்கொண்டே வேகமாக நடந்தான்.

நேரே செல்லம்மாவைத் தேடிப் போனான். அவள் வீட்டின் பின்பக்கம் மீன் கழுவிக் கொண்டிருந்தாள். “செல்லம்மா, எல்லார் பல்லு மாதிரியும் எம் பல்லும் சரியாகப் போவுது… கொல்லாசாரிகிட்டே போயி ராவிட்டு வரப்போறேன். இனிம நீ என்னை மம்பட்டிப் பல்லுன்னு சொல்ல முடியாதே…” என்றான். அவன் சொன்னதைக் கேட்டு செல்லம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.

கொல்லாசாரியுடைய பட்டறை கால்வாய் போகிற ரோட்டில்தான் இருக்கிறது. ஓட்டமும் நடையுமாகப் பட்டறைக்குப் போனான். ஆசாரி வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டியிருந்தார். அவருடைய மகன் துருத்தி போட்டுக் கொண்டிருந்தான். ஆசாரி, வாயில் வெற்றிலையை அதக்கிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் போய் நின்றான். ஆசாரி அவனை ஏறிட்டுப் பார்த்தார், “என்ன மருமகப் பிள்ளே… என்ன சமச்சாரம்? திடீர்னு வந்து நிக்கேரு?” என்றார்

”வேற ஒண்ணுமில்லை… எம் பல்லை ராவணும்…. அதான்…” என்றான். ஆசாரி அவனை விசித்திரமாகப் பார்த்தார்.

“என்னது? பல்ல ராவணுமா…?” என்று கேட்டார்.

“ஆமா.”

யாரோ அவனைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று அவருக்குத் தோன்றியது. துருத்திப் போட்டுக் கொண்டிருந்த செல்லையா வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான். ஆசாரிக்கும் சிரிப்பு வந்தது.

“பல்லை ராவதுக்கு இங்க எதுக்கு வந்தேரு?”

”பெருமாள்தான் நீரு ராவிவிடுவேருன்னு சொன்னான்…”

“பெருமாளா? எந்தப் பெருமாளு…?”

“அதான் லஸ்கர் பெருமாளு..”

“அவன் ஒம்மக் கேலி பண்ணதுக்காக அப்படிச் சொல்லியிருக்கான்… பல்ல எல்லாம் ராவ முடியுமா மருமகப் பிள்ளே? அவன் சொன்னதக் கேட்டு நீரும் வந்து நிக்கேரே… பேசாமப் போரும்…” என்று அவனிடம் சொல்லிக்கொண்டே வெற்றிலை எச்சிலைத் தலையை நீட்டித் தூரத் துப்பினார். “பாவம்… ஒம்மப் போயி இப்பிடிக் கேலி பண்ணிக்கிட்டுத் திரியுதானுகளே…”

“அப்பம் முடியாதா..?” என்று நாராயணன் கேட்டான். அவனுடைய முகம் தொங்கிக்கிடந்தது.

“பல்லச் சரி பண்ணனும்னா பல் டாக்டர் கிட்டல்லா போணும்… அவன் பேச்சிக் கேட்டுக்கிட்டு நீரு பட்டறைக்கி வந்து நிக்கேரே…?”

அதற்கு மேல் அங்கே நிற்பதில் பிரயோஜனமில்லை என்று நாராயணனுக்குப் பட்டது. ஆசாரிக்குப் பின்னால் கிடந்த சிறு இரும்புப் பட்டையை எடுத்துக்கொண்டு நடந்தான். ஆசாரி முடியாது என்று சொன்னால் என்ன? இந்தப் பட்டை கூராகத்தான் இருக்கிறது. பெருமாள் சும்மாவா பல்லை ராவலாம் என்று சொல்லுவான்? இந்தப் பட்டையை வைத்துப் பல்லை ராவி வெட்டிவிடலாம் என்று நாராயணன் நினைத்தான். இந்தப் பல்லை மட்டும் வெட்டிக் குறைத்துவிட்டால், எல்லோரையும்போல அவனுடைய வாயும், பல்லும் ஆகிவிடும். மூஞ்சுரு பல், மம்பட்டிப் பல் என்று யாரும் இனிச் சொல்ல முடியாது. அதைக் கற்பனை செய்து பார்த்துக்கொண்டான். பெருமிதமாக இருந்தது. மாராப்புத் துண்டை இடுப்புச் சாரத்துடன் இறுகச் சொருகிக் கொண்டான்.

தெண்டிக்கா தேவியம்மன் கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டு அந்த இரும்புப் பட்டையினால் முன்னால் நீட்டிக்கொண்டிருந்த அந்த இரண்டு பற்களையும் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து வெட்டி உடைக்கப் பார்த்தான். வலி தாளமுடியவில்லை. முனகிக்கொண்டே தன் முழு பலத்தையும் கொண்டு பல்லை அறுத்தான். ரத்தம் கொட்டியது. முகமெல்லம் வலித்தது. முயற்சியை விட்டுவிடாமல் அறுத்தான். மயங்கிச் சாய்ந்தான். முகம், துண்டு, இடுப்புச் சாரமெல்லாம் ஒரே ரத்தம். நினைவு மங்கியது.

அவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை முதலில் ஆடு மேய்க்கிற கிட்ணந்தான் பார்த்தான். ஊருக்குள் போய் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான். நாட்டு வைத்தியரிடம் தூக்கிக்கொண்டு போனார்கள். அவர் பற்றுப் போட்டு வாயை மூடிக் கட்டுப் போட்டார். முகமே வீங்கிவிட்டது நாராயணனுக்கு. வீக்கம் வற்ற ஒரு மாதம் ஆயிற்று. அதற்குப் பிறகு அவனுடைய பல்லைச் சொல்லி யாரும் அவனைக் கேலி செய்வதில்லை.