முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன் முள்ளிவாய்க்காலைக் கடந்தவர்களும்தான். பல்வேறு மறைமுக அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கண்ணீர் விடவும் தீபமேற்றவும் அதன் வழியே நீதிக்கானதொரு போராட்டத்தை முன்னெடுக்கவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் திரண்டிருந்தனர் ஈழ மக்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஈழத் தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத வடு. நமது மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று அழிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்த நிலம். கஞ்சிக்காக பசியில் கிண்ணங்களை ஏந்தி வரிசையில் நின்ற குழந்தைகள் கொன்றொழிக்கப்பட, அவர்களின் குருதிகள் கஞ்சிப் பானைகளில் தெறித்த நாட்கள். இனத்தின் விடுதலைக்காகவும் நிலத்தின்  உரிமைக்காகவும் போராடிய ஒரு இனம், தொகுதி தொகுதியாய் கொன்று அழிக்கப்பட்ட காலம் அது. ஆம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த இனப்படுகொலையில் இருந்து ஈழத் தமிழ் நிலம் தன்னுடைய காயங்களை எந்தளவுக்கு ஆற்றியிருக்கிறது? ஈழத் தமிழ் இனத்தின் காயங்களை ஆற்றுகின்ற, செயல்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா? உண்மையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆறாத ஒரு காயம். அதனை ஆற்றுவதற்கு நீதியே அவசியம். அதுவே மருந்து. பத்தாண்டுகளாக உழலும் எம் இனத்தின் காயங்களில் சிறிதளவேணும் ஆற்றப்படவில்லை. மாறாக, காயங்களைப் பெரிதாக்கும் முயற்சிகள்தான் நடக்கின்றன.

ஈழ மண்ணிலே, வீட்டுக்கு ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீட்டோடு முழு குடும்பமும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஈழ நிலத்திலே, வீட்டுக்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீட்டோடு முழு குடும்பமும் கொன்று அழிக்கப்பட்டிருக்கிறது. கண்களை முடிக்கொண்டால், முள்ளிவாய்க்கால்தான் எமை அலைக்கழிக்கிறது. இரவுகளும் நினைவுகளும் முள்ளிவாய்க்கால் காயங்களையே கிளறுகின்றன. அதற்கான காரணம் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. அதற்கான பொறுப்பு கூரப்படவில்லை. இந்த நிலை எதுவரை தொடரப் போகிறது?

முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை செய்யப்பட்டவர் களுக்கு ஒரு விளக்கினை ஏற்றி அவர்களுக்கு ஒரு துளி கண்ணீர் விட்டு அழுவதற்கு நாம் இந்தப் பத்தாண்டுகளில் போராடி இருக்கின்றோம். முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப் படுகொலை என்பதைச் சொல்வதற்குப் போராடியுள்ளோம். இதை சர்வதேச ரீதியிலான  போராட்டமாக முன்னெடுப்பதற்குப் பதிலாக நமக்குள்ளான முரண் பாடுகளாகவும் சிக்கல்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போதும், முள்ளி வாய்க்காலில் யார் பிரதான சுடரை ஏற்றுவது? யார் அஞ்சலி செலுத்துவது என்பதற்கான சண்டை தான் நடக்கிறது. வெறுமனே எண்ணையில் திரியினை முக்கி, தீபம் ஒன்று ஏற்றுவதே உத்தமான செயல் என்றளவில் உள்ளது எம் நிலவரம்.

நமது தரப்புக்கள் இதற்குள் முரண்பட்டுக் கொண்டிருக்க, சர்வதேசரீதியில் ஈழ இனப்படுகொலை குற்றத்திலிருந்து எப்படி தப்புவது என்ற தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றது இலங்கை அரசு. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சர்வதேச சமூகத்திற்கு உகந்த அரசாக செயற்படும் மைத்திரிபால சிறிசேன – ரணில் கூட்டரசாங்கம், இன அழிப்பு குற்றத்திலிருந்து தப்பிக்கொள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வென்றிருப்பது தொடர்ந்தும் இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். சர்வதேச அரங்கில் ஒரு பேச்சு, நாட்டில் ஒரு பேச்சு என்ற நிலையில்தான் உள்ளது மைத்திரி மற்றும் ரணிலின் போர் குறித்த பொறுப்புக்கூரல்.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. அவர்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கென்று ஒரு தேசம் அவசியமானது என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ் மக்கள் தமக்கான மரபுவழித் தாயகத்தையும் அவர்களுக்கான ஆட்சியையும் அதனைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் இந்த உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. இப்போதைய நகர்வுகள் அதனைப் பின்னுக்கு தள்ளி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழரை அழிக்க முனைகின்றது.

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர்களின் போராட்டம், தமிழர்கள் ஒரு அரசை உருவாக்கக்கூடிய, சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கக் கூடிய, நிலத்தையும் இனத்தையும் பாதுகாக்கக்கூடிய ஓர் அரசை நடைமுறையில் சாத்தியப்படுத்தியது. ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஓரினத்தின் விடுதலை அமைப்பு, எப்படி போராட்டம் இனி நகர வேண்டும்? இனி எமது ஆயுதம் எது என்று தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் சரியாகப் பயணிப்பதே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்.

இப்போதும் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இப்போதும் பண்பாடு சிதைக்கப்படுகிறது. அறிவிக்கப்படாத யுத்தமும் கண்ணுக்குத் தெரியாத இன அழிப்பும் நீள்கிறது. இந்தப் பத்தி எழுதிக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில்கூட முல்லைத்தீவு கொக்கிளாயில் சிங்களக் குடியேற்றங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருகோணமலையின் குச்சவெளி பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். முல்லைத்தீவிலும் புத்தர் சிலைகளை விற்பதற்காக முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வவுனியாவில் சைவாலயங்களில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் தமது ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்களின் பண்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளை தமிழர் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக, இன்னமும் விஸ்தரித்துள்ளனர். இன்னமும் தீவிரப்படுத்தியுள்ளனர் இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது என்பது மேலே குறிப்பிடப்பட்ட இன, நில அழிப்புக்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளாகத்தான் அமையும்.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை அவையில் இலங்கை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குகின்ற செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணை அனுசரணை வழங்குகிறது. இதற்குத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, காணாமல் போனவர்கள் பற்றிய உண்மைகளை வெளியிட மறுக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு எதற்காக எமது தலைமைகள் ஆதரவினை ஏன் வழங்குகின்றனர் என்ற கேள்வியை காணாமல்போனோரின் உறவுகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. இலங்கை அரசாங்கத்தினுடைய கட்டமைப்புகள் சிங்களப் பேரினவாதத்தை வளர்த்தெடுக்கும் நோக்கிலேயே இருக்கிறது. இலங்கை அரசோ, இலங்கை அரசின் நீதிக்கட்டமைப்பிலோ தமிழர்கள் நீதியினைப் பெற முடியாது. அவ்வாறு பெறக்கூடியதாக இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் என்ற ஒரு இனப்படுகொலை ஈழ மண்ணில் நிகழ்ந்திராது. எனவே, நீதியான சர்வதேச தலையீடே இங்கு அவசியமானது.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், நிகழ்ச்சிகள் மிகவும் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக மண்ணில் நடுவதற்கு மரங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பந்தலிடப்பட்டு வழங்கப்பட்டது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஊடாக நீதியினை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்றும் முள்ளிவாய்க்கால் பிரகடனம், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.

ஈழத்தில் சிங்கள அரசு நிகழ்த்திய இன அழிப்புப் போரே சிங்கள தேசத்தின் அரசியலுக்கானது. இன்றைக்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தையும், கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையும்கூட ஆளும் அரசும் – எதிர்தரப்பும் அரசியலாகவே கையாண்டு வருகின்ற நிலையில், அந்த அரசியலுக்குள் நீதிக்கான போராட்டம் ஒருபோதும் சாத்தியமற்றது. இனப்படுகொலைக்கொன நீதியை வழங்கும் பொறுப்பு, முழு சிங்கள தேசத்திற்குமானது. போர்க்காலத்தில், கொல்லப்பட்ட ராணுவத்தை, இன்று காணாமல் போன ராணுவமாக காட்ட முயலும் சிங்கள தேச அரசிடம், எவ்வாறு நீதியைப் பெற முடியும்? அப்படி நம்பினால், ஓர் இனத்தின் அரசியலாக இல்லாது, அது ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றும் கட்சி அரசியலாகவே சுருங்கும்.