முதலில் ஒன்றைக் கூறிவிடுகிறேன். ராஜராஜசோழன் என்ற பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையில் ஆட்சி செய்ததாக கருதப்படும் மன்னனை விமர்சிப்பதற்கும், திட்டுவதற்கும், இகழ்வதற்கும்கூட யாருக்கும் உரிமை இருக்கிறது. அதை நீதிமன்றங்களோ, அரசோ மறுப்பது ஜனநாயகப் படுகொலை. குறிப்பாக இயக்குனர் பா.ரஞ்சித் தலித் மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில், அவர்களை நிலமற்றவர்களாக மாற்றியதில் ராஜராஜன் போன்ற அரசர்களுக்கும் பங்கிருக்கிறது என்று பேசியதில் எந்தக் குற்றமும் கிடையாது. அது அவரது பார்வை அல்லது எண்ணம். மனம் புண்படும், சமூக அமைதி கெடும் என்றெல்லாம் பேச்சு சுதந்திரத்தை முடக்குவது மக்களாட்சியை கொன்று விடும் என்பதால், கருத்து சுதந்திரத்தைக் காப்பதில் ஆர்வமுள்ள முற்போக்காளர்கள் அனைவரும் ரஞ்சித்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும். எதிர்த்து இயங்கவேண்டும் என்பது அவசியம். எனவே இந்தக் கட்டுரை ரஞ்சித் பேசியது சரியா, தவறா என்பதைக் குறித்து இல்லை.
இந்த விவாதத்தில் பல குரல்கள் ஒலித்தன. இவற்றில் பல வரலாற்றுத் தரவுகளை பரிசீலிப்பனவாகவும், அந்த தரவுகளின் அடிப்படையில் ராஜராஜன் முக்கியமான நன்மைகள் பல புரிந்த அரசன் என்று சிலரும், இல்லை அவன் மோசமான காரியங்களை செய்தவன் என்று சிலரும் வாதிட்டிருந்தார்கள். பொதுவாக பார்ப்பனர்களை, பார்ப்பனீயத்தை ஆதரித்தது, தேவரடியார்களை கோயில்களில் குடியமர்த்தியது போன்றவை அவன் காலத்தில் அதிகரித்தது சுட்டிக்காட்டப்பட்டது. நில உடைமை என்பதற்கு அந்த காலத்தில் வழங்கிய பொருள் வேறு என்றும், தலித் மக்களிடம் குறிப்பாக ஆதிதிராவிடர்களிடம் நிலங்களை பறித்ததாகக் கூறுவது சரியான வர்ணனை இல்லை என்றும் சிலர் கூறினார்கள். ராஜராஜன் செய்த செயல்கள் எல்லாம் பல காலமாக பல அரசர்களால் செய்யப்பட்டவைதான், அவனை மட்டும் குற்றம் செலுத்த முடியாது என்றும் கூறினார்கள். வேறு சிலர் எல்லோரும் செய்தாலும், ராஜராஜன் அதிகமாக பார்ப்பனீய ஆதரவாளனாக இருந்தான், தேவரடியார் முறையை விரிவாக்கினான் என்றார்கள். இந்த விவாதங்களெல்லாம் வரலாறு குறித்து சிந்திப்பதற்கும், கல்வெட்டு சான்றாதாரங்கள், செப்பேடுகள், இலக்கியப் பதிவுகள் என நமக்குக் கிடைக்கும் தரவுகளிலிருந்து எப்படி வரலாற்று எழுதியல் வரலாற்றை கட்டமைக்கிறது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள உதவும். எனவே இந்த விவாதங்களும் பயனுள்ளவை என்பதில் ஐயமில்லை. ஆனால் என்னுடைய இந்த கட்டுரை வரலாற்று உண்மைகள் என்ன என்று ஆராயும் கட்டுரை இல்லை. எனக்குப் பொதுவாகவே வரலாற்று உண்மைகளை துல்லியமாக நிறுவ முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. கிடைக்கும் சில தடயங்களை எப்படி அர்த்தப்படுத்துகிறோம் என்பதிலிருந்துதான் உண்மைகள் தோன்றுகின்றன; அவை முற்றுண்மைகள் கிடையாது. எனவே நான் அந்த விவாதத்தில் நுழைவதில்லை.
இந்தக் கட்டுரை வரலாறு சமகால சொல்லாடல்களில் எப்படி நுழைகிறது என்பது குறித்தும், சமூக குறியியக்கம் எப்படி ராஜராஜசோழன் என்ற சொல்லை, அது சுட்டும் ஒரு பேரரசனை உருவகம் செய்கிறது என்பதையும் குறித்தது. அந்த குறியீட்டு இயக்கத்தில் ராஜராஜசோழன் என்ற பிம்பம் எப்படியான அர்த்தங்களை பெருகிறது, அந்த அர்த்தங்களை கேள்விக்கு உள்ளாக்கும் செயல் எப்படியான அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது, அந்த அதிர்வலைகளின் விளைவுகள் எத்தகையவை என்பதைக் குறித்தது. என்னுடைய நிலைபாடு என்ன என்பதைவிட, குறியீட்டு இயக்கமாக நான் ரஞ்சித் எழுப்பிய பிரச்சினையை எப்படி புரிந்துகொள்கிறேன் என்பதைக் கூறுவதே முக்கியம் என நினைக்கிறேன். ஏனெனில் என்னுடைய நிலைபாடு என்பது குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமில்லை. ராஜராஜனைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் குறியியக்க செயல்பாட்டை புரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வமிருக்கிறது. அதனை முன்வைத்து சில கணிப்புகளும் உள்ளன. அதன் அடிப்படையில் ரஞ்சித் பேச்சினைக் குறித்த சில சாதகமான, எதிர்மறையான அம்சங்களை இறுதியில் சுட்டிக்காட்டவும் செய்வேன்.
வரலாற்று எழுதியலும், புனைவெழுத்தும்
ராஜராஜசோழனை முதலில் தமிழர்கள் மனதில் பெரிய கதாநாயகனாக்கியது தமிழ் தேசியவாதிகள் அல்ல. இந்திய தேசியவாதியான கல்கி கிருஷ்ணமூர்த்திதான் தனது பொன்னியின் செல்வன் என்ற அசாதாரணமான படைப்பில் இளம் வயது ராஜராஜனை அருண்மொழிவர்மன் என்ற கதாபாத்திரம் ஆக்கினார். பொன்னியின் செல்வனை யார் வேண்டுமானால் பதிப்பிக்கலாம் என்ற காப்புரிமையற்ற நிலை ஏற்பட்ட பிறகு பல்வேறு பதிப்பகங்களும் மலிவு விலை பதிப்புகள், விசேஷ பதிப்புகள் என பலவிதமாக பதிப்பித்து வருகின்றன. நான் கவனித்த வரை அத்தகைய பதிப்புகள் தொடர்ந்து விற்பனையாகின்றன. அதைத்தவிர சித்திரக்கதையாகவும் பலரும் அதை வெளியிட்டு வருகிறார்கள். எல்லா காலங்களிலும் அந்த நாவலை திரைப்படமாக்கும் கனவு ஒன்று தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். அதற்கான திரைக்கதை அமைக்கச்சொல்லி இயக்குனர் மகேந்திரனை பணியில் அமர்த்தியதுதான் மகேந்திரன் சென்னையில் தங்கி இயக்குனராகும் வாய்ப்பினை ஏற்படுத்தியது. அநேகமாக எம்.ஜி.ஆருக்கு இளம்வயது ராஜராஜசோழனாக நடிக்கும் விருப்பம் இருந்திருக்கும் என்பது வெளிப்படை. பின்னர் கமலஹாசனுக்கு இந்த நாட்டம் இருந்ததாக கூறப்பட்டது. இப்போது மணிரத்னம் இதை படமாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
கல்கியின் இந்த நாவல் ஒரு புனைவுக்களத்தை உருவாக்கியது. இந்த நாவலின் தொடர்ச்சியான நிகழ்வுகளை அகிலன் “வேங்கையின் மைந்தன்” என்ற பெயரிலும், விக்கிரமன் “நந்திப்புரத்து நாயகி” என்ற பெயரிலும் எழுதினார்கள். புனைவெழுத்து வரலாற்று எழுதியல் ஆகாது என்றாலும், வெகுஜன அளவில் வரலாறு குறித்த சித்திரத்தை புனைவெழுத்து தோற்றுவித்து விடுகிறது. அமெரிக்காவில் மாடிசன் நகரில் ஆண்டுதோறும் நிகழும் தெற்காசிய கருத்தரங்கில் நான் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நாவல் குறித்து ஒரு கட்டுரை வாசித்தபோது அங்கிருந்த பார்வையாளர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்கியின் புனைவுகளை வாசித்திருந்ததால் சோழர்களின் புலிக்கொடியின் மீதான் ஈர்ப்பில்தான் விடுதலைப்புலிகளென பெயரிட்டதாக ஒருமுறை கூறியதாகக் குறிப்பிட்டார். அது சரிதானா என நான் இன்னமும் ஆராயவில்லை. ஆனால் புனைவெழுத்தின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பது மட்டும் உண்மை.
கல்கிக்கு முன்னாலேயே கு.ப.ராஜகோபாலன் என்ற மணிக்கொடி எழுத்தாளர் சரித்திரக் கதைகளை எழுதியுள்ளார். பட்டொளி வீசிப் பறக்கும் புலிக்கொடி குறித்தெல்லாம் பரவசமாக எழுதியுள்ளார். இவ்விதமாக வியந்துநோக்கும் பார்வையிலிருந்து மாறுபட்டு பின்னாளில் மன்னர்களின் அதிகாரம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு இயங்குகிறது என்பதை விமர்சன பூர்வமாகப் பார்க்கும் விதமாகவும் சில புனைவுகள் வந்துள்ளன. ராஜராஜசோழன் நாடகத்தை எழுதிய அரு.ராமநாதனே, ”வீரபாண்டியன் மனைவி” என்ற நாவலில் மன்னராட்சியின் அதிகார மமதை, ஆதிக்க வெறி, வன்முறை ஆகியவற்றை விமர்சித்து எழுதியுள்ளார். சுஜாதா “காந்தளூர் வசந்தகுமாரன் கதை” என்று எழுதியபோது சரித்திர நாவலில் சில நவீன விமர்சன நோக்குகளை கலந்தார். அரு.ராமநாதன் நாடகம் தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாக சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜராஜசோழன்’ திரைப்படமாக 1973-ஆம் ஆண்டு வெளிவந்தது. போர்க்காட்சிகளை சிறப்பாக அமைக்காததால் சரியாக ஓடவில்லை.
பள்ளியில் சரித்திரப் பாடத்தில் மன்னர்களின் வீரம், நாட்டை விரிவாக்க போர்களில் வென்று புதிய நிலப்பகுதிகளை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தது, கல்வி, கலை ஆகியவற்றை ஆதரித்தது, நிலையான குழப்பங்களற்ற ஆட்சியைத் தந்தது, சாலைகள் நீர்நிலைகள் ஆகியவற்றை மேம்படுத்தியது என்பது போன்ற சிறப்பம்சங்கள் கூறப்பட்டிருக்கும். சில தவறான ராணுவ முடிவுகள், தோல்விகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக அரசர்களுக்கு ஆதரவான மனநிலையே மாணவர்களிடம் ஏற்படும்படியாக எழுதப்பட்டிருக்கும்.
வரலாற்றாசிரியர்கள் எழுதும்போது கல்வெட்டுகளில் காணக்கிடைக்கும் தகவல்களை விரிவாக எழுதுவார்கள். கால வரிசையில் நிகழ்வுகளை தொகுப்பதில் முனைப்புக்காட்டுவார்கள். இடைவெளிகளை தர்க்கபூர்வமான யூகங்களால் இட்டு நிரப்புவார்கள். பொதுவாக இவ்வகையான வரலாற்று நூல்களை கல்விப்புலம் சார்ந்தவர்களே அதிகம் வாசிப்பார்கள். வெகுஜன வாசிப்பிற்கான வரலாற்று எழுதியல் என்பதும் ஓரளவு இருக்கிறது. இது கல்விப்புல எழுத்துக்களை எளிமையாகத் தொகுத்து வரலாற்று நிகழ்வுகளை சுவாரசியமாக வாசிக்கும்படி கூறவது (உதாரணம்: அண்ணாவின் ரோமாபுரி ராணிகள், கா.அப்பாதுரையின் “தென்னாட்டுப் போர்க்களங்கள்”, மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் போன்றவை) இவை இருந்தாலும் புனைவெழுத்தே மக்களின் மக்களின் மனதில் அதிகம் இடம் பிடிப்பதாக இருக்கிறது என்றால் மிகையாகாது. உதாரணமாக வங்க வரலாற்று ஆசிரியர் ஜாதுநாத் சர்க்கார் மராத்திய சிவாஜி குறித்து எழுதிய ஓரளவு வெகுஜன வாசிப்பிற்கான நூலிலிருந்து அறிஞர் அண்ணா சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற புனைவை நாடகமாக எழுதினார். எப்படி தன் வாள்வலிமையால் சிவாஜி சாம்ராஜ்யத்தை உருவாக்கினாலும் ஆட்சி செய்ய பார்ப்பனர்களின் அங்கீகாரம் தேவைப்பட்டது என்பதைக் கூறும் நாடகம் அது. மிகவும் பிரபலமடைந்தது. அக்கால தமிழக மக்களில் பலருக்கு மராத்திய சிவாஜி என்றால் அண்ணாவின் நாடகமே நினைவுக்கு வந்திருக்கும்.
ராஜராஜசோழன் குறித்த புனைவுப் பரப்பில் கல்கியின் நாவலில் அவனது மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலன் மரணம் ஒரு முக்கிய சம்பவம். கரிகாலனை பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் கொன்றதாக சித்தரித்திருப்பார். ஆனால் அவர்கள் பெயர்களை கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்களான ரவிதாஸக் கிரமவித்தன், சோமன் சாம்பவன் என்றெல்லாம்தான் கூறியிருப்பார். இந்த முரண்பாட்டை பொதுமன்ற வரலாற்றுச் சிந்தனையாளர் பொ.வேல்சாமி சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். பாலகுமாரன் கரிகாலனை கொன்றது காந்தளூர் சாலை பிராமணர்கள் என்று மாறுபட்ட புனைவை அவரது “உடையார்” நாவலில் செய்துள்ளார். ஆனால் ஒரு கற்பனைப்பரப்பு என்ற அளவில் கல்கியின் விரிவும், சுவாரசியமும் பாலகுமாரனின் நாவலில் அமையவில்லை. அதனால் பாலகுமாரனின் பிற நாவல்கள் அளவிற்கு உடையார் பரவலான வாசக கவனமும் பெறவில்லை என்றே நினைக்கிறேன். சமீபத்தில்கூட குங்குமம் இதழில் அதன் ஆசிரியர் கே.என் சிவராமன், ராஜராஜசோழனே அவன் அண்ணனை கொன்றிருக்கலாம் என்ற எண்ணத்தை சில சரித்திர சான்றுகள் அடிப்படையில் ”குற்றம், நடந்தது என்ன?” என்ற பாணியில் வெளிப்படுத்தியுள்ளார். பொ.வேல்சாமியோ தஞ்சை கோயிலைக் கட்டியது ராஜராஜன் என்றால் ஆங்கிலேயர் அதைச்சொல்லும் வரை ஏன் அது அறியப்படாது இருந்தது என்று கேட்டுள்ளார். இப்படியாக பல கேள்விகள், பல மர்மங்கள் இருந்தாலும் ராஜராஜன் தஞ்சை கோயிலை கட்டினான் என்ற உண்மை சரித்திர உண்மையாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் அதற்கான உந்துதல் அருண்மொழி வர்மன் மனதில் எப்படி ஏற்பட்டது என்பதை கவித்துவமாக புரிந்து கொள்கிறார்கள்.
இரண்டாம் சோழர்கள் காலம் என்ற விஜயாலயன் துவங்கி, மூன்றாம் ராஜேந்திரனில் முடியும் நானூற்றைம்பது ஆண்டுகள் (பொ.ஆ.815? – பொ.ஆ.1280?) ஆண்ட சோழப் பேரரசே தமிழகப் பேரரசுகளில் மிக அதிகமான விரிவும் (மலேயா, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் இவர்கள் தாக்கம் இருந்தது), கால நீட்சியும் கொண்டது என்பதால் தமிழக வரலாற்றில் முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. இதன் அடையாளமாக பல்வேறு கோயில்களுக்கு இடையில் தஞ்சை பெரிய கோயில் தனித்து நிற்கிறது. பேரரசு காலத்தை கடந்து நிற்காவிட்டாலும் பேரரசின் சின்னங்கள் காலம் கடந்து நிற்பதை அரசர்கள் விரும்பினார்கள் என்றே தோன்றுகிறது. அவ்விருப்பத்தின் படியே இன்றும் தஞ்சை பெரிய கோயில் சோழப்பேரரசின் அடையாளமாக விளங்குகிறது. இந்திய அளவில் தாஜ்மஹால், ஹம்பி, கஜராஹோ, கொனாரக் வரிசையில் தஞ்சை பெரிய கோவிலும் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக, கட்டிடக் கலை சாதனையாக விளங்கி வருகிறது.
கல்கி கிருஷ்ணமூர்த்தி
கல்கி கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸ்காரர், சி.ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜியின் அணுக்கத்தொண்டர். தமிழ் நவீன இதழியலிலும், நவீன பார்வைகளை உருவாக்கியதிலும், கலை விமர்சனத்திலும் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கியவர். சீர்திருத்தப் பார்ப்பனர். சைவ, வைணவ பாரம்பர்யங்களை கொண்டாடியவர்; பௌத்தம் குறித்தும், புத்தர் குறித்தும் சில நேர்மறையான பார்வைகளை வெளிப்படுத்தியிருந்தாலும், சமணர்கள் குறித்து நல்ல எண்ணம் எதுவும் அதிகமாக இவர் எழுத்தில் பதிவாகவில்லை. பௌத்தத்தைவிட, சமணமே தமிழகத்தில் அதிக செல்வாக்கு பெற்றிருந்ததாகத் தெரிவதும், பக்தி இயக்க காலத்தில் சமணமே பெரிதும் விரோதிக்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம். காளாமுகர்களை தீவிரவாதிகள் போல இவர் புனைவெழுத்தில் சித்தரிப்பதும் கவனத்திற்குரியது.
இங்கே நாம் அணுக வேண்டிய முக்கியமான கேள்வி கல்கி ஏன் வரலாற்றுப் புனைவில் ஈடுபட்டார் என்பதுதான். அதற்கும் காங்கிரஸ் முன்னெடுத்த இந்திய தேசியத்திற்கும் நுட்பமான தொடர்புகள் இருக்கின்றன. காங்கிரஸினுள் பலவிதமான தத்துவப் போக்குகள் இருந்தன. இந்தியா இன்னம் நவீனமடையவேண்டும். அதற்காக சமூக சீர்திருத்த வேலை செய்யவேண்டும். அதுவரை பிரிட்டிஷ் ஆட்சியில் டொமீனியன் அந்தஸ்து பெற்று இருக்கலாம் என்பது மிதவாதப் போக்கு. மோதிலால் நேரு, கோகலே போன்றோர் மிதவாதிகள். இந்தியா அந்நியர்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது. அது அவமானம். உடனே கிளர்ச்சி செய்யவேண்டும் என்பது தீவிரவாதம். திலகர், லாலா லஜபத் ராய் போன்றோர் தீவிரவாதிகள். காந்தி புதியதொரு பார்வையைக் கொண்டு வந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சி இருக்கலாம். ஆனால் இந்திய பண்பாட்டில் மாறுதல்கள் கொண்டுவரக்கூடாது. தனி நபர்களை சட்டத்தின் ஆட்சியில் குடி நபர்களாக்கும் சிவில் சமூகமயமாக்கம், தொழில் மயமாக்கம், நுகர்வு கலாசாரம் போன்றவை தேவையற்றவை என்றார். இது போன்ற போக்குகளுக்கு இணையாகவும், மாறாகவும் இந்தியாவின் பண்டைய பெருமை, அதனை மீட்டெடுக்க விரும்பும் வெகுஜன இறையாண்மை சார்ந்த கற்பிதங்கள் மக்களிடையே வளர்ந்தன. அதன் ஒரு பகுதியாகவே கல்கி போன்றோரின் வரலாறு சார்ந்த கற்பனைகள் பிறந்தன. நான் அகம்-புறம் பத்திரிகையில் எழுதிய கல்கியின் பார்த்திபன் கனவு நாவல் குறித்த கட்டுரையில் இதைப் பின்வருமாறு விளக்கியிருந்தேன்.
கல்கியின் மனதில் வரலாற்றுப் புதினம் குறித்த முதல் உந்துதல் ஏற்பட்ட தருணத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் தி.க.சி முதலிய நண்பர்களுடன் மாமல்லபுரத்திற்கு செல்கிறார். ஒரு மாலைப்பொழுதில் அங்கே சிற்பங்கள் அருகே கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது தி.க.சி. கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் ஒன்றைப் பாடுகிறார். அதில் இரண்டு வரிகள் வருகின்றன.
விதியின் எழுத்தை கிழிச்சாச்சு
முன்னம் விட்ட குறை வந்து தொட்டாச்சு
இந்த வரிகளைப் பாடிய தருணம் கல்கியின் மனக்கண்ணில் அந்த இடம் ஒரு துறைமுகமாக காட்சி தருகிறது. கடலில் பல கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றன, ஏராளமான பொதி வண்டிகளில் சரக்குகள் போவதும், வருவதுமாயிருக்கின்றன. குதிரைகளும், யானைகளும் தென்படுகின்றன. இப்படியாக ஒரு காட்சி தோன்றுகிறது. இதுவே கடந்த காலம் குறித்து புதினங்களை உருவாக்க முதல் உந்துதலை தருகிறது.
பாடலின் இரண்டு வரிகளும் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. விதியின் எழுத்தை கிழிச்சாச்சு என்று சொல்லும்போது மானுட யத்தனம் சார்ந்து புதிய வரலாறு சமைப்பதாக அர்த்தமாகிறது. முன்னம் விட்ட குறை வந்து தொட்டாச்சு என்று சொல்லும்போது அவ்வாறான செயல் முந்தைய காலத்தில் செய்த செயலின் தொடர்ச்சிதான் என்றாகிவிடுகிறது. அதாவது மானுட யத்தனம் ஏற்கனவே தொடங்கியதை தொடர்வதுதான் என்றாகிறது. இங்கே வரலாற்று ரீதியான வளர்ச்சி, தோற்றவியல் ரீதியான பண்பாக மாற்றப்படுகிறது, இந்தியா சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் நேரு புகழ்பெற்ற ஆரம்ப வரிகளில் இதே பண்பினைக் குறிப்பிட்டார். “Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially.” எப்போதோ, எவ்விதத்திலோ தீர்மானிக்கப்பட்டதுதான் இப்போது நடக்கிறது. இந்தியா என்ற தேசம் அதன் ஆன்மா பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் கொண்டது என்ற அழகிய கற்பிதம் நவீன இறையாண்மையின் அடிப்படையாகிறது.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சம் நவீன தேசம் என்பது வரலாற்றின் தொடர்ச்சியாகவே உருவாக்கப்பட முடியும் என்பதும், அதனால் வரலாற்றில் உருவாகிய பேரரசுகளுடன் தேசியவாத சிந்தனையும், கற்பனையும் அடையாளப்படுத்திக்கொள்ளும் என்பதும் நியதி. இந்த அரசின் தொடர்ச்சி என்பது வெகுஜன இறையாண்மையின் அடிநாதம் எனலாம். இதை அனுசரித்தே பள்ளிக்கல்வியும், பொதுமன்ற சித்தரிப்புகளும் அமையும். யாரும் ஏன் சோழ மன்னன் இலங்கை மீது போர் தொடுத்தான், தன்னுடைய நாட்டை ஆண்டால் போதாதா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். பேரரசின் விரிவாக்கம் என்பது வரலாற்றில் முற்போக்கான செயலாகவே பார்க்கப்படும். நவீன தேசம்தான் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நிற்க வேண்டும். இன்னொரு நாட்டைப் பிடிக்க நினைப்பது தவறு. பேரரசு நவீன தேசம் இல்லை என்பதால் அது தொடர்ந்து தன்னை விரிவாக்கிக் கொள்ளலாம். அத்தகைய பண்டைய பேரரசுடன் நவீன தேசம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது தவறாக கருதப்பட மாட்டாது. காரணம் வெகுஜன இறையாண்மை என்பது இரண்டையும் இணைக்கிறது.
இத்தகைய காரணங்களால்தான் கல்கி பல்லவ, சோழப் பேரரசர்களைக் குறித்து வரலாற்று புதினங்கள் எழுத விரும்பினார். தேசிய உணர்ச்சியை உருவாக்க இந்த செயல்பாடு அவசியமானது என்று நினைத்தார். 1944 முதல் 1954 வரை பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் இறுதியாக பொன்னியின் செல்வன் என்ற மூன்று புதினங்களை எழுதி முடித்தார். இதில் பார்த்திபன் கனவு, காலனீயத்திலிருந்து விடுபடத் துடிக்கும் இந்தியாவின் விழைவு என்றால், பொன்னியின் செல்வன் இந்திய விடுதலை கொடுத்த மகத்தான மன எழுச்சியில் கல்கி சாதித்த பெருங்கனவு. அந்த நாவலை பல்வேறு வகைகளில் கடுமையாக விமர்சனம் செய்யலாம்; தவறில்லை. ஆனால் வெகுஜன இலக்கியம் என்ற வகைப்பாட்டில் அது அசாதாரணமான சாதனை என்பதை அறுபதாண்டுகள் கழித்தும் தொடர்ந்து அது விற்பனையாகி வருவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இத்தகைய வெகுஜன ஈடுபாடு ஆரோக்கியமானதா என்ற கேள்வி சிக்கலானது. அதற்கு பதில் சொல்ல நாம் வரலாற்றுப் பிரக்ஞை என்றால் என்ன என்பதையும், அது ஏன் நவீன வாழ்க்கையில் முக்கியத்துவம் பெருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
வரலாறு முக்கியம் அமைச்சரே!
மன்னர்களை கேலி செய்து உருவான இருபத்து மூன்றாவது புலிகேசி திரைப்படத்தில் மன்னரான புலிகேசியே கூறும் வசனம்தான் “வரலாறு முக்கியம் அமைச்சரே!”. இதில் வரலாற்றுப் பிரக்ஞை வெகுஜன நோக்கில் செல்லமாக கேலி செய்யப்படுகிறது எனலாம். மக்கள் வாழ்க்கையின் அடிப்படை காலப் பரிமாணம் அன்றாடம்தான். அதாவது ஒரு நாள் போனால் இன்னொரு நாள். அவர்களது முயற்சிகள், வெற்றிகள், தோல்விகள், துன்பங்கள், இன்பங்கள் எல்லாம் மிகப்பெரிய கடலில் எழும் சிறு அலைகள் போல எழுந்து அடங்குகின்றன. மானுடர்களின் கூட்டு இயக்கமான வரலாற்று நகர்வுகள் அவர்கள் வாழ்க்கையில் ஊடுருவினாலும் மீண்டும் சமூக வாழ்க்கை அன்றாடத்தின் சுழற்சியாகத்தான் இருக்கிறது. எனவே வரலாற்றை அவர்கள் பெரிதாகக் கருதுவதில்லை.
ஒரு சிற்றூரில் சுதந்திரப் போராட்டம் நடந்திருக்கலாம்; இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்திருக்கலாம். அந்த தகவல்களை நீங்கள் ஆவணக்காப்பகத்தில் பழைய செய்தித்தாள்களில் படித்துவிட்டு அந்த ஊருக்குச் சென்று பேசினால் மக்கள் அதைப் பெருமளவு மறந்திருப்பார்கள். ஏதோ லேசாக நினைவிருக்கும். ஆமாம், அப்படி நடந்தது என்பார்கள். சிலர் மிகைப்படுத்தப்பட்ட சித்திரத்தை கொடுப்பார்கள். ஏனெனில் அவர்கள் வாய்மொழியாகப் பேசிப்பேசி அந்த சம்பவம் ஊதிப் பெருக்கப்பட்டிருக்கும். துல்லியமான கடந்த கால நினைவுகள் என்பது மிக அபூர்வமாகவே சிலரிடம் இருக்கும். சாதாரணமாக நண்பர்களே ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது யார் யார் உடனிருந்தார்கள் என்பதை பல சமயம் பிழையாகவே கூறுவார்கள். அன்றாட வாழ்க்கை நினைவுகளை அழித்துக்கொண்டே இருக்கும். எந்த அளவு கடந்த காலத்தை நினைவில் கொள்வது வாழ்க்கைக்குத் தேவை என்பது கேள்விக்குரியது. நவீன வரலாற்று எழுதியல் நன்மைகள் மட்டுமே செய்வதில்லை. இஸ்லாமிய அடையாளத்தை இந்திய தேசத்திற்கு அந்நியமானதாக நிறுவ நவீன வரலாற்று எழுதியலே காரணம் என்பதை நாம் கவனம் கொள்ள வேண்டும். வன்முறைகளை மறப்பது சமாதான வாழ்க்கைக்கு அவசியம். மறப்பதன் அறம் குறித்து நீட்சே எழுதியுள்ளார். உள்ளபடியே மக்கள் மறப்பதன் மூலமே வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. இரண்டு குடும்பங்களிடம் சில கேள்விகளை கேட்டு, போட்டிகளை வைத்து யார் வெல்கிறார்கள் என்பதை முடிவு செய்யும் நிகழ்ச்சி. ஏதோ அரசு அதிகாரியாகப் பணியாற்றுபவரின் குடும்பத்திடம் “விமான விபத்தில் இறந்த இந்தியப் பிரதமரின் மகன் யார்?” என்று கேட்டார் நிகழ்ச்சி நடத்துபவர். அவர்கள் ஒரு மாதிரி சிரித்தார்கள். “அவர் பெயர் காந்தி என்று முடியும்” என ஒரு க்ளூ கொடுத்தார். பட்டென்று ”ராஜீவ் காந்தி” என்று சொன்னார்கள். அந்த அளவுதான் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மக்கள். சஞ்சய் காந்தியை தெரியாவிட்டாலும், ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டவரை விமான விபத்தில் இறந்ததாகச் சொல்வது எப்படிச் சாத்தியமாயிற்று என்பது பெருவியப்புதான். ஆனால் ஒரு மாநில முதல்வரே ”கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார்” என்று சொல்லும்போது வரலாற்றுத் தகவல்கள் நமக்கு எவ்வளவு அந்நியமாக இருக்கிறது என்பது புலப்படும்.
மற்றோருபுறம் மானுடப் பிரக்ஞை என்பது சிறப்பாக செயல்பட வேண்டுமானால் நினைவுகள் சேகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் முன்னர் நிகழ்ந்ததன் வெளிச்சத்தில் சமகால நிகழ்வுகளை பரிசீலிக்க முடியும். அதேபோல கலை இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு என்பதும் அன்றாட வாழ்க்கைக்கு வெளியே நம் பிரக்ஞையை செயல்பட வைப்பவை. இவையெல்லாமே நம் உள்முக பரிசீலினையைத் தூண்டி நம் பிரக்ஞையை, சிந்தனையை வளர்ப்பவை. கல்வியின் முக்கிய பரிமாணமாக இதுவே இருக்கிறது.
நவீன வரலாற்று எழுதியலும், நவீன அரசு உருவாக்கமும் பரவலாக சமூகம் வரலாற்றுப் பிர்கஞை கொள்வதன் மூலமே ஒன்றோடொன்று பிணைந்து இயங்குகிறது. ஏனெனில் நவீன அரசு என்பது மக்களின் அரசு. அவர்களிடம் அன்றாடம் கடந்த வரலாற்றுப் பிரக்ஞையும், கலை இலக்கியம் தரும் வாழ்வின் நுட்பங்களைப் பரிசீலிக்கும் பிரக்ஞையும் வலுவடைந்தால்தான் அவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொண்டு, சமூக முன்னேற்றத்தையும் சாத்தியமாக்க முடியும் என்பதே நவீனகாலத்தின் அடிப்படை. இதன் காரணமாகவே தொல்பொருள் ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி போன்றவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கி வலுவடைந்து பெருகுகின்றன. வரலாற்றை ஆராய்ந்து தொகுத்துக்கொள்ளும் ஆர்வம் பெருகுகிறது. காட்டில் மறைந்திருந்த கஜுராஹோ கோயில்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. மொஹஞ்சதாரோ, ஹரப்பா, அமராவதி என பல அகழ்வாராய்ச்சிகள் புதிய தகவல்களை தருகின்றன. கல்வெட்டுகள் எல்லாம் படியெடுத்து வாசிக்கப்படுகின்றன. வரலாற்று எழுதியல் முழு வேகத்தில் நிகழ்கின்றது. அதெல்லாம் பாடங்களாக மாறி பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. அசோகர் மரம் நட்டார், சாலைகள் அமைத்தார், குளம் வெட்டினார் என பிள்ளைகள் மனப்பாடம் செய்கிறார்கள். எப்படியாவது சமூகத்தை வரலாறு தெரிந்த சமூகமாக மாற்றுவது அவசியமாகிறது.
தஞ்சாவூர் பயணம்
கல்கி ஒரு சுவாரசியமான கட்டுரையை நாற்பதுகளில் எழுதினார். அது என்னவென்றால் அவர் தஞ்சைப் பெரியகோவிலை பார்த்து ரசிக்க விடுமுறையில் தஞ்சாவூர் செல்ல முடிவு செல்கிறார். அந்தப் பயணத்திட்டத்தை நண்பர்களிடம் கூறும்போது எல்லோரும் பல்வேறு காரணங்களை யூகிக்கிறார்கள். உறவினர் திருமணமா, நிலம் வாங்கப் போகிறீர்களா, குலதெய்வக் கோயிலில் வேண்டுதலா, ஏதாவது குடும்பப் பிரச்சினையா என்றெல்லாம் கேட்கிறார்கள். கோயிலைப் பார்க்கப் போகிறேன் என்றால் திகைப்படைகிறார்கள். யாராவது சென்னையிலிருந்து தஞ்சாவூர் வரை வெறுமனே கோயிலை பார்க்கச் செல்வார்களா என்பதே பெரிய வியப்பாக இருக்கிறது. இதைக் கூறியபிறகு கல்கி தஞ்சைப் பெரிய கோயில் குறித்து எழுதுகிறார்.
அன்றாட வாழ்வினுள் தஞ்சைப் பெரியகோவிலை தனித்த ஒரு அனுபவமாகக் காணுவதற்கு வாய்ப்பில்லை. அந்த ஊரில் இருந்தால், வேறு காரணங்களுக்காக அந்த ஊருக்குப் போனால் அதையும் சென்று பார்ப்பதில், வழிபடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காகவே பயணப்படும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்பதே கேள்வி. அப்படி செய்வது அன்றாட வாழ்விற்கு வெளியே வேறொரு புதிய அக்கறையை, நோக்கினை, லட்சியத்தை உருவாக்கிக் கொள்வதாக இருக்கிறது. அத்தகைய லட்சியம் அழகியல் இலட்சியமாக, ரசனை சார்ந்த லட்சியாமக இருக்கலாம், வரலாறு சார்ந்த அரசியல் சார்ந்த இலட்சியமாகவும் இருக்கலாம். இப்படியான அன்றாட வாழ்வு கடந்த ஒரு லட்சிய நோக்கு கல்கியிடம் உருவானதன் அடிப்படையில்தான் அவர் அந்த கோயில் சார்ந்த புனைவினையும் எழுத முடிவு செய்கிறார். இதன் உட்கிடக்கை அன்றாட வாழ்வு கடந்த பெரிய லட்சியங்களை, தேசத்தின் வளர்ச்சி குறித்த, சமூக மேம்பாடு குறித்த லட்சியங்களை மக்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
வரலாற்றுக் கதையாடலில் மக்கள் ஆர்வம் கொள்வது புனைவாக இருந்தாலும், வரலாற்று எழுதியலின் விளைவான நூல்களாக இருந்தாலும் அவற்றை வாசிப்பது அவர்களை நவீன சமூக அரசியல் சிந்தனை உள்ளவர்களாக மாற்றும் என்பது மாற்றத்தின் முக்கிய கண்ணி. அதனால்தான் பொன்னியின் செல்வன் நாவல் போன்றவை மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. தலித் சிந்தனையாளரும், புனைவெழுத்தாளருமான ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்தரம் என்ற சுயவரலாற்று நாவலில், சிலுவைராஜ் பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு நாடகம் எழுதித் தயாரிப்பது குறித்த பகுதியொன்று வரும். இப்படியாக அனைத்து மக்களும் பொது வரலாற்றை நோக்கி ஈர்க்கப்படுவது நவீன சமூக உருவாக்கத்திற்கு அவசியமானது.
ராஜராஜசோழன் என்ற பிம்பம் எழுபதுகளில் திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்ற இரண்டுவித சொல்லாடல்களால் உள்ளெடுக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் இந்திய பெருமிதங்களுக்கு இணையாக தமிழ் பெருமிதங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது ராஜராஜசோழனுக்கு தஞ்சை கோயிலில் சிலைவைக்க முயற்சித்தார். ரோமாபுரிப் பாண்டியன் போன்ற புதினங்களை எழுதினார். பூம்புகார், வள்ளுவர் கோட்டம், பின்னாளில் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை என பல பிம்பங்களையும், குறியீடுகளையும் உருவாக்கினார். இவையெல்லாம் தமிழ் என்ற மக்கள் தொகுதியின் அடையாளமாயின. திராவிட இயக்கத்தை மறுதலிக்கும் தமிழ் தேசிய இயக்கங்களும் இந்த குறியீடுகளை ஏற்றன. இந்தியத் தேசியம், திராவிட வெகுஜன அரசியல், தமிழ் தேசியம் எல்லாமே ராஜராஜசோழன் என்ற பிம்பத்தை ஏற்பது எதனால் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
வரலாறும் இறையாண்மையும்
இதுவரை எழுதப்பட்ட வரலாறு எல்லாமே இறையாண்மையின் வரலாறுதான். அதாவது மக்கள் திரள் ஒன்றுதிரண்டு ஆட்சிபீடங்களை ஏற்படுத்தி சமூக ஒழுங்கை கட்டமைத்த வரலாறுதான். அரசுகளின், பேரரசுகளின் வரலாறு என்பதே மனிதர்கள் தங்களை எப்படி ஒன்றுபடுத்திக்கொண்டு இயங்கினார்கள் என்பதைக் குறித்தே அமைகிறது. ஆனால் இப்படி ஒன்றுபட்டு இயங்கும்போது சமத்துவம் என்பது பெரிய அக்கறையாக எந்தக்காலத்திலும் இருக்கவில்லை. மனிதனை மனிதனே அடிமையாக்கி உற்பத்தியில் ஈடுபடுத்துவது, சேவகம் செய்ய பழக்குவது என்பது மிகப் பரவலான வரலாற்று நடைமுறையாக இருந்தது. சாக்ரடீஸ் தத்துவம் பேசிய மாளிகைகளில், அடிமைச் சிறுவர்கள் அவர்களுக்கு சேவகம் செய்து வந்தார்கள். ஆளப்படும் மக்களை ப்ளீப் (ஜீறீமீதீமீ) என்று குறித்தார்கள். அதனால்தான் இப்போதுகூட அனைவரும் பங்கேற்கும் பொதுவாக்கெடுப்பை ப்ளிபிசைட் (ஜீறீமீதீமீsநீவீtமீ) என்று சொல்கிறோம். எல்லா காலங்களிலும் ஆள்வோர் பல்வேறு சலுகைகள் பெற்றவர்களாகவும், ஆளப்படுவோர் அவர்கள் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தார்கள் என்பதால் அமைப்புரீதியான, தனிப்பட்ட தாக்குதல்கள் ஆளப்படுவோர் மீது தொடுக்கப்பட்டு வந்தன. கூடியவரை அனைவருக்கும் அதிக வன்முறையற்ற வாழ்வு என்பதே லட்சியமாக இருந்தது. பாதுகாப்பான, உத்தரவாதமான வாழ்க்கைக்காக ஏற்றத்தாழ்வுகளை, ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வதே பழக்கமாக இருந்தது. அதேசமயம் இவ்வித அமைப்புகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவதும் அவ்வப்போது நிகழ்ந்தது. ஸ்பார்ட்டகஸ் நாடகத்தில் வரும் அடிமைகளின் எழுச்சி போல ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும், அறிவுப்போர் நடத்தும் ஆற்றல் இருந்ததால்தான் அவ்வப்போது அதிகார சமநிலை மீட்கப்பட்டது.
வரலாறு என்பதை முன்னேற்றமாகப் பார்க்கும் போக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் வரலாற்று எழுதியல் பரவலாக நிலைபெற்றவுடன் தோன்றியது. அதாவது மானுடம் படிப்படியாக வளர்ந்து வருகிறது, முன்னேறி வருகிறது என்ற எண்ணம் தோன்றியது. இப்படியான மானுட முன்னேற்றத்திற்கு அரசமைப்புகள் இன்றியமையாதவை என்பதும், அதனால் இறையாண்மை வடிவங்கள் செழுமையுறுவதே மானுடத்திற்கு அவசியமானது என்பதும் பெறப்பட்டது. அதனடிப்படையிலேயே பேரரசர்களை வியப்பதும், பாராட்டுவதும் அவசியமாகியது. நவீன அரசு மக்களாட்சி அரசானபிறகும் அதிலும் வெகுஜன இறையாண்மை என்பது தலைவர்கள் வடிவில் தொடர்கிறது என்பதால் சமத்துவ நோக்கு என்பது பண்டைய பேரரசர்களை வியந்துநோக்கி பாராட்டுவதற்கு தடையாக இல்லை. அது மட்டுமல்ல. வரலாறு என்ற அருவ சக்தி வன்முறையைத் தவிர்க்க முடியாது என்ற எண்ணமும் காலூன்றியது. இதையெல்லாம் அரசுமையவாதம் எனலாம். அரசுமையவாத்தை நவீன தத்துவ கோணத்திலிருந்து சிறப்பாக விளக்கும், ஆதரிக்கும் முக்கியமான புனைவு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அவரது தத்துவப்பார்வையே ஹெகலிய அரசுமையவாதம் என்பதே என் கணிப்பு.
வரலாற்றின் தத்துவத்தை எழுதியவர்களில் முக்கியமானவரான ஹெகல் நவீன அரசு உருவாக்கமே வரலாற்றின் லட்சியமென கருதினார். அவர் வாழ்ந்த புருஷ்ய அரசை அத்தகைய மாதிரி அரசாகக் கூறினார். இந்த லட்சியத்தை நோக்கிய பாதையில் உலகின் பல பகுதிகள் தேக்கமடைந்தபோது, ஐரோப்பா மட்டுமே முன்னேறிச் செல்ல முடிந்ததாகவும் கருதினார். அப்படி வரலாற்றின் ஆன்மா என்ற அருவ சக்தி முன்னேறிச் செல்லும்போது வன்முறை என்பதெல்லாம் தவிர்க்க முடியாதது என்பதே வரலாற்றுவாதிகளின் கருதுகோளானது. ஹெகலியத் தாக்கத்திலிருந்த கார்ல் மார்க்ஸ் 1858-ஆம் ஆண்டு இந்தியாவில் காலனீய ஆட்சியைக் குறித்து எழுதும்போது மிகவும் பின் தங்கிய மனோபாவம் கொண்ட இந்தியர்களை இங்கிலாந்தின் பூர்ஷ்வா வர்க்கம் வரலாற்றின் பாதையில் செலுத்தும்போது ரத்தமும், சகதியும் நிறைந்ததாக அந்தப் பாதை இருக்க நேர்வது தவிர்க்கவியலாதது என்றே குறிப்பிட்டார். மார்க்ஸீய சிந்தனையில் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியும், தொழிலாளர் வர்க்கப் புரட்சியும் வரலாற்றின் படிநிலைகளாகவே கருதப்பட்டன. இத்தகைய படிநிலைகள் வன்முறை மிகுந்தவையாகத்தான் இருக்க முடியும் என்பதும் உட்கிடக்கை. வரலாற்றின் பயணம் இப்படியிருந்தாலும், தொழிலாளர் வர்க்கப்பிரக்ஞை பண்டைய மன்னர்களுக்கு புகழாரம் சூட்ட முடியாது என்பதும் மார்க்ஸீயத்தின் ஒரு பகுதிதான். எனவே ராஜராஜன் போன்ற இறையாண்மை குறியீடுகளை அவர்கள் முழுமையாக ஏற்கமாட்டார்கள். தமிழ் தேசியர்களாக மாறிய மணியரசன் போன்ற மார்க்ஸீயர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதன் பொருள் என்னவென்றால் வர்க்கப் போராட்டமே அரசியல் என்று கொள்ளும்போது மார்க்ஸீயர்கள் வெகுஜன இறையாண்மைக்குறியீடுகளை தவிர்க்க முடியும் என்பதுதான். ஆனால் ஒரு மக்கள் தொகுதியை கட்டமைக்கும் அரசியல் என்று வரும்போது இறையாண்மைக் குறியீடுகளை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. எனவே கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் ஒரு குழப்பம் நிலவத்தான் செய்யும்.
ராஜராஜசோழன் என்பது வரலாற்றின், இறையாண்மையின் வெகுஜனக் குறியீடு என்னும்போது, புனைவுகளால் உருவான பிம்பம் என்னும்போது, இந்திய தேசியம், திராவிட வெகுஜன அரசியல், தமிழ் தேசியம் என மக்களைக் கட்டமைக்க விரும்பும் எல்லாமே அவரைப் பங்குபோட்டுக்கொள்ளும். இதன் உபவிளைவாக தங்கள் ஜாதியும் வெகுஜன இறையாண்மையில் பங்குகொள்ள வேண்டும் என விரும்பும் ஜாதிகளும் ராஜராஜசோழனுக்கு உரிமை கொண்டாடுவதும் நிகழ்கிறது. கவிஞர் வாலி எழுதிய திரைப்பட பாடலில் “ராஜராஜசோழன் நான்; எனை ஆளும் காதல் தேசம் நீதான்” என்று எழுதினார். ஒரு கதையாடல் பிம்பிம், வரலாற்று- இறையாண்மைக் குறியீடு என்ற அளவில் ராஜராஜனை எந்த தேசம் அல்லது தேசியம் ஆளப் போகிறது என்பதில் போட்டி இருக்கிறது. மணிரத்னம் பொன்னியின் செல்வனை பல மொழிகளில் எடுத்தால் நிச்சயம் இந்திய தேசம் புனைவு வெளியில் ராஜராஜனை மீண்டும் அரவணைக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ரஞ்சித்தின் கோபம்
மக்கள் தங்களை ஒரு சமூகத்தின் அங்கமாகவும், வரலாற்றின் தொடர்ச்சியாகவும் நினைப்பதற்கு இரண்டுவித வழிமுறைகள் உள்ளன. ஒன்று அவர்கள் பொதுவான பிம்பங்கள், கதையாடல்கள் ஆகியவற்றில் பரிச்சயமும், ஈடுபாடும் கொள்வது. இரண்டு, அப்படியான பிம்பங்களின் மீது விமர்சனக் கணைகளைத் தொடுப்பது, பிம்பத்தை உடைப்பது, அதன்மூலம் விமர்சன ஆற்றலை அதிகரித்துக்கொள்வது. பொதுமைப்படுவது, விலகி நின்று விமர்சிப்பது ஆகியவையாக இதை சுருக்கமாகக் கூறலாம். முன்னது பொதுப்புத்தி, வெகுஜனத் தன்மை, இறையாண்மை விளைவு கொண்டது. இரண்டாவது விமர்சன சிந்தனை, அறிவியக்க, இறையாண்மை எதிர்ப்பு சொல்லாடலுக்கு உரியது.
காந்தி பொதுவான பிம்பங்களை, வழிபாடுகளை உருவாக்குவதில் முனைந்தார். பெரியார் அவரது பரந்துபட்ட செயல்பாட்டில் பிம்பங்களை உடைத்து, கேள்விகளை எழுப்பி விமர்சன சிந்தனையை வலுவாக்க முனைந்தார். முதலாவது வழிமுறை மக்களை ஒரு தொகுதியாக கட்டமைக்க இன்றியமையாதது. இந்தியர் என்றோ, தமிழர் என்றோ மக்களைக் கட்டமைக்க வேண்டும் என்றால் சில பொதுவான குறியீடுகளை, இறையாண்மைக் குறியீடுகளை ஏற்க வேண்டும். பெரியாரின் பணி மக்களைக் கட்டமைப்பதாக இல்லை. அது விமர்சன சிந்தனையை வலுப்படுத்துவதாகவே இருந்தது. வெகுஜன இறையாண்மை பற்றி முற்றிலும் கவலைப்படாதவராகவே பெரியார் இருந்தார். அதனால் அரசியல் இயக்கம் என்பதைவிட அறிவியக்கம், கலக இயக்கமாகவே அவர் செயல்பட்டார். எல்லாவித பிம்பங்களையும் அவர் கேள்விக்கு உட்படுத்தினார். கேள்வி கேட்டார்.
தலித் அரசியல் இன்றைக்கு சந்திக்கும் மிகப்பெரிய சவால் பொது அரசியல் பங்கேற்பையும், விமர்சன சொல்லாடலையும் எப்படி ஒரே நேரத்தில் நிகழ்த்துவது என்பதுதான். சமூகத்தில் ஜாதீயத்தின் பிடி தளர்கிறதா, அதிகரிக்கிறதா, அதாவது தளர்வதால் அதிகரிக்கிறதா என்பது விரிவான ஆய்வைக்கோரி நிற்கிறது. ஆணவக்கொலைகள் நிகழ்வது ஜாதி மறுப்புக் காதலும், திருமணங்களும் அதிகமாவதாலா என்ற கேள்வி முக்கியமானது. ஜாதிக்கும் ஆணாதிக்கத்திற்கும் உள்ள இறுக்கமான பிணைப்பில் ஆதிக்க ஜாதி பெண்கள் சுய விடுதலையில் ஜாதி மறுப்புக் காதலும் பங்கேற்கிறது.
இத்தகைய சூழலில் தலித்துகளின் கோபக் குரல் என்பது தவிர்க்கவியலாதது என்றாலும் அதை வெளிப்படுத்தும்போது வரலாற்றிலிருந்து விலகும்போக்கினை எப்படி சமன்செய்வது என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம் என்றே தோன்றுகிறது. ராஜராஜசோழன் போன்ற பொது இறையாண்மைக் குறியீட்டுடன் தலித்துகளுக்கு மட்டும் தனிப்பட்ட முரண் இருப்பதாக ஒலிப்பதில் பொதுவெளியில் வெகுஜன மனப்போக்கில் சில எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். இதை இரண்டு விதமாக சமன்செய்வது அவசியம்: ஒன்று ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை தகர்க்கும்போது முழுமையாக பல்வேறு கோணங்களிலிருந்தும் அதைச் செய்வது; இரண்டு பல்வேறு பிம்பங்களையும், கற்பிதங்களையும் ஒருசேரத் தகர்ப்பது.
இதில் சமகால அரசியலில் நாம் கவனமாகப் பார்க்க வேண்டியது பார்ப்பனீயம் என்ற கருத்தியலின் தொடர்ச்சியைத்தான். நாம் அரசியலை அரசுமையவாதம், மக்கள் மையவாதம் என்று பிரித்துக்கொண்டால் பார்ப்பனீயம் எல்லா காலங்களிலும் அரசுமையவாதத்தையே கைக்கொண்டிருக்கிறது. மன்னராட்சியோ, மக்களாட்சியோ அரசின் கருத்தியல் மேலாண்மையை நிறுவுவதில் கால்கொண்டிருக்கிறது. இங்கே பார்ப்பனீயம் என்ற சொல்லாட்சியை கவனமாகப் பார்க்கவேண்டும். அதன் சார்பாக இயங்குபவர்கள் ராஜராஜசோழனாகவோ, கல்கியாகவோ, மோடியாகவோ, ஜெயமோகனாகவோ யார் வேண்டுமானால் இருக்கலாம். பெரும்பாலும் பார்ப்பனரல்லாத மன்னர்கள் பார்ப்பனீய கருத்தியல் மேலாண்மையின் துணையுடன் ஆட்சி புரிந்து வந்துள்ளனர் என்பதே இந்திய வரலாற்றின் அசாதாரண தொடர்ச்சி. அரசுருவாக்கம், சமூக அமைப்பு உறுதிப்படுதல், உற்பத்தியும், நுகர்வும், வளமான வாழ்வும் பெருகுதல் என்றெல்லாம் எடுத்துக்கொண்டால் நாம் அத்தகைய கருத்தியல் மேலாண்மை, பேரரசு உருவாக்கத்தை எதிர்மறையாகப் பார்க்கமுடியாது. இப்போதுகூட பாஜக வெற்றிபெறும் செய்தி வெளியானவுடன் பங்குச் சந்தை வர்த்தகம் ஓஹோ என்று செழித்ததை கண்டோம். இஸ்லாமியர்கள் அடித்துக்கொல்லப்படுவதைக் குறித்து பங்குச்சந்தைக்கு பெரிய அக்கறை எதுவும் கிடையாது. இப்படி வரலாற்றுத் தேரில் நசுங்குபவர்களின் சார்பாகப் பேசினால் நிச்சயம் விமர்சனம் செய்யத்தான், பிம்பங்களை தகர்க்கத்தான் வேண்டும். ஆனால் தகர்க்கப்படும் பிம்பங்களையும் பரவலாக்க வேண்டும்; ஒடுக்கப்படுபவர்களின் தொகுதிகளையும் பரவலாக்க வேண்டும். மோடியை விமர்சிக்காமல், பார்ப்பனீயத்தை விமர்சிக்காமல், ராஜராஜசோழனை விமர்சிப்பது சரியான விளைவுகளைத் தராது. மக்களாட்சியையும், மன்னராட்சியையும் இணைக்கும் வெகுஜன இறையாண்மை குறித்த புரிதல் அவசரமானதும், அவசியமானதுமாகும். அப்போதுதான் வலதுசாரி வெகுஜனவியத்திற்குப் பதிலாக, இடதுசாரி வெகுஜனவியத்தை உருவாக்க முடியும்.
இந்த எச்சரிக்கையை ஒலிப்பதற்கு முக்கியக் காரணம் வெகுஜன மனோபாவம் குறித்த அக்கறையே. வெகுஜன மனோபாவத்தில் பாதுகாப்பிற்கான ஏக்கம் எப்போதும் இருக்கிறது. இதன்பொருட்டே மாமன்னர்கள், பேரரசர்கள் போன்றவர்களை மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு பணிந்தார்கள். இப்போதும் புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் நம்மை தாக்கிவிடும் அதை வீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற பிரசாரத்தை எளிய மக்கள் ஏற்றுக்கொள்வதைத்தான் நாம் பார்க்கிறோம். ரேஷன் கார்ட் என்ற பொதுவிநியோக அட்டையை தனது உரிமை என்று பார்ப்பதை விட அதை வாங்கித்தந்த கவுன்சிலருக்கு நன்றியுடன் இருப்பதும், அவர் கட்சிக்கு ஓட்டளிப்பதுமே வெகுஜன மனோபாவமாக இருக்கிறது. அதைவிட ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில் தலித் விமர்சனப் பிரக்ஞை பரவலாக வேண்டுமானால் வரலாற்றிற்கு உரிமை கோருவது என்பதும், வரலாற்றுப் பெருமிதங்களை தகர்ப்பது என்பதும் ஒரு சேர நிகழ வேண்டும் என்பது அவசியம். அந்த வகையில் வெகுஜனத் தளத்தில் நிலைபெற்றுவிட்ட இறையாண்மைக் குறியீடுகளை தகர்ப்பதில் கவனம் தேவை. அந்தக் குறியீட்டின் பல்தள செயல்பாடுகளை கவனம் கொள்ளாமல் அதைச்செய்வது எதிர்நோக்கும் பலனைத் தராமல் போகலாம்.
வெகுஜன மனோபாவத்தைப் புரிந்துகொள்வதற்கு அண்டோனிய கிராம்ஷி என்ற இத்தாலிய மார்க்ஸீயக் கோட்பாளர் இன்றியமையாதவர். அவர் பொதுப்புத்தியில், வெகுஜன மனோநிலையில் நிலையேற்புச் சிந்தனையும், விமர்சன சிந்தனையும் கலந்தே இருக்கும் என்று சொன்னார். பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு பரவசம் கொள்ளும் மக்களையெல்லாம் கண்டிக்க முடியாது. அவர்களிடம் விமர்சனத்தையும் நாம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் பெரியாரையும் ஏற்றுக்கொண்டார்கள்; தொடர்ந்து கடவுளை கும்பிட்டார்கள், ஜாதிக்குள் திருமணம் செய்துகொண்டார்கள். பெரியார் புறக்கணிக்கப்படவில்லை என்பதுதான் அவர் வெற்றி. எங்கோ ஒரு மூலையில் தமிழ் பிரக்ஞையில் அவர் வீற்றிருக்கிறார். அவரது செயல்முறையை அறிவது மிக முக்கியமானது. அதில் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது. அதை கைவிளக்காக ஏந்திப்பிடித்தால் எத்தகைய விமர்சனச் சொல்லாடலையும் நாம் முன்னெடுக்க முடியும். எத்தகைய பிம்பங்களையும் தகர்க்க முடியும் என்றுதான் தோன்றுகிறது.