நரேந்திர மோடி தலைமையில் பாஜக அடைந்திருக்கும் இந்த வெற்றி நடுநிலையாளர்களை, உண்மையான தேசபக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக சரியான ஆட்சி நடக்கவில்லை. பண மதிப்பிழப்பு ஊரகப்பொருளாதாரத்தை உருக்குலைத்தது. அதிரடியாகக் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி சிறு-குறு தொழில்களை நசித்தது. வேலையின்மை வரலாற்று எண்ணிக்கையைத் தொட்டது. சிறுபான்மையினரின் வாழ்வாதாரம், அவர்களின் வாழ்வுரிமைகள் கேள்விக்குள்ளானது. இவை பற்றிய எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கில்லை என்ற ரீதியில் பிரதமர் ஒரே ஒரு ஊடக சந்திப்பு கூட நடத்தாமல் தன் வருடங்களைக் கடத்தினார்.

ஆயினும் பாஜக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கின்றன. இன்னொரு முறை எதிர்க்கட்சியாகக்கூட ஆகும் தகுதியை காங்கிரஸ் இழந்திருக்கிறது.

இது எப்படி நடந்தது? மோடி என்கிற ஒரு மந்திரவாதியின் மாயத்துக்கு எல்லாரும் மயங்கி விட்டிருக்கிறார்களா? தேசமெங்கும் செய்த வெறுப்புப் பிரச்சாரம் பலித்து விட்டிருக்கிறதா? ஆர்எஸ்எஸ் கனவு கண்ட ஹிந்து எழுச்சி நிறைவேறி விட்டதா?

இவை எல்லாம் பெருமளவு உண்மைதான் என்றாலும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது: அமித் ஷா தலைமையில் பாஜக ஒரு தேர்தல் மெஷினாகவே மாறி விட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அடுத்த மாநிலத் தேர்தலை வைத்து தொடர்ந்து திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வந்திருக்கிறார்கள். இந்த மக்களவைத் தேர்தலுக்கான வேலைகளை பாஜக மூன்று வருடங்களுக்கு முன்பே துவக்கி விட்டிருக்கிறது. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவில் தங்கள் கட்டமைப்புகளை பலப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கு இந்த முறை தொகுதிகள் குறையலாம் என்ற நிலைமை இருந்ததால், அதனைச் சரிக்கட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவைக் குறிவைத்து இயங்கினர். அதன் பலன் கிடைத்திருக்கிறது.

தெற்கில் உள்ள இரண்டு மாநிலங்களில் மட்டும் பாஜகவால் முன்னேற்றம் காட்ட இயலவில்லை. அதற்கு முக்கிய காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்தேத்தியாக இங்கே நடந்த பாஜக எதிர்ப்புப் பிரச்சாரம் காரணம் என்று சொல்லப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் மதவாதத்தின் தீமை பற்றி உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு காரணம் என்று சொல்லப்படுகிறது. பாஜக ஒரு பிராமணர் கட்சி என்று கட்டமைக்கப்பட்ட பிம்பமும் அந்தப் பிரச்சாரத்துக்கு உதவியது. தமிழகப் பிராமணர்கள் பெரும்பாலானோர் பாஜகவுக்கும் மோடிக்கும் ஆதரவாகப் பேசி, எழுதி, பிரச்சாரம் செய்து அது உண்மைதான் என்று மக்களை நம்ப வைத்து விட்டிருக்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் ஒன்றுபட்டு உத்வேகம் கொண்டிருந்த திமுகவைப் பிளவுபட்டிருந்த எதிர் அணிகளால் வீழ்த்த இயலாமல் போனதும் முக்கிய காரணம்.

ஆனால் தேசிய அளவில் பாஜக பெற்ற வெற்றிக்கு சில காரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்:

  1. இந்து மதக்காவலர்களாகத் தங்களை முன்னிறுத்தியது பாஜக. இதர கட்சிகளின் பிரச்சாரம் இதற்கு தகுந்த பதில் அளிக்க இயலவில்லை. அவர்கள் செய்த எதிர்ப்பு அவர்களை இந்து விரோதிகளாகவே அழுத்தம் திருத்தமாகக் காட்டி விட்டிருக்கிறது.
  2. இந்தியாவிலேயே ஆகச்சிறந்த தேச பக்தர்களாக பாஜகவினரை, பாஜக தலைவர்களைக் கட்டமைத்து விட்டிருக்கிறார்கள். பாஜகவை விமர்சிப்பவர்கள், பாஜக தரப்பு நிற்காதவர்கள் எல்லாருமே தேசவிரோதிகள் என்ற பிரச்சாரமும் வலுவாகவே ஊறி விட்டது. பாலக்கோட்டில் ராணுவம் நடத்திய வான்படை தாக்குதலை மோடியின் வெற்றியாகப் பறைசாற்றி விட்டிருக்கின்றனர். அதுவும் எடுபட்டு விட்டது.
  3. பல்வேறு காலகட்டங்களில் பெரிதாக எடுபட முடியாத வலதுசாரி சிந்தனைவாதம் இந்தியாவில் இப்போது ஆழமாக வேரூன்றி விட்டிருக்கிறது. இந்தப் போக்கு உலகெங்கும் கிளை கொள்வதை நாம் காணலாம்.

முதல் இரண்டு விஷயங்கள் பற்றிப் பேச எதுவும் இல்லை. ஆனால் மூன்றாவது பற்றி கொஞ்சம் பேசுவோம்.

நவீன வலதுசாரி சிந்தனாவாதம் என்பது மறு-தேசியவாதத்தை முன்னெடுக்கிறது. ஒரு தேசத்தின் மக்களை ஒரிஜினல் குடிகள் மற்றும் வந்தேறிகள் என்று இனம் பிரிக்கிறது. தங்கள் தேசத்தின் எதிரிகள் யார் என்று தெளிவாக இனம் காட்டுகிறது. முக்கியமாக உலகெங்கும் உள்ள வலதுசாரி இயக்கங்கள் யாவற்றிற்கும் இஸ்லாம் முக்கிய வில்லனாகத் திகழ்கிறது. அதே போல உலகெங்கும் உள்ள வலதுசாரிகள் ஒரு இனத்தின் அல்லது மதத்தின் உயர்வைப் போற்றுகின்றனர். அமெரிக்காவில் குடியரசுக் கட்சியில் உள்ள அதீத வலதுசாரிகள் வெள்ளை அமெரிக்க பிராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் மற்ற எல்லாரையும் விட உயர்வானவர்கள் என்பதைப் பறை சாற்றுகிறார்கள். அதுதான் அமெரிக்காவின் உண்மையான ‘ஒரிஜினல்’ கலாச்சாரம் என்றும் இதர கலாச்சாரங்கள், அதாவது ‘ஹிஸ்பானிக்’ எனப்படும் தென் அமெரிக்கர்கள், இஸ்லாமியர்கள், ஆசியர்கள் போன்றோர் அமெரிக்க கலாச்சாரத்தை கெடுக்க வந்திருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

இங்கிலாந்தில் உள்ள வலதுசாரி இயக்கங்கள் அந்நிய தேசத்தார் குடிபுகலைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இவர்கள் பிரச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக எடுபட்டு வந்து கடைசியில் 2010இல் ஆட்சிக்கு வந்த மென்-வலதுசாரி கன்சர்வேட்டிவ் கட்சி குடியேற்ற விதிமுறைகளைப் பெரிதும் கடுமையாக்கி விட்டனர். ஆனால் இதர நாட்டவரின் குடியேற்றத்தை தடுக்க முடிந்த அவர்களால் ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர் நாடுகளில், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளான போலந்து, ஹங்கேரி, லிதுவேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் குடியேற்றத்தை தடுக்க இயலவில்லை. காரணம், பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனில் ஒரு அங்கமாகவே இருந்ததுதான். அந்த விஷயம் அவர்கள் கண்களை உறுத்தவே, தொடர்ந்த பிரச்சாரத்தில் பிரிட்டனை ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக்குவதற்கு போராட்டங்கள் செய்து, அந்தப் பிரச்சாரத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் ஐரோப்பாவை விட்டு விலக வாக்களித்து விட்டார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை இப்போது புரிந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். பிரெக்சிட் (Britain’s Exit) என்று அழைக்கப்படும் இந்த விஷயம் பிரிட்டனுக்கு தீராத்தலைவலியைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

அதே போல வலதுசாரி கட்சிகள் ஐரோப்பா முழுவதுமே வேர்கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். ஆஸ்திரியா, ரஷ்யா, ஹங்கேரி, போலந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா என்று மேற்குலகு முழுமையும் வலதுசாரி சிந்தனாவாதத்துக்குப் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

ஆசியாவிலும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஜப்பான் போன்ற பகுதிகளில் கூட அதீத வலதுசாரி கட்சிகள் பலம் பெற்று வருகின்றன.

இன்றைக்கு ஏன் இந்த மாற்றம் வந்திருக்கிறது? ஒருபுறம் உலகம் முழுமையும் ஒரே கிராமமாக மாறிக்கொண்டு வருகிறது. தகவல் தொடர்பு, பயணத் தொடர்புகள், தொழில் தொடர்புகள் என்று எல்லாமே எளிதாகிக் கொண்டு வருகின்றன. தொழில் நுட்பம் பேச்சு வார்த்தைகளை எளிதாக்கி விட்டிருக்கிறது. படித்தோர் எண்ணிக்கை பற்பல மடங்கு அதிகரித்து வருகிறது.

அதே நேரம், கலாச்சாரப் பெருமை, இனவெறி, தன் சொந்தப் பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளுதல், சாதி, மத வெறி ஆகியவை அதிகரித்து வருகின்றன.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே ஒன்றுக்கொன்று முரணானவை. அது எப்படி இவை இரண்டும் ஒன்றோடு இணைந்து இயங்குகின்றன என்பது ஆச்சரியமான முரண். இந்தியாவிலேயே பார்த்தோம் என்றால் படித்த, முன்னேறிய பிராமண சாதியினர் முக்கால்வாசிப்பேர் பாஜகவுக்கு ஆதரவளிக்கிறார்கள். அந்தக் கட்சியின் பெரும்பான்மைவாத சிந்தனைகளைப் போற்றுகிறார்கள். பாஜகவுக்கு பெருமளவு வாக்களிக்கும் மக்கள் நிறைய பேர் ‘ஹிந்தி பெல்ட்’ எனப்படும் சமூகப் பொருளாதார அளவில் பெருமளவு பின்தங்கிய மாநிலத்தவர்கள். இந்தத் தேர்தலிலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீஹார், சத்திஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் பெருவாரியாக பாஜகவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

அதே நேரம், தேசமெங்கும் படித்த, முன்னேறிய சாதியினர் குறிப்பாக பிராமின்-பனியா எனப்படும் பிராமணர், தொழிற்சாதியினர் பாஜகவுக்குத் துணை நின்றிருக்கிறார்கள்.

இந்த முரணைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஒரு கோணத்தில் பார்ப்பதானால், சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஒரு இனத்திற்கு தங்களின் ஆளுமையை, பெருமையை நிலை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கருத ஏதுவாக இருக்கிறது. என் சமூகம் முன்னேறி விட்டது. அதில் படித்து பட்டம் பெற்று நவீன வாழ்வியலை ஏற்றோர் அதிகரித்து விட்டனர். ஆனால் வேறு இனத்தவர் படிப்பில், பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கி இருக்கின்றனர். அவர்கள் என் ஒட்டு மொத்த தேசத்தைப் ‘பின்னுக்கு’ இழுக்கின்றனர். அந்தப் பின்னடைவை நிறுத்த வேண்டும். இந்துக்கள் படிக்கின்றனர், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை எட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் முஸ்லிம்கள் படிப்பதில்லை. நவீன வாழ்வியலை ஏற்றுக்கொள்வதில்லை. இது என் தேசத்தை பாதிக்கிறது. முஸ்லிம்களே இல்லாத இந்தியாவை யோசித்துப்பார்; அதில் எத்தனை எத்தனை முன்னேற்றங்களைக் கொண்டு வரலாம்? அப்படி நடந்தால் ஓரிரு ஆண்டுகளிலேயே இந்தியா வல்லரசாகி விடும்!

இதே வாதத்தை ஒவ்வொரு சமூகத்திலும், தேசத்திலும் ஒவ்வொருவர் விதவிதமாக முன்வைக்கின்றனர். இங்கே தேசத்தை முஸ்லிம்கள் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பிரிட்டனில் ஆசிய, கிழக்கு ஐரோப்பிய வந்தேறிகள் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். அமெரிக்காவில் முஸ்லிம், மெக்சிகோ வந்தேறிகள்.

தேசத்துக்கு தேசம் இந்த ‘வந்தேறி’ அதாவது கலாச்சார ‘தீண்டத்தகாதோர்’ குழுதான் மாறுபடுகிறது. ஆனால் அந்த ஆதார சித்தாந்தம் அப்படியே இருக்கிறது. இந்த வாதம் வசீகரமானது. வலுவாக இருப்பதாக பாமர மூளைக்குத் தொனிப்பது.

இதன் பின்னணியில்தான் வேத காலத்தில் பிளேன் இருந்தது. பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது; மகாபாரதக் காலத்தில் இன்டர்நெட் இருந்தது போன்ற கதைகள் எல்லாம். அதாவது என்ன அர்த்தம்: முஸ்லிம்கள் வரும் வரை நாம் ஏறக்குறைய அமெரிக்கா ரேஞ்சுக்கு இருந்தோம். முஸ்லிம் சுல்தான்கள் படையெடுத்து வந்த பிறகு எல்லாம் அழிந்து போய் பின்தங்கிப் போய் விட்டோம்.

இதேதான் மெக்சிகர்கள் விஷயத்தில் டிரம்ப் சொல்கிறார். அமெரிக்காவில் போதை மருந்துகளைக் கடத்துவது, விற்பது எல்லாம் மெக்சிகர்கள். குற்றங்கள் புரிவது கறுப்பர்கள். தீவிரவாத செயல்கள் புரிவது முஸ்லிம்கள். பாதிக்கப்படுவது அமைதி விரும்பும் அப்பாவி வெள்ளையர்கள்.

இது எதுவுமே உண்மை இல்லை என்று சொல்லத்தேவையில்லை. போதை பயன்பாட்டில் வெள்ளை அமெரிக்கர்கள் முன்னணி வகிக்கிறார்கள். அங்கே அடிக்கடி நடக்கும் பள்ளி துப்பாக்கிச் சூடுகள் முழுவதும் விதிவிலக்கின்றி வெள்ளை இன சைக்கோக்களால்தான் நடத்தப்படுகிறது. சொல்லப்போனால், காரணமின்றிக் கைதாவது, சரியான சட்ட ஆதரவின்றி சிறையில் வாடுவது இவை கறுப்பின மக்களுக்குத்தான் நிகழ்கிறது. அதே போல இஸ்லாமாபோஃபியா என்று சொல்லப்படும் இஸ்லாமியர்மீதான வெறுப்பு காரணமாக நிறைய தாக்குதல்கள், காரணமற்ற சிறைவாசங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பள்ளி ப்ராஜக்ட்டுக்காக கடிகாரம் வைத்த மாடல் இயந்திரம் தயாரித்து வந்த ஒரு முஸ்லிம் மாணவனை பாம் செய்து கொண்டு வந்து விட்டான் என்று பயந்து கைது செய்த சோகமெல்லாம் நடந்திருக்கிறது.

அதேதான் இந்தியாவிலும். 1991 முதல் இந்துத்துவ வெறியர்கள் துவக்கிய கலவரத்தினால் இறந்த அப்பாவிகள் எண்ணிக்கை முஸ்லிம் குண்டுவெடிப்புகளால் இறந்தோரை விடப் பன்மடங்கு இருக்கிறது. அதே போல காரணமின்றிக் கைதாகி விசாரணை இன்றி சிறையில் வாடுபவர்கள் எண்ணிக்கையில் தலித் / ஆதிவாசிகள் முதலிடம் வகிக்கிறார்கள். முஸ்லிம்கள் இரண்டாம் இடம். கடந்த ஐந்து ஆண்டுகளில் முஸ்லிம்களின் வாழ்வியலே கேள்விக்கும், எக்காளத்துக்கும் உள்ளாகிக் கொண்டு இருக்கிறது. ஊரில் நல்ல வீடு வாடகைக்கு கிடைப்பது முதல் வங்கியில் லோன் கிடைப்பது வரை பிரச்சினைக்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஐரோப்பாவிலும் கடந்த மூன்று ஆண்டுகள் வெள்ளை இன வெறியர்கள் நடத்திய தாக்குதல்கள் முஸ்லிம் குண்டுவெடிப்புகளுக்கு இணையான உயிர்ச்சேதத்தை விளைவித்திருக்கின்றன.

ஆனால் இவை எதுவுமே வலதுசாரி தொண்டர்களுக்குத் தேவையில்லாத விஷயம். ப்ரொபஸர் ரமணாவுக்குப் பிடிக்காத வார்த்தை ‘ஸாரி’ என்ற மாதிரி வலதுசாரி தலைவர்களுக்குப் பிடிக்காத வார்த்தை Statistics. உணர்வால் எழுச்சி கொள்ள வைப்பது சுலபமாக இருக்கும்பொழுது பீணீtணீவை வைத்துக்கொண்டு என்ன பிரயோசனம்? சொல்லப்போனால், இந்த மாதிரி புள்ளி விபரங்களும் பாமர மனிதர்களுக்கு வெறும் ஆயாசத்தையே கொடுக்கின்றன.

அதுதான் இவர்களின் வெற்றியாகவும் இருக்கிறது. shock and awe எனப்படும் அதிரடி சமாச்சாரங்கள் இவர்களுக்கு உவப்பாக இருக்கின்றன. வேலை வாய்ப்பின்மை அறிக்கையை வெளியிடாமலேயே மோடி மறைத்து விட்டாரே என்பதெல்லாம் போரடிக்கும் சமாச்சாரம். பாலக்கோட்டில் இந்திய ராணுவத்தை அனுப்பி குண்டு மழை பொழிந்தாரே என்பது பெரும் குதூகலத்தைக் கொடுக்கிறது.

இந்தப் பிரச்சார மயக்கத்தில் இந்தியாவே ஆழ்ந்து போய் விட்டது. உலகமே ஆழ்ந்து போய் விட்டிருக்கும்போது இந்தியா விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? இப்போதைக்கு தமிழகமும் கேரளமும் தப்பித்து விட்டன. ஆனால் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தெரியவில்லை. கேரளத்தில் ஏற்கனெவே பாஜக தன் வாக்கு சதவிகிதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை இந்த வன்முறைக் கோஷங்கள் காதைப்பிளந்து கொண்டிருக்கின்றன. எதிர்கால உலகம் குறித்த கேள்விகளை இந்தக் கோஷங்கள் எழுப்புகின்றன. மனித உரிமைகள், பெண்ணியம், பன்மைக் கலாச்சாரம் போன்ற விஷயங்கள் எப்படிப்பட்ட சவால்களை நாளைக்கு எதிர்கொள்ளப்போகின்றன. அந்த சவால்களை எப்படி சமாளித்து மீளப் போகின்றன என்பது தெரியவில்லை.

‘லிபரல்கள்’ என்று அழைக்கப்படும் சுதந்திரவாத சிந்தனையாளர்களுக்கு உலகம் முழுவதும் மிகவும் சோதனையான காலகட்டம் இது என்று மட்டும் இப்போதைக்கு சொல்லலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, அடுத்த ஐந்தாண்டுகள் அரசியல் சாசனத்தில் கை வைக்காமல் மத்திய அரசு இயங்க வேண்டும் என்று ஆத்திகர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ளலாம். என்னைப்போன்ற நாத்திகர்கள் அது கூட செய்ய இயலாமல், நம்பிக்கையே வாழ்க்கை என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காலம் தள்ளலாம்.