(மொழிபெயர்ப்பு பிரச்சினைகளை முன்வைத்து)

 

கட்டுரையும் கவிதைகள் மொழியாக்கமும் : கௌதம சித்தார்த்தன்

 

‘பாலகர் ஏழ்வரும் பாழ் கிணற்றில் வீழ்ந்துவிட

அள்ளி முடித்த கூந்தலை அவிழ்த்துவிட்ட நல்லதங்காள்

மாடப்புறா போல் பாய்ந்து விழுந்தாள் தானுமதில்

அவளுடைய கூந்தலது அறுபது பாகமது

அறுபது பாக கூந்தல் அலையுது காவிரியில்..’

 

மிழின் மகத்தான இலக்கியமான நல்லதங்காள் கதைப் பாடலிலிருந்து…

சமீபத்தில் ரஷ்ய மொழியில், ‘டான் நதியின் மேலே பறக்கிறது ஆலா!’ என்ற தலைப்பில்  ‘பத்தி’ எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் பத்தியில் ரஷ்ய மொழியின் உன்னதமான பெண் கவிஆளுமை ஸ்வெட்டேவாவின் ‘முத்தம்’ குறித்தும், தமிழின் மகத்தான இலக்கியமான நல்லதங்காளின் முத்தம் குறித்தும் ஒரு காலச் சுழல்வை சுழட்டியடித்திருக்கிறேன். சர்வதேச துயர இலக்கியங்களின் அழகியல் அம்சங்களுக்கு சவால்விடும் எம் தமிழ்ப் படைப்பு ‘நல்லதங்காள்.’ பத்தி வெளிவந்ததும், தற்கால இளம் ரஷ்ய எழுத்தாளரான பிலிப் நிகோலாயேவ் ஒரு கடிதம் எழுதியிருந்தார்: ‘அன்புள்ள கௌதமா, உங்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள். நீங்கள் ரஷ்ய ஒப்பீட்டு இலக்கிய அறிஞரா? நீங்கள் பேராசிரியரா? உங்கள் இலக்கியப் பின்னணி என்ன? இந்தியாவில் நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?’

அன்புள்ள நிகோலாயேவ்,
என்னைப் பற்றி அறிய நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

சிறுவயதிலிருந்தே என்னை மிகவும் பலமாக பாதித்தவை ரஷ்ய இலக்கியங்கள். உலகளாவிய இலக்கியப் போக்குகளை பெரிதும் பாதித்துள்ள இது, புத்தம் புதிய இலக்கியக் கண்ணோட்டங்களையும், உலக அளவில் ‘அற்புதமான நாவல்களையும்’ உருவாக்கி உலக இலக்கியத்தின் போக்குகளையே தீர்மானித்த மொழி ரஷ்யன். உலகப் புகழ்பெற்ற கலைக்கோட்பாடுகளைப் புறம்தள்ளி, தனது யதார்த்தவாதம், சோசலிச யதார்த்தவாதக் கோட்பாடுகளை உலகம் முழுக்க கொண்டுபோய் கலை ரசிகர்களை பிரமிக்கவைத்த மொழி ரஷ்யன். இன்னும் பல்வேறு விஷயங்களை எழுதுவேன். புஷ்கின், குப்ரின், கோகோல், செக்கோவ், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, துர்கெனேவ், யெஸ்னின், ஷோலோகோவ், புல்காகோவ், மாயகோவ்ஸ்கி, அக்மடோவா, சோல்ஜெனிட்சின், பாஸ்டர்நாக், மண்டல்ஷ்டாம், பிராட்ஸ்கி மற்றும் நபோக்கவ்.. என்று பைத்தியம்பிடித்தவன்மாதிரி சொல்லிக்கொண்டே போவேன்..

நான் முழுநேர எழுத்தாளன். இந்தியாவின் சிறு மாநிலமான தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் இருந்துகொண்டு சர்வதேச இலக்கியங்களை தக்க மொழியாக்க வல்லுநர்களைக் கொண்டு மொழிபெயர்த்து, நான் ஆசிரியராக இருக்கும் உன்னதம் இலக்கியப் பத்திரிகையில் வெளியிட்டு வருகிறேன். இதுவரை 40 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழிலும், போர்ஹேஸ், இடாலோ கால்வினோ, கார்லோஸ் புயண்டஸ், மிலோராட் பாவிச்.. என்று சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் சிறப்பிதழ்களாக வெளியிடுகிறேன். தற்போது ‘சர்வதேச கதைப் போக்குகள்’ என்று ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளேன்.

தமிழில் நான் எழுதிய நூல்கள் கதைகள், கட்டுரைகள் என்று 15 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும் எனது படைப்புகள் உலகின் பிரதான 8 மொழிகளில் (ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், ரோமானியன், சீன, போர்த்துக்கீசியம், பல்கேரியன்) நூல்களாக வெளிவந்துள்ளன. தற்போது, எனது படைப்புகள் உலகின் பிரதான 15 மொழிகளில் வெளிவந்திருக்கின்றன.

தற்போது ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளில் என்னுடைய சிஷீறீuனீஸீ வெளிவந்து கொண்டிருக்கிறது.

இங்கு, என் தமிழ் மொழி சார்ந்து சற்றே விளக்கவேண்டியுள்ளது :

எங்கள் தமிழ்நாட்டின் நவீன இலக்கியங்கள் பற்றிப் பேசும்போது, நிலவியல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி மொழி பேசும் இந்திய நாட்டில் ஏறக்குறைய 10 மொழிகளுக்குமேல் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களது மொழியை உயர்த்தி மற்ற மொழிகளை அலட்சியப்படுத்தியே இருக்கிறார்கள். எங்கள் தமிழ் மொழி உலகின் ஆதி மொழி என்றும், செம்மொழி என்றும், திராவிட மொழி என்ற பெருமை இருந்தாலும், உலக இலக்கிய அரங்குகளில் ஓரங்கட்டப்பட்டே வந்திருக்கிறது.

காலங்காலமாக இன்றுவரை, உலக இலக்கிய அரங்கில் இந்திய இலக்கியம் என்றால், வங்காள இலக்கியம் அல்லது இந்தி மொழி இலக்கியம் பற்றித்தான் கவனப்படுத்துவார்கள். தமிழ் மொழி என்றால் ஸ்ரீலங்காவில் பேசப்படுகிற மொழி என்றே பலரும் எண்ணி வருகின்றனர். இந்திய நாட்டில் பேசப்படுகின்ற பல மொழிகளில் தமிழும் ஒரு முக்கியமான மொழி. அது உலகின் தொன்மையான பாரம்பரியம் மிக்க செம்மொழி என்பதை சர்வதேச ஊடகங்கள் பலரும் அறியாதிருக்கின்றனர்.

தமிழைக் கடைசிவரை வஞ்சித்தே வந்திருக்கிறது உலக இலக்கிய தளம்.

இந்தப் பெருமைகொண்ட தமிழ் மொழியை, சர்வதேச இலக்கிய அரங்கிற்கு உயர்த்துவது எனது கனவு!

நீங்கள் ஒரு ஆய்வியல் அறிஞரா என்று கேட்டுள்ளீர்கள். நான் அறிஞர் அல்ல. நான் ஒரு ‘கவிஞன்’!

உலகின் மாபெரும் படைப்பாளியான மாக்சிம் கார்க்கியின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘இந்த பூமிப் பந்தையே புரட்டிவிடக்கூடிய கவிஞன்!’

இந்தப் பத்தியின் அடுத்த அத்தியாயத்திற்கு எழுதுவதற்காக எனக்கு மிகவும் பிடித்த  ‘நம்காலத்து நாயகன்’ மிகைல் லேர்மன்தோவ் குறித்து படித்துக் கொண்டிருந்தேன். 1960 கள் மற்றும் 70 களில் தமிழின் நவீன இலக்கியத் தளத்தை பைத்தியமாக்கிய எழுத்துக்காரன். அவரது கவிதைகள் மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தவையாக என்னை தனக்குள் இழுத்துக் கொண்டு போயின. அற்புதம் மிக்க அந்தப் பயணத்தில், ரஷ்யாவின் வெண்பனி படர்ந்த நிலத்தோற்றமும், புரட்சிக்கு முந்தைய காலகட்டமும், காகசஸ் மலைகளும், நெடிதுயர்ந்த ஓக் மரங்களும், வயோலா மலர்களும், ஓட்காவின் மதுமயக்கமுமாக வெண்ணிற இரவுகளிலும் பகல்களிலும் அலைந்து திரிந்தேன்.

1832இல் எழுதிய அவரது கவிதை, அந்தக் காலகட்டத்தின் கலைஞனுக்கு ஏற்பட்ட நெருக்கடி மிகுந்த வாழ்வியல், அரசியல் சூழலை கவித்துவமாக முன்வைத்திருக்கிறார். இந்த ரீதியில் ஜிலீமீ ஷிணீவீறீ (படகுப் பயணம்) என்ற அவரது கவிதை மிக முக்கியமானது. இந்தக் கவிதை ஆங்கிலம் உட்பட பல சர்வதேச மொழிகளில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலத்தில் 10க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. அதில் முக்கியமாக உலகப் புகழ்பெற்ற விளாதிமிர் நபோகோவ்  ஒரு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

படகுப் பயணம் – மிகைல் லேர்மன்தோவ்

கடலின் நீல மூடுபனிக்கு மத்தியில்

வெண்ணிறமும் பலவீனமும் அடர்ந்த ஒரு படகுப் பயணம் கடந்து செல்கிறது.

தொலைதூர நாட்டில் எதை நாடுகிறீர்கள் நீங்கள்?

தனிமையாகப் பயணம் செய்யும் நீங்கள், வீட்டில் எதை விட்டுச் செல்கிறீர்கள்?

 

மோதிவிளையாடும் பேரலைகளும், விஷ்ஷிக்கும் தென்றலும்

பாய்மரக்கலத்தில் மோதி தாளகதியில் தெறிக்கின்றன.

ஓ, மகிழ்ச்சியான எதிர்காலத்தைத் தேடவில்லை நீங்கள்,

ஒரு மகிழ்ச்சியான கடந்தகாலத்தை விட்டும் தப்பி ஓடவில்லை.

 

கீழே ஒளிர்கிறது, ஆகாயத்தின் நீலப் பிரதிபலிப்பு,

மேலே ஜாஜ்வலிக்கும் பொற்கதிர்களாய்  –

ஆனால் நீங்கள், நெஞ்சுரம் மிக்கவர், புயலுக்காக பிரார்த்திக்கிறீர்கள்

புயலில் அமைதி இருப்பதுபோல!

 

ஆங்கிலத்தில் : விளாதிமிர் நபோகோவ்

இன்னொரு மொழிபெயர்ப்பாக ராபர்ட் சாண்ட்லரின் மொழியாக்கத்தையும் தந்திருக்கிறேன். இவர் அலெக்சாண்டர் புஷ்கின் ‘கேப்டன் மகளி’ருந்து உஸ்பெக் நாவலாசிரியர் ஹமீத் இஸ்மாயிலோ ‘தி ரயில்வே’ வரை தற்கால நவீன ரஷ்ய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதில் முக்கியமானவர். மொழிபெயர்ப்புக்கான சர்வதேச அளவில் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

படகுப் பயணம் – மிகைல் லேர்மன்தோவ்

கடலில் நகர்கிறது ஒரு வெண்ணிறப் படகுப் பயணம்

காற்றில் உருளுகின்றன பேரலைகள்.

ஏன் இந்தத் தொலை பயணம்?

எதையெல்லாம் இங்கு விட்டுச் செல்கிறது?

 

கடலில் மோதியடிக்கும் காற்றலைகள்

பாய்மரக்கலத்தின் விஷ்ஷிப்பில் இசைபடுகிறது.

அது தேடும் மகிழ்ச்சீகரம் இதுவல்ல,

விட்டுச் செல்வதிலும் அல்ல.

 

மேலிருந்து பொங்கிப் பொழிகிறது ஒரு தங்க ஒளி

கீழே பாய்ந்தோடும் நீலக் கடல்களின் ஆழத்தில்.

இந்த எழுச்சி, ஓ, புயல்களை நாடுகிறது,

புயல்களில் அமைதி இருப்பதுபோல.

ஆங்கிலத்தில் : ராபர்ட் சாண்ட்லர்.

இந்த 2 மொழியாக்கங்களையும் ஒருசேர வாசிக்கும்போது பெரும் பிரமிப்பு ஏற்படுகிறது. (இன்னொரு மொழிபெயர்ப்பின் மொழியாக்கமும் செய்தேன். கட்டுரையின் நீளம் கருதி அதை இங்கு சேர்க்கவில்லை)

நபோகோவின் மொழியாக்கத்தில், நகரும் படகுப்பயணம் ஒரு மனிதரை முன்வைத்து – உயர்திணையில் – பேசப்படுகிறது. சாண்ட்லரோ, – அஃறிணையில் – படகை உருவகமாகக் காட்டி முன்வைக்ககிறார். இவை சரியானவைதானா? அல்லது எது சரி? என்று போகிறபோக்கில் தீர்ப்பு எழுதுவதற்குமுன் இந்தக் கவிதையின் தோற்றப் பின்புலத்தை விரிவாகப் பார்க்கலாம்:

இந்தக் கவிதை எழுதிய ஆண்டு, ரஷ்ய அரசியலின் நெருக்கடி மிகுந்த 1832.

ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் பரவியிருந்த மிகப்பெரிய ரஷ்ய சாம்ராஜ்யத்தின் எழுச்சி மேற்கு மற்றும் தெற்கு நோக்கி விரிவடைந்து கொண்டிருந்தது. எல்லா சாம்ராஜ்யங்களையும்போலவே இது பொருளாதாரங்கள், இனங்கள், மொழிகள் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் வேறுபாட்டைக் கொண்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக கிளர்ச்சிகளையும் படுகொலைகளையும் ஆரம்பித்த பல அதிருப்தி கூறுகள் இருந்தன.

ரஷ்யாவின் புதிய ஜார் அலெக்சாண்டர் மி (1801-1825) அரியணைக்கு வந்த காலகட்டம், தி கிரேட் பீட்டர் அமைத்த கல்வி வளாகங்களையும், மத்திய அரசாங்கத்தையும் மறுசீரமைத்தார், அலெக்சாண்டர் காகசஸ் மற்றும் அதற்கு அப்பால் முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்குரிய பிரதேசங்களை கையகப்படுத்த உறுதியாக இருந்தார். ஒன்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், ரஷ்யா காகசஸின் முக்கிய பகுதிகள்மீது ரஷ்ய ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரத்தை நிறைவுசெய்தது.

ஜார் நிக்கோலஸ் மி (1796–1855) 1825ஆம் ஆண்டில், தனது சகோதரருக்குப் பிறகு அரியணையில் அமர்ந்தார். முட்டாள்தனமான எதேச்சதிகாரியான நிக்கோலஸ்  எந்த விதமான தாராளமயம் அல்லது அரசியல் சீர்திருத்தங்களுக்கும் தீவிர சிந்தனை கொடுக்கவில்லை, அதிகாரத்துவத்தின்மூலம் ஆட்சி செய்ய விரும்பினார். மாநில தணிக்கைக்குழு மிகவும் கடுமையாகச் செயல்பட்டது. அரசியலில் தங்களை ஈடுபடுத்தாத எழுத்தாளர்களைக் கூட காவல்துறை துன்புறுத்தியது. அலெக்சாண்டர் புஷ்கின், பலத்த கண்காணிப்புக்குள்ளானார். ஏனெனில் அவர் சில டிசம்பிரிஸ்டுகளுடன் நட்பு கொண்டிருந்தார். (டிசம்பர் இயக்கம் : 19ஆம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் உருவான ஒரு ரகசிய புரட்சிகர இயக்கம், 1825 டிசம்பர் 26 அன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடத்திய கிளர்ச்சியின் விளைவாக ‘டிசம்பிரிஸ்ட்’ என்ற பெயர் பெறப்பட்டது.) எழுத்தாளர்கள் மிகைல் லெர்மொண்டோவ் மற்றும் நிகோலாய் கோகோல் ஆகியோரும் கண்காணிப்புக்குள்ளாகினர்.

தணிக்கையும் கண்காணிப்பும் ஒவ்வொரு தணிக்கையாளரின் தனிப்பட்ட கருத்துகளைப் பொறுத்து பலவிதங்களில் அச்சுறுத்தலானது. பல எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இதுபோன்ற கடுமையான அந்தக் காலகட்டத்தில் கலைஞனுக்கு ஏற்பட்ட நெருக்கடிமிகுந்த வாழ்வியல், அரசியல் சூழலை கவித்துவமாக முன்வைக்கிறார் லேர்மன்தோவ்.

இந்தக் காலகட்டத்தின் ஆன்மா, அதன் துடிதுடிப்பு மிக்க உயிரோட்டத்தின் ஜீவன் முழுமை பெற்றிருக்கிற காட்சிகளை இந்த இரு மொழிபெயர்ப்புகளும் வாசகனுக்குள் நிழற்றுகின்றனவா?

ரஷ்ய நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த (ஒருவிதத்தில் தப்பிச் சென்ற) நபோகோவின் மனநிலையும் காட்சி கண்ணோட்டங்களும் அவரது மொழிபெயர்ப்புப் பிரதியினூடே கச்சிதமாகப் பொருந்தி நிற்கின்றன. மிக மிக நேரடியான ரத்தமும் சதையுமான ஒரு காட்சிப் பின்புலத்தை எவ்வித உருவ உத்திகளும் இல்லாது ஒரு நேர்கோட்டில் அந்த வாழ்வின் அபத்தத்தை முன்வைக்கிறார். வெண்ணிறப் பயணத்தின் ஆழமான வெறுமை வாசிப்பின் முன்னதில் மிகவும் ஆழமாக உள்ளோடி அந்தக் காலகட்டத்தின் காட்சிகளை பொங்கிப் பிரவகிக்கவைக்கிறது.

அதேபோல, சாண்ட்லர் தனது பிரதியில் ஒரு நவீன விமீtணீஜீலீஷீக்ஷீஐ உருவாக்க விழைகிறார். அவர் கட்டமைக்கும் மொழியாக்கத்தில் இறுக்கமாகத் திரளும் ஒருவித வெறுமை நவீனத்துவ பாணி கொண்டது. வாழ்வின் அபத்தவியலை உருவகம், குறியீடுகள், உள்ளடக்கத்தின் நெளிவான மங்கிய வடிவம் என்று ஒருவிதத்தில் மிக மேலோட்டமாகவும், மற்றொருவிதத்தில் மிக நுட்பமாகவும் முன்வைக்கிறார். இந்தப் பிரதியில் எழும் வெண்ணிறப்பயணத்தின் சித்திரங்கள் நவீனத்துவம்கொண்ட பல்வேறு நிறங்களை முன்வைக்கின்றன.

என் முகத்தின்மீது பற்றிப் படர்கிறது நபோகோவின் வெண்பனி!