வரவேற்பறைத் தரையில் இடப்பட்டிருந்த கம்பளங்களின் நீல நிறம் மங்கிப்போயிருந்த அந்த சிறிய வீட்டில் நகைக்குப் பயன்படும் மணிபோல் அழகானவளும் அபூர்வமானவளுமான இளம் சிவப்புத் தோல் நிறமுடைய ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அது அவளுடைய நகைப்பெட்டியாக இருந்தது.

கறுப்பு நிறக் கண்களும் சிவந்த வாயையும் உடைய அந்தச் சுவைமிக்க மகிழ்ச்சியான பறவைக்கு யார்
உடைமையாளன்? சூரியப் பிரகாசத்தில் வசந்தகாலம் தனது அழகிய சிரித்த முகத்தைக் காட்டித் திடல்களிலே இருக்கும் மலர்களைத் திறந்து மரக்கிளைகளில் உள்ள கூடுகளை விசிறிச் சுத்தம் செய்யும்போது அவள் யாருக்காகத் தனது உன்னத சங்கீதத்தைப் பாடுவாள்? மெத்தென்ற துணிகளாலும், ஒரு ஓவிய வேடனால் காற்றில் சூரிய வெளிச்சமும் ரோஜாக்களின் மணமும் நிறைந்திருக்கும் ஒரு மே மாத காலையில் சிறைபிடிக்கப்பட்ட மெல்லிய சரிகைத் துணியாலும், பட்டினாலும் அலங்கரிக்கப்பட்ட கூண்டில் வாழ்ந்து வரும் அந்தப் பெண்ணின் பெயர் சூஸட் என்பதாகும்.

ரிகாரேடோவுக்கு – அவன் பெற்றோரின் விருப்பத்தால் இப்படி ஒரு பெயர் அவனுக்கு வாய்த்திருந்தது! – அவன் பெயர் ரிக்காரேடோ என்றிருப்பது அவன் பிழையா என்ன? – ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்திருந்தது. “நீ என்னைக் காதலிக்கிறாயா?” “உன்னைக் காதலிக்கிறேன்.” “நீ?” “மனசார.”

பாதிரியாரைச் சந்தித்துத் திரும்பிய அந்தப் பொன்னான நாள் பேரழகானதாக இருந்தது. காதலின் இன்பத்தில் திளைக்க அவர்கள் புதிய புல்வெளி ஒன்றுக்குப் போனார்கள். ஒருவர் இடுப்பில் மற்றவரின் கை கிடக்க உதடுகளின் இதழ்கள் முத்தங்களை வாரி இறைத்தபடியே அந்த இரண்டு காதலர்களும் கடந்து போனபோது சின்னஞ்சிறு ஓடையின் ஓரமாக மணமிக்க பூக்கள்தமது இலைகளுக்குள் முணு முணுத்தன. பிறகு நகரத்துக்கும் இளமையினாலும் மகிழ்ச்சிமிக்க வெம்மையாலும் நிறைந்திருக்கும் அவர்களது கூட்டுக்கும் அவர்கள் திரும்பினார்கள். ரிகாரேடோ ஒரு சிற்பி என்பதை உங்களிடம் சொன்னேனா இல்லையா? அப்படிச் சொல்லவில்லை என்றால் இப்போது சொல்லி விடுகிறேன்.

அவன் ஒரு சிற்பி. அவன் தனது சிற்பப் பட்டறையை அந்தச் சிறிய வீட்டிலேயே வைத்திருந்தான். பட்டறையைச் சுற்றியும் பளிங்கினாலும், சுண்ணத்தாலும், வெண்கலத்தாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட உருவங்கள்கிடந்தன. வீட்டைக் கடந்து போனவர்கள் சில நேரங்களில் வீட்டின் சன்னல் சட்டங்களின் வழியாகவும் திரைகளின் வழியாகவும் குரல் ஒன்று பாடுவதையும் சுத்தியலின் ரீங்காரத்தையும் கேட்டார்கள். சூஸட்டும் ரிகாரேடோவும், பாட்டினை உருவாக்கிய வாயும், சுத்தியலின் கிண்ணென்ற சத்தத்தை உருவாக்கிய கையும்.

திருமண உறவின் எல்லையில்லாத மகிழ்ச்சி. மெல்லப்பதுங்கிப் போய், அவன் கழுத்தில் அவள் தலைமயிரைத் தாரையாய் வழியவிட்டு, சின்னச் சின்ன முத்தங்களால் அவனை மூச்சுத் திணற வைத்தபடி. மடியில் திறந்து கிடக்கும் புத்தகத்தோடு சோபாவில் அவள் குட்டித் தூக்கம் போடும் இடத்திற்கு மெல்ல நகர்ந்து சென்று அவள் உதடுகளில் முத்தம் வைத்து அவளது மூச்சுக் காற்றை அள்ளிப்பருகி அவளுடைய வர்ணிப்புக்கு அப்பாற்பட்ட ஒளிமிகுந்த கண்களைத் திடுக்கிட்டுத் திறக்கச் செய்தபடி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கருங்குருவி சிரிக்கும். கூண்டில் அடைப்பட்டிருந்த அவளது கருங்குருவி. அவள் சோபானின் சங்கீதத்தை வாசிக்கும்போது முகம் வாடிப்போய்ப் பாட மறுக்கும் கருங்குருவி. கருங்குருவியின் சிரிப்பு! அது சாதாரண விஷயம் அல்ல.

”நீ என்மீது அக்கறையாக இருக்கிறாயா?” “நான் அப்படித்தான் இருக்கிறேன் என்று உனக்குத் தெரியாதா?” “என்னை நீ காதலிக்கிறாயா?” “உன்னை நான் ஆராதிக்கிறேன்!” இதற்குள் கூண்டுக்குள் இருக்கும் அந்தச் சிறிய பறவை அலகைக் காற்றில் தூக்கி வைத்தபடி கத்த ஆரம்பித்திருக்கும். கூண்டிலிருந்து அவர்கள் அதைச் சற்று நேரம் விடுவித்தார்கள் என்றால் அது நீல நிற வரவேற்பறையைச் சுற்றிச் சிறகுகள் படபடக்கப் பறந்து சுண்ணத்தால் செய்த கிரேக்கக் கடவுளின் சிலையின் தலைமீதோ பழைய ஜெர்மானிய போர்வீரன் கையிலிருக்கும் ஈட்டியின் முனையிலோ போய் அமர்ந்து கொள்ளும். “ஃப்ரூய்ய்ய்ய்ய்ய்ய்ட்” அதன் கூச்சலில் என்ன ஒரு சுவாரசியம் நிறைந்த திமிர்த்தனம்! ஆனால் அது எப்படி சூஸட்டின் கையில் இத்தனை அழகாக அமர்ந்து கொள்கிறது. அது கெஞ்சிக் கூத்தாடும்வரை அவள் அதனிடம் கொஞ்சிப் பேசி அதன் அலகை அவள் பற்களுக்கிடையே பற்றிக் கொள்வாள். பிறகு அவள் குரல் நடுங்க அதனிடம் கடுமையான குரலில் “திருவாளர் கருங்குருவியே, நீர் ஒரு திருடன்” என்பாள்.

இரண்டு காதலர்களும் ஒருவர் மற்றவருடைய தலைமயிரை சீவிச் சிங்காரிப்பார்கள். ‘‘பாடு,” என்று அவன் சொல்வான். அவள் சோம்பல் நிறைந்த குரலில்பாடுவாள். அவர்கள் உண்மையில் காதலில் திளைத்திருக்கும் இரண்டு சிறுபிள்ளைகள்தான் என்ற போதிலும் தங்களைத் தாங்களே அற்புதம் நிறைந்தவர்களாக, ராஜகளை மிகுந்தவர்களாக, அழகானவர்களாக நினைத்துக் கொண்டார்கள். அவள் அவனுக்குப் பண்டைய ஜெர்மானிய கதைகளில் வரும் எல்ஸாவாக இருந்தாள். அவன் அவளுடைய காதலனான லோஹென் கிரினாக இருந்தான். காதலும், ரத்தமும் கனவுகளும் நிறைந்த இளம் காதலர்கள் கண்களின் முன்னால் நீல ஸ்படிகம்போன்ற கண்ணாடியை வைத்து எல்லாவற்றையும் முடிவில்லாத ஆனந்தம் நிறைந்ததாக மாற்றி
விடுகிறார்கள்.

எப்படியெல்லாம் காதலித்தார்கள்! அவன் அவளை கடவுளின் நட்சத்திரங்களின் மத்தியில் இருப்பவளாகக் கற்பனை செய்தான். அவளுக்கான அவன் காதல் உணர்ச்சிகளின் எல்லா வகைகளையும் தனக்குள் அடக்கியதாக இருந்தது. இப்போது சாந்தமானதாக. இப்போது கட்டறுத்து ஓடுவதாக. இப்போது கிட்டத்தட்ட ஆன்மீக அனுபவம் நிறைந்ததாக. கலைஞனான அவன் தனது காதலுக்கு உரியவளை ஆங்கில எழுத்தாளரான ரைடர் ஹாகர்ட்டின் பாத்திரப் படைப்பான ஆயேஷாவைப்போல் ஈடு இணையற்றவளாகவும் தெய்வீகத்தன்மை நிறைந்தவளாகவும் காணக்கூடிய தியோஸபிகல் பக்தனான மாறி இருந்தான். அவன் அவளை மலரைப்போல் அருந்தினான், நட்சத்திரத்தைப் பார்த்துச் சிரிப்பதைப்போல் அவளைப் பார்த்துச் சிரித்தான், அவள் தனக்குள் மூழ்கியவளாக அமைதியில் ஆழ்ந்திருக்கும் வேளையில் பழைய நாணயத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் பைஸந்தீன் பேரரசியின் உருவ அமைப்பில் இருக்கும் அவளது அழகிய தலையைத் தன் மார்பில் புதைத்துக் கொள்ளும்போது தன்னைத் தன்னிகரில்லாத வலிமை நிறைந்தவனாக உணர்ந்தான்.

ரிகாரேடோ அவன் கலையைக் காதலித்தான். உருவங்கள்மீது அவனுக்குப் பெருத்த மயக்கம் இருந்தது; பளிங்குக் கல்லிலிருந்து கண்மணிகள் அற்ற வழவழப்பான வெள்ளைக் கண்களோடு வெகு நளினமான நிர்வாண தேவதைகள் அவன் கைவண்ணத்தில் தோன்றினார்கள். அவன் சிற்பப் பட்டறை ஒரு நாட்டின் மக்கள் தொகை என்னும் அளவுக்கு மௌனமான சிலைகளோடும், இரும்பு மிருகங்களோடும், மாந்திரீகத் தன்மை வாய்ந்த படைப்பூக்கத்தின் வெளிப்பாடுகளாண இலைகள் பதித்ததுபோன்ற கூரிய புடைப்புகளையுடைய பயங்கரப் பிராணிகளோடும் நிறைந்திருந்தது. இவற்றைவிடஎல்லாம் அவனுக்குச் சீன ஜப்பானிய கலைப்பொருள்களின்மீது மிகப் பெரிய பித்து இருந்தது. இந்தப் பித்தில் ரிகாரேடோ வேறு எவரையும் மிஞ்சக்கூடியவனாக இருந்தான். ஜப்பானிய மொழியும் சீன மொழியையும் அறிந்து கொள்ள அவன் என்ன விலையும் தருவதற்குத் தயாராக இருந்திருப்பான். ஜப்பான், சீனா குறித்த அத்தனை ஓவியத் தொகுப்புகளையும் அவன் அலசியிருந்தான்; இந்நாடுகளைக் குறித்த மிக உயர்ந்த படைப்புகளை வாசித்திருந்தான்; இவற்றில் விற்பன்னர்களாயிருந்த லோதியையும் ஜுதிட் கொதியரையும் அவன் தெய்வங்களாகக் கொண்டாடினான். கத்திகள், ஊதுகுழல்கள், போதைப் பொருளால் உட்கொண்ட பிறகு ஏற்படும் கனவுகளில் தோன்றுவதைப்போல் அகோரமான முகங்களைக் கொண்ட முகமூடிகள், பெருத்த தொந்தியும் உட்குழிந்த கண்களுமுடைய சீனக் குள்ளர்களின் சிலைகள், பிளந்திருக்கும் வாய்களில் பெரிய பற்களோடு காட்சி தரும் தவளை வாயர்கள், கடுமையான முகங்களைக் கொண்ட மங்கோலிய வீரர்கள் என்று யோகோஹாமா, நாகசாகி, கியோதோ, நன்கிங், பீகிங் ஆகிய நகரங்களிலிருந்து அசல் படைப்புகளை வாங்க தன் செலவுகளை மிகவும் கட்டுப்படுத்தினான்.

‘‘ஓ, உனது சிற்ப பட்டறையை நான் எவ்வளவு வெறுக்கிறேன் தெரியுமா?” என் சூஸட் அவனிடம் சொன்னாள். “வெறும் மாந்திரீகக் குகை, என் முத்தங்கள் வந்து சேராமல் உன்னைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் விநோதமான கருவூலப் பெட்டி.” அவன் சிரித்துக் கொண்டே விசித்திரப் பொருள்களின் கோவிலாக இருக்கும் அவனுடைய வேலையிடத்திலிருந்து வெளியில் வந்து தனது உயிருள்ள மணியைக் கொஞ்சவும் மகிழ்ச்சிமிக்க அந்தக் கருங்குருவி சிரிப்பதைக் கேட்கவும் நீல நிற வரவேற்பறைக்குள் விரைவான்.

காலையில் அவன் அங்கு வந்த போது அவனது இனிய சூஸட் ரோஜாக்கள் நிறைந்த அகன்ற வாயுடைய கிண்ணம் ஒன்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் முக்காலிக்குப் பக்கத்தில் தனது இனிய சூஸட் தூக்கக் கலக்கத்தோடு படுத்திருப்பதைப் பார்த்தான். அவள் என்ன மாயாஜாலக் கதைகளில் வரும் ஸ்லீப்பிங் ப்யூட்டி என்ற பெண்ணா? மெல்லிய வெள்ளைத் துணிக்கடியில் அவளுடைய மென்மையான உடலின் செழிப்பு தெளிவாகத் தெரிந்தது. அவளது சிவந்த தலைமயிர் தோளில் சுருண்டு கிடந்தது. அவள் உடம்பு முழுவதும் பெண்மை நிரம்பிய இனிய மணமொன்று வீசியது. “முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்…” என்று தொடங்கும் சிறுவர்கள் கதையில் வரும் அழகான பெண்ணைப்போல் அவள் இருந்தாள்.

அவன் அவளை எழுப்பினான்:

“சூஸட்! என் அழகே!” அவன் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது; சிற்ப வேலை செய்யும்போது அவன் அணிந்து கொள்ளும் சிவப்புத் தொப்பியின் அடியில் அவன் கரும்விழிகள் பளபளத்தன. கையில் அவன் ஒரு கடிதத்தை வைத்திருந்தான்.

‘‘ரோபர்ட்டிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, சூஸட். ராஸ்கல் சீனாவில் இருக்கிறான்! “ஹாங் காங், 18 ஜனவரி…”

சூஸட் தூக்கக் கலக்கத்தோடு எழுந்து தாளை கையில் வாங்கிக் கொண்டாள். அந்த ஊர்சுற்றி இவ்வளவு தூரம் போயிருப்பான் என்று யார் நினைத்தார்கள்! “ஹாங் காங், 18 ஜனவரி…” ரோபர்ட் எவ்வளவு நல்லவன், எப்போதும் சிரிக்க வைப்பான், பயணப் பைத்தியம்! உலகத்தின் கடையாந்திரங்கள்வரை போவதுதான் அவன் லட்சியம். மிக நெருங்கிய நண்பன். கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒருவன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோ நகரத்துக்கு போனான். சரியான பைத்தியம்!

அவன் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தான்:

ஹாங் காங், 18 ஜனவரி 1888

 

அன்புள்ள ரிகாரேடோ:

வந்தேன். கண்டேன். (ஆனால் இன்னும் வெல்லவில்லை).

சான் பிரான்ஸிஸ்கோவில் உன் திருமணச் செய்தி கிடைத்தது. மகிழ்ந்தேன். ஒரே தாவல்தான். சீனாவிற்கு வந்து சேர்ந்தேன். பட்டு, எனாமல், தந்தம் முதற்கொண்டு எல்லாச் சீனச் சரக்குகளையும் இறக்குமதி செய்யும் சான் பிரான்ஸிஸ்கோ நிறுவனம் ஒன்றிற்கு முகவராக இருக்கிறேன். உங்களுக்கான திருமணப் பரிசு விரைவில் வரும். உனக்கு இந்த நாட்டின்மீது இருக்கும் ஈர்ப்பை வைத்துப் பார்த்தால் நீ அதை பொன்போல கருதுவாய். சூஸட்டுக்கு என் வணக்கங்கள். இந்தக் கடிதத்தை அனுப்பியவனை எப்போதும் மனதில் வைத்திரு.

ரோபர்ட்

அவ்வளவுதான் எழுதி இருந்தது. இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். அதன் பங்குக்குக் கூண்டிலிருந்த கருங்குருவி கூண்டை அதிர வைக்கும் அளவுக்குச் சங்கீதத்தனமான கூச்சலில் இறங்கியிருந்தது.

பரிசுப்பொருள் வந்து சேர்ந்தது: தபால் முத்திரைகளாலும், எண்களாலும், அதன் உள்ளே இருக்கும் பொருளின் எளிதில் உடைந்துவிடும் தன்மையைப் பறைசாற்றும் கல்வெட்டுக்கள்போன்ற எழுத்துகளாலும் மொத்தமும் மூடியதுபோல் சராசரி நீள அகலங்களையுடைய ஒரு பெட்டி. பெட்டி திறந்ததும் அதில் புதைந்திருந்த மர்மம் வெளிப்பட்டது. மெழுகைப்போன்ற வழவழப்போடு சிரித்த முகமாய் நல்ல கவர்ச்சியுள்ள ஒரு பெண்ணின் தலைப்பகுதியைக் காட்டும் பீங்கான் சிற்பம். அதன் அடியில் சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் “சீனப் பேரரசி” என்று எழுதியிருந்தது. எந்தச் தூர தேசத்துக் கலைஞனின் கைகள் இதன் மர்மமும் கவர்ச்சியும் நிறைந்த வடிவத்தைச் சமைத்தன? தலைமயிரைப் பின்னிக் கட்டிய சிறிய கொண்டை, மர்மமான பார்வை, உன்னத இளவரசி ஒருத்தியின் கீழ்நோக்கிய புதிர்மிகுந்த கண்கள், உதடுகளில் எகிப்திய ஸ்பிங்க்ஸ் சிலையின் புன்னகை, மெலிந்த கழுத்தின் அடியில் ஒரு ஜோடி புறாக்களைப்போன்ற தோள்களின்மீது கடல்நாகங்கள் வேயப்பட்ட பட்டுச் சரிகையின் புரளல், வெள்ளை வெளேர் என்ற பீங்கான் தூய்மையின் மாயா விநோதம். சீனப் பேரரசி! சூஸட் தனது இளஞ்சிவப்பு விரல்களால் அந்த வியக்கத்தக்க ராணியின் கண்களையும், வெளிச்சமும் தூய்மையும் நிறைந்த நெற்றிக்கு அடியில் வளைந்திருக்கும் சிலையின் கண்ணிமைகளையும் தொட்டாள். அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ரிகாரேடோவுக்கு இப்பேர்ப்பட்ட பீங்கான் சிற்பம் ஒன்று தனது வீடு தேடி வந்ததை நினைத்துப் பெருமையாக இருந்தது. புகழ்பெற்ற வீனஸ் டி மிலோ சிலைப்போல் சீனப் பேரரசி தனது வீட்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவளாய் ராஜ தோரணங்களின் கீழே தனித்திருந்து வெற்றியுடன் கோலோச்ச அவளுக்கு ஒரு தகுந்த வசிப்பிடமாய் ஒரு அலமாரியைச் செய்ய அவன் முடிவு செய்தான்.

அப்படியே செய்தான். தன் சிற்பப் பட்டறையின் ஒரு மூலையில் நாரைகளாலும் நெல் வயல்களாலும் அலங்கரிக்கப்பட்ட மடிப்புத் திரைகளால் ஒரு சிறு அலமாரியை உண்டாக்கினான். அதன் எல்லாப் பகுதிகளிலும் சீனர்களின் அரச வண்ணமான மஞ்சளையே நிறைந்திருக்கச் செய்தான். அதற்காக செம்மஞ்சள், வெளிர்பழுப்பு, பீதாம்பரம், வெள்ளை நிறத்திற்குள் தேய்ந்து போவதுபோல் இருக்கும் வெளிர் மஞ்சள் என்ற எல்லா மஞ்சள் நிறங்களையும் பயன்படுத்தினான். அவற்றினிடையே மாட்சிமை தங்கிய அந்தப் பேரரசி கறுப்பும் பொன்னிறமும் கலந்த ஒருபீடத்தின்மீது சிரித்தபடி அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி ரிகாரேடோ அவன் சேகரித்து வைத்திருந்த சீன மற்றும் ஜப்பானிய பொருள்கள் அனைத்தையும் வைத்தான். அவன் தலைக்குமேல் காமெலியா மலர்களும் குண்டு ரோஜாக்களும் வரையப்பட்டிருந்த பெரிய ஜப்பானிய குடையைக் கொற்றக் குடையாகக் கவிழ்த்து வைத்தான். மயக்கம் நிறைந்த கண்களையுடைய அந்தச் சிற்பி தனது ஊதுகுழலையும் சிற்றுளியையும் ஓரமாகப் போட்டுவிட்டுக் கைகளை மார்பின்மீது மடித்து வைத்தபடி அந்தப் பேரரசியின் முன்னால் குனிந்து வணங்குவதைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது. அவன் பேரரசியை நாளொன்றுக்கு ஒரு முறை, இரண்டு முறை, ஏன் இருபது முறைகூட சென்று பார்த்தான். அவள்மீது அவன் பித்தாகித்தான் போயிருந்தான். ஒவ்வொரு நாளும் அவளுக்கு முன்னால் இருந்த யோகோஹாமா எனாமல் கிண்ணத்தில் அவன் மலர்கள் கொண்டு வந்து அவளுக்குப் படையலாக்கினான். சிற்சில கணங்களில் அந்தச் சீனத்துச் சிலையின் பேரழகு வாய்ந்த அமைதியான கம்பீரம் அவனைத் தொட்டு வேறொங்கோ அழைத்துச் செல்வதாக உணர்ந்தான். சிலை காது வளைவு, உதட்டின் புடைப்பு, பளபளத்து ஜொலிக்கும் மூக்கு, கண்ணிமையின் சாய்வு என்று அவன் சிலையின் ஒவ்வொரு பகுதியையும் வெகு நுணுக்கமாக ஆராய்ந்தான். அவன் வணங்கும் தெய்வம், புகழ்வாய்ந்த பேரரசி! சூஸட் அவனை அழைத்தாள்:

‘‘ரிகாரேடோ!”

‘‘இதோ வருகிறேன்!”

அவன் தனக்கு முன்னாலிருக்கும் கலைப்படைப்பைப் பார்த்தபடியே நின்றான். சூஸட் வந்து அவனை பிடித்தும் இழுத்தும் முத்தங்களால் அழைத்துப் போக வேண்டியதாகிவிட்டது.

ஒரு நாள் எனாமல் கிண்ணத்தில் இருந்த மலர்கள் மாயமாய் மறைந்து போயின.

‘‘யார் மலர்களை எடுத்தது?” என்று சிற்பி பட்டறையிலிருந்து கத்தினான்.

‘‘நான்தான்,” என்று ஒரு நடுங்கும் குரல் பதில் சொன்னது.

முகம் சிவக்க, கண்கள் பளபளக்க சூஸட் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு வந்தாள்.

அவன் மனதின் அடியாழத்தில் எங்கோ, சிற்பக் கலைஞனான திருவாளர் ரிகாரேடோ தன்னைத் தானே இப்படிக் கேட்டுக் கொள்கிறான்: என் அன்புக்குரியவளுக்கு என்ன ஆகிவிட்டது? சாப்பிடவே மாட்டேன் என்கிறாள். தந்தப் பிடியுடைய கத்தியால் திறக்கப்பட்ட அவளுடைய அருமையான புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே அவளது இளஞ்சிவப்பு கைகளுக்காகவும் மணமுள்ள மடிக்காகவும் ஏங்கியபடி சிறிய கறுப்பு அலமாரியில் கிடக்கின்றன. ரிகாரேடோ அவள் கவலையாக இருப்பதை உணர்ந்தான். என் பெண்ணுக்கு என்ன ஆனது? மேசையில் அமர்கிறாள் ஆனால் சாப்பிட மாட்டேன் என்கிறாள். அவளது முகம் வாடிப் போயிருக்கிறது, அவ்வளவு வாட்டம். சில நேரங்களில் அவன் அவளை ஓரக்கண்ணால் கவனித்தான். அவள் கண்கள் அழப்போவதைப்போல் ஈரமாகி இருந்தன. பேசினால் மிட்டாய் மறுக்கப்பட்ட குழந்தையைப்போல் பேசினாள். “ஒன்றுமில்லை.” ஒரு சின்ன விசும்பலோடுதான் “ஒன்றுமில்லை” என்பதையும் சொன்னாள். அவள் பேசிய வார்த்
தைகளின் இடையில் கண்ணீர்த் துளிகள் வழிந்தன.

ஓ, திருவாளர் ரிகாரேடோ! நீ இப்படிக் கொடுமைக்காரனாக இருப்பதுதான் உன் அன்புக்குரியவளைப் பாதித்திருக்கிறது. அந்த அழகு ராணி, சீனப் பேரரசி உன் வீட்டுக்குள் வந்ததிலிருந்து நீல நிற வரவேற்பறை களை இழந்து போனதையும், கருங்குருவி பாட மறந்ததையும் முத்துக்கள் சிதறியது
போன்ற அதன் சிரிப்பொலி காணாமல் போனதையும் நீ கவனிக்கவில்லையா? சூஸட் மீண்டும் சோபானின் துன்பம் நிறைந்த கீதங்களைப் பியானோவில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள். சாவுக்குக் கேட்கும் பாடலைப்போல் கனமாக மெல்ல அந்தக் கானங்கள் பியானோவிலிருந்து எழுகின்றன. அவள் பொறாமைக்கு ஆளாகியிருக்கிறாள், திருவாளர் ரிகாரேடோ! பாம்பைப்போல் அவளைச் சுற்றி நெருக்கும் பொறாமையில் அவள்
மூழ்கிக் கொண்டிருக்கிறாள். பொறாமை அவளை எரிக்கிறது. பொறாமை! ஒருவேளை அவனுக்குப் புரிந்திருக்கக்கூடும். ஒரு நாள் மாலை ஆவி பறக்கும் காபியை அருந்தியபடியே தனது காதலியிடம் இப்படிப் பேசினான்.

‘‘நீ செய்வது நியாயமே அல்ல. நான் உன்னை மனமாரக் காதலிக்கவில்லையா? என் உள்ளத்தில் இருப்பது என் கண்களில் தெரியவில்லையா?”

சூஸட் அழ ஆரம்பித்தாள். அப்படியென்றால் அவன் அவளைக் காதலிக்கிறானா! இல்லை, அவன் அவளைக் காதலிக்கவில்லை. அந்த வெளிச்சம் மிகுந்த அழகிய பொழுதுகள் அனைத்தும் போயே போய்விட்டன. அவர்கள் ஒருவரை ஒருவரை செல்லமாய்த் தட்டியதும் முத்தமிட்டதும் பறவைக் கூட்டத்தைப்போல் சிதறிப் போனது போனதுதான். அவன் அவளைக் காதலிக்கவில்லை. தனது மதமாகவும், இனிப்பாகவும், கனவாகும், ராணியாகவும் இருக்கும் தன்னை விட்டு அவன் வேறொரு பெண்ணைத் தேடிப் போய் விட்டான்.

வேறொரு பெண்ணா! ரிகாரேடோ திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள். அவன் ஒரு காலத்தில் கவிதைகள் எழுதினானே, பொன்னிறமான தலைமயிரை உடைய இயூலோஜியா, அந்தப் பெண்ணைத்தான் அவள் குறிப்பிடுகிறாளா?

அவள் தலையசைத்தாள். “இல்லை”. முன்பொரு காலத்தில் சிற்பமாய் வடித்தானே – கறுப்புத் தலைமயிரோடும், வெண்சுண்ணம்போல் வெள்ளை வெளேர் என்ற தோல்நிறத்தோடும் சற்றே பூசினதுபோல் இருக்கும் பணக்காரியான காப்ரியேலா – அவளா அல்லது பால் நிறைந்தவைபோல் எப்போதும் காட்சிதரும் முலைகளோடும் சின்னஞ்சிறிய இடுப்போடும் சுட்டுச் சாம்பலாக்கும் கண்களோடும் இருப்பாளே லூயிஸா என்ற ஆட்டக்காரி, அவளா அல்லது சிரிக்கும்போது பளபளக்கும் தந்தம்போன்ற பற்களுக்கிடையில் பூனையின் நாக்கைப்போலிருக்கும் தனது நாக்கின் இளஞ்சிவப்பு நுனியைச் சற்றே துருத்தியபடி வைத்திருப்பாளே விதவை ஆண்டிரியா, அவளா?

இல்லை, இவர்கள் யாரும் இல்லை. ரிகாரேடோ குழம்பிப் போனான். ‘‘சொல், என் அன்பே, உண்மையைச் சொல். யார் அவள்? நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதுதான் உனக்குத் தெரியுமே. நீ என் எல்ஸா இல்லையா, என் ஜுலியட், என் அன்பே, என் உயிரே…”

லேசாய் அவன் மூச்சிரைத்தபடி பேசிய வார்த்தைகளில் அவன் காதல் தெள்ளத் தெளிப்வாய்த் தெரியவே அழுது வீங்கியிருந்த கண்களில் இப்போது கண்ணீர் காய்ந்திருக்கச் சூஸட் எழுந்து தனது அழகிய தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டாள்.

‘‘நீ என்னைக் காதலிக்கிறாயா?”

‘‘நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று உனக்கே தெரியும்.”

‘‘அப்படியென்றால் என் எதிரியைப் பழிவாங்க எனக்கு அனுமதி கொடு. எங்கள் இருவரில் ஒருவரை
நீ தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும். நீ என்னைக் காதலிப்பது உண்மை என்றால் உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்பதைக் காட்டும் வகையில் நான் அவளை விரட்டியடிப்பதை நீ அனுமதிக்க வேண்டும்.”

‘‘அப்படியே ஆகட்டும்,” என்றான் ரிகாரேடோ. மைபோல் கறுப்பாய் இருந்த தனது காபியை அருந்தியபடியே பொறாமையும் பிடிவாதமும் நிறைந்த அவனது சின்னப் பறவை அறையை விட்டுச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மூன்று வாய்தான் குடித்திருப்பான். சிற்பப் பட்டறையிலிருந்து பெரும் சத்தமும் ஏதோ ஒன்று தரையில் உருளும் ஓசையும் கேட்டன.

உள்ளே போய்ப் பார்த்தான். அவன் கண் முன்னால் என்ன தெரிந்தது? அதன் கறுப்பும் பொன்னிறமும் கலந்த பீடத்திலிருந்து சீனப் பேரரசியின் சிலை காணாமல் போயிருந்தது. தரையில் சின்னச் சீனச் சிலைகளுக்கும் விசிறிகளுக்கும் மத்தியில் பீங்கான் துண்டுகள் சூஸட்டின் காலடிக்குக் கீழே அரைபட்டுக் கொண்டி
ருந்தன. சூஸட் முகம் சிவந்திருந்தது. அவள் தலைமயிர் கலைந்திருந்தது. சின்னச் சின்ன வெள்ளி நிறச் சிரிப்புகளைச் சிரித்தபடியே தன் திடுக்கிட்டுப் போன கணவனிடமிருந்து முத்தங்களை எதிர்பார்ப்பவளாக அவள் பேசினாள்:

‘‘பழி வாங்கிவிட்டேன். செத்தாள் சீனப் பேரரசி!”

ஆனந்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்த நீல நிற அறையில் அவர்கள் இருவரின் உதடுகளும் ஆசைப் பெருக்கில் சந்தித்துக் கொண்ட போது, கூண்டில் அடைப்பட்டிருந்த கருங்குருவி சிரித்தே செத்துப் போயிருந்தது.

 

writersithurajponraj@gmail.com