அசாதாரணமான இறப்பு என்பதால், போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடலைப் பெற்றிட இயலவில்லை. கோவிட் டெஸ்ட்டின் ரிசல்ட் வராததால் போலீஸ் விசாரணை நடத்தி முடிக்கவில்லை. விசாரனை நடத்தாததால் டாக்டர்கள் போஸ்ட்மார்ட்டமும் செய்யவில்லை. போஸ்ட்மார்ட்டம் செய்யாததால் உடலையும் தரவில்லை. முப்பாட்டனாரின் மரணம் உருவாக்கிய துன்ப வளையத்தின் நடுவிலிருந்தவாறு ரதீஷ் அதிர்ச்சியுடன் புகை பிடித்துக்கொண்டிருந்தான்.
ரதீஷ் கணக்கு கூட்டிப் பார்த்தான். ‘இப்போ மணி ஐந்தாகி விட்டது. நாளை காலையில் கோவிட் ரிப்போர்ட் வந்து விடும் என்றால் ஸ்டேஷனுக்குப் போய் போலீஸ்காரரையும் அழைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரிக்குப் போய்ச் சேரும்போது குறைந்தது பத்து மணியாவது ஆகிவிடும். பதினொரு மணிக்கு மார்ச்சுவரிக்குப் போய், உடனே ஆரம்பித்தால் பன்னிரண்டாகும் போதாவது விசாரணை முடிவடையலாம். இரண்டு மணிக்குப் போஸ்ட்மார்ட்டம் முடிந்து பாடி கிடைத்தால் மணி மூணாகும் போது வீட்டிற்குப் போகலாம். நாலு மணிக்குப் பிணத்தை எடுத்தாலே சடங்குகளெல்லாம் முடிந்து ஃப்ரீயாவதற்கு அஞ்சு அஞ்சரையாவது ஆகிவிடும்…’
“நாசமாப் போச்சு…” ரதீஷ் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். தூக்கிட்டுப்போய் எங்காவது புதைச்சிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போனால் போதும் என்றிருந்தது.
“சார்… அவருக்கு வயசு நூற்றி நாலாயிருச்சு. அவரைப் போய் யாரு கொல்லப் போறாங்க?” மார்ச்சுவரிக்கு வெளியே, சுவரில் சாய்ந்து நிற்கின்ற போலீஸ்காரரின் அருகில் மீண்டும் சென்றான். வேறு யாருமே அந்தச் சுற்று வட்டாரத்தில் இருக்கவில்லை. அவர் ரதீஷை ஒரு முறை கூர்ந்து பார்த்தார். ரதீஷ் மடித்துக் கட்டியிருந்த கைலியை இறக்கிவிட்டு பணிவினை வெளிப்படுத்தினான்.
“அதெல்லாம் ரூல்ஸ் ஆகும்…நூறில்ல…நூற்றைம்பதானாலும் ரூல்ஸை எல்லாம் மாற்றமுடியாது.”
“இருந்தாலும்…?” ரதீஷ் பணிவுடன் இழுத்தான்.
“டேய்… இதில் ‘இருந்தாலுக்கெல்லாம்’, இடமில்லை. டாக்டர்கள் எழுதிவிட்டால் பிறகு இதையெல்லாம் செய்ய வேண்டியது எங்களோட கடமையாகும். நீ ரொம்பச் சிரமப்படாம, சீக்கிரம் வீட்டுக்குப் போகப்பாரு. இங்கே எல்லாயிடத்திலும் கொரோனா தான்.”
ரதீஷ் கூடுதல் பணிவுடன் முதுகைச் சற்றே அதிகம் குனிந்தான். பின்னர் சொன்னான்: “சார் நெனச்சா ஏதாவது செய்ய முடியும்னு அங்கே கேட்டப்ப சொன்னாங்க…!”
போலீஸ்காரர் சுவர் மீதான சாய்மானத்தில் இருந்து உடல் எடை முழுவதையும் கால்களுக்கு மாற்றினார். ரதீஷ் கைலி முனையைக் கால்களுக்கிடையில் சொருகிக் கொண்டு கை கட்டி எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்தான்.
“உன் பேரென்ன?”
ரதீஷ் பெயரைச் சொன்னான்.
“அவர் உனக்கு என்ன வேணும்? பாட்டனாரா?”
“இல்லே சார்…கொள்ளுப் பாட்டனார்.”
“கொள்ளுப் பாட்டனா? அது எப்படி கொள்ளுப் பாட்டன்?”
“அப்படீன்னா…அப்பாவோட தாத்தா. இல்லேன்னா தாத்தாவோட அப்பா”
போலீஸ்காரர் ரதீஷை வியப்புடன் பார்த்தார்.
“அவர்கள் எல்லாம் எங்கே?”
“யாரு?…ஓ…அவுங்கயெல்லாம் செத்துப் போய் பல வருசமாகிப் போயிருச்சு சார். எனக்குப் பத்து வயசு இருக்கும்போதே அப்பா செத்துப் போயிட்டாரு. நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே பாட்டனாரும்!”
போலீஸ்காரர் தன்னுடைய மனதில் தோன்றிய சிரிப்பை உதடுகளுக்குக் கடத்தாமல் கவனத்துடன் வினவினார்.
“உன்னோட வேலை என்ன?”
“டாப்பிங் சார்”
“ஹூ_ம்…அப்போ மீதி நேரம்?”
“அது மட்டும்தான் சார் இருக்குது. முன்பு இரண்டு பசுமாடு இருந்தது. இப்போ அதெல்லாம் வித்தாச்சு”
ரதீஷ் எதிர்பார்ப்புடன் போலீஸ்காரரைப் பார்த்தவாறு இருந்தான். மார்ச்சுவரிக்கு வெளியே சுவரின் ஒரு பக்கம் முழுவதும் இறந்தவர்களின் படங்களை ஒட்டி நிறைத்திருந்தனர். பெரும்பாலும் இள வயதினர்! அனேகமாக எல்லாம் கலர் போஸ்டர்கள். முதலில் இறந்தவர்கள் மீது அடுத்து வருவோர் இடம் தேடிப் பிடிக்கின்ற ஒரு ஓவியக் கண்காட்சியாக அந்தச் சுவர் ரதீஷைப் பார்த்தது. சுவருக்குக் கீழே துருப்பிடித்த காத்திருப்போர் இருக்கைளில் ஒன்றில் அமர்ந்துகொண்டு போலீஸ்காரர் சொன்னார்:
“நீ போயித்தான் வேலையாகும்னு இல்லேன்னா, உட்காரு…கொரோனா வந்த பிறகு மனிதர்களுடன் நேருக்கு நேராகப் பேசுவதே அரிதாகி விட்டது.”
இரும்பு இருக்கைகள் மூன்றினைச் சட்டத்தில் பற்றவைத்து இணைத்து உருவாக்கப்பட்ட இருக்கையாக அது இருந்தது. ரதீஷ் பணிவுடன் போலீஸ்காரர் அமர்ந்திருந்ததற்கு அடுத்த இருக்கையில் உட்காரப் போனபோது சட்டென்று அவர் தடுத்தார்.
“டேய்…டேய்…அடுத்து இருப்பதில் உட்காரு. சமூக இடைவெளி கடைப்பிடிக்கவேண்டும் என்று ரூல் இருக்குது. இந்த ரூல் எல்லாம் கடைப்பிடிப்பதற்காகத்தான் இருக்குது.”
போலீஸ்காரரின் பயத்தைக் கண்டு ரதீஷ் அதைவிடக் கூடுதல் அச்சம் கொண்டு அந்தப் பக்கம் இருந்த நாற்காலியில் மாறி அமர்ந்தான். காலியான ஓர் இருக்கை இடைவெளியில் அமர்ந்திருந்த போலீஸ்காரர் கேள்வியெழுப்பினார்:
“ரதீஷ், நீ ஏன் போஸ்ட்மார்ட்டம் வேணாம்னு சொல்லுற? … ஏற்பட்டிருக்கும் அந்தக் குழப்பத்தை நீ போக்குவதுதான் நல்லது. என்றைக்காவது எவனாவது பெரிசா புகார் எதுவும் கொடுத்தால் நீதான் மாட்டிக்க வேண்டியிருக்கும்!”
“வயசு அதிகம் ஆகிப் போயிருச்சில்ல சார்…சும்மா எதுக்கு அறுத்து வெச்சுக்கிட்டுன்னு நெனச்சுத்தான்… நான் …”
“வேறே சொந்தக்காரவுங்க யாரும் இல்லையா? நீ மட்டும் தான் வந்திருக்கியா?”
“இங்கே வரக்கூடிய அளவுக்கு யாருமில்ல சார்!”
போலீஸ்காரருக்கு ஒரு ஃபோன் வந்தபோது அவர் எழுந்து சற்றே விலகி நின்று பேசத் தொடங்கினார். ரதீஷ் இரு கால்களையும் வெகு வேகமாக உதறிக்கொண்டு போலீஸ்காரரையே பார்த்திருந்தான்.
“சார்…என்னோட விஷயத்தில் யாராவது ஏதாவது உதவி செய்ய முடியுமா? அவசியம் செய்தாகவேண்டும் சார்!”
போலீஸ்காரர் ஃபோன் ஆஃப் செய்து விட்டு மிடுக்காகப் பழைய இருக்கைக்குச் சென்று நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார்.
“நான் சொல்லலையா ரதீஷ், ரூல் தான். நான் பார்த்து விட்டேன் என்றால், இனி இங்கே ஒரு ஈ கூட வராது. எப்படியிருந்தாலும் ஆறுமணி வரை சும்மா இங்கே கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொசுக்கடி வாங்கணும். அது தான் ரூல்!”
ரதீஷிற்கு ஏமாற்றம் தோன்றியது. அவனது கறுத்த முகம் மேலும் கறுத்தது.
எங்கிருந்தோ ஒரு எலி இறங்கி, நாற்காலியின் கால்களுக்கிடையிலாக மார்ச்சுவரிக்குள் ஓடியது.
“ரதீஷ், முப்பாட்டனுக்கு வயசு நூற்றி நாலுன்னு சொன்னது உண்மை தானே?” போலீஸ்காரர் புதியதோர் உரையாடலுக்குத் துவக்கமிடுவது போல் கேட்டார்.
“பொய் சொல்லி என்னாகப் போகுது சார்?”
“அப்போ, உன்னோட இந்த முப்பாட்டனார் விடுதலைப் போராட்டத்தில் எல்லாம் பங்கேற்றதுண்டா? என்னோட மனைவியின் பிறந்த வீட்டையொட்டி இப்பவும் ஒருத்தர் இருக்காரு. அந்தப் பெரியவருக்கு எல்லாம் ரொம்ப மரியாதைதான்!”
போலீஸ்காரர் தன்னுடைய புடைத்த கன்னங்களைத் தடவியவாறு சொன்னார். ரதீஷ், மாஸ்க்கைக் கொஞ்சம் முன்பக்கம் தூக்கிவிட்டுச் சற்றே அதிகம் காற்றை இழுத்துச் சுவாசித்தான்.
“அது எங்கே?…இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததை முப்பாட்டனார் தெரிஞ்சுகிட்டதே, அதன் பிறகு எட்டு பத்து வருசம் கழித்துதான்!”
போலீஸ்காரர் தன்னுடைய தகுதி நிலையை மறந்து சிரித்துவிட்டார். அவர் சிரித்தவாறே தொப்பியைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டார். அவரது வழுக்கைத் தலையில் வியர்வைத் துளிகள் துளிர்த்து நிற்பதை ரதீஷ் வியப்புடன் பார்த்தான்.
“முப்பாட்டனார், இரண்டு பேரை மணந்தார். முதல் மனைவியின் மூலம் ஏழு பிள்ளைகள் பிறந்தாங்க. இரண்டாவதுல ஐந்து பேரு. இதுக்கிடையில் எங்கேயிருந்து சுதந்திரப் போராட்டம்!”
போலீஸ்காரரின் சிரிப்பிலிருந்து தைரியம் பெற்றவனாக ரதீஷூம் மெல்லச் சிரித்தான்.
“என்ன இருந்தாலும் பழைய ஆளுகளுக்கெல்லாம் ஆயுசு கெட்டிதான்!” போலீஸ்காரர் சொன்னார்.
“ஓ…அதெல்லாம் சும்மா சொல்றதுதான் சார்… இது போல, தப்பித்தவறி ஒண்ணோ இரண்டோதான் பார்க்கலாம். எனக்குத் தெரிஞ்சு பாக்கி எல்லாம் ஆயுசு முடியாமச் செத்தவங்க தான்!”
ஒரு நாய் வந்து ரதீஷின் காலை மோப்பம் பிடிக்கத் தொடங்கிய போது, அவன் காலை உதறி அதை விரட்டினான். பின்னர் தொடர்ந்தான்:
“முப்பாட்டனோட விஷயத்தைப் பாருங்க. பிள்ளைங்க எல்லாம் செத்துப் போயிட்டாங்க, என்னோட தகப்பனார் உட்பட! பத்துப் பன்னிரண்டு பேரப் பிள்ளைகளும் செத்துப் போயிட்டாங்க. மீதம் ஐந்தாறு பேர் இருக்கிறவங்களும் பலரும் பல இடத்தில்! இப்போ இருக்கிறாங்களா, இல்லையான்னு கூடத் தெரியாது.”
சற்றே இளம் காற்று வீசியது. மாஸ்க்குக்கு உள்ளேயும் ஆஸ்பத்திரி வாடை ரதீஷின் மூக்கினுள் விரைந்து ஏறியது. அவன் மாஸ்க்குக்கு உள்ளேயே பெரும் சப்தத்துடன் தும்மினான்.
“உனக்குக் கல்யாணம் எல்லாம் ஆயிருச்சா?”
“இல்ல சார்,” ரதீஷ் தாழ்ந்த குரலில் சொன்னான்.
“ஏன் பண்ணாம இருக்கே?”
போலீஸ்காரர் தம்முடைய இருப்பினை நாற்காலியின் விளிம்பில் மாற்றி உட்கார்ந்து கொண்டு, தலையைப் பின்புறம் சுவரில் சாய்த்து உறங்குவது போல் அமர்ந்தார். அவரது தலை அப்போது சுவரில் ஒட்டப்பட்டிருந்த இறந்த யாரோ ஒருவரின் தலைக்கு மேலாக இருந்தது. ரதீஷ் எதுவும் பேசாமல் எலி ஓடிப்போன பாதையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ என்னா பேச மாட்டேன்கிற?”
போலீஸ்காரர் கண்களை மூடியவாறுதான் கேட்டுக் கொண்டிருந்தார். ரதீஷ் அப்போதும் எதையும் கவனிக்காத மாதிரித் தொலைவில் பார்த்தவாறு இருந்தான். போலீஸ்காரர் சட்டெனக் குரலை உயர்த்தினார்:
“உனக்கென்னடா, போலீஸ்காரர்களிடம் பயமில்லையா? ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்!”
“எனக்குப் போலீஸ்காரர்களிடம் ரொம்பவும் பயமா இருந்தது சார்!” ரதீஷ் திடீரென்று விழித்துக் கொண்டதைப் போல் சொன்னான்.
“அது என்னா…இப்பப் பயமில்லையா?” போலீஸ்காரர் இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்தினார்.
“இப்பவும் பயம் இருக்கு சார். முன்னமாதிரி இல்லே!”
“அது ஏன்?”
“முன்னரெல்லாம் நான் போலீஸ்காரர்களைத் தூரத்தில் இருந்து பார்த்தாலே டிரவுசர்ல மூத்திரம் போயிருவேன். அப்புறம், சில சமயம் போலீஸ் ஸ்டேஷன் ஏறியபிறகு, பயம் கொஞ்சம் விலகியது சார். எல்லாம் முப்பாட்டனார் காரணமாகத்தான் சார். முன்பொரு சமயத்தில் ஸ்கூலுக்குப் போய்விட்டு வருகிறபோது வீட்டுக்கு முன்னால நாலைந்து போலீஸ்காரர்கள்… முப்பாட்டனைப் பிடிப்பதற்காக வந்தவர்கள்!”
“எதுக்காக?”
“அதெல்லாம் ஒரு கதை சார்!”
“நீ சொல்லு”
போலீஸ்காரர் கதை கேட்கும் ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“அதொரு வேடிக்கையான கேஸாக இருந்தது. கேட்டால் சில சமயம் சிரிப்பு வரும். முப்பாட்டனார் முன்பு செக்கு ஆட்டப் போகும் போது, காளைக்கு இழுக்கிற சக்தி இல்லேன்னு சொல்லி அதன் ஆசன வாயில் காந்தாரி மிளகாயை அரைச்சுத் தடவினார் என்பதாக இருந்தது கேஸ். கேஸ் கொடுத்தது, முப்பாட்டனின் ஒரு நண்பர்தான். நான் ஸ்கூலில் இருந்து வந்த போது முப்பாட்டன் போலீஸ்காரர்களுடன் நின்றபடி உரையாற்றிக்கொண்டிருந்தார். “நான் என்னோட காளையின் பின் பக்கத்தில் காந்தாரி மிளகாயை இல்ல, ஒடங்கொல்லி வரை அரைச்சுத் தேய்ப்பேன். அதை எந்தப் போக்கிரிப் பயலுக்குக் கேட்கிறதுக்குத் தைரியம் இருக்கு?” என்றெல்லாம் பேசினார். அப்பவே எண்பத்தஞ்சு வயசாயிருக்கும்! இருந்தாலும் மனுஷன் கெத்தா இருந்தார். போலீஸார் முப்பாட்டனாரின் முன் ‘அடச்சே’ன்னு சொல்லி நிக்கிறதைப் பார்த்தபோதுதான் எனக்குத் தைரியம் வந்தது. அன்றைக்கு அவரைப் போலீஸார் பிடித்துக் கொண்டு சென்றனர். அம்மாவோட கட்டாயத்தால நானும் மாமனும் சேர்ந்து ஸ்டேஷனுக்குப் போனோம். அன்றைக்குத்தான் நான் முதன் முதலாகப் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தது.”
“அதன் பிறகு?”
“அங்கே போனபோது தான் சுவாரசியம்! கேஸ் கொடுத்த முப்பாட்டனின் கூட்டாளி அன்று மதியம் மயங்கி விழுந்து செத்து விட்டார் என்று! அதைக் கேட்டப்போ முப்பாட்டனின் முகத்தை சார் ஒரு முறை பார்க்கணுமே! மகிழ்ச்சியாலோ கோபத்தாலோ ஏனோ முகம் அதிகம் சிவந்திருந்தது. ‘அன்னிக்கு எனக்குக் காந்தாரி மிளகாய் பறிச்சுக் கொண்டு வந்து தந்த கொலைகாரப் பய மகன்தான் அவன்! அப்படி இருந்தும் களவாணிப்பய மகன் கேஸ் கொடுத்திருக்கான் இல்லையா? அந்தப் பிச்சைக்காரப்பய, அவனா செத்துப் போகலைன்னா நான் அவன் வீட்டுக்குள்ளாற போயி குத்திக்கொன்னிருப்பேன்!” என்றெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு முப்பாட்டன் என்னவொரு அழிச்சாட்டியம் பண்ணியிருக்காரு! செத்தாலும் பகை தீராத அந்த மனிதர்தான் உள்ளே படுத்திருக்காரு!
“ஆஹா…இது இப்போ சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிலும் சிறந்த கதை தான், இல்லையா?”
“ஹூம்…சாருக்குத் தெரியாதில்லையா…காந்திஜி போயிருந்ததைக் காட்டிலும் அதிக முறை இவர், அந்த வயதான காலத்திலும் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறார். சும்மா படுத்திருந்ததே கிடையாது!”
“அப்படியா? அது எதனால?”
“அப்படியான்னு கேட்டால், அதெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைக் கதைதான் சார்!”
ரதீஷிற்கு அலுப்பாக இருந்தது. ஆனால் போலீஸ்காரருக்குக் கதை கேட்பதற்கு ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. அவர் தன்னுடைய முகத்திற்கு நேராக மொய்த்துக் கொண்டிருந்த கொசுக்களை ஒரு கையால் விரட்டியடித்துவிட்டு ரதீஷை ஆர்வத்தோடு பார்த்திருந்தார்.
“நீ சொல்லு ரதீஷ்”
“அது ஒண்ணுமில்லே சார்…எனக்கு நினைவு தெரிந்த காலம் முதலாக முப்பாட்டனார் விடியற்காலையில் எழுந்திருக்கிறதே, யாருடையதை எப்படித் தன்னுடையதாக்குறதுன்னு முடிவெடுத்துக்கிட்டுதான்! எல்லையை மாத்துறதுதான் அவரோட வழக்கமான காரியமே. திருடர்களைப் போலப் பதுங்கிப் பதுங்கி ஏதாவது சர்வேக் கல் நட்டு வைத்திருக்கும் இடத்திற்குப் போய்விடுவார். பிறகு, பெரிய குச்சியையோ கம்பியையோ வைத்து மண்ணைக் கிளறுவார். கல் எடுக்க வரும்போது, சற்று வெளிப்பக்கமாக எடுத்து வைத்து அந்த அளவிற்குக் கூடுதலாகச் சொந்தம் கொண்டாடுவார். பழைய காலத்து ராஜாக்கள் நாட்டைப் பெரிதாக்குவதற்காகச் சண்டைக்குப் போனது போல!”
ஒரு ஆம்புலன்ஸ் ஹாரன் முழக்கிக் கொண்டு கடந்து போன போது ரதீஷின் நாக்கு சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டது. அதன் பின்னர் தொடர்ந்தது:
“ஒரு உள்ளங்கை அளவு மண்ணுக்காகத்தான் இவ்வளவும் மெனக்கெடுறது! இந்த வேலையைப் பக்கத்து நிலத்துக்காரங்க எப்போதாவது பார்க்கிறபோதுதான் தகராறு. அடுத்து பெரிய பிரச்சினைதான். என்னைப் போன்ற வயதுடைய பொடிப்பசங்க எல்லாம் வந்து நின்னு நேருக்கு நேராச் சவால் விட்டுட்டுப் போவாங்க. இவரும் விட்டுத் தர மாட்டாரு. வரிசைப்படுத்தித் தந்தையையும் தாயையும் எல்லாம் வசைபாடுவாரு. அவர்கள் அதையும் சேர்த்துக் கொண்டு போய் கேஸ் கொடுப்பாங்க. முப்பாட்டனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போவாங்க. நானும் கூடப் போவேன். ஒரு வழியா கேஸ் முடிஞ்சு ரெண்டு மாசம் முடியிறதுக்குள்ள அதே களவாணித்தனத்தை மறுபடியும் தொடங்குவார்…அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்தான்!”
போலீஸ்காரர் மார்ச்சுவரி முன்பாக இருக்கிறோம் என்றும் நினைத்துப் பாராமல் வெடித்துச் சிரித்தார். சற்றே நீண்டிருந்த அந்தச் சிரிப்பை ரதீஷ் வியப்புடன் பார்த்திருந்தான். போலீஸ்காரர் சந்தோஷத்தில் இருக்கும்போது தன்னுடைய தேவையை மேலும் ஒருமுறை கேட்கலாமா என்று ரதீஷ் சிந்திக்கவும் செய்தான்.
“இப்படிப்பட்டவுங்க எல்லா இடத்திலேயும் இருப்பாங்க ரதீஷ். என்னோட குடும்பத்திலும் இது போல ஒரு குடும்பத் தலைவர் இருந்திருக்கிறார்!”
“இருந்தாலும் சார்…இவரைப் போல ஒரு பிடிவாதக்காரர் வேற எங்கேயும் இருப்பாங்கன்னு எனக்குத் தோணலை. எப்பவும் தான் பிடிச்ச முயலுக்கு நாலு வாலும் பத்துத் தலையும் இருக்கும் என்பார். முப்பாட்டனின் நாக்குக்கு முன்னால் யாராலும் எதிர்த்து நிற்க முடியாது! பிடிச்சபிடி விட மாட்டாரு.”
அப்போதும் போலீஸ்காரர் சிரித்தார். பிறகு சொன்னார்:
“உனக்கும் ஏறக்குறைய அதே நாக்குதான் ரதீஷ்! உன்னோடு பேசுறதும் நல்ல வேடிக்கைதான்!”
ரதீஷூம் சிரித்தான்.
“இதற்கு முன்னும் பலரும் அதைச் சொல்லியிருக்காங்க. ஆனால், அப்படிச் சொல்றதில் எனக்கு விருப்பம் இல்லை.”
“பழைய காலத்து மனிசங்களுடைய சுபாவம் எல்லாம் அப்படித்தான் ரதீஷ். என்னதான் சொன்னாலும் உங்க முப்பாட்டன் நல்லா பழுத்த பழமில்லையா?”
“என்னா பழுத்த பழமா இருந்தார்? எனக்குத் தெரிஞ்சு இன்னைக்கு வரைக்கும் மனுசனுக்கு உபயோகமான எதுவும் அவரு செஞ்சதில்லை. சேர்த்து வைச்சது அவ்வளவும் குறும்பும் சில்மிஷமும் மட்டும்தான்! கையில் நிறைய காசு இருந்தது. ஆனாலும் அஞ்சு பைசா யாருக்கும் தரமாட்டார். சார், கேளுங்க…நான் வேலை வெட்டி இல்லாம, ஒரு வழியும் போக்கிடமும் இல்லாம இருந்த காலம் ஒன்றிருந்தது. மூணு நேரமும் அவிச்ச பலாவும் பலாக் கொட்டையும் தின்னுட்டு சிவனேன்னு கிடந்தாலும் அவரு சேர்த்து வச்சிருக்கும் காசைத் தொடமாட்டாரு. ரெண்டு பசுமாடு வாங்குறதுக்கு நான் கொஞ்சம் பணம் கேட்டப்போ, முன்பு என்னுடைய தாத்தா கல்யாணத்திற்குச் செலவழிச்ச காசை நயாப்பைசா சுத்தமா கணக்கு சொன்னாரு. கடைசியில், “பரட்டைக் கிழவா! நீ காசு தரலைன்னா நான் படியிறங்கிப் போயிருவேன்”னு சொன்ன போதுதான் திட்டிக்கொண்டே பணம் தந்தார். அதுவும், திருப்பித் தந்திருவேன் என்கிற வாக்குறுதிப்படி!”
போலீஸ்காரருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சொல்கிறபோது வருத்தமான விஷயந்தான் என்றாலும் கேட்குறப்போ சிரிக்காமல் இருக்க முடியல ரதீஷ்! ஒண்ணும் நெனச்சுக்காதே!”
“நானும் ஏறக்குறைய அதே நிலையில்தான் சார். சிரிக்கிறதா அழுகுகிறதான்னு தெரியாத நிலை!”
ரதீஷின் குரல் உணர்ச்சிமயமானது. மார்ச்சுவரிக்கு வெளியே இளம் வெயில் சுவிட்ச் போட்டது போல் சட்டென மறைந்தது. மாலைப் பொழுது தனிமையில் அஞ்சி நின்றது! அவன் தொடர்ந்தான்:
“இதோ இன்னைக்கு, இப்போ செத்தபோது கூட அவர் எனக்கு சிக்கலானதொரு வேலையைக் கொடுத்திட்டுத்தான் போயிருக்காரு.”
“இது என்னாது?”
கதை முடியவில்லை என்று அறிந்த போது போலீஸ்காரருக்கு மேலும் ஆர்வம் கூடியது.
“இதுதான்…இந்தப் போஸ்ட்மார்ட்டமும் அதுக்காக மெனக்கெடறது எல்லாம் தான்! சார், திரும்பவும் கேட்டுக்கிறேன். அது ஒன்னைத் தவிர்த்து பாடியைத் தாங்க சார்! சாருக்குப் பைசாவெல்லாம் வேணும்னாக்கூட அதுவும் தர்றேன்…”
போலீஸ்காரருக்குக் கோபம் அதிகம் வந்தது. ஆனால் அவர் எதுவும் பேசாமல் இருந்தார். சற்று நேரம் அந்த இடம் மார்ச்சுவரியின் ஒரு பகுதி தான் என்று நினைவூட்டும் வகையில் அமைதியானது. இறுகிய முகங்களுடன் இருவரும் அவரவர் சிந்தனை உலகங்களில் மூழ்கியிருந்தனர்.
“நீ எதையோ மறைக்கிற, இல்லையா ரதீஷ்? இல்லைன்னா உனக்கு எதுக்கு இந்த பாடி வேணும்னு இத்தனைக் கட்டாயம்?”
போலீஸ்காரர் அப்போது முற்றிலும் போலீஸ்காரராக ஆகிவிட்டிருந்தார். அவரது முகம் பெருமிதம் கொண்டது. அவர் ரதீஷை ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போலவே பார்த்தார். ரதீஷ் ஒரு குற்றவாளியைப் போலவே ஒடுங்கி அமர்ந்திருந்தான்.
“நீ சொல்லு…எதார்த்தத்தில் நீ அவரை அடிச்சே தானே?”
“அய்யோ!” ரதீஷ் எழுந்து விட்டான்.
“நீ உட்காரு…உட்கார்ந்து சொன்னால் போதும். நான் விசாரிச்சுக்கிறேன்.”
போலீஸ்காரர் ரதீஷை விசாரணை செய்கிற வகையில் கேட்டார். ரதீஷ் மீண்டும் இருக்கையில் சரியாக அமராது இருந்தான்.
“இல்ல சார், அவரு, தானே செய்து கொண்டது.”
ரதீஷ் சற்றே நடுங்கத் தொடங்கினான்.
“போலீஸிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். சட்டம் அதுதான், தெரியுமில்லே? நீ நேரம் எடுத்துக்கிட்டு விரிவாகச் சொன்னால் போதும்!”
அவர் குரலை மீண்டும் கடுமையாக்கியிருந்தார். ரதீஷ் சற்று நேரம் பேசாதிருந்தான். போலீஸ்காரர் அவனையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“முப்பாட்டனார் ஒரு தனிப்பட்ட ‘டைப்பா’ இருந்தார் சார். கொரோனா லாக்டவுன் என்று எதுவொன்னும் சொன்னாலும் கேட்கிறதில்லே…சும்மா தன்னிஷ்டப்படி இறங்கி நடந்திருவாரு!”
போலீஸ்காரர் தான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பதை உணர்த்துவதற்காக “ஊம்…” என்று இடையிடையே மிடுக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.
“ஒரு நாள் மாஸ்க் ஒன்றும் போடாமல், கைகளைக் கட்டிக் கொண்டு ஜங்ஷனில் நின்றபோது ஒரு போலீஸ் ஜீப் வந்து முன்னால் நின்றது. ‘மாஸ்க் போடணும்; இப்படி ரோட்டில் இறங்கி நடக்கக் கூடாது; வீட்டிலிருக்கணும்…’ என்றெல்லாம் ரொம்ப அமைதியா அவுங்க அறிவுரை சொன்னாங்க. முப்பாட்டன் சும்மா விடுவாரா? ‘போங்கடா, நாய்க்குப் பெறந்தவன்களா…அவனுக ஆத்தாளோட கொரோனா…’ என்றெல்லாம் பேசி ஒரு மாதிரி கிறுக்குப் பிடிச்ச மாதிரி இருந்தாரு. பழைய போலீஸ்காரங்க மாதிரி இல்லேல்ல. அவுங்க அவரை ஜீப்பில் ஏத்திக்கிட்டுப் போயிட்டாங்க. பிறகு நான் அவுங்க பின்னாடியே போனேன். அங்கே போன பிறகு கூட முப்பாட்டன் விடுவதற்குத் தயாரா இல்லே. நான் போன போது, போலீஸ்காரங்களைப் பார்த்து வேட்டியை அவிழ்த்துக் காட்டிக் கொண்டிருந்தார். “பார்த்தியாடா…முப்பதாம் வயசில் வைசூரி வந்ததன் தழும்பு…” என்றும் சொன்னார். இடது கையில் பாதி இல்லாத நடுவிரலைத் தூக்கிக் காட்டி, இதப் பார்த்தியா…குஷ்டம் வந்ததுதான். உங்களோட அப்பன்க எல்லாம் விரால் போல நடுங்கிச் செத்த போது காஞ்சிரம் மீனாட்டம் இருந்த எங்கிட்டதானா எங்கேயோ இருக்கிற கொரோனா பத்திச் சொல்லுறதுக்கு வர்றீங்க…!” கேக்கிறதுக்கு வேடிக்கையாக இருந்தாலும் அன்றைக்குக் கொஞ்சம் ஃபைன் எல்லாம் கட்டித்தான் அவரை வெளியே கொண்டு வந்தோம்.”
ரதீஷ் சற்று நேரம் பேசாமல் இருந்து விட்டுத் தொடர்ந்தான்:
“அன்றைக்குத் திரும்பி வரும் வழியில் முப்பாட்டனின் கால் ஒன்னு ஒடிஞ்சு போச்சு! கொஞ்சங்கூட நடக்க முடியாமப் போச்சு.
அதோடு வீட்டிலிருந்து வெளியே எங்கும் படி இறங்க முடியாமப் போச்சு. பிறகு, மெது மெதுவாப் பேசுவதும் குறைந்தது. நான் எங்காவது போய்விட்டு வந்தா கேட்பாரு… “அந்தக் கார்த்தியாயினி கடை திறந்திருக்குதா?” ன்னு. நான் எதையும் பார்க்கலைன்னு சொல்லுவேன். அவரு தினமும் கேட்பாரு. அது மட்டுமே கேட்பாரு!”
“அது யாரு கார்த்தியாயினி?”
“அது, அந்த முக்குல வெத்தலை பாக்கு விக்கிற ஒரு பாட்டிதான் சார்!”
“ஓ…நீ இனி முப்பாட்டனின் 104-ஆம் வயதில் காதல் கதை சொல்லப் போற இல்லையா?”
“காதலா என்னான்னு எனக்குத் தெரியாது சார். ஆனால் இப்ப நினைச்சுப் பார்க்கிறப்ப, பாட்டியைப் பார்த்தால் முப்பாட்டனைக் காட்டிலும் வயசு அதிகம் சொல்லலாம். உடல் தளர்ந்து கூனிக்குறுகி ஒரு புறாவைப் போல நடப்பதைப் பார்க்கலாம். ரேஷன் கடை வராந்தாவில் பிளாஸ்டிக் சாக்கு விரிச்சு வெத்தலையும் பாக்கும் அதோடு சேர்ந்து கீழே விழுந்து கிடக்குற தேங்காயும் மாங்காயும் வச்சிருப்பாங்க. யாராவது கொஞ்சம் இரக்கப்பட்டு ஏதாவது வாங்குவாங்க!”
“ஊம்…சரி அதையெல்லாம் விட்டுட்டு அவர் எப்படிச் செத்தார்னு சொல்லு…”
போலீஸ்காரர் சட்டென்று மீண்டும் கறாரான போலீஸ்காரர் ஆனார். அவர் சொன்னது கேட்காதது போல ரதீஷ் தொடர்ந்தான்:
“அதோட, அந்தப் பகுதியில் எங்களில் நிறைய பேருக்குக் கொரோனா பாதிச்சது. கொஞ்சப் பேரு சாகவும் செஞ்சாங்க. யாரு எப்படிச் செத்தாலும்; ஆளுங்க முப்பாட்டனையும் இந்தப் பாட்டியையும் போன்றவர்களைக் குறை சொல்லுறதக் கேட்கலாம்… ‘எமனுக்குக்கூட வேண்டாதவங்களாக் கிடக்குறாங்க!’…‘சாவு வராத ஜென்மங்க!’ என்றெல்லாம் திட்டுவாங்க…அதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும் சார்…எதுவும் செய்யமுடியாவிட்டாலும் கூட…”
ரதீஷின் விழியோரம் சற்றே ஒரு ஈரம் படர்ந்ததோ என்று போலீஸ்காரர் ஐயம் கொண்டார்.
“நான் அன்றைக்கு ஒரு இறப்புக்குப் போய்விட்டு வருகிறபோது கார்த்தியாயினி பாட்டிகிட்ட கொஞ்சம் வெத்திலையும் புகையிலையும் அத்துடன் முப்பாட்டனுக்குப் பிடிச்ச நிஜாம்பாக்கு எல்லாம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். வழக்கமா இல்லாத பாசத்தைப் பார்த்துதானோ என்னவோ, கொஞ்ச நேரம் என்னையே சும்மா பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒன்னும் பேசலை. அவரும் பேசலை. மறுநாள் காலையில் கேள்விப்பட்டது, கார்த்தியாயினி பாட்டி செத்துட்டாங்க என்று!”
“ஏய்…அது எப்படி?” போலீஸ்காரர் வியப்படைந்தார்.
“ஆ…அது யாருக்குத் தெரியும்?” ரதீஷ் பெருமூச்சு விட்டான்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி முப்பாட்டனாரு என்கிட்ட கொஞ்சம் எலி மருந்து வாங்கிட்டு வந்து கொடுக்கச் சொன்னாரு. வீடு முழுக்க எலியா இருந்தது என்று…கொஞ்சம் பணமும் எடுத்துத் தந்தாரு. காசை நான் வாங்கிக்கல. அன்றைக்கே நான் சேர்த்து வச்ச ரப்பர் பாலை வித்திட்டு வந்த போது ஒரு பாட்டில் எலி மருந்து வாங்கிட்டு வந்து கொடுக்கவும் செய்தேன். அவரு இதுக்குத்தான் கேட்கிறாருன்னு எனக்குத் தெரியாதில்லையா?… இன்றைக்கு மதியம் வந்து சோறும் தின்னுட்டு எழுந்து போனதுதான். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தபோது வாயிலிருந்து ரத்தம் கக்கிப் படுத்திருந்தார். நான் ஓடிப் போய் தூக்கியெடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் உட்கார வைத்தேன். அப்போது கூட, “மரியாதையா சாகக் கூட விட மாட்டேங்கிறயே…நாய்க்குப் பொறந்தவனே!” என்றெல்லாம் திட்டினார்…”
ரதீஷ் சொல்லிச் சொல்லி விம்மி அழுதுவிட்டான். போலீஸ்காரர் என்ன செய்யவேண்டும் என்று அறியாது தம்மை மறந்திருந்தார். ரதீஷ் முகத்தை மூடிக்கொண்டு அழுதான். போலீஸ்காரர் தயங்கித் தயங்கி ரதீஷிற்கு அடுத்துள்ள இருக்கையில் மாறி அமர்ந்து அவனது தோளைத் தொட்டார். ரதீஷ், மெதுவாகத் தலையை உயர்த்தினான்.
“எனக்குத் தெரியல சார், பாட்டனார் இதுக்குத்தான்…”
பின்னரும் அழுகை தொடர்ந்து வந்ததில் ரதீஷின் வார்த்தைகள் முறிந்து போயின!
“பெரியவர் அந்தளவு விஷமுள்ள யாரையாவது பார்த்திருப்பாரு, ரதீஷ்! இல்லேன்னாலும்கூட இந்த வயதானவரின் மனதில் என்ன இருந்ததுன்னு அவருக்கு மட்டும்தானே தெரியும்!”
போலீஸ்காரர் அவனைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ரதீஷ் அமைதியானபோது போலீஸ்காரர் சொன்னார்.
“அவரை இப்போ போஸ்ட்மார்ட்டம் செஞ்சாலும் உனக்குப் பிரச்சினை ஒன்னும் வராது. அதுக்குத்தான் நீ பயப்படுறியா?”
“அப்படியே இல்லேன்னாலும் யாரு பிரச்சினை உண்டாக்கப் போறாங்க சார்? ‘எப்படிச் செத்தாலும் பெரியவர் செத்து விட்டார் இல்லையா!’ என்று நினைக்கிறவங்கதான் இருக்காங்க!”
ரதீஷ் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“போஸ்ட்மார்ட்டம் செய்தால், எல்லாம் முடியும் போது, நாளைக்குச் சாயந்திரம் ஆயிரும் சார். அதுவரை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, வேறொரு வேலை இருக்கு. நாளைக்கு ராக்கியுடன் எனது கல்யாணம்!”
“ஏய்…!” போலீஸ்காரர் தவித்துவிட்டார்.
“கல்யாணமா? எந்த ராக்கி?”
“அங்கே பக்கத்தில் இருக்கிறவங்க…வேற ஜாதி. அவர்களது ரப்பர் எல்லாம் நான் தான் வெட்டுவேன்!”
ரதீஷ் குரலைத் தாழ்த்தித் தொடர்ந்தான், “கல்யாணம்னு சொன்னால், நாங்கள் ஊரைவிட்டு ஓடிப்போறதுதான். இன்றைக்கு ராத்திரி முடிந்து விட்டால், அதுவும் நடக்காது!”
“அது ஏன்?”
“நாளை, அவளுக்குப் பெத்தவங்க ஏற்பாடு செய்திருக்கும் கல்யாணம்!”
போலீஸ்காரர் என்ன சொல்வது என்று தெரியாது தன்னை மறந்திருந்தார். அவரது முகத்தின் கம்பீரமெல்லாம் மாறி ஒரு வேதனை மட்டும் எஞ்சி நின்றது.
“உன் மீது எனக்கு இரக்கமெல்லாம் இருக்குப்பா. ஏதாவது சொல்லி போஸ்ட்மார்ட்டம் இல்லாமல் செய்யலாம்னு பார்க்கிறேன்!”
ரதீஷ் போலீஸ்காரரின் கண்களையே மீணடும் எதிர்பார்ப்புடன் உற்று நோக்கினான். அவர் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“ஒரு வழிதான் இருக்குது. நீ அந்தப் பெண்ணைக் கூட்டிக்கிட்டு எங்கேயாவது போய்விடு. முப்பாட்டனார், அவர் பாட்டுக்கு உள்ளே இருக்கட்டும்.”
ரதீஷ் போலீஸ்காரரை முதன்முதலாகப் பார்ப்பது போன்று பார்த்திருந்தான். மெதுவாக அந்தப் பார்வை தரைக்கு மாறியது. அவன் மெல்லப் பேசலானான்.
“நான் அதை யோசித்துப் பார்த்தேன் சார். ஒரு அனாதைப் பிணம்போல விட்டுட்டு ஓடிப் போகலாம் என்று நூறு முறை என் மனம் என்னிடம் சொன்னதுதான், முடியவில்லை! பெரியவர் ஒரு கெடுதல்காரராக இருந்தார்னு சொல்லிவிட முடியாது. யாருக்கும் கட்டுப்படாதவராக இருந்தவர்தான். இருந்தாலும்…அந்தக்காலத்தில், அவர் பட்டினி கிடந்தாலும் தன்னுடைய வண்டி மாடுகளின் பசியைப் போக்குபவராக இருந்தார்… வண்டி இழுப்பதற்கு முடியாமல் போனாலும் அடிமாட்டுக்காரர்களுக்கு விற்றதில்லை என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
பேரமைதி ஓர் இருட்திரையாக அவர்களுக்கிடையில் சற்று நேரம் இடம் பிடித்திருந்தது. மெதுவாக இருவரது பெருமூச்சுகளுக்கும் ஒரே வேகமும் தாளகதியும் ஏற்பட்டது. ரதீஷின் கண்கள் மீண்டும் நிறைந்தன. போலீஸ்காரர் இருக்கையில் இருந்து எழுந்து மார்ச்சுவரி முற்றத்தில் ‘கவாத்தை’ ஆரம்பித்தார். ஒவ்வொரு கால் வைப்பிலும் அவரது தொந்தி குலுங்கியது.
“உங்க காலைப் பிடிச்சு கெஞ்சுறேன் சார்!”
“என்னோட காலைப் பிடிச்சு ஒண்ணும் பயனில்லை ரதீஷ். முடிவெடுக்கிறது நான் இல்லே. நான் வெறும் சிப்பாய்-கான்ஸ்டபிள்!”
அதையெல்லாம் கேட்டபோது ரதீஷ் மீண்டும் ஏங்கி அழத் தொடங்கினான். ரதீஷ் மாஸ்க்கைக் கழற்றி விட்டு மூக்கைச் சிந்தினான். போலீஸ்காரர் யாரையெல்லாமோ மாறி மாறிப் போனில் அழைத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கடந்த போது, போலீஸ்காரரை யாரோ திரும்ப அழைத்தார்கள்.
“எஸ்.ஐ.தான் பேசினார். விஷம் அருந்தியது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. வீட்டில் முடியாமல் படுத்திருந்தார் என்றும் பீடி என்பதால் டாக்டர் போஸ்ட்மார்ட்டம் செய்யச் சொன்னார் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன்.”
“பீடியா? முப்பாட்டனுக்குப் புகைபிடிக்கிற பழக்கம்லாம் இல்ல சார். வெத்தலை போடுறது மட்டும்தான் இருந்தது!”
ரதீஷ் அழுகையை நிறுத்தி விட்டுச் சொன்னான். போலீஸ்காரர் அவன் தலையில் கை வைத்தார்.
“அட என்னோட தங்கமே!…பீடின்னு சொன்னா, பிராட் டெட் (brought dead) … இறந்த பிறகுதான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தாங்கன்னு அர்த்தம். நீ இப்படி அலறி என் போன்ற மனிதர்களைச் சிரிக்க வைக்காதே!”
“அப்போ பாடி கிடைக்காதா?”
ரதீஷ் எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தும் முகத்துடன் இருக்கையிலிருந்தும் எழுந்து நின்றான். அருகில் இருந்த மின் கம்பத்தில் ஹாலோஜன் விளக்கு தானாக எரிந்தது. அந்தப் பகுதி முழுவதும் மஞ்சள் ஒளி நிறைந்தது.
“பாடி கிடைக்கும். சில ஃபார்ம்களில் கையெழுத்திட வேண்டும். அதற்கும் சில ரூல்ஸ் உண்டு.”
சொன்ன பிறகு, போலீஸ்காரர் ரதீஷின் தோளில் அன்புடன் தட்டினார்.
முப்பாட்டனாரின் உடல், ஆம்னி வேன் ஆம்புலன்ஸிற்குள் ஏற்றியாகிவிட்டது. ரதீஷ் போலீஸ்காரரை அன்புடன் பார்த்தான். அவன் போலீஸ்காரரின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“ஒரு போதும் மறக்க முடியாது சார். அந்த அளவிற்கு நன்றியுடன் இருப்பேன்!”
போலீஸ்காரரும் ரதீஷின் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டார். ஆம்புலன்ஸ் நகரத் தொடங்கிய போது போலீஸ்காரர் கூப்பிட்டுச் சொன்னார்:
“இறப்புச் சடங்குகளுக்கெல்லாம் அதிகம் ஆட்களைச் சேர்க்காதே. கொரோனா காலம் ரூல்ஸ் இருக்குது!”
ரதீஷூம் சிரித்தான். ஆம்புலன்ஸ், மார்ச்சுவரி காம்பவுண்டைக் கடந்த போது, அவன் மாஸ்க்கைக் கழற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆம்புலன்ஸின் உள்ளே முப்பாட்டனார், சொல் பேச்சு கேட்காத மாதிரி நடிக்கின்ற, குழந்தையைப்போல் படுத்தவாறு குலுங்கிக் கொண்டிருந்தார்.
——
நன்றி : மாத்ருபூமி – (2022 ஜூலை 24) வாரஇதழ்.
——