அர்ஹெந்தினா முழுவதும் சொல்லப்படுகிற ஒரு கதை அனேகமும் தொன்மங்களைச் சேர்ந்ததாக அல்லது வரலாற்றை அல்லது (அது தொன்மங்களைச் சேர்ந்ததுதான் என்பதைச் சொல்வதற்கான மற்ற வழியாக) ஒரே சமயத்தில் இரண்டைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். பதிவு செய்யப்பட்டிருக்கும் அதன் ஆகச்சிறந்த வடிவங்களை எடுவார்டோ குட்டியாரெஸால் சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்டு அநியாயமாக மறக்கடிக்கப்பட்ட தடை செய்யப்பட்டவர்களையும் டெஸ்பெரெடோக்களையும்1 பற்றிய புதினங்களில் காணலாம்; அதன் வாய்மொழி வடிவங்களுள், முதலாவதாக நான் கேட்டது, ஒரு சீர்திருத்தச் சிறை, ஓர் ஆறு, உடன் ஒரு கல்லறைத் தோட்டத்தால் சூழப்பட்ட, டியாரா டெல் ஃப்யூகோ (Tierra del Feugo) எனும் மாறுபெயரால் வழங்கப்பட்ட ப்யூனஸ் ஐர்ஸின் அண்டைப்பகுதியில் இருந்து வருகிறது. இந்த வடிவத்தின் நாயகனான யுவான் முரானா, பாரவண்டி ஓட்டுபவனாகவும் கத்திச்சண்டை வீரனாகவுமிருந்த இவனுக்குத்தான் துணிகரமிக்க அனைத்துக் கதைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, ஒருகாலத்தில் நகரின் வடபகுதியில் எல்லைப்புறங்களாக இருந்த இடங்களில் இன்னும் அவை ஜீவித்திருக்கின்றன. அந்த முதல் வடிவம் ரொம்பவே எளிமையானது. கால்நடைப்பட்டிகளை அல்லது போர்க்கூடாரங்களைச் சேர்ந்த ஒரு மனிதன், முரானாவின் புகழைக் கேள்விப்பட்டு (ஆனால் ஒருபோதும் அவனைப் பார்த்திராத சூழலில்), அவனோடு மோதுவதற்காக தென்புறத்திலிருந்து கிளம்பி நகரம் தாண்டி வெகுதூரம் பிரயாணிக்கிறான். ஒரு தெருமுனை கேளிக்கை விடுதியில் அவன் சண்டையைத் தொடங்குகிறான், பிறகு அதைத் தொடர இருவரும் வீதிக்கு நகர்கின்றனர். இருவருமே காயப்பட்டிருக்கிறார்கள், ஆனால் இறுதியில் முரானா மற்ற மனிதனின் முகத்தில் ஆழமாகக் கீறிவிட்டுச் சொல்கிறான், “உன்னை நான் வாழ அனுமதிக்கிறேன். ஆகவே என்னைத் தேடிக்கொண்டு நீ மீண்டும் வருவாய் என்பதற்காக.”

அந்தச் சண்டை குறித்த எந்த விசயம் என் மனதுக்குள் ஆழமாகத் தன்னைப் பதித்துக்கொண்டது என்றால் அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாதென்பதே. அதன் பிறகான உரையாடலில் (என் நண்பர்கள் இதனை நன்கு அறிவார்கள்), இந்த உபகதையை வேறு வார்த்தைகளில் சொல்லும் ஆர்வம் எனக்குள் அதிகரித்தது. 1927 போல, அதை எழுதினேன், வேண்டுமென்றே அதற்கு லக்கானியத் தலைப்பான “ஆட்கள் சண்டையிட்டார்கள்” (Men Fought) என்பதைத் தந்தேன். வருடங்களுக்குப் பிறகு, இதே உபகதைதான் எதேச்சையாக வேறொரு கதையை எழுத எனக்கு உதவியது – அது அத்தனை நன்றாக இல்லாதபோதும் – “வீதிமுனை மனிதன்.” பிறகு, 1950-இல், அடால்ஃபோ பியோய்-கசரேஸும்2 நானும் மீண்டும் அதைப் பயன்படுத்தி ஒரு திரைப்படக்கருவை உருவாக்கியபோது தயாரிப்பாளர்கள் அதனை நிராகரித்தார்கள், புற விளிம்பில் என அது அழைக்கப்பட்டிருக்கும். நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னால் ப்யூனஸ் ஐர்ஸின் புறப்பகுதிகளில் வாழ்ந்த முரானாவைப் போன்ற கடினமான மனிதர்களைப் பற்றியதாக அந்தப்படம் இருந்திருக்கும். இத்தகைய பரவலான முயற்சிகளுக்குப் பிறகு, விருப்பார்வமற்ற சண்டை பற்றிய அந்தக் கதைக்குப் பிரியாவிடை கொடுத்து விட்டதாகவே நான் எண்ணினேன். பிறகு, இவ்வருடம், சிவில்காயில் இருக்கும்போது, இன்னும் மேம்பட்ட ஒரு வடிவத்தை நான் கண்டடைந்தேன். இதுதான் உண்மையானதென்று நம்புகிறேன், எனினும், ஒரு சங்கதி திரும்பத் திரும்ப நடப்பதில் விதி பேரானந்தம் கொள்வதாகத் தோன்றினாலும் கூட, இரண்டுமே நம்பத்தகுந்த வடிவங்களாகவும் இருக்கக்கூடும். இரண்டு சற்றே மோசமான கதைகளும் நன்றாயிருப்பதாக நான் நம்பிய ஒரு கதைக்கருவும் மட்டமான அந்த முதல் வடிவத்திலிருந்து எழுந்து வந்தன; இரண்டாவதிலிருந்து, அது முழுமையாகவும் கச்சிதமாகவும் இருப்பதால், எதுவும் வராது. உருவகங்களை அல்லது உள்ளூர்ச் சரக்குகளின் கைவண்ணங்களைப் பயன்படுத்தாமல், எனக்கு எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறே இப்போது அதைச் சொல்லப் போகிறேன். இந்தக் கதை மேற்கில் நிகழ்ந்தது, சிவில்காய் (Chivilcoy) மாவட்டத்தில், கொஞ்ச காலத்துக்கு முன்னால் 1870-களில்.

இங்கு நாயகன் பெயர் வென்செஸ்லாவோ சுவாரெஸ். கயிறுகளைத் திரித்தும் குதிரைச்சேணங்களை உருவாக்கியும் தன்னுடைய ஜீவனத்தை அவன் ஈட்டுகிறான், சிறிய உணக்கிய செங்கல் குடிசையில் வாழ்கிறான். நாற்பது அல்லது ஐம்பது வயதிருக்கும், தனது நெஞ்சுரத்துக்காகப் புகழைச் சம்பாதித்திருக்கும் மனிதன் அவன், அத்துடன் (கதையின் நிகழ்வுகளைக் கொண்டு பார்க்க) அவனது பெயரில் ஒன்றிரண்டு கொலைகளும் இருக்கச் சாத்தியமுள்ளது. ஆனால் இந்தக் கொலைகள், நேர்மையான சண்டைகளில் நிகழ்ந்தன என்பதால், அவனுடைய மனசாட்சியைத் தொந்தரவு செய்யவோ அல்லது அவனது நற்பெயரைக் கெடுக்கவோ இல்லை. ஒரு மாலைப்பொழுதில், வழக்கத்தை மீறிய ஏதோவொன்று இந்த மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கு நடுவே நடக்கிறது: ஒரு நாற்சந்திக் கேளிக்கை விடுதியில், அவனுக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக அவனிடம் சொல்லப்படுகிறது. டான் வென்செஸ்லாவோவுக்கு எப்படி வாசிப்பதென்று தெரியாது; நிச்சயம் அதை அனுப்பியவனால் எழுதப்படாத ஒரு வசனகவிதையை கேளிக்கை விடுதிக்காரன் ஒவ்வொரு வார்த்தையாகத் தட்டுத்தடுமாறி வாசிக்
கிறான். திறமையையும் உண்மையான நிதானத்தையும் மதிக்கிற குறிப்பிட்ட சில நண்பர்களின் பெயரால், யாரென்று தெரியாத ஒரு தாளாளன் டான் வென்
செஸ்லாவுக்குத் தனது வாழ்த்துகளை அனுப்பியிருக்கிறான், அவனுடைய கீர்த்தி அர்ரோயோ டெல் மெடியோவைக் (Arroyo del Medio) கடந்து சாண்டா ஃபே (Santa Fe) மாகாணம் மட்டும் பரவியிருந்தது, ஆகவே சொல்லப்பட்ட மாகாணத்தைச் சேர்ந்த நகரில் இருந்த தனது எளிமையான வீட்டில் வந்து தங்கும்படி உபசரிக்கவும் செய்கிறான். கேளிக்கை விடுதிக்காரனிடம் வென்செஸ்லாவோ சுவாரெஸ் பதிலை எழுதப் பணிக்கிறான். மற்ற மனிதனிடம் அவனுடைய நட்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி சொல்லியபிறகு, தன் அம்மாவை – அவள் மிகவும் வயதானவள் என்பதால் – தனியாக விட்டு வருவதை அவனால் சிந்திக்க முடியாதென்பதை விளக்கி, சிவில்காயில் இருக்கும் தனது சொந்த இடத்துக்கு வருமாறு மற்ற மனிதனுக்கு அழைப்பு விடுக்கிறான், பார்பெக்யூவையும் ஒரு சில போத்தல்கள் மதுரசத்தையும் அவர்கள் ருசிக்கலாம். மாதங்கள் இழுத்துக்கொண்டே போகின்றன, ஒருநாள் அந்தப் பகுதிக்குச் சற்றும் வழக்கமில்லாத முறையில் கடிவாளமும் சேணமும் இடப்பட்ட ஒரு குதிரையை ஓட்டிவரும் மனிதன் சுவாரெஸின் வீட்டுக்குப் போகும் வழி குறித்து கேளிக்கை விடுதியில் விசாரிக்கிறான். சுவாரெஸ், மாமிசம் வாங்கிப் போக விடுதிக்கு வந்தவன், கேள்வியைத் தற்செயலாகக் கேட்டு அந்த மனிதனிடம் தான் இன்னாரென்பதைச் சொல்கிறான். சில காலங்களுக்கு முன்பு அவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்களை அந்நியன் அவனுக்கு நினைவுறுத்துகிறான். நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் சிக்கலை அந்த மனிதன் ஏற்றிருக்கிறான் என்பதில் சுவாரெஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்; பிறகு அவர்களிருவரும் அருகிலிருக்கும் நிலத்துக்குச் செல்கிறார்கள், சுவாரெஸ் பார்பெக்யூவைத் தயாரிக்கிறான். அவர்கள் உண்ணவும் குடிக்கவும் கூடவே நீளமாகப் பேசவும் செய்கிறார்கள். எதைப் பற்றி? ரத்தமும் குரூரமும் கலந்த விசயங்களைப் பற்றி என நான் சந்தேகிக்கிறேன் – ஆனால் இருவருமே மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு இருக்கிறார்கள், எச்சரிக்கையாகவும்.

அவர்கள் உண்டு முடிக்கிறார்கள், பிறகு தீங்கற்ற ஒரு சிறிய கத்தி விளையாட்டில் வந்து இணைந்து கொள்ளுமாறு அந்த அந்நியன் டான் வென்செஸ்லாவோவுக்கு அழைப்பு விடுக்கும் சமயத்தில் கொடூரமான மதியவெயில் நிலத்தின்மீது காய்ந்து கொண்டிருக்கிறது. முடியாதென மறுப்பது விருந்தோம்புகிறவனுக்கு அவமானமாக இருக்கும். அவர்கள் வாட்களைச் சுழற்றுகிறார்கள், ஆரம்பத்தில் சண்டையின்போது அவர்கள் விளையாடவே செய்கிறார்கள், ஆனால் அந்த அந்நியன் தன்னைக் கொல்ல வந்திருப்பதாக உணர்ந்திட வென்செஸ்லாவோவுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. சம்பிரதாயமான அந்தக் கடிதத்தின் பின் உண்மையில் என்னவிருந்தது என்பதை இறுதியில் உணர்ந்தவனாக, அதிகமாய் உணவுண்டதையும் மதுவருந்தியதையும் எண்ணி வென்செஸ்லாவோ தன்னையே நொந்து கொள்கிறான். மற்ற மனிதனுக்கு முன்னமே தான் சோர்வடைவோம் என்பது அவனுக்குப் புரிகிறது, மற்றவனை விட அவன் ஒன்பது அல்லது பத்து வருடங்
கள் பெரியவன். ஏளனம் அல்லது கண்ணியத்தின் பொருட்டு, அந்நியன் அவனுக்குச் சிறிய ஓய்வினை வழங்குகிறான். டான் வென்செஸ்லாவோவும் ஒத்துக்கொள்கிறான், பிறகு, மீண்டும் அவர்கள் தங்களின் சண்டையைத் தொடங்கியவுடனே, தனது இடதுகையை மற்ற மனிதன் காயப்படுத்த அவன் அனுமதிக்கிறான், சுருட்டியிருக்கும் தன்னுடைய பாஞ்சோவை அவன் அதில்தான் வைத்திருக்கிறான்*. கத்தி அவனது மணிக்கட்டை வெட்டிப் பிளக்க, கரம் தளர்ந்து தொங்குகிறது. சுவாரெஸ், பின்புறமாகத் துள்ளிக்குதித்து, ரத்தம் பீறிடும் கரத்தைத் தரையிலூன்றி, தனது காலணிகளுக்குக் கீழே இறுகப் பற்றிக்கொண்டு, அதனைப் பிய்த்து எடுக்கிறான், அதிர்ந்து நிற்கும் அந்நியனின் மார்பு நோக்கி கத்தியை வீசுவதுபோலப் பாசாங்கு செய்து, பிறகு தீர்க்கமான ஒரு செருகலில் அவனுடைய வயிற்றைப் பிளந்து திறக்கிறான். ஆக, கதை முடிகிறது, ஒரு முரணைத் தவிர, ஒரு கதைசொல்லியின் கூற்றுப்படி, சாண்டா ஃபேயில் இருந்து வந்த மனிதன் உயிரற்றவனாகக் கிடக்கிறான், மற்றொருவனின் கூற்றுப்படியோ (இங்கு மரணத்தின் மேன்மையிலிருந்து கதைசொல்லி தன்னை விலக்கிக் கொள்கிறான்) அவன் தனது சொந்த மாகாணத்துக்கு மீண்டும் குதிரையில் ஏறிப் போகிறான். இந்தப் பிந்தைய வடிவத்தில், அவர்களுடைய மதியவுணவில் மீந்த மதுரசத்தைக் கொண்டு சுவாரெஸ் அவனுக்கு முதலுதவியும் செய்கிறான்.

* தளர்வான மேலங்கியோடும் கத்தியோடும் போரிடும் இந்த முறை மிகவும் பழமையானது என மொண்டெய்னே (கட்டுரைகள், I, 49) கூறுகிறார், அத்துடன் சீசரின் கண்டுபிடிப்பையும் அவர் சுட்டுகிறார், “Sinistras sagis involvunt, gladiosque distringunt” – “தங்களுடைய மேலங்கிகளை இடதுக் கரங்களில் அவர்கள் சுற்றிக் கொண்ட பிறகு தங்களின் வாட்களை உருவினார்கள்” (குடியுரிமைப் போர், I, 75). லுகோனேஸ், தனது El payador-ல், பதினாறாம் நூற்றாண்டின் பெர்னார்டோ டெல் கார்பியோவின் காதலில் இருந்து இவ்வரிகளைக் குறிப்பிடுகிறார்.

Revolviendo el manto al brazo,
la espada fuera a sacar.
(மேலாடையைத் தனது இடக்கரத்தில் சுற்றிக் கொண்டு, அவன் தனனுடைய கத்தியை உருவினான்.)

மான்கோ (ஒற்றைக்கை) வென்செஸ்லாவோவின் இந்தச் சாதனையில் – தற்போது சுவாரெஸின் புகழ் அப்படித்தான் அறியப்படுகிறது – மென்மையும் அல்லது கருணையும் கூடிய சில கணங்கள் (கடிவாளங்களையும் சேணங்களையும் உருவாக்கும் அவனது தொழில், தன் அம்மாவைத் தனியே விடுவது குறித்த அவனது உளத்தடுமாற்றங்கள், சொல்நயமிக்கக் கடிதங்களின் பரிமாற்றம், இரு ஆண்களின் சாவகாசமான உரையாடல், மதியவுணவு) உற்சாகமான வகையில் காட்டுமிராண்டித்தனமான இந்தக் கதையின் தீவிரத்தைக் குறைத்து இன்னும் அருமையானதாக மாற்றுகின்றன. இத்தகைய உணர்வுகள் நமக்கு எளிதில் காணக்கிடைக்காத ஒரு காவியத்தன்மையையும் இன்னும் சொல்வதெனில் சான்றாண்மைக்குரிய தன்மையையும் இந்தக் கதைக்கு வழங்குகின்றன, ஓர் எடுத்துக்காட்டுக்கு – இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று நமது மனங்களை நாம் தயார்படுத்தியிருக்கவில்லை எனும் நிலையில் – மார்ட்டின் ஃபியர்ரோவில் (Martin Fierro) உள்ள குடிகாரச் சண்டைகளில் அல்லது அதற்கு வெகு நெருக்கமாகவும் ஆனால் சற்றே மோசமானதாகவுள்ள யுவான் முரானா மற்றும் தென்புறத்திலிருந்து வந்த மனிதனைப் பற்றிய கதையிலும் இல்லாத உணர்வுகளை. ஒருவேளை இவ்விரண்டுக்கும் பொதுவான ஓர் இயல்பு, அனேகமாக, முக்கியமான ஒன்றாயிருக்கலாம். இரண்டிலுமே, சவால் விடுபவன் தோற்கடிக்கப்படுகிறான். உள்ளூர் நாயகன் வெற்றிபெற வேண்டுமென்கிற பரிதாபகரமான வெற்றுத் தேவைக்கென இவ்வாறிருக்கலாம், ஆனால் அதேவேளையில் (இது சற்றுப் பரவாயில்லை) வீண்சண்டையை தீர்க்கமாய் மறுப்பதாக, அல்லது (அனைத்திலும் இதுதான் சிறந்ததாக இருக்கிறது) ஒரு மனிதனின் வீழ்ச்சிக்கு அவனேதான் காரணமாக இருக்கக்கூடும் என்கிற இருண்மையும் வேதனையும் நிறைந்த சந்தேகத்தை நிரூபிப்பதாக, இன்ஃபெர்னோவின் XXVI-ஆம் காண்டோவில் வரும் உலிஸிஸ் அல்லது மோபி டிக்கில் காணும் மற்ற சபிக்கப்பட்ட மாலுமியைப் போல.

இப்போது சொன்ன இந்தப் பயங்கரமான கதையின் ஏதோவொரு அடிப்படையான விசயம் அதைக் கலப்படமற்ற காட்டுமிராண்டித்தனத்துக்குள் வீழ்வதில் இருந்து காப்பாற்றுகிறது – லா டெர்ரே (La Terre)3 அல்லது ஹெமிங்வேயில் இருந்து எடுத்த ஓர் அத்தியாயம் என்பதாக. நான் ஆன்மீக உள்ளீடு குறித்துப் பேசுகிறேன். “அவனுடைய நம்பிக்கைகள்,” காச்சோக்களைச் சேர்ந்த கவிஞர் லுகோனெஸ்4 கூறுகிறார், “ஒரு சில மூடநம்பிக்கைகளாக மட்டுமே இருந்திருக்கலாம், அவனது தினசரி வாழ்க்கையில் அவற்றால் பெரிதாக எந்தத் தாக்கமும் இருக்கவில்லை.” அவர் மேலும் சொல்கிறார், “அவன் மதித்த விசயம் யாதெனில் அதுதான் தைரியம், வீரப்பெருந்தகைமையான விருப்பத்தோடு அதை அவன் வளர்த்துக்கொண்டான்.” நான் சொல்வது என்னவென்றால் அந்த காச்சோ, தான் உணராமலே, ஒரு மதத்தை வார்த்தெடுத்திருக்கிறான் – தைரியம் என்கிற கடினமான, கண்மூடித்தனமான ஒரு மதத்தை – அதற்கும் மேல் இந்தப் பற்றுறுதி (மற்ற அனைத்தையும் போல) தனக்கான ஒழுங்குநெறிகளை, புராணங்களை, மேலும் தியாகிகளையும் கொண்டிருந்தது. சமவெளிகளிலும் நகரத்தின் பண்படாத விளிம்புகளிலும், அதீதமான ஆரம்பநிலை வாழ்க்கையினை வாழ்ந்த மனிதர்கள் – மேய்ப்பர்கள், கால்நடைப்பட்டிகளில் பணிபுரிபவர்கள், கால்நடைஓட்டிகள், குற்றவாளிகள், உடன் காமத்தரகர்கள் – இரும்புக் கடவுள்களின் பழங்கால வழிபாட்டு மரபினை தங்களுக்கே உரிய வகையில் மீண்டும் அவர்கள் கண்டுபிடித்தார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஒரு வீரகாவியத்தில், நாம் வாசிக்கிறோம்:

“சொல், எதை நீ நம்புகிறாய்” என்றார் கோமான்.

“எனது சொந்த பலத்தை நான் நம்புகிறேன்,” என்றான் சிக்மண்ட்.

வென்செஸ்லாவோ சுவாரெஸும் அவனுடைய பெயரற்ற எதிராளியும், மேலும் தொன்மம் மறந்திருக்கக் கூடிய அல்லது இவ்விருவருக்குள் விழுங்கி இருக்கக்கூடிய எத்தனையோ மனிதர்களும், சந்தேகத்துக்கிடமின்றி இந்த வீறுமிக்க நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள், ஆக, அனைத்து சாத்தியக்கூறுகளோடும் இது வெறுமனே ஒரு மமதையின் வடிவமல்ல மாறாக எந்த மனிதனுக்குள்ளும் கடவுளைக் காண முடியும் என்கிற விழிப்புணர்வே.

குறிப்புகள்
1. டெஸ்பெரெடோ (Desperado) – சாவுக்குத் துணிந்த அஞ்சாநெஞ்சர்கள்
2. அடால்ஃபோ பியோய்-கசரெஸ் (Adolfo Bioy-Casares) – அர்ஹெந்தினாவைச் சேர்ந்த புகழ்பெற்ற புனைவு எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
3. லா டெர்ரே (La Terre) – 1887-ல் எமிலி ஸோலா எழுதிய பிரெஞ்சுப் புதினம்.
4. லுகோனெஸ் (Lugones) – அர்ஹெந்தினக் கவிஞர். மாபெரும் அறிஞர். ஸ்பானிய நவீனக் கவிதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர்.

karthickpandian@gmail.com