சினிமா என்றால் பிரம்மாண்டம், வன்முறை, ரத்தம் என்று பழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அத்தகைய அழகியலுக்கு முற்றிலும் மறுதலையாக தமிழில் ஒரு படம் எடுக்கப்பட்டு, அது திரையரங்குகளிலும் வெளியானது முக்கியமான ஒரு நிகழ்வு என்று சொல்லவேண்டும். தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன்னும் இயக்குனர்களாகி உள்ளார்கள். ஜெயகாந்தன், ஞான ராஜசேகரன், அம்ஷன் குமார் ஆகிய பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.  அந்த வரிசையில் பாஸ்கர் சக்தியையும் சேர்க்கலாம். இரண்டு வேறுபாடுகள். ஒன்று, பாஸ்கர் சக்தி ஏற்கனவே பல திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் வேறு இயக்குனர்களுடன் பணியாற்றியிருப்பது. இரண்டாவது, ரயில் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இலக்கிய உலகைச் சார்ந்தவர் என்பது. பதிப்பாளரும், டிஸ்கவரி புத்தக நிலையத்தினை நடத்துபவருமான வேடியப்பன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஒரு காலத்தில் இலக்கிய வட்டங்களில் திரைப்படம் பற்றி பேசினால் வணிக சினிமா தயாரிப்பாளர்களை மூச்சுவிடாமல் திட்டுவார்கள். சில சமயங்களில் நான் மாற்று சினிமா உருவாக அத்தகைய படங்களை எடுப்பதுதான் முக்கியம். வணிக சினிமாவை திட்டுவதல்ல என்று கூறுவேன். ஜி.அரவிந்தனின் நண்பர் அவர் படத்தை தயாரிக்க முன்வந்ததை உதாரணமாகக் கூறுவேன். அப்படி ஒரு நிகழ்வு ரயில் படம் மூலம் தமிழிலும் நிகழ்ந்துள்ளது எனலாம்.

முதலில் வடக்கன் என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் பின்னர் ரயில் என்ற பெயரில் வெளியானது. வடக்கன் என்ற பெயர் வட நாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் குறிக்கும் சொல். இது மக்களிடையே இயல்பாகப் புழங்கும் அடையாளச் சொல்தான். ஆனால் ஆங்கிலத்தில் xenophobic என்று கூறப்படும் அன்னியர்களை வெறுக்கும் மன நிலை உள்ளவர்கள் பயன்பாட்டில் அதனுள் வேற்றுமையின் சுவடுகளும், விரோதபாவமும் தொனிக்கச் சாத்தியமான சொல். இந்தப் படம் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தது எப்படி அந்தப் பெயரில் அவ்வாறு தொனிக்கக் கூடிய இன வேற்றுமைக் குறிப்பு தவறானது என்பதை உணர்த்துவதற்குத்தான். வடக்கனோ, தெற்கனோ எல்லோரும் மனிதர்கள்தான் என்று கூறுவதற்காகத்தான் அந்தப் பெயர் தலைப்பானது என்று கருதுகிறேன். ஆனாலும் கூட அந்த சொல் தலைப்பாவது வட நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிரான மன நிலை வலியுறுத்துவதாக கருதப்பட்டதால் தணிக்கைக் குழு அனுமதிக்கவில்லை.அதற்கு மாற்றாக ரயில் என்ற பெயர் தேர்வானது. மக்களின் இடப்பெயர்வின் நவீன காலக் குறியீடான ரயில் என்ற பெயர் இந்தப் படத்திற்கு அமைந்ததும் பொருத்தம்தான் என்று கூறலாம். ரயில் பயணம் என்பது முன் பின் தெரியாதவர்களிடையே உறவை ஏற்படுத்துவது என்பதையும் மனதில் கொண்டால் இந்தப் பெயர் பொருத்தம் துலக்கமுறும். அன்றாட வாழ்வின் பரிமாணத்தில் வாழ்க்கையே ஒரு ரயில் பயணம்தான்.

பொதுவாக திரைப்படக் கதையாடல்கள் காலப்பரிமாணத்தில் இயங்குபவை. இரண்டரை மணி நேரத்தில் கோர்க்கப்படும் நிகழ்வுகள், சங்கலித் தொடர்போல காரண காரியங்களால் கோர்க்கப்பட்டு, சில சுவாரசியமான திருப்பங்களுடன், ஒரு உச்சத்தை நோக்கி நகர்ந்து பார்ப்பவர்களுக்கு மன நிறைவைத் தர வேண்டும். அந்த நிகழ்வுகளின் சரடாக இருக்கும் பாத்திரம்தான் கதையின் நாயகன். பெருவணிக திரைப்படங்களில் அந்த நாயகன் சாகச நாயகனாக, தன்னை எதிர்ப்பவர்களை வெற்றி கொள்ளும் வீரனாக இருப்பான் அல்லது தடைகளை மீறி தன் காதலை நிறைவேற்றிக் கொள்பவனாக இருப்பான். அவ்வாறு இல்லாமல் கதாநாயகனுக்கு சாகசத்தன்மை இல்லாத படங்களிலும் கூட அவன் விருப்பம் பூர்த்தியடைவது படம் பார்ப்பவர்களுக்கு மன நிறைவைத் தரும். அடிதடி சண்டைக்காட்சிகள் இல்லாவிட்டாலும்  உணர்வெழுச்சி மிக்க காட்சிகள், தமிழ் சினிமாவென்றால் பாடல்கள் அந்த விருப்பப் பூர்த்திக்கான அல்லது சமயங்களில் நிராசைக்கான அழுத்தமான உணர்ச்சிகளை உருவாக்கும்.

இவ்வாறான கதையாடலை கோர்க்கும் திரைப்பிம்பங்களை நாம் மூன்று விதமானவையாக வகைப்படுத்தலாம். ஒன்று, தனித்தியங்கும் திரை பிம்பங்கள். இவை அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று வலியுறுத்தும். உதாரணமாக கதாபாத்திரங்கள் ஆடிப்பாடும் காட்சிகளைக் கூறலாம். நிஜ வாழ்க்கையில் அப்படி பின்னணி இசை ஒலிக்க ஆடிப்பாடுவது சாத்தியமில்லை அல்லவா? அது போலவே சண்டைக்காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகளையும் கூறலாம்.

இரண்டாவது வகை பிம்பம், ஒப்புநோக்கு பிம்பம். அது யதார்த்த உலகினைப் பிரதி செய்வது போல அமையும். ஹாலிவுட் திரைப்படங்களில் இவ்வகையான பிம்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். உடைகள், சூழலில் உள்ள பொருட்கள், ஒலிகள் எல்லாமே இயல் உலகத்துடன் ஒப்பு நோக்கத்தக்கதாக உருவாக்குவார்கள். நிகழ்வுகள் சாகசமாக, நாடகீயமாக இருந்தாலும், பிம்பங்கள் ஒப்புநோக்கத்தக்கவையாக இருக்க வேண்டும். ஜேம்ஸ்பாண்ட் ஒரு கல்லூரிக்குள் போனால் அது உண்மையான கல்லூரி போலவே இருக்க வேண்டும்.

மூன்றாவது வகையான பிம்பம் என்பது அன்றாட வாழ்வினை ஊடுறுவும் பிம்பம். இவ்வகையான பிம்பங்கள் அன்றாட வாழ்வுச் சூழலைக் குறிப்பிட்ட நோக்கில் காட்சிப் படுத்துவதன் மூலம் அழகியலை உருவாக்கிக் கொள்பவை. பெரும்பாலும் கலைப்படங்கள் எனப்படும் படங்கள் இவ்வாறாக அமையும். அன்றாட வாழ்வுத்தன்மை நிகழ்வுகளிலும், படத்தின் காலப்பரிமாணத்திலும் சேரும்போது அது ஆழமான வாழ்வியல் புரிதல்களைத் தரும்  சாத்தியங்களை அதிகரிக்கும். ஆனால் நாடகீய உணர்வெழுச்சி சினிமா தரும் கிளர்ச்சி இதில் இருக்காது. அன்றாட த்தை ஊடுறுவும் அழகியலின் புலனிம்பம் நுட்பமான உணர்வுகளைக் கொண்டிருக்கும். பதேர் பாஞ்சாலி படத்தின் மூலம் இந்த அழகியலின் கவித்துவத்தை நிறுவினார் சத்யஜித் ரே. அந்தப் படத்தில் மிட்டாய் விற்பவன் பின்னால் வயல் வரப்புகளில் குழந்தைகளான துர்காவும், அப்புவும் செல்வார்கள். பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்.

ஒரு திரைப்பட ஆக்கத்தில் இந்த மூவகை பிம்பங்களும் கலந்திருப்பது சாத்தியமே. உதாரணமாக பாஸ்கர் சக்தி பணியாற்றிய “நான் மகான் அல்ல” படம், கதாநாயக சாகசத்தில், சண்டைக் காட்சிகளில் முடிவடைந்தாலும், படத்தின் பல நிகழ்வுகளில் அன்றாட வாழ்வை ஊடுறுவும் பிம்பங்கள் நிறைந்திருந்தன என்பதை நான் எழுதிய விமர்சனத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன். எத்தகைய உணர்வெழுச்சியான நிகழ்வுகள் கோர்க்கப்படுகின்றன என்பதற்கும் திரைப்பிம்பங்கள் எவ்வகைப்பட்டவை என்பதற்கும் தொடர்பில்லை. பாலாஜி சக்திவேலின் “காதல்” திரைப்படம் அன்றாட வாழ்வு சூழலை அற்புதமாக ஊடுறுவும் பிம்பங்களால் நிறைந்திருந்தாலும், உணர்வெழுச்சி மிக்க ஒரு காதல் கதை என்பதால்   பெரும் வரவேற்பைப் பெற்றது. பிம்பங்கள் மட்டுமல்லாமல் நிகழ்வுகளும் அன்றாட வாழ்வுத் தன்மையிலேயே இயல்பாக நடக்கும்போது படத்தின் உணர்வுகள் உள்நீரோட்டமாக மாறிவிடும்.

ரயில் திரைப்படம் அன்றாட வாழ்வை ஊடுறுவும் பிம்பங்களால் உருவாகியிருப்பதுடன், நிகழ்வுகளும் அன்றாட வாழ்வின் இயல்பிலேயே கோர்க்கப்பட்டுள்ளன. எந்த நிகழ்வுமே நாடகீயமாக்கப்படவில்லை. உணர்வுகள் உள்நீரோட்டமாகவே காட்சிப்படுத்தப் படுகின்றன. மரணம் கூட நாடகீயமாக்கப் படவில்லை. படத்தின் முக்கிய பாத்திரமான வட நாட்டுத் தொழிலாளி விபத்தில் மரணமடைகிறான். இயக்குனர் நினைத்திருந்தால் அந்தக் காட்சியை உணர்ச்சிகரமான காட்சியாக வடிவமைத்திருக்கலாம். ஆனால் அந்த மரணம் கூட ஒரு இயல்பான அன்றாட வாழ்வுத் தன்மையில்தான் நிகழ்கிறது.

கதாநாயகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு எலக்ட்ரீசியன். உறவுக்காரன் என்பதால் சற்றே செல்வாக்கான மனிதர் அவனுக்குப் பெண் கொடுத்துள்ளார். அந்த மனைவியும் அன்பானவள்தான். ஆனால் குடிப்பழக்கம், வருமானமின்மை ஆகியவற்றுடன் மகப்பேறும் இல்லாமல் இருப்பது அவளைக் கோபப்படுத்துகிறது. இந்நிலையில் அவர்கள் இருக்கும் ஒண்டுக் குடித்தன வளாகத்தில் எதிர் போர்ஷனில் வாழ்கிறான் வடக்கேயிருந்து வந்துள்ள இளைஞன். ஒரு சிறு தொழிற்சாலையில் வேலை செய்யும் அவன் பைக் வைத்துள்ளான். கதாநாயகனோ சைக்கிளில்தான் செல்கிறான். கதாநாயகனுடன் சேர்ந்து குடிப்பதற்கென்று இன்னொரு வேலை வெட்டி இல்லாத நண்பனும் இருக்கிறான். கதாநாயகன் மனைவிக்கும், வட நாட்டு இளைஞனுக்கும் சிறு சிறு கொடுக்கல் வாங்கல்களில் நட்பும், நாளடைவில் பாசமும் உருவாகிறது.

கதாநாயகனுக்கு அந்த வட நாட்டு இளைஞன் தன் மனைவியுடன் பேசிப் பழகுவது பிடிப்பதில்லை. அவன் பைக் வைத்திருப்பது, ஒழுங்காக வேலைக்குப் போய் சம்பாதிப்பது, தனக்கு உதவ முன்வருவது எல்லாமே தாழ்வுணர்ச்சியை அதிகரிக்கிறது. அவனுடைய குடிகார நண்பனும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகப் பேசுகிறான். தவறான அறிவுரைகளைக் கொடுக்கிறான். இதனால் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு வந்து தன் மனைவியுடன் தகராறு செய்யும், மனைவியை அடிக்கும் கதாநாயகனைத் தடுக்கும் நோக்கில் வட நாட்டு இளைஞன் அடித்து விடுகிறான். மனைவியும் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிடுகிறாள்.

மறுநாள் கதாநாயகன் அடிபட்ட சம்பவத்தைக் கேட்டவுடன், அவன் நண்பன் குடிபோதையில் வட நாட்டு இளைஞனைக் கொலை செய்ய திட்டம் வகுக்கிறான். என்ன துணிவு இருந்தால் நம் மீதே கை வைப்பான் என்று இன வாதம் பேசுகிறான். இது குடிகாரர்களின் அர்த்தமற்ற சலம்பல் ஆனாலும், வன்முறையின் சாத்தியம் அதில் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. அந்த நேரத்தில்தான் வட நாட்டு இளைஞன் விபத்தில் இறக்கிறான். பகலில் திண்ணையில் தூங்கிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்குப் பின்னால் போலீஸ் வீட்டில் நுழைவது இடைவேளைக்கு முந்தைய காட்சியாக இருக்கிறது.

இடைவேளைக்குப் பின் அவன் உடல் போலீசாரால் ஐஸ் பெட்டியில் கொண்டு வந்து வீட்டில் வைக்கப்படுகிறது. அவன் குடும்பத்தினர் வடநாட்டிலிருந்து வரும்வரை அங்கேதான் இருக்கும் என்று போலீஸார் கூறிவிட்டு செல்கின்றனர். கதாநாயகனை உடலுக்கு காவல் வைத்துவிட்டு செல்கின்றனர். கதாநாயகன் மனைவி வீட்டுக்குத் திரும்பி வந்து கதறி அழுகிறாள். வட நாட்டு இளைஞன் மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோர் வருகின்றனர். அதன் பின் நடப்பதெல்லாம் மெள்ள, மெள்ள கதாநாயகனிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது. மிக நுட்பமாகவும், அழகியல் முதிர்ச்சியுடனும் இடைவேளைக்குப் பிறகான நிகழ்வுகள் திரையாக்கம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் நாமே அந்த குடியிருப்பில் வாழ்வதாக உணரத் துவங்குகிறோம். துல்லியமான, நுட்பமான, உள்நீரோட்டமான உணர்வுத் தளத்தில் சகவாழ்வு மலர்வதையும், கதாநாயகனின் மனமாற்றத்தையும் காண்கிறோம். இது எதிர்பார்கக் கூடியதுதான் என்றாலும், நிகழும் விதத்தில் சுவாரசியத்தைக் கொண்டுள்ளது.

அன்றாடம், வரலாறு, அடையாளம்

அன்றாட வாழ்க்கை என்பது நம்மை இயற்கையோடு பிணைப்பது. இயற்கையின் அங்கம்தான் சக மனிதர்களும். அன்றாட வாழ்வில் ஏற்படும் சண்டையும், பூசலும் அன்றாடம் வலியுறுத்தும் சகவாழ்வின் பரிமாணங்களில் கரைந்து போய்விடும். எலியும், பூனையுமாக இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். முன் பின் தெரியாதவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். ரயில் பயணம் போல உடனிருப்பே நட்பையும், அன்பையும் உருவாக்கும்.

மொழி சார்ந்த தன்னுணர்வுதான் அடையாளங்களை உருவாக்குகிறது. ஜாதி, மத, மொழி. பிரதேச, தேச அடையாளங்களெல்லாம் மொழி சார்ந்த தன்னுணர்வில் பிறக்கின்றன. இவையும் சகவாழ்விற்கு உதவினாலும், தேவையற்ற அழுத்தம் பெறும்போது பிற அடையாளங்களின் மீது வெறுப்பை, விரோதத்தை விதைக்கவும் செய்கின்றன. பழைய விரோதங்களை நினைவில் கொள்வது வரலாற்றுணர்வாக மாறுகிறது. கூட்டு அடையாளம் வரலாற்றின் அடித்தளமாக இருப்பதால் குடும்பச் சண்டையில் அண்டை வீட்டுக்காரன் மனிதாபிமானத்துடன் தலையிட்டது, இன அடையாளத்திற்கே சவால் விடுவதாகப் பேசப்படுகிறது.

இந்தியா அளப்பரிய கலாசாரப் பன்மை கொண்டது. கடந்த நூறாண்டுகளில் ஏராளமானோர் புலம்பெயர்ந்து வேற்று மொழி பேசும் பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளார்கள். வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் அண்டை வீட்டாராக வசித்து வருகிறார்கள். நகர்ப்புறத்தில் எந்தக் குடியிருப்பிற்குப் போனாலும் அங்கே வெவ்வேறு கலாசார அடையாளம் கொண்ட குடும்பங்கள் வாழ்வதைக் காணலாம். அன்றாட வாழ்வின் பரிமாணங்கள்தான் மக்களை இணைக்கிறது, மொத்த சமூகமே ஒரு ரயில் பயணம் போல வாழ்கிறது. இதில் வரும் மோதல்கள், பூசல்கள் அன்றன்றைக்கே பெரும்பாலும் மறக்கப்படுகின்றன.

ஆனால் வரலாறு பேசுபவர்கள்தான் அடையாளம் சார்ந்த வேறுபாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். சுய அடையாளத்தினை அரசியல் படுத்தும்போது பிற அடையாளங்களை விரோதிக்க க் கூடாது என்ற கவனம் எப்போதும் இருப்பதில்லை. வெறுப்பரசியல் முளைவிடுகிறது. அப்படி நடக்கும் தருணங்களில் வரலாற்று அடையாளம் நோயாகவும், அன்றாடம் அதைத் தணிக்கும் மருந்தாகவும் இருப்பதை நாம் வாழ்வியலிலும், மானுடவியல் பிரதிகளிலும், படைப்புகளிலும் காண முடியும். மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் போன்ற படங்களை நினைத்துப் பார்க்கலாம். வட நாட்டைப் போல் தமிழ்நாட்டில் மத அடையாளவாதம் தலையெடுக்கவில்லை. ஆனால் ஜாதி ஆணவம் வன்முறைக்கு வித்தாக இருந்துள்ளது. சமீகாலங்களில் வட நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்டு, அரவணைத்துக்கொள்ளப் பட்டாலும், சில இடங்களில் அவர்கள் இருப்பு மேலும் புரிதலைக் கோரி நிற்கின்றது எனலாம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழின் தொன்மையான பண்பாட்டு முதிர்ச்சி தமிழர்கள் மற்ற ஊர்களுக்கு செல்லும்போது மட்டுமல்லாமல், பிறர் தமிழ்நாட்டுக்கு வரும்போதும் மனதில் கொள்ளப்பட வேண்டும். அந்த மானுடவியல் பண்பினைப் புலப்படுத்துவதுதான் ரயில் திரைப்படம்.

திரை அழகியலின் நாடகீயமும், அன்றாடத்தன்மையும்

திரைப்படம் நிகழ்வுகளைக் கோர்ப்பதில் வரலாறு போல காரண காரியத்தன்மையை வலியுறுத்தி உணர்ச்சிகரமான நாடகமாக்கி, உச்சகட்ட த்தை நோக்கிப் போகலாம். அல்லது எளிய அன்றாட வாழ்வுச் சம்பவங்களில் மனிதர்களை வைத்துக் காட்டலாம். இயக்கனர் பாஸ்கர் சக்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியலைச் சொல்ல இரண்டாவது வகையான அழகியலைத் தேர்வு செய்கிறார். அதற்குக் காரணம் மேலே சொன்னது போல அன்றாடத்தின் சக இருப்பில்தான் அடையாளங்கள் கரைந்துபோகின்றன என்ற உண்மைதான்.

பொதுவாக வணிக திரைப்படங்கள் என்று வந்தால் அதில் பார்வையாளர்களின் உணர்வொன்றலுக்கு நட்சத்திரங்கள் பயன்படுவார்கள். பல்வேறு படங்களின் கதைகளில் தோன்றிய அவர்கள் உடல் பார்வையாளர்களை உறைந்த கதையாடல்களென வசீகரிக்கும் தன்மை கொண்டவை. ரயில் படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதியும், வட நாட்டு இளைஞனாக நவாசுதீன் சித்திக்கும் நடித்தால் உடனே பார்வையாளர்கள் கதையினுள் நுழைந்துவிடுவார்கள். ஆனால் இந்த நட்சத்திரங்களுக்கான செலவை ஈடுசெய்ய, பட த்தில் உணர்ச்சியைக் கூட்ட வேண்டும். படத்தின் துவக்கத்தில் கதாநாயகன் கறிவிருந்தில் குடித்துவிட்டு ஆடும் பாடல், மனைவியுடன் ஒரு காதல் பாடல், வட நாட்டு இளைஞனும், அவன் மனைவியும் பிரிவாற்றாமையில் பாடும் செல் ஃபோன் பாடல் என சில அம்சங்களை சேர்க்கலாம். அதற்கு இணையாகப் படத்தில் செயல்படும் விரோத பாவத்தையும், பாசத்தையும் மேலும் நாடகீயமாக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் வணிக ரீதியாகப் பார்வையாளர்களை ஈர்க்கும் வழமையான அழகியலில் இந்தக் கதையைக் கூற முடியலாம்.

அப்படி செய்திருந்தால் பாஸ்கர் சக்தி படைத்திருக்கும் அன்றாட வாழ்வினை ஊடுறுவும் அழகியல் முற்றிலும் சிதைந்து போயிருக்கும். அதன் இயல்புத்தன்மையில் அடையாளங்கள் கரைந்து மறைந்து மனிதம் மேலோங்கும் அதிசயம் நிகழ்ந்திருக்காது. மாறாக அடையாளங்கள் உறுதிப்பட்டு அதற்கு ஒரு வரலாற்றுத்தன்மை கூடியிருக்கும். கொஞ்சம் கவனப்பிசகாக இருந்தாலும் படம் உணர்த்த விரும்பும் அடையாளங்களைக் கடந்த மனிதம் என்பது மறைந்து சமூக அடையாளங்களின் முரண் ஒரு பிரச்சினைதான் என்ற உணர்வு மேலோங்கியிருக்கும். அதுதான் வணிக சினிமாவின் பிரச்சினை. அதன் உள்ளடக்கத்தின் வடிவம் (form of content) முற்போக்காக இருந்தாலும், வெளிப்பாடு வடிவம் (form of expression) பிற்போக்காக அமைந்துவிடும் வாய்ப்பு அதிகம்.

வரலாறு நெடுகிலும் எளிய மனிதர்கள்தான் மனிதத் தன்மையை மீட்டெடுக்கிறார்கள். எந்த இனக் கலவரத்தின் போதும் மாற்று அடையாளம் கொண்டவருக்கு அடைக்கலம் தருகிறார்கள். ஏனெனில் அவர்களின் அன்றாட வாழ்வில் மற்றவர்களை சக உயிரியாகப் பார்க்கும் சாத்தியத்தை வைத்திருக்கிறார்கள். கதாநாயகனின் நண்பனாக நடிக்கும் ரமேஷ் வைத்யாதான் இந்தப் படத்தின் சூத்ரதாரி. வட நாட்டவர்கள் இங்கே வந்து வேலை செய்வதைத் தொடர்ந்து இன வேறுபாட்டுக் கோணத்தில் கடிந்து கொள்கிறார். கதாநாயகனை வட நாட்டு இளைஞனுக்கு எதிராகத் தூண்டி விடுகிறார். குடி போதையில் கொலை செய்யவே பரிந்துரைக்கிறார். ஆனால் படத்தில் ஒரு கட்டத்தில் அவர் மதியம் நண்பனைத் தேடி வருகையில் வட நாட்டு இளைஞன், பெண்களிடத்தில் தமிழ் பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறான். உடனே ரமேஷ் வைத்யா எங்களுக்கும் இந்தி பாட்டு தெரியும் என்று இரண்டு பாடல்களை எடுத்து விடுகிறார். தாறுமாறாகப் பாடினாலும் அந்த இடத்தில் வேற்றுமை மறந்து சகவாழ்வு மேலோங்குகிறது. அந்த சாத்தியத்தை உணர்த்தவே, படம் முழுவதும் அன்றாட வாழ்வின் அழகியலைக் கைக்கொள்கிறது. விரோதமோ, சோகமோ, மகிழ்ச்சியோ எந்த உணர்ச்சியுமே நாடகீயமாக மாறாமல், உள்ளோட்டமான உணர்வாகவே காட்சிப்படுகிறது.

அன்றாட வாழ்வினை ஊடுறுவும் காட்சிகளை ரசிப்பது என்பது தனி அனுபவம். அது மினியேச்சர் பெயிண்டிங்கை ரசிப்பது போன்றது. உதாரணமாக, இந்தப் படத்தில் கதாநாயகனின் மனைவி பாயை உதறிப்போட்டுப் படுப்பதும், கணவனுடன் முறைத்துக்கொள்வதும் மிக அழகாகப் படமாகியுள்ளது. ஒவ்வொரு பாத்திர வார்ப்புமே இது போன்ற சிறிய அசைவுகளில் மனதைக் கவரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அழகியலை நாம் பாராட்டக் கற்றால்தான் மேலும் பல படங்கள் இப்படி உருவாகும். இந்தப் படத்திற்கு சமீபகால திரைப்படங்களில் ஒப்புமை கூறவேண்டுமென்றால் தமிழ்செல்வன் கதையைப் படமாக்கிய சசியின் பூ திரைப் படத்தைக் கூறலாம். கி.ராஜநாராயணின் கிடை கதையைப் படமாக்கிய அம்ஷன் குமாரின் “ஒருத்தி” மற்றும் “மனுஷங்கடா” ஆகிய படங்களைக் கூறலாம்.

தமிழ் விமர்சன உலகின் பொதுப்புத்தியின் பிரச்சினை என்னவென்றால் எப்போதும் தமிழில் அது உருவாகவில்லை, இது உருவாகவில்லை என்று புலம்புவது. பிற மொழி படைப்புகளைக் கொண்டாடி இது போல தமிழில் வருமா என்று ஏங்குவது. அப்படி தமிழில் ஏதெனும் உருவானால் அதனை முற்றிலும் கவனப்படுத்தாமல் புறக்கணிப்பது. உதாரணமாக, வெற்றிமாறனின் விசாரணை, ஞானவேலின் ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் போலீஸ் வன்முறை உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று முகம் சுளிப்பார்கள். அந்தப் படங்கள் உணர்த்தும் சமூக வன்முறையைப் பற்றிக் கவலைப்படாமல் அழகியல் வாதம் பேசுவார்கள். அப்படியான உணர்ச்சியூட்டும் காட்சிகளைத் தவிர்த்து முழுமையான அன்றாட அழகியல் பரிமாணத்தில் ஒரு படம் வந்தால் அதனைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

காட்சிப்பிழைத் திரை என்ற திரைப்படப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தேன். சென்னையில் ஒரு சில புத்தக விற்பனைக் கடைகளில் அந்தப் பத்திரிகையைக் கொண்டு போய் வைப்போம். அந்த இடங்களெல்லாம் தீவிர வாசகர்கள் வரும் இடங்கள்தான். அந்தப் பத்திரிகையின் அட்டையில் அந்த மாதம் நாங்கள் கவனப்படுத்தி விவாதிக்கும் திரைப்படங்களின் காட்சி இடம்பெறும். எந்திரன் படம் வந்தபோது அதனை அட்டையில் போட்டோம். நான் திரைப்பட வணிகம் குறித்த விரிவான கட்டுரை எழுதியிருந்தேன். அந்த இதழ்கள் அனைத்தும் விற்றுவிட்டன. பாஸ்கர் சக்தியின் கதையான “ஆழகர்சாமியின் குதிரை” வெளியான போது அந்தப் படத்தின் காட்சியினை, குதிரையுடன் அப்பு நிற்கும் காட்சியினை அட்டையில் போட்டிருந்தோம். அம்ஷன் குமார் உள்ளிட்ட சிலர் அந்தப் படத்தினைக் குறித்து அதன் சிறப்புகளை, மாற்று அழகியல் கூறுகளைப் பாராட்டி விவாதித்திருந்தோம். அந்த இதழ் விற்பனை ஆகாமல் பெருமளவு திரும்ப எடுக்கவேண்டி இருந்தது. ஏதோ பஸ் ஸ்டாண்டிலோ, ரயில் நிலையத்திலோ அல்ல. சென்னையின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகக் கடைகளிலேதான் இது நிகழ்ந்தது.

எதற்காகச் சொல்கிறேன் என்றால் விமர்சனம் என்பதன் பணி மாற்றுத் தடங்களை இனம் கண்டு பாராட்ட வேண்டும். அப்படி செய்ய விமர்சனத்திற்கு பரந்துபட்ட பார்வை வேண்டும். மாற்று அழகியலை முன்னெடுக்கும் இலக்கிய வட்டங்கள்தான் அத்தகைய விமர்சன சூழலைக் கட்டமைக்க வேண்டும். விமர்சனம் என்றால் குறை சொல்வது என்று புரிந்துகொள்ளும் சமூகத்தில் ரயில் போன்ற மாற்றுத் திரைப்பட அழகியலை முன்னெடுக்கும் படங்கள் கவனிக்கப்படாமல் போவது ஒரு கலாசார முட்டுச்சந்தை உருவாக்குகிறது. ஒருவேளை படம் ஒடிடியில் வெளியாகும்போது மேலும் பரவலான விமர்சன கவனத்தையும், பாராட்டுதல்களையும் பெற்றால் நம் பலவீனம் நீங்கியதாகக் கருதுவேன்.