1

1991இல் சோவியத் யூனியன் உடைந்தது. அதே வருடத்தில்தான் பெருமாள்முருகனின் முதல் நாவலான ஏறுவெயிலும் வெளியானது. சிறுக சிறுகச் சிதைந்துபோகும் ஒரு குடும்பத்தை மீளக் கட்ட முடியாமல் – புதிய திசையைத் தேடும் – மூச்சுத்திணறல்தான் ஏறுவெயில். ஒருவகையில் இழந்த பழைய நிலவுடைமை வாழ்வையும், அவ்வளவாகக் கூடிவராத நவீனச் சிறுநகரிய வாழ்வையும் இறுக்கிப் பிடித்துச் சரிசெய்யப் பார்க்கும் ஏக்கமும் பெருமூச்சும்தான் பெருமாள்முருகனின் படைப்புலகம்.

பல வகைகளில் இன்று வரையிலான தமிழ் நாவலாசிரியர்களில் பெருமாள்முருகன் தனித்துவமானவர். பொழுதுபோக்கு அம்சங்கள் அவர் புனைவில் சுத்தமாகக் கிடையாது. நவீன வாழ்க்கை கோரும் அதிகபட்சத் தீவிரத்தைத் தொடர்ந்து தம் புனைவுகளில் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார். வளரிளம் பருவத்துச் சிறார்களின் அன்றாடப் பிரச்சினைகளை முன்வைப்பதில் அவருக்குக் கூடுதல் கவனமுண்டு. ‘நிழல் முற்ற’மும் ‘கூளமாதாரி’யும் இதன் வெளிப்பாடுகளே. சூழலின் கசப்புக்கும் முடக்கத்துக்கும் எதிராக எப்படியோ ஒரு போராட்ட உணர்வைத் தக்கவைத்துக் கொண்டுவிடும் இடையறாத இயக்கமுள்ள பாத்திரங்களைப் புனைவு வெளியில் அலுக்காமல் சலிக்காமல் திரும்ப திரும்பப் புனைந்துகொண்டேயிருக்கிறார் அவர்.

இப்போது 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி இலக்கியப் பரிசு பெற்றுள்ள ‘ஆளண்டாப் பட்சி’ அதற்குத் தலைசிறந்த  உதாரணம். கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகப் பரிணமித்த சிக்கலான ஒரு காலத்தின் பிரதிநிதியாகப் புனைவில் பெருமாள்முருகனின் ஆகிருதி உருப்பெற்றுள்ளது. ‘உள்ளம் உடைமை உடைமை’ என்ற திருவள்ளுவரின் கருத்துக்கு ஆகச்சிறந்த உதாரணங்களாகப் பெருமாள்முருகனின் பாத்திரங்கள் திகழ்கின்றனர்.

ஒரு கருத்தை வலியுறுத்தப் புனைவதோ, அழகியலுக்காகப் பிரயத்தனப்படுவதோ, சொந்த வாழ்வின் சோகங்களுக்கு முகங்கொடுப்பதோ, உலகப் பார்வையை வலுவாக முன்வைப்பதோ, உள்ளூர்ப் பண்பாட்டைப் பெருமிதத்துடன் பிரதியெடுப்பதோ, அரசியல் சரித்தன்மைக்காக முனைவதோ, விழுமியங்களைப் பதியமிடப் பார்ப்பதோ பெருமாள்முருகனின் பிரதானமான நோக்கமில்லை. எளிய மனிதர்களின் ஒருபோதும் பின்வாங்காமல் முன்னகர முயலும் அக-புறப் போராட்டங்களைப் புனைவில் விசாரணைக்குட்படுத்துவதே பெருமாள்முருகனின் கலையாகும்.

தமிழ்நாட்டுப் புவியியல் பின்னணியில்  கொங்குப் பிரதேசம் வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டதாகும். உடலுழைப்பைப் புத்திசாலித்தனத்துடன் இணைத்துப் பயன்பாடுள்ள வணிகப் பண்பாட்டை வெற்றிகரமாகப் பேணிக்கொண்டது கொங்குச் சமூகம். ஏதாவது ஒரு தொழிலில் முனைப்புடன் ஈடுபட்டுத் தன்னிறைவான பொருளாதார வாழ்க்கையைச் சமூகப் பங்களிப்பாகச் சுய நிர்ணயம் செய்துகொண்டவர்கள் கொங்கு மக்கள். இப்பிரதேசத்தின் பழைய காட்டுவெளி வாழ்க்கையையும் இன்றைய நாட்டுவெளி வாழ்க்கையையும் ஒருசேரப் புனைந்து காட்டும் கலைத்திறனின் ஆகப்பெரும் விளைச்சல்தான் பெருமாள்முருகனின் புனைவுப்புலம்.

கொங்குப் பிரதேசத்தின் இருபெரும் பிரதிநிதிகளான சக்கிலியர்களுக்கும் கவுண்டர்களுக்குமான ஆடு புலியாட்டத்தைத் திறம்படப் பெருமாள்முருகனின் எழுத்துகள் சித்தரிக்கின்றன. இதன் உச்சமாகப் புனையப்பட்டதுதான் மாதொருபாகன். ஆலவாயனும் அர்த்தநாரியும்கூடக் கடுமையான ஒரு சாதியச் சமூகத்தின் எதிர்ப்பதிவுகளே. அருவருப்பான பண்பாட்டு மீறலை, கரைமீறிய ஒழுக்கச் சிதைவைப் பெருமாள்முருகன் படைத்துவிட்டார் என்ற கலாச்சாரக் காவலர்களின் குற்றச்சாட்டுகளெல்லாம் மேலோட்டமான வெற்றுப் பசப்பல்களே. உண்மை என்னவெனில், பல நூற்றாண்டுச் சாதிக் கட்டமைப்புக்கு எதிரான வலிமையான இயல்புணர்வுக் குரலாகப் பெருமாள்முருகன் ஒலிக்கிறார் என்பதுதான் அடிப்படைவாதிகளின் எரிச்சலாகும். இது உள்ளூரிலேயே விலை போகவில்லை என்கிறபோது, உலக அரங்கிலா நிற்கும்!

சர்வதேசப் படைப்புலகக் கவனத்தைப் பெருமாள்முருகனின் புனைவுகள் மொழிபெயர்ப்பு வழித் தொடர்ச்சியாகப் பெறுவதற்கு ‘மாதொருபாகன்’ பிரச்சினை மட்டும் காரணமன்று. இந்தியத் தமிழ்ச் சமூகத்தின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேணும் சாதிய மனநிலையின் சகிக்கவொண்ணா ரகசியத்தைச் சர்வதேசச் சமூகம் சிக்கெனக் கிரகித்துக்கொண்டுவிட்டதே காரணமாகும். இதை இப்படி நான் விண்டுரைக்கும்போது இது பலருக்கும் நெருடல் அளிக்கலாமோ என்னவோ! பெருமாள்முருகனின் சாரம் – ஊறிய சாதிய மனநிலையின் அடிவண்டல் புழுக்கத்தையும் மூளைக்குள் மணக்கும் பண்பாட்டு அழுகலையும் பொதுவெளிக்கு முன் துணிச்சலாகப் புனைந்தளிப்பதுதான் – என்று நான் வாசிக்கிறேன்.

ஒரு சாதியச் சமூகத்தில் திருமண உறவுகள் எவ்வளவு கேலிக்கூத்தாக, மனித இருப்பின் மதிப்பற்ற வெற்று ஒவ்வாமையாகப் புரையோடிவிடுகின்றன என்ற தரிசனமே – ‘கங்கணம்’ மற்றும் பூக்குழி  ஆகிய நாவல்களின் வெவ்வேறு திசை நகர்வுகளாகின்றன. ஆண் திமிர் சார்ந்த அதிகாரத்துடன் சாதியும் கை பிணைக்கும் விசித்திர விளையாட்டுக்குப் பெருமாள்முருகனின் கவிதைகளும் சிறுகதைகளும்கூடச் சாட்சி பூதங்களாகிக் குரல்வளை அறுபட்ட ஊமைக் கோபங்களாகப் புனைவின் வாசிப்பாளர்களைச் சங்கடப்படுத்துகின்றன.

பெருமாள்முருகனைத் தொடர்ந்து வாசிக்கும்போது – நம் சமூகத்தின் உட்குரூரம் அப்பட்டமாக அம்பலமாகி – “ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டினிலே?” என்ற பாரதியின் சுயசரிதை வரிகள்தாம் – என் நினைவில்  முட்டுகின்றன. வெள்ளாட்டின் துயரத்தையா ‘பூனாச்சி’ பேசுகிறது? விலங்குகளைக் குறியீடாக்கி மனிதப்பாடுகளையே பெருமாள்முருகன் விவரிக்க முனைகிறார் எனத் தவழும் குழந்தைக்குக்கூடத் தட்டுப்பட்டுவிடாதா உண்மை! சென்ற தலைமுறையின் உன்னதங்களைப் பாடுவதன்று; இளந்தலைமுறையின் அவஸ்தைகளுக்குக் கண்ணும் செவியும் வாயும் வயிறும் கொடுப்பதே பெருமாள்முருகனின் ‘கழிமுகம்’.

பெருமாள்முருகன் இன்று ஒரு குறியீடு. தமிழ்ச் சமூகத்தின் சூட்சுமமான உள்ளுணர்வுகளுக்கும், கடந்துபோகும் வடிகால் சமிக்ஞைகளுக்கும் ஒரு வலுவான குறியீடு. வெளிநீளும் கற்பனையின் நிலைகொள்ளும் அலங்காரங்களையல்ல; யதார்த்தத்தின் பதற்றமான வெக்கையையே பெருமாள்முருகன் எழுத்தாக்குகிறார். ஒரு பாசாங்கற்ற மிக எளிய மனித மனம் – எவ்வளவு தூரம் முடிவிலியின் பாழுக்குள் பயணித்துச் சேதாரங்களையெல்லாம் just like that கடந்து – மீண்டும் மீண்டும் இடிபாடுகளுக்கிடையில் தன்னைச் சமனப்படுத்திக்கொள்ள முடியும் என்ற சவாலைத் தம் எழுத்துகளால் வென்றுநிற்கிறார் இன்று பெருமாள்முருகன்.

பொறாமையாக இருக்கிறது! பல தமிழ் எழுத்தாளர்கள் தொடாத உயரத்தைத் தொட்டு நிற்கிறார் – தலைக்கனமின்றி. இந்த வெற்றி அவருக்கு யாராலும் அருளப்பட்டதல்ல; விழுந்து விழுந்து எழுந்து எழுந்து தொட்ட உயரம் இது. எல்லையொன்றின்மை என்பதைக் குறிகளால் காட்டிட முனையும் புனைவாகக் கம்பராமாயணத்தைப் பாரதி காண்கிறார். இந்தக் ‘கம்ப மரபின்’ அர்த்தச் செழிப்புள்ள தொடர்ச்சிதான் பெருமாள்முருகன். அவர் ஒரு குறியீடு. அவர் இன்னும் நெடுந்தூரம் போவார். ஞாலம் கருதிப் படைப்பின் திசைகளை அவர் விரிக்க விரிக்க இடம், காலம் கடந்துபோய் எல்லையின்மையின் குறியீடாய்த் தொடர்வார்.

2

ஜேசிபி நிறுவனம்  மிகப்பெரிய கார்ப்பரேட் சாம்ராஜ்யம். ஆனால், இலக்கியத்துக்காக அரசாங்கங்கள் செய்யத் துணியாத காரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது ஜேசிபி. படைப்பாளிக்கு 25 இலட்சம், மொழிபெயர்ப்பாளருக்கு 10 இலட்சம் என்பதை நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. சடையப்ப வள்ளல் இல்லாமல் கம்பராமாயணமில்லை. சீதக்காதி இல்லாமல் சீறாப்புராணமில்லை. ஜேசிபி நிறுவனத்தின் இந்த இலக்கியப் பரிசுக்குக் குறும் பட்டியல்களிலும் நெடும்பட்டியல்களிலும் இடம்பெற்றிருக்கும் தனித்துவமான படைப்பாளிகளின் பெயர்களைப் பார்த்தாலே, (காண்க: பட்டியல் இணைப்பு) எவ்வளவு பெரிய போட்டியில் பெருமாள்முருகன் அவர் படைப்பின் தரத்தால் வென்று நிற்கிறார் என்பதை நாம் அறிய முடியும்.

இந்த வெற்றி தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி.  ‘ஆவியில் எளிமையுள்ளவர்களுக்குக்’ கிடைத்த வெற்றி. இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருதுகளிலேயே ஆகப்பெரிய விருது இதுதான். ஞானபீடத்தின் பெறுமானம்கூடப் பத்து இலட்சம்தான் என்னும்போது, பெரிதினும் பெரிதைப் பெருமாள்முருகன் அடைந்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

மூன்று முறை மலையாள நாவல்களும், ஒரு முறை உருது நாவலும், இன்னொரு முறை ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட நாவலும் இப்பரிசைப் பெற்றிருப்பதாக அறிகிறோம். ஆறாம் ஆண்டில் இப்போது தமிழுக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. பரிசுப் பணத்தைவிட இந்த அங்கீகாரம் நமது தலைமுறையின் படைப்பாளி ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் அதிகப் பெருமிதமளிக்கிறது. “திறமான புலமையெனில், வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் வாக்கு நனவாகியிருக்கிறது இன்று.

‘புக்கர்’ விருது உள்ளிட்ட பல உலகளாவிய விருதுகளின் நெடும்பட்டியல்களுக்கும் குறும்பட்டியல்களுக்கும் பெருமாள்முருகனின் பெயர் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை நாம் நன்கறிவோம். இப்போது ஒரு பெரிய வெற்றி,  அவருக்கு இல்லை, நமது தாய்த் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. இப்படித்தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. இதைத் தமிழர்கள் கொண்டாடாவிட்டாலும் – உலகம் தமிழை, பெருமாள்முருகனைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது!

—–

இணைப்பு: 1

2018 முதல் 2023 வரை ஜேசிபி இலக்கியப் பரிசு பெற்ற நாவல்கள்:

2018 :  BenyaminJasmine Days (Translated from Malayalam by Shahnaz Habib

2019 :  Madhuri Vijay, The Far Field  

2020 :  S. HareeshMoustache (Translated from Malayalam by Jayasree Kalathil)   

2021 :  M MukundanDelhi: A Soliloquy (Translated from the Malayalam by Fathima EV and Nandakumar K)  

2022 : Khalid Jawed, The Paradise of Food (Translated from the Urdu by Baran Farooqi)  

2023 : Perumal Murugan, Fire Bird, ( Translated from the Tamil by Janani Kannan)

—–

இணைப்பு: 2

இவ்வாண்டு (2023) நெடும்பட்டியலில் இடம்பெற்ற நாவல்கள்: 

The Secret of More, Tejaswini Apte-Rahm (Aleph Book Company)

The Nemesis, Manoranjan Byapari, translated from the Bengali by V Ramaswamy (Westland Books)

The East Indian, Brinda Charry (HarperCollins India)

Simsim, Geet Chaturvedi, translated from the Hindi by Anita Gopalan (Penguin Random House India)

Fire Bird, Perumal Murugan, translated from the Tamil by Janani Kannan (Penguin Random House India)

Everything the Light Touches, Janice Pariat (HarperCollins India)

Mansur, Vikramjit Ram (Pan Macmillan India)

I Named my Sister Silence, Manoj Rupda, translated from the Hindi by Hansda Sowvendra Shekhar (Westland Book)

The Colony of Shadows, Bikram Sharma (Hachette India)

Manjhi’s Mayhem, Tanuj Solanki (Penguin Random House India)

—–

இணைப்பு: 3

 இவ்வாண்டு (2023) குறும்பட்டியலில் இடம்பெற்ற நாவல்கள்: 

The Secret of More, Tejaswini Apte-Rahm (Aleph Book Company)

The Nemesis, Manoranjan Byapari, translated from the Bengali by V Ramaswamy (Westland Books)

Fire Bird, Perumal Murugan, translated from the Tamil by Janani Kannan (Penguin Random House India)

Mansur, Vikramjit Ram (Pan Macmillan India)

I Named my Sister Silence, Manoj Rupda, translated from the Hindi by Hansda Sowvendra Shekhar (Westland Book) 

—–