திடீரென்று ப்ரேக் போடப்பட்டதால் அந்த வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் தன்னை முன்னோக்கி இழுத்துக்கொண்டிருந்த அதன் குதிரை சக்தியின் விருப்பத்துக்கு மாறாகக் கதறிக்கொண்டு நின்றாலும் நியூட்டனின் விதிகள் தவறாமல் தன் வேலையைச் செய்தன. ஓட்டுநர் இருக்கையில் இருந்த அன்வர் ஸ்டியரிங்கில் மோதிக் கொண்டு “சாவு கிராக்கி” என்று எதிர்வினையாற்றினான். பின் இருக்கையில் ஏதோ ஃபைலைப் புரட்டியபடி அன்று காலை பள்ளியின் ப்ரேயரில் மாணவர்களுக்கு எந்த நல்லொழுக்கத்தைப் பற்றிப் பேசலாம் என்று நினைத்தவாறு வந்த ராதிகா முன் இருக்கையின் மீது வந்து மோதி நிலை குலைந்து விழுந்தாள்.

“என்னடா அன்வர் பண்றே” என்று ராதிகா சற்றுக் கோபத்துடன் கேட்க அன்வர் தன் இருக்கையிலிருந்து சற்று எக்கி சாலையைப் பார்த்தபடியே சொன்னான். அவன் குரலில் மெல்லிய நடுக்கம்.

“ஒரு கெழவிங்க மேடம்.. திடீர்னு குறுக்க வந்து உளுந்துருச்சு” சொல்லியபடியே பரபரப்பாக காரின் கதவைத் திறந்து இறங்கினான். ராதிகாவும் காரின் உள்ளே சிதறிக் கிடந்த காகிதங்களைப்  பொருட்படுத்தாமல் இறங்கினாள்.

காரின் முன் சக்கரத்துக்கு வெகு அருகில் அந்தப் பாட்டி ஒருக்களித்துக் கிடந்தார். அன்வர் அவரைப் பிடித்துத் தூக்க முயன்றுகொண்டிருக்க சாலை ஓரத்தில் இருந்து இன்னும் சிலர் காரை நோக்கி அவசரமாக ஓடி வரத் தொடங்கினார்கள்.

ராதிகாவின் வீட்டிலிருந்து அவள் பிரின்சிபலாக வேலை செய்யும் பள்ளிக்குப் பத்து கிலோமீட்டர் தூரம். செல்ல வேண்டியது பெரும்பாலும் அகலமான சாலையில்தான் என்றாலும் இந்த ஒரு இடத்தை மட்டும் அந்தச் சிற்றூரின் குறுகிய சாலையில் கடக்க வேண்டியிருக்கும். அது ஒரு குறுக்கு வழி. தூரம் குறையும் என்பதால் அவ்வப்போது அன்வர் அதைச் செய்வான். அந்த இடத்தில் ஒரு டீக்கடை, மளிகைக்கடை உட்பட நான்கைந்து சிறிய கடைகள் இருக்கும். கடைகளில் இருந்தவர்களும் கார் பிரேக் பிடித்ததால் எழுந்த சத்தத்தால் கவரப்பட்டுக் கூடிவிட்டார்கள்.

அன்வருக்கு வாய்த் துடுக்கு கொஞ்சம் அதிகம். எகத்தாளமாக ஏதாவது சொல்லி விடுவான். காரில் விழுந்திருப்பது ஒரு மூதாட்டி வேறு. உள்ளூர்க்காரர்களிடம் அவன் ஏதும் பேசப் போக பிரச்னையாகிவிடும்.

“அன்வர் நீ வாயை மூடிக்கிட்டு இரு நான் பேசிக்கறேன்” என்று அடிக்குரலில் எச்சரித்தபடி விழுந்து கிடந்த பெண்ணைப் பார்த்தாள் ராதிகா. அவருக்குப் பெரிதாக அடி எதுவும் படவில்லை. எங்கும் ரத்தக்காயம் இல்லை. அவளுக்குள் ஒரு நிம்மதி பரவியது. அன்வர் சொன்னது போல் அத்தனை தள்ளாத மூதாட்டியும் இல்லை. வயது அறுபதிலிருந்து எழுபதுக்குள் இருக்கலாம். அவராகவே எழுந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தார்.

அதற்குள் பல குரல்கள் கேட்கத் தொடங்கின. ஆனால் யாரும் கோபத்தில் குரல் உயர்த்தவில்லை. ராதிகாவின் திருத்தமான உடையும் தோற்றமும் உடனே அவள் காரிலிருந்து இறங்கி உதவிக்கொண்டிருந்த விதமும் அவர்களை அமைதிப்படுத்தியிருந்தது. தவிர அந்தப் பெண்மணிக்கு அப்படி ஒன்றும் பெரிய அடிபட்டிருப்பது போல் தெரியவில்லை.

“கெளவி… சித்த நேரம் கழிச்சுப் போன்னு சொன்னா கேக்கறயா… அதுக்குள்ள எறங்கி வண்டி வாரதக் கூடப் பாக்காம ஓடாட்டி என்ன? ”

அக்கறையாக அவரைத் திட்டிக்கொண்டிருந்தவரின் முண்டா பனியனையும் அதில் இருந்த கறைகளையும் பார்த்து அவர்தான் டீக்கடைக்காரர் என்பதைப் புரிந்து கொண்டாள் ராதிகா. அங்கே இருந்துதான் பாட்டி சாலையில் இறங்கியிருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அந்தப் பாட்டி அறிமுகமானவர்தாம் என்பதையும் புரிந்துகொண்டாள். பாட்டி மெல்ல எழுந்து நிற்க ராதிகா அவர் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அந்த டீக்கடையின் மர பெஞ்சில் உட்கார வைத்தாள். அந்தக் கடையின் படிகள் முடியும் இடத்திலேயே சாலை ஆரம்பித்ததை வைத்து என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது.

“பெருசு திடீர்னு எறங்கி காருக்குள்ள வந்துருச்சு… நான் மட்டும் பிரேக் போடலைன்னா…”

யாரிடமோ சொல்ல ஆரம்பித்த அன்வரை ஒரு பார்வையில் அடக்கினாள் ராதிகா. பாட்டி அன்வர் சொன்னதை ஆமோதித்தார்.

“அட ஆமாங்கண்ணு. நாந்தான் எதோ நாவகத்துல கெரவம் ரோட்டப் பாக்காம எறங்கீட்டேன். கொஞ்சம் மயமயன்னு இருந்துச்சு. கண்ணாடி வேற போடலயா” என்றபடி கண்களைச் சுருக்கி ராதிகாவின் முகத்தைப் பார்த்தார் பாட்டி. அதற்குள் டீக்கடைக்காரர் ஒரு ப்ளாஸ்டிக் டம்ளரில் தண்ணீரைக் கொண்டு வந்து தர அதை வாங்கிக் குடித்தார்.

“ஆமா.. கண்ணுல போட்டுக்கிட்டே இருந்தா தேஞ்சு போயிரும் பாரு.. அதையும் பொட்டிக்குள்ள வெச்சுப் பூட்டி வெச்சிரு…” என்றார் டீக்கடைக்காரர் உரிமைக் கோபமாக. ராதிகா இப்போதுதான் பாட்டியை நன்றாகப் பார்த்தாள். அந்த முகத்தில் ஏதோ ஒரு வித அமைதியும் அதைத் தாண்டிய வெள்ளந்தித்தனமும் இருந்தன. அளந்து வரைந்து வைத்தது போல நெற்றியின் இரண்டு பக்கமும் சில சென்டிமீட்டர் அகலத்துக்குக் கோடிட்டிருந்த நரை. சற்றே பெரிய பொட்டு இன்னும் வசீகரத்தைக் கூட்டியது. இளம் வயதுக்கு இன்னும் பேரழகாக இருந்திருப்பார் என்று அவளுக்குத் தோன்றியது. நூல் புடவை என்றாலும் சுத்தமாக திருத்தமாக இருந்தது.

“அட ஆறுமுவா… நாந்தான் முந்தாநேத்தே சொன்னனுல்ல… கண்ணாடி ஒடஞ்சு போச்சுரா. ஒரு நூலைக் கட்டி போட்டுட்டு இருந்தனா அதுவும் அந்து போச்சு. இங்கபாரு…”

டீக்கடைக்காரரிடம் சமாதானம் சொல்லியபடியே பாட்டி இடுப்பிலிருந்த சுருக்குப் பையை எடுத்துப் பிரித்து அந்த மூக்குக் கண்ணாடியை எடுத்தார். ஒரு காது கழன்று தனியாக வந்திருந்தது. ராதிகா கேட்டாள்.

“பாட்டி ஊடு எங்கீன்னு சொல்லுங்க.. நாங் கொண்டாந்து உட்டுட்டுப் போறேன்”

பள்ளியில் சுத்தமாக தாட் பூட் ஆங்கிலத்தில் பேசும் ராதிகா மேடம் உள்ளூர்க்காரர்களிடம் கொங்குத் தமிழுக்கு எளிதில் தாவி விடுவதை அன்வர் எப்போதும் ஆச்சரியமாகப் பார்ப்பான். அது அவர்களோடு ஓர் உடனடிப் பிணைப்பை ஏற்படுத்திவிடும். பேச்சு மட்டுமல்ல, இந்தக் கனிவும் அன்பும் பள்ளியின் வாசல் தாண்டி நுழையும் வரைதான். அதன் பிறகு அவளுக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதுவும் அவனுக்குத் தெரியும். அவளுக்குக் கோபம் வருகிறதென்றால் அதற்கொரு காரணம் இருக்கும். ஆனால், அன்பு செலுத்த ராதிகாவுக்குக் காரணம் ஒன்றும் தேவையில்லை.

“அட எனக்கொண்ணும் ஆவுல சாமி. சித்த நேரம் இப்படி உக்காந்து பளம பேசிப்போட்டுப் பொடுவு பொடுவுன்னு போயிருவேன். நீ ஏதோ வேலையாப் போவயாட்ட இருக்குது. குருடி உம்பட பொளப்பையும் கெடுக்கப் பாத்தேன். நீ கெளம்பு நாம் பாத்துக்கறேங் கண்ணு”

பாட்டி இப்போது தெம்பாக உட்கார்ந்து பேசினார். அவரிடம் எந்தத் தடுமாற்றமும் தெரியவில்லை.

“ஆமாங்க மேடம். நீங்க கெளம்புங்க. கெளவிக்கு ஒண்ணும் வெட்டி முறிக்கற வேலை இல்லை”

சொல்லிவிட்டு ஆறுமுகம் தனது டீ ஆற்றும் கூண்டை நோக்கி நடந்தார். ராதிகா பாட்டியை இன்னொரு முறை பார்த்தாள். அவர் பொறுமையாக அந்தக் கண்ணாடியின் உடைந்த பகுதியில் மீண்டும் நூல் சுற்றிச் சரி செய்ய முயன்று கொண்டிருந்தார். கைகளில் விபத்துக்குப் பிறகான சிறு நடுக்கம். அந்த இயலாமையையும் முதுமையையும் பார்க்கப் பார்க்க அவளுக்கு என்னவோ செய்தது.

“பாட்டி… அந்தக் கண்ணாடியக் கொண்டாங்க. நான் சரி பண்ணிக் கொண்டாந்து குடுக்கறேன்”

ராதிகா இப்படிக் கேட்டதும் அன்வர் முனகினான். ராதிகா மேடத்துடன் நான்கு ஆண்டுகள் பயணித்திருக்கிறான் என்பதால் இப்படி ஏதாவது நடக்குமென்று அவனுக்குத் தெரியும். அவன்தான் இனி அதைக் கொண்டு போய் சரி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சலித்துக்கொண்டே செய்தாலும் நாள்கள் செல்லச் செல்ல இது போல இயலாதவர்களுக்கு உதவுவதில் அளவற்ற இன்பம் இருப்பதை அவனும் உணர்ந்திருந்தான்.

“அட அதெல்லாம் வேண்டாங் கண்ணு. தங்கராசன் வந்தா குடுத்து உட்டு மாத்திக்கறேன். எம்பட தங்கச்சி பையன்தான். சந்தையில பொரிக் கட போட்டுட்டு ஊரூரா ஓடீட்டுக் கெடக்கறான். என்னுமோ ரெண்டு வாரமா ஆளக் காணாம் போ. நேரங் கெடைக்கறப்பதான அவனும் வருவான் பாவம்”

ஆனால் பாட்டியின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவர் சொல்லும் சமாதானத்துக்கு அவரே சமாதானம் ஆகவில்லை என்று உணர்த்தியது. அவர் கையிலிருந்த கண்ணாடியை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள் ராதிகா.

“அய்யோ எதுக்கு கண்ணு…”

“மூச்.. நீங்க பேசக்கூடாது” என்று பாட்டியை அதட்டியபடி அன்வரிடம் கண்ணாடியை நீட்டினாள் ராதிகா. அவன் சிறிய முறைப்போடு அதை வாங்கி வைத்துக்கொண்டான். மதியம் சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் காருக்குள் ஒரு தூக்கம் போடுவான். அது போச்சு.

பாட்டிக்கு முகம் மலர்ந்தது. அந்தச் சிரித்த முகம் இன்னும் அழகாக இருந்தது.

“சரி பாட்டி.. எனக்கு ப்ரேயருக்கு நேரமாச்சு. நாங் கெளம்பறேன்.. கண்ணாடியச் சரி பண்ணி இந்த அன்வர் கிட்ட குடுத்து உடறேன். நீங்க பாத்து நெதானமா ஊட்டுக்குப் போங்க”

“அட நாம் போய்க்கறேந் தங்கம்.. நீ போயி உன்ற வேலையென்னமோ அதப் பாரு”

ராதிகாவுக்குப் பள்ளி செல்லும் வரை பாட்டியின் நினைவாகவே இருந்தது. பாட்டியிடம் ஏதோ ஓர் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. அந்த முகத்தில் ஒரு தூய அன்பு தெரிந்தது. அது பார்த்த நொடியில் தன்னைப் பாட்டியோடு பிணைத்துவிட்டது போல் தோன்றியது. இல்லாவிட்டால் இத்தனை வண்டி வாகனங்கள் ஓடும் சாலையில் தன்னுடைய வண்டியில் அவர் ஏன் வந்து விழ வேண்டும்?

காரில் ஏறியதும் “அன்வர்” என்றாள். அன்வர் புரிந்துகொண்டதுபோல் கும்பிட்டான்.

“சரிங்க மேடம். மத்தியானமே போய் கண்ணாடியைச் சரி பண்ணிக் கொண்டு போய்க் குடுத்துட்டு வந்தர்றேன். சாவுகிராக்கி இந்நேரம் நம்மளை ஸ்டேசன்ல கொண்டு போய் உக்கார வெச்சிருக்கும். நீங்கென்னடான்னா அதை நீவியுட்டு கொஞ்சீட்டு இருக்கறீங்க”

“டேய்.. இன்னொரு தடவ பாட்டிய சாவுகிராக்கின்னு சொன்னா அடிச்சுப் போடுவன் பாத்துக்க”

இப்படியெல்லாம் துடுக்காகப் பேசினாலும் ராதிகா இப்படிச் செய்யும் அத்தனை உதவிகளுக்கும் அவன்தான் முன்னால் ஓடுவான். ஆனாலும் ராதிகாவின் உதவி செய்யும் குணத்தை அவ்வப்போது அப்படிச் சீண்டுவான். அன்று மாலையே கண்ணாடியைச் சரி செய்து கொடுத்துவிட்டதாகச் சொன்னான்.

“பாட்டியைப் பாத்தியாடா?”

அவன் பாட்டியின் வீட்டுக்குப் போயிருந்தால் அங்கே வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நினைத்திருந்தாள் ராதிகா.

“இல்லைங்க மேடம். பாட்டி அங்க இல்லீங்க. காரைப் பாத்ததுமே டீக்கடைக்காரர் எறங்கி வந்தாரு. பாட்டி தெனமும் அங்கதான் வந்து உக்காந்திருக்கும். வந்தா நான் குடுத்தர்றேன்னு சொல்லி வாங்கி வெச்சுக்கிட்டாரு”

அடுத்த நாள் அந்த வழியாக வரும்போது டீக்கடை முன்பாக காரை நிறுத்தச் சொன்னாள் ராதிகா.

ஆறுமுகம் இறங்கி வந்தார்.

“கண்ணாடியைக் குடுத்துட்டனுங் மேடம். கெளவிக்கு அத்தன சந்தோசம் போங்க” என்றார்.

“ஏனுங்கண்ணா.. பாட்டி ஊட்டுல யாரும் இல்லீங்களா? அவ்வளவு வசதி இல்லீங்களா?”

டீக்கடைக்காரரின் முகம் உடனே மாறியது.

“அட நீங்க வேறைங்க மேடம்.. கெளவிக்கு என்ன கேடு? அஞ்சு ஏக்கரா தோட்டம் இருக்குது. தென்னமரம் காய்ப்புல இருக்குது. அதையெல்லாம் குத்தகைக்கு உட்டுக்கிட்டு நல்லாத்தான் இருக்குதுங்க. என்ன இருந்து என்ன கெரவம்… ரெண்டு பசங்களப் பெத்து வளத்தி ஆளாக்கி உட்டுப்போட்டு இன்னைக்கி ஆருமில்லாம தனியா இருக்குது. அதெல்லாம் பெரிய கொடுமைங்க மேடம்”

“ஏன் தனியா இருக்குது?”

“பசங்க ரெண்டு பேரும் அமெரிக்காவுல நல்லா வசதியா புள்ள குட்டியோட இருக்கறானுங்க. ஊட்டுக்காரர்தான் கூட இருந்தாருங்க. நல்ல பாட்டாளி. தறியெல்லாம் போட்டிருந்தாரு. அய்யனும் ஆயாளும் டிவிஎஸ்சுல சோடி போட்டுக்கிட்டுப் போறதும் வாறதும் பாத்தா நம்முளுக்கே பொறாமையா இருக்குமுங்க மேடம். நாலு வருசம் முன்னாடி என்எச்சுல போவையில அடிபட்டுப் போயிட்டாரு. ஆனா அப்பன் செத்த எழவுக்கு வந்துட்டுப் போனதுக்கப்பறம் பசங்க ஒரு தடவையோ ரெண்டு தடவையோ வந்தானுங்க. தங்கராசுன்னு கெளவியோட தங்கச்சி பையன். ஏதாச்சுமுன்னா அவந்தான் அப்பப்ப வந்து பாத்துக்கறான். அதுக்கான பணமெல்லாம் பசங்க கரெக்டா அனுப்பியுட்டுருவாங்க. பிரச்சனை இருக்குதுன்னு கெளவி சொன்னாத்தான மேடம். இதுக்கும் ஊருப்பட்ட வீம்பு”

“வீடு எங்க இருக்குது? நாம் போனா பாட்டியை இப்ப பாக்க முடியுமா?”

“அட எதுக்குங்க மேடம். அது கொஞ்சம் உள்ளாற போவோணுங்க. நீங்க போங்க நாளைக்கு இதே நேரத்துல கடையில வந்து உக்காரச் சொல்றேன். வேற என்ன வேலை கெளவிக்கு” என்றார் ஆறுமுகம்.

அதே போல மறுநாள் காரை நிறுத்தியதும் பாட்டி கடைக்குள் இருந்து இறங்கி வந்தார். கண்ணாடி அணிந்திருந்தபோது அவர் நடை எந்தவித சிரமம் இல்லாமல் உறுதியாகத் தெளிவாகவே இருந்தது.

“அங்கயே இருங்க பாட்டி நான் வரேன்”

என்றபடி ராதிகா இறங்கிச் சென்றாள். இருவரும் டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார்கள். அந்தச் சந்திப்பை தெருவே வேடிக்கை பார்த்தது. அங்கிருந்தவர்கள் அவளைப் பார்த்து நட்பாகப் புன்னகைத்தார்கள். ராதிகாவைக் கொஞ்சம் அறிந்தவர்கள் அருகில் இருந்தவர்களிடம் கிசுகிசுத்தார்கள். ஆறுமுகம் அலுத்துக்கொண்டார்.

“வாங்க மேடம்… அய்யோ நீங்க இருக்கச் சொன்னீங்கன்னு தெரியாம சொல்லிப்போட்டேன். கெளவி வெடிஞ்சும் வெடியாம வந்துருச்சு. கடை தொறந்ததுல இருந்து இங்கதான் உக்காந்துட்டு ரோட்டப் பாத்துக்கிட்டே எப்ப வருவீங்க எப்ப வருவீங்கன்னு எம்பட உசுரை எடுத்துட்டு இருக்குது”

“வேலையப் பாருடா நீயி” என்று செல்லக் கோபமாக அதட்டினார் பாட்டி. அந்தத் தெருவில் பலர் மீதும் பாட்டிக்கு ஒரு பிரியம் இருந்ததை ராதிகா உணர்ந்தாள்.

பாட்டியின் கரங்கள் ராதிகாவின் கைகளைப் பிடித்துப் பொத்தி வைத்துக் கொண்டன. அதில் ஓர் உரிமை கலந்த ஏக்கத்தை அவளால் உணர முடிந்தது.

“கண்ணாடி இப்ப கரெக்டா இருக்குதா பாட்டி உங்களுக்கு”

“ஆமாங் கண்ணு… ஒரு வாரமா தடுமாறீட்டுக் கெடந்தேன் போ. நல்லவேளையா உம்பட காருல வந்து உளுந்தேன். இல்லாட்டி எம்பட கண்ணாட்டி உன்னையப் பாத்திருப்பனா?”

“எது நல்லவேளையாவா…” என்று சூடானான் அன்வர்.

“அப்படித் தட்டுத் தடுமாறி எனத்துக்கு இங்க வரணும் நீ. பொட்டாட்ட ஊட்டுலயே பத்தரமா இருக்கலாமுல்ல” என்றான். பாட்டி ராதிகாவுக்குப் பதில் சொன்னார்.

“ஏஞ்சாமி.. இந்த ரோட்டுலதானடா நாம் பொறந்தேன் வளந்தேன்.. அதே ரோட்டுல செத்தா செத்துட்டுப் போறேன். இல்ல கேக்கறேன்… நாங்க எல்லாம் இல்லாம இந்த ரோடு எங்க இருந்து வந்துச்சு? ஏன்டா… நானும் எந்நேரந்தான் அட்டாலியைப் பாத்துட்டே படுத்திருக்கறது? காட்ட குத்தகைக்கு எடுத்திருக்கறவன் பவானிக்காரன். வாரத்துல ரெண்டு நாளு மட்டும் வருவான். வந்தா அவன் பண்ணையத்தப் பாப்பானா இல்ல எம்பட அனத்தலைக் கேப்பானா? ஏதோ இங்க ஊருக்குள்ள வந்தா நாலு பேருகிட்ட நாலு பளம பேசீட்டு உக்காந்திருக்கலாம். அதையுடு… நீ என்னுமோ ஸ்கூல்ல டீச்சராமா? ஆறுமுவன் சொன்னான்”

பள்ளிக்கூடத்தின் பெயரைச் சொல்லி அதன் பிரின்சிபல் என்றாள் ராதிகா. பாட்டி ஆசையாக அவள் நெற்றியின் இருபுறமும் வருடி நெட்டி முறித்தார்.

“போச்சாது போ… பொட்டப்புள்ள இத்தன தூரம் படிச்சு வந்து நிக்கறே பாரு… எனக்கெல்லாம் அஞ்சாவதுக்கப்பறம் படிப்பே ஏறுல… இப்பக் கூட பையன் அதென்னுமோ செல்லு போனு அது வாங்கிக் குடுக்கறேங்கறான். ஒண்ணுமே தெரியாம அத வாங்கி அடப்பமாட்ட எதுக்கு சொமந்துக்கிட்டுத் திரியோணும்”

“பேசாம பையன் கூட அமெரிக்காவே போயறலாமுல்ல பாட்டி.. இங்க ஏன் இப்படித் தடுமாறிக்கிட்டுக் கெடக்கறீங்க”

“அட நீ வேற மயிலு… ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மூலை. அவனுங்களுக்குப் பொழுது வெடிஞ்சா ஆயிரம் வேலை. பேரனும் பேத்தியும் பள்ளிக்கோடம் போயிரும். மருமவளுங்களும் வேலைக்குப் போறாங்க.. நாம எனத்துக்கு எடைஞ்சலா? அதென்னுமோ பயங்கரமான குளுருங்கறாங்க. அங்க போயிப் படுத்துட்டமுன்னு வெய்யி.. அவங்க நிம்மதியும் போயி எம்பட நிம்மதியும் போயி… நம்முளுக்கென்ன கண்ணு காலம் போன காலத்துல மூணு வேளை சோறுதான. அது இங்க தின்னா என்ன அமெரிக்காவுல தின்னா என்ன?”

“ஆமா.. உன்னய வா வான்னு கூப்படறாங்க அங்கே” என்றார் ஆறுமுகம் இடைமறித்து.

“மேடம்.. கூட்டீட்டுப் போயி வெச்சுக்காட்டிப் பரவால்ல… இந்தக் கெளவிய ஒரு தடவ கூட அங்க கூட்டீட்டுப் போனதில்லை. மூத்த மருமவ ஊட்டுல சம்பந்திங்க ரெண்டு பேரும் அதே வேலையா அமெரிக்கா போயிட்டு வந்துட்டு இருக்கறாங்க. லீவுக்கு வந்தா ஒண்ணு ரெண்டு நாளு வந்து எட்டிப் பாப்பாங்க. இங்க கக்கூசு சரியா இல்லைன்னு சொல்லீட்டு அந்த மருமவ வாரதே இல்லை. அங்க போக வர ரெண்டு லச்சம் செலவாகுமுன்னு மகனுங்க சொன்னதும் கெளவியும் வாயைப் பொளந்துருச்சு. அப்பறம் அங்க இருக்கற கக்கூசு சரியில்லைன்னு இது சொல்ல ஆரம்பிச்சிருச்சு”

“ஆமாண்டா காசு என்ன மரத்துலயா காய்க்குது?” என்றார் கண்ணாடிப் பாட்டி தன் மகன்களை விட்டுக் கொடுக்காமல்.

“அங்க மரத்துலதான் காய்க்குது. ஒரொருத்தனும் மாசம் பத்து பாஞ்சு லச்சம் சம்பாரிப்பான் தெரியுமா உனக்கு. ஒரு டிக்கெட்டு எடுக்க மாட்டானா அவன்?”

“ஆமா நீ கண்டே பத்து லச்சம் பாஞ்சு லச்சம். பொச்ச மூடீட்டு டீயாத்தற வேலையைப் பாரு”

ராதிகாவுக்குச் சங்கடமாக இருந்தது. உடனே பேச்சை மாற்றினாள்.

“பாட்டி… நான் இந்த வழியாப் போறப்ப எல்லாம் நின்னு உங்களைப் பாத்துட்டுப் போறேன். எங்கூடப் பேசுவீங்களா?”

“அய்யோ கண்ணாட்டி… உங்கிட்டப் பேசாம நான் யாருகிட்டப் பேசறது. இந்த ஆறுமுகங்கிட்டயா?”

“கெளவி… உனக்கு வந்த நேரம் பாரு… அப்பறமா எங்கிட்டதான வருவே.. அப்ப வெச்சுக்கறேன் இரு”

ஆறுமுகமும் கண்ணாடிப் பாட்டியும் ஒருவரை ஒருவர் அப்படி சீண்டிக் கொள்வது ராதிகாவுக்கு அத்தனை அழகாக இருக்கும். அப்படி வசை பாடுவதில் ஒரு நட்பும் வாஞ்சையும் இருக்கும்.

அதன் பிறகு அந்த வழியாகப் போகும் ஒவ்வொரு நாளும் ராதிகாவின் கார் அங்கே நிற்கும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தாம் அவர்களுடைய உரையாடல் இருக்கும். அதற்கு மேல் ராதிகாவுக்கும் நேரம் கிடைக்காது. ராதிகா சில நாள்களில் தான் கொண்டு சொல்லும் மதிய உணவை இன்னொரு கூடுதல் பாத்திரத்தில் போட்டு எடுத்துச் செல்வாள். பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போவாள். மறுநாள் பாட்டி பதிலுக்குத் தன் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அரைத்து எடுத்து வருவார். பாட்டியின் கையில் எப்போதும் ‘பரணி சில்க்ஸ், ஈரோடு’ என்று எழுதப்பட்ட ஒரு மஞ்சள் பை இருக்கும். ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கவும் இப்படி ஏதாவது ராதிகாவுக்குக் கொண்டு வரவும் அதைத்தான் அவர் பயன்படுத்துவார். அதில் சில நாள்கள் ஒரு சீப்பு வாழைப்பழம் காத்திருக்கும். சில நாள்களில் கத்தரிக்காய், கீரைக்கட்டு என்று மாறிக்கொண்டே இருக்கும். ராதிகாவுக்கு என்ன தேவை என்பது குறித்தெல்லாம் அவர் யோசித்ததாகத் தெரியவில்லை. தன்னிடம் இருப்பதைத் தரவேண்டும் என்ற முனைப்பும் அதில் பொங்கி வழிந்த அன்பும்தான் அவரிடம் தெரிந்தது.  ஒவ்வொரு முறை ராதிகா காரை நிறுத்தும் போதும் ஏதாவது ஒரு பண்டமாற்று நிகழும்.

“பாட்டி நீங்க வந்ததும் அந்தப் பையை டீக்கடை வாசல்ல போர்டுல தொங்க உட்டு வைங்க. அதைப் பாத்து நீங்க உள்ளதான் இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு நான் காரை நிறுத்தறேன். நீங்களும் ரோட்டைப் பாத்துக்கிட்டே கெடக்க வேண்டாம். நானும் நிறுத்தி நிறுத்திப் பாக்க வேண்டாம் பாருங்க நேராப் போயிருவேன்”

அன்று முதல் ஆறுமுகம் டீ ஸ்டாலின்  வெளியே இருக்கும் மடக்கு போர்டில் பரணி சில்க்ஸ் பை தொங்கினால் கண்ணாடிப் பாட்டி உள்ளே இருக்கிறார் என்று பொருள். ராதிகாவின் கார் அதைக் கண்டதும் தானாக நிற்கும். பை தொங்காத நேரங்களில் நிற்காமல் சென்றுவிடும்.

“ரெண்டு பேரும் எதோ கள்ளக்கடத்தல் பண்ற மாதிரி இருக்குதுங்க மேடம்” என்றான் அன்வர் ஒரு முறை.

“அப்படி என்னங்க மேடம் அந்தக் கெளவிகிட்ட பாசம். உட்டா தத்து எடுத்துக்குவீங்களாட்ட இருக்குது”

“டேய் அன்வர்.. யாராவது ரெண்டு வார்த்த பேச மாட்டாங்களான்னு காத்துட்டுக் கெடக்கறது எத்தனை கொடுமைன்னு அனுபவிச்சாதான் தெரியும். எனக்கு நின்னு பேச ஒரு அஞ்சு நிமிசம் ஆவுமா… பாட்டிக்கு அந்த நாள் பூரா சந்தோசம் கிடைக்குமுல்ல”

பாட்டி ஒரு நாள் கருவாட்டுக் குழம்பு வைத்து எடுத்து வந்திருந்தார். அத்தனை சுவையாக இருந்தது.

“கருவாட்டுக் கொளம்பு அருமையா இருந்துச்சு பாட்டி” என்று ராதிகா மறுநாள் சொன்னபோது அவர் முகத்தில் ஒரு வெட்கம் வந்து கூடு கட்டிக்கொண்டது.  படபடவென்று பேசத் தொடங்கிவிட்டார். தன்னிடம் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பாட்டி கருவாடு சமைத்திருப்பாரோ என்று தோன்றியது ராதிகாவுக்கு.

“எனக்கு கருவாடுன்னா உசுரு. தாத்தாவுக்கும் ரொம்பப் புடிக்கும் கண்ணு. கொளம்பு வெச்சா சோத்த அள்ளிப் போட்டுப் போட்டுத் திம்பாரு. சில நாளு கோட்டர் அடிக்கற மும்முரத்துல எனக்குக் கூட மிச்சமில்லாம தின்னு போடுவாரு. அப்பறம் செல்லமா சண்ட வந்துரும். என்னைய சமாதானம் பண்றதுக்கு மறுவடி ஓடிப் போயி கருவாடு வாங்கீட்டு வருவாரு. அடிபட்ட அன்னைக்குக் கூட இதா வந்தர்றேன்னு வண்டிய முறுக்கீட்டுப் போனவரு மறுவடி ஆசுபத்திரி வண்டியிலதான் பொட்டலமா வந்தாரு. அதுக்கப்புறம் கருவாட்டுக் கொளம்பே திங்க முடியாம கெடந்தேன். மயிலுக்குஞ்சு உன்னையப் பாத்ததுக்கப்புறம் உனக்கு வெச்சுக் குடுக்கோணும்னு என்னுமோ தோணுச்சு. அதுதான் வெச்சாந்தேன்”

தன் கணவரைப் பற்றிப் பேசும்போது பாட்டியின் முகத்தில இழையோடிய ஆசை வெட்கத்தை ரசித்தபடி நின்றாள் ராதிகா. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் இடையில் ஓர் அழகான காதல் இருந்திருக்க வேண்டும். முழுக்கைச் சட்டை, வேட்டி அணிந்த கம்பீரமான உயரமான முறுக்கு மீசை வைத்த கரிய உருவம் ஒன்று அவள் மனதில் வந்து போகும். தாத்தா நிஜமாகவே அப்படித்தான் இருந்தாரா என்று அவளுக்குத் தெரியாது. ஆனால், இப்படி ஒரு பாட்டிக்கு அப்படி ஒரு தாத்தாதான் பொருத்தமாக இருப்பார் என்று அவளாக நினைத்துக்கொண்டாள்.

“தாத்தா இருந்த வரைக்குங் கண்ணு… பையனுங்க யாரும் கூட இல்லைங்கற கவலையெல்லாம் எனக்கு இருந்ததே இல்லை. என்னைய அப்படி வெச்சுத் தாங்குவாரு. அதனால நானும் எனக்கு ஒரு மயிராண்டியும் தேவை இல்லைன்னு திமுராதான் இருப்பேன்… ஒண்ணு மட்டுஞ் சொல்றேன் சாமி… தாத்தா ஒரு நாள் கூட என்னையக் கை நீட்டி அடிச்சதில்லதான்… ஆனா ஒரு நாளு நான் செத்து மேல போனா அந்த மனுசனைத் தேடி இழுத்துப் புடிச்சு நாலு அப்பு அப்பி என்னை எனத்துக்கு இப்படி அம்போன்னு உட்டுட்டுப் போனே கருவாயான்னு நிச்சயம் கேப்பேன். இப்ப நான் கருவாட்டுக் கொழம்பு வெச்சா யாரு கூட சண்டக்கட்டித் திங்கறது கண்ணு”

இதைச் சொல்லும்போது பாட்டி உடைந்து அழுதுகொண்டிருந்தார். ராதிகா அவர் கைகளை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டாள்.

“அதான் நான் வந்துட்டேன்ல பாட்டி. இனி நான் வந்தர்றேன் பங்குக்கு”

“நீ வாடா எம்பட ராசாத்தி… உனக்குச் சட்டி சட்டியா வெச்சுத் தாரேன்… கண்ணாட்டி நீ தின்னது போக மிச்சந்தான் எனக்கு”

கண்ணாடிப் பாட்டி ஒவ்வொரு முறையும் விதவிதமாக ராதிகாவை அழைத்துக் கொஞ்சுவார் என்றாலும் அடிக்கடி அவர் வாயில் வருவது கண்ணாட்டி என்பதுதான். அவரிடம் அத்தனை அன்பு கொட்டிக் கிடந்தது, ஒரு சமுத்திரம் போல. அதை அள்ளிக் கொள்வார் யாருமில்லை. தான் மட்டும் சில நிமிடங்கள் நின்று அதை அவசரமாகக் குடித்துவிட்டு ஓடுவது போல இருந்தது ராதிகாவுக்கு. பாட்டியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நிதானமாக ஒரு நாள் முழுக்க வைத்து பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அதற்கான வாய்ப்பு ஏனோ அமையவில்லை.

இப்போதெல்லாம் பாட்டிக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அவர் ராதிகாவிடம்தான் கேட்கிறார். செருப்பு பிய்ந்து போனாலும் அந்தச் சிறிய ஊரில் கிடைக்காத எந்தப் பொருள் வேண்டுமென்றாலும் அவர் தன் கண்ணாட்டியின் வருகைக்காக்க் காத்திருந்தார்.

இத்தனைக்குப் பிறகும் தனக்கு யார் மீதும் கோபமோ வருத்தமோ இருப்பதாக்க் காட்டிக் கொண்டதில்லை கண்ணாடிப் பாட்டி. அப்படி வன்மமே இல்லாமல் வாழ்வது ஒரு வரம். அனைவருக்கும் அது வாய்ப்பதில்லை. தன்னை வந்து பார்க்காத மகன்கள் மீது கூட அவருக்கு எந்த விதமான கோபமும் இல்லை. பாட்டியைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தோன்றியது ராதிகாவுக்கு. முண்டியடித்துக்கொண்டு முன்னேறியதாக நினைத்துக் கொள்ளும் பொருள்மயமான உலகத்தின் வன்மமும் சுயநலமும் தீண்டாத ஒரு தூய பழைய ஆன்மா பாட்டிக்குள் மிச்சம் இருந்தது.

“தங்கராசன் வந்தா அவன் போனுல கூப்புட்டுக் காட்டுவான். அப்படியே சினிமாவுல காட்டற மாதிரி படம் தெரியுது. பேரனும் பேத்தியும் ஆய் பாட்டின்னு இங்கிலீசுல எதோ கேட்டுப் போட்டு ரெண்டு பழம பேசீட்டுப் போயிரும். நாம் பேசறதும் அதுகளுக்குப் புரியாது. அப்பறம் அதுங்களுக்கும் நம்பகிட்ட பேசறதுக்கு என்ன இருக்குது கண்ணு. பசங்க ரெண்டு பேரும் எம் மேல நல்லா பாசமாத்தான் இருக்கறாங்க கன்ணு. சும்மா வா வான்னா லச்ச லச்சமா ஆவுது வெளயாட்டுக் காரியமா சொல்லு. நானே அதெல்லாம் வேண்டாம்னு சொல்லீருவேன்”

அவர்களை அவர் ஒரு நாளும் விட்டுக் கொடுத்ததே இல்லை. நன்கு பேசிப் பழகிய பிறகு பெரிய மருமகள் மிகப் பெரிய வசதியான இடம் என்றும் அவளுக்குப் பாட்டியைச் சுத்தமாகப் பிடிக்காது என்றும் புரிந்து கொண்டாள் ராதிகா. பாட்டி அதை மறுக்கவில்லை.

“அட எல்லாருக்கும் நம்பளப் புடிக்கோணும்னு என்ன இருக்குது கண்ணு? நம்முளுக்கு மட்டும் பாக்கற எல்லாரையும் புடிக்குதா சொல்லு” என்பார்.

அதைத் தாண்டி அதைக் கிளறுவதில் அவளுக்கு விருப்பமும் இல்லை. பாட்டியின் குடும்ப விவகாரங்களில் அவளுக்கு ஆர்வமும் இல்லை.

பாட்டியைச் சந்தித்து ஆறு மாதங்கள் கழிந்த பிறகு பத்து பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தொடங்கின. வேறு ஒரு பள்ளிக்கு தேர்வுகள் கண்காணிப்பாளராக அவளை அனுப்பியிருந்தார்கள். தன்னுடைய பள்ளிக்கு அவள் தினமும் செல்ல வாய்ப்பு அமையவில்லை. அப்படியே எப்போதாவது  சென்றாலும் அவள் செல்லும் நேரம் மாறிவிட்டது. அந்த நேரத்தில் கண்ணாடிப் பாட்டி அங்கு இருக்கமாட்டார். அவள் கடக்கும் நேரங்களில் பரணி சில்க்ஸ் பையும் தொங்கி அவள் பார்க்கவில்லை.

இரண்டு வாரங்கள் இப்படிக் கண்ணாடிப் பாட்டியைச் சந்திக்காமல் கழிந்ததும் ராதிகாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. டீக்கடை முன்பாக காரை நிறுத்தியதும் ஆறுமுகம் இறங்கி ஓடி வந்தார்.

“கெளவிக்கு ரெண்டு வாரமாக் கொஞ்சம் ஒடம்பு முடியலீங்க மேடம். தங்கராசு ரெண்டு மூணு தடவ ஆஸ்பத்திரிக்குக் கூட்டீட்டுப் போயிட்டு வந்தான். முடிஞ்சாதான் எந்திரிச்சு கடைக்கு வருது. உங்களைக் கேட்டுக்கிட்டே இருக்குது”

“பாட்டி வந்தா சொல்லுங்கண்ணா நாளைக்கு இதே நேரம் மறுபடி வருவேன்னு. எனக்கும் பாக்கணும் போல இருக்குது”

மறுநாள் இவளுக்காக அங்கே காத்திருந்தார் கண்ணாடிப் பாட்டி. அவரிடம் நிறையவே தளர்வு தெரிந்தது. ஆனால், ராதிகாவைக் கண்டதும் அதையும் தாண்டி முகம் மலர்ந்தது.

“ஏங்கண்ணு கெளவியப் பாக்க வாரதே இல்லை. ரொம்பப் போட்டு அறுக்கறணா உன்னைய?”

“இல்லீங்க பாட்டி… எனக்கு இந்த ஒரு மாசம் வேற ஸ்கூல்ல எக்ஸாம் வேலை போட்டிருக்காங்க. இந்தப் பக்கம் அடிக்கடி வர முடியாது. பரிச்சை எல்லாம் முடிஞ்சதும் பாட்டியை தினமும் பாக்க வரேன். சரி உங்களுக்கு ஒடம்புக்கு என்ன?”

“என்னுமோ கேடு சாமி… இருமலு தலைவலின்னு மாத்தி மாத்தி ஏதாவது வருது. கேரு கேருன்னு மூச்சு வாங்குது. சோறு கூட ஆக்க முடீல, தங்கராசன் ஊட்டுல இருந்துதான் வருது. அவந்தான் பாவம் ஆஸ்பத்திரி கூட்டீட்டுப் போயிட்டும் வந்துட்டும் கெடக்கறான். பையனுங்க காரு வெச்சுக் கூட்டீட்டுப் போன்னு காசு குடுத்துட்டானுங்க. அப்பறம் இங்க பாரு எம்பட கண்ணாடி கூட மறுவடி ஒடஞ்சு போயிருச்சு தங்கம்” என்றார். பையிலிருந்து அவர் எடுத்த கண்ணாடியின் காது இந்த முறை துண்டாகவே உடைந்திருந்தது. அப்போதுதான் அவர் முகத்தில் கண்ணாடி இல்லை என்பதை கவனித்தாள் ராதிகா. பாட்டியும் ஒரு அந்தக் கண்ணாடியைப் போலத்தான் கொஞ்சம் உடைந்தது போலிருந்தார்.

“குருடி கண்ணாடி மேலயே பொரண்டு படுத்துட்டனாட்ட இருக்குது”

ஆறுமுகம் இடை மறித்தார்.

“அது ஒடஞ்சு ரெண்டு நாளாவுதுங்க மேடம். நாங்க மாத்திக் குடுக்கறமுன்னு சொன்னா எம்பட கண்ணாட்டிதான் வந்து மாத்திக் குடுக்கணும்னு புடிவாதமா தடவித் தடவி நடந்துட்டு இருக்குது கெளவி” என்றார் ஆறுமுகம்.

ராதிகா புன்னகையோடு அதை வாங்கிக்கொண்டாள்.

“உடனே செரி பண்ணி இங்க கடையில கொண்டாந்து குடுத்துரச் சொல்றேன் பாட்டி. இப்ப எனக்கு நேரமாவுது கெளம்பட்டுமா”

“போவோணுமா சாமீ” என்று இழுத்தார் பாட்டி. அவருக்கு மனமில்லை என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் ராதிகா போகாமல் அந்தப் பள்ளியில் பொதுத் தேர்வுகள் நடக்க முடியாது.

“இன்னும் பத்தே நாள் பொறுத்துக்கங்க பாட்டி. மறுபடி ஓடி வந்துருவேன். அப்பறம் உங்க காதல் கதையெல்லாம் சொல்லுவீங்களாமா…”

கண்ணாடிப் பாட்டி இரண்டு கைகளாலும் ராதிகாவின் கன்னங்களை வருடினார்.

“சாமி.. நீ உம்பட வேலையெல்லாம் முடிச்சுப் போட்டு மறுபடி எப்ப வாரயோ வா… ஆனா அப்படி வாரப்ப எனக்கு ஒண்ணு பண்டுவியா?” என்றார்.

“சொல்லுங்க பாட்டி”

“கொஞ்சூண்டு கருவாட்டுக் கொழம்பு வெச்சு எடுத்துட்டு வாரயா? சுருக்குன்னு எதாச்சுத் திங்கலாமாட்ட இருக்குது”

“கண்டிப்பா கொண்டாரேன். ஆனா எனக்கு உங்களை மாதிரியெல்லாம் வெக்கத் தெரியாது. தெரிஞ்ச மாதிரி வெச்சு எடுத்துக்கிட்டு வரேன்”

“கண்ணாட்டி அதெல்லாம் உம்பட கையால செஞ்சா ருசியாத்தான் இருக்கும்… செரி.. நேரமாவுது நீ போயிட்டு வா சாமி.. கெளவி இப்பிடித்தான் பொளப்பில்லாம பேசீட்டு இருப்பேன்”

கடை வாசலில் பரணி சில்க்ஸ் பையுடன் நின்று ராதிகாவின் கார் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணாடிப் பாட்டி.

அதன் பிறகு ராதிகாவின் நாள்கள் இன்னும் பரபரப்பாக மாறிப் போயின. மார்ச், ஏப்ரல் மாதங்கள் எப்போதுமே அப்படித்தான். அவள் வேலை செய்யும் பள்ளியில் பொதுத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்தன. தேர்வு மையக் கண்காணிப்பாளராக வேறு பள்ளிக்கும் செல்ல வேண்டியிருந்தது. அது தவிர தனிப்பட்ட இழவு இடைஞ்சல்கள் என்று கண்ணாடிப் பாட்டியைச் சில நாள்கள் சுத்தமாக மறந்தே போய்விட்டாள். திடீரென்று தான் வாங்கி வந்த பாட்டியின் கண்ணாடி நினைவுக்கு வந்தது. பதறிப் போய் அன்வரை அழைத்தாள். அவளுக்குத் தன்மீதே கோபம் வந்தது.

“அன்வர் வண்டி டேஷ்போர்டுல பாட்டியோட கண்ணாடி இருக்குது. அதே பவருக்குப் புதுசா ஒரு ஃப்ரேம் போட்டு பாட்டிக்குக் கொண்டு போயிக் குடு. அப்படியே பழசையும் சரி செஞ்சு ஆறுமுகத்துக்கிட்ட குடுத்து வெச்சிரு. மறுபடி பாட்டி கண்ணாடியை ஒடச்சா ரிப்பேர் பண்ற வரைக்கும் கண்ணாடி இல்லாம அலைய வேண்டாமுன்னு சொல்லிக் குடுத்துட்டு வா”

ஆஹா ரொம்பத்தான் என்ற பார்வையுடன் கண்ணாடியை வாங்கிச் சென்றான் அன்வர்.

“குடுத்துட்டேன் மேடம். சாவுகிராக்கி இப்பல்லாம் கடைக்கு வரதில்லையாம். ஒடம்பு கொஞ்சம் சரியில்லாமதான் இருக்கும் போல. கண்ணாடியை ஊட்டுல கொண்டு போயிக் குடுத்துட்டு வரேன்னு டீக்கடைக்கார அண்ணன் சொன்னாரு”

அதன் பிறகு சில நாள்களுக்கு அவள் வேலைப்பளு இன்னும் அதிகரித்தது. ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுவதுதான் தெரியும். பிறகு அடுத்தநாள் எழுந்து ஓட்டம் தொடங்குவது தெரியும். அத்தனை களைப்பாக இருக்கும். ஒரு நாள் அப்படி உறங்கத் தொடங்கி சில மணி நேரங்களில் அவள் செல்போன் அலறியது. அழைத்தது பள்ளி ஹாஸ்டலின் வார்டன். இரவு ஒரு மணி. அந்த நேரத்தில் போன் வருகிறது என்றால் ஏதாவது அவசரமாகத்தான் இருக்கும். உடனே எடுத்தாள்.

“சொல்லுங்க சார்”

“மேடம் சத்யா ஹாஸ்பிடல்ல இருந்து கோபால்னு ஒரு டாக்டர் பேசுனாருங்க. உங்ககிட்டே பேசணும்னு சொன்னாருங்க. நான் மொதல்ல உங்ககிட்ட பேசிட்டு நம்பர் கொடுக்கறேன்னு சொன்னேனுங்க”

“என்ன விஷயம்னு சொன்னாரா”

“இல்லைங்க மேடம். ஏதோ எமர்ஜென்சின்னு மட்டும் சொன்னார்”

“நம்பர் குடுங்க நானே பேசறேன்”

அவரிடம் எண் வாங்கி அழைத்தாள்.

“வணக்கம் மேடம். பேத்தி நம்ம ஸ்கூல்லதான் படிக்கறாளுங்க. அவளோட டைரியில இருந்து நம்பர் எடுத்துக் கூப்பிட்டேன். அது வார்டனுக்குப் போச்சு. என்கிட்டே ஒரு பேஷண்ட் அட்மிட் ஆகியிருக்காங்க. வயசான ஒரு அம்மா. அவங்க திரும்பத் திரும்ப ஒருத்தரைப் பாக்கணும்னு ப்ளாபர் பண்றாங்க. அவங்களும் கூட வந்திருக்கறவங்களும் டிஸ்க்ரைப் பண்ணது, அப்புறம் அந்த ரூட்டு, கார் இதெல்லாம் வெச்சுப் பாத்தா நீங்களா இருக்குமோன்னு ஒரு சந்தேகம்.”

அப்போதுதான் கண்ணாடிப் பாட்டிக்கு இதுவரை தன்னுடைய போன் நம்பர் கூடத் தெரியாது என்று அவளுக்கு உறைத்தது.

“ஆமா டாக்டர்… அது நான்தான்.  சொல்லுங்க.. அவங்களுக்கு எப்படி இருக்கு இப்போ”

டாக்டர் சில நொடிகள் தயங்கினார்.

“கொஞ்சம் சீரியஸ்தான் மேடம். மதியம் வரைக்கும் நல்லா கான்சியஸ்ல இருந்தாங்க. திடீர்னு பல்ஸ் ரொம்ப இறங்கிடுச்சு. அவங்க தங்கச்சி பையன்னு ஒருத்தர் கூட இருக்கார். ஆனா நெருங்கினவங்க யாரும் பக்கத்துல இல்லை. அந்தம்மா உங்களைப் பத்திதான் கண்ணாட்டி, கண்ணாட்டின்னு சொல்லி கேட்டுக்கிட்டே இருந்தாங்க போல. அதான் நானே தேடிப் பாக்கலாம்னு முயற்சி பண்ணேன். நீங்க உடனே ஹாஸ்பிடல் வர முடியுமா?”

இந்த நேரத்தில் எப்படிப் போவதென்று அவளுக்கும் புரியவில்லை.  முதலில் அழுகைதான்  வந்தது. அன்வரை மொபைலில் அழைத்தால் அவன் எடுக்கவில்லை. அன்வரின் மனைவி எண்ணுக்கு அழைத்து அவனை எழுப்பி பேச வைத்தபோது அவன் தூக்கம் கலையாமல் ஏதோ உளறினான். கண்ணாடிப் பாட்டிக்கு சீரியஸ் என்று சொன்னதும் சட்டென்று தெளிவுக்கு வந்தான்.

“அய்யய்யோ.. இப்ப உடனே வரேன் மேடம்” என்றவன் வழக்கமாக வருவதை விட குறுகிய காலத்தில் வந்தான். இருவருமாக மருத்துவமனையை அடைந்தபோது நள்ளிரவு இரண்டு மணி. அங்கே டாக்டர் கோபால் இல்லை. ஆறுமுகமும் தங்கராசுவும் இருந்தார்கள். அங்கே இருந்த இன்னும் சிலர் பாட்டியின் உறவினர்களாக இருக்கலாம்.

ஆறுமுகம் அவளைப் பார்த்ததும் ஓடிவந்தார். அவர் குரல் தழுதழுத்தது.

“கெழவி நம்மளை ஏமாத்தப் பாக்குதுங் மேடம்” என்றார்.

ராதிகா அந்த அறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் அப்படியே அமைதியாகி அவளைப் பார்த்தார்கள். கிழிந்த நாராகப் படுக்கையில் கிடந்தார் கண்ணாடிப் பாட்டி. கண்கள் மூடியிருந்தன. ஆனாலும் கண்ணாடி அணிந்திருந்தார். சலைன் இறங்கிக் கொண்டிருந்தது. பீப் பீப் சத்தத்துடன் இதயத் துடிப்பை அளந்து கொண்டிருந்தது இயந்திரம். நெஞ்சு மெல்ல ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

“கொஞ்ச நேரமா பேச மாட்டேங்கிது. நீங்க போய்க் கூப்பிட்டுப் பாருங்க மேடம்… உங்களைத்தான் கேட்டுக்கிட்டே இருந்துச்சு” என்றார் ஆறுமுகம்.

ராதிகா மனத்தைத் திடப்படுத்திக்கொண்டாள். சத்தமாக ஆரம்பித்தாள்.

“பாட்டி.. நான் ராதிகா வந்திருக்கறேன்.. பாருங்க” என்றாள் குரலின் நடுக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல்.

பாட்டி கண் திறக்கவில்லை.  ராதிகா பாட்டியின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டாள்.

“பாட்டி நான் கண்ணாட்டி வந்திருக்கேன்.. உங்க கண்ணாட்டி…” என்றாள் உரக்க. கண்ணாடிப் பாட்டியின் கண்களுக்குள் விழிகள் உருண்டது போலிருந்தது. பாட்டியின் கண்கள் திறக்க முயற்சி செய்தன.

அங்கே சூழ்ந்திருந்தவர்களிடம் ஒரு திடீர் பரபரப்பு தெரிந்தது.

“ஆயா முழிச்சிக்கிச்சு… ”

“இதுக்குத்தான் உசுரைக் கையில புடிச்சு வெச்சுக்கிட்டுக் கெடந்திருக்குமாட்ட”

விதவிதமான குரல்கள். ராதிகாவின் காதில் எதுவும் விழவில்லை. கண்ணாடிப் பாட்டியின் கண்கள் சிறிதாகத் திறந்து அவள் முகத்தைப் பார்த்தன. ஒரு கை மட்டும் சிறிதளவு உயர்ந்தது. சிரமப்பட்டு தலையை உயர்த்தப் பார்த்தார். ராதிகா படுக்கையில் அமர்ந்து தலையை மெல்லத் தூக்கித் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். கண்ணாடியைக் கழற்றி மடக்கி படுக்கை அருகே வைத்தாள். சுற்றிலும் இருந்தவர்கள் யாரும் அசையவில்லை. ஓர் அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன பாட்டி எங்கிட்ட சொல்லாம இங்க வந்து படுத்துட்டீங்க… நாம்பாட்டுக்கு உங்களை அங்கே டீக்கடைல தேடீட்டு இருந்தேன்”

என்றாள் செல்ல அதட்டலாக. பாட்டியின் கைகள் காற்றில் எழுந்து ஆடின. அவர் ஏதோ சொல்ல முயன்றார். முடியவில்லை.

“பாரேன்.. நாம அத்தனை தட்டுத் தட்டியும் அசையாம கெடந்துது.. இந்தம்மா ஒரு சொல்லு சொன்னதும் முழிச்சுப் பாக்குது”

“நான் யார்னு தெரியுதா” என்றாள் ராதிகா. அவசரமாக ஆமோதித்து பாட்டியின் தலை அசைந்தது.

“ஆள் அடையாளமெல்லாம் தெரியுது பாரு” என்று யாரோ பின்னணியில் ஆச்சரியமாகச் சொன்னார்கள்.

“செரி.. இப்ப பேசாம படுங்க.. எல்லாஞ் செரியாப் போயிரும். ஒரு ரெண்டு நாள்ல ஊட்டுக்குப் போயிரலாம். நீங்க கருவாட்டுக் கொழம்பு வெச்சுக் குடுன்னு கேட்டீங்கல்ல… எல்லாம் சரியாகி ஊட்டுக்கு வந்தாதான் வெச்சுக் குடுப்பேன். சரியா..”

ராதிகா பேசிக்கொண்டே போக பாட்டி அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தார். தாகம் தீர அள்ளி விழுங்கிக் கொள்வது போல. பிறகு போதும் என்பது போல அந்த இமைகள் மெல்ல மூடத் தொடங்கின. சுற்றிலும் இருந்த கருவிகளின் கூச்சல் அதிகரித்தது.

பாட்டியின் நெஞ்சு ஒரு முறை பெரிதாக மூச்சை இழுக்க ஏறியது. அந்த வேகத்தில் உடல் மேலே எழுந்தது. பிறகு இன்னொரு முறை இன்னும் வேகமாக இழுத்தது. அதைத் தொடர்ந்து ஒரு மலர் உதிர்வது போல மெல்லத் தன் மடியில் அவர் அடங்குவதை ராதிகாவால் உணர முடிந்தது. ஒரு மரணத்தின் அத்தனை அருகாமையில் அவள் இதுவரை இருந்ததில்லை. ஆனாலும் எப்படியோ பாட்டியின் உயிர் பிரிகிறதென்று மட்டும் அவளுக்கு அத்தனை தெளிவாகப் புரிந்தது. ட்யூட்டி நர்ஸ் வந்து பல்ஸ் பார்த்துவிட்டு டாக்டரை அழைக்க அவசரமாக வெளியே ஓடினாள்.

கண்ணாடிப் பாட்டியின் நெற்றியில் ஓர் இறுதி முத்தத்தைப் பதித்துவிட்டு அவர் தலையை இறக்கிப் படுக்கையில் வைத்துவிட்டு எழுந்தாள் ராதிகா. அவளுக்கு ஏனோ சுத்தமாக அழுகை வரவில்லை. சொல்லப்போனால் ஒரு வகையில் மனம் நிறைந்திருந்தது போலிருந்தது. இந்நேரம் கண்ணாடிப்பாட்டி தாத்தாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டிருப்பாள் என்று தோன்றியது. மறக்காமல் படுக்கையின் அருகே கழற்றி வைத்திருந்த பாட்டியின் கண்ணாடியை எடுத்துக்கொண்டாள்.

இனிமேல் தனக்கு அங்கே எந்த வேலையும் இல்லை என்பது புரிந்தது போல மெல்ல விலகி நடக்கத் தொடங்கினாள். ஆறுமுகம் அவளைப் பார்த்த பார்வையில் ஒரு நன்றி தெரிந்தது. அன்வர் கண்களைத் துடைத்தவாறே அவளைத் தொடர்ந்தான். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகுதான் பொங்கிப் பொங்கி அழுது தீர்த்தாள் ராதிகா.

இது நடந்து இரண்டு வாரங்கள் சென்ற பிறகு ராதிகாவைப் பள்ளியில் சந்திக்க முன் வழுக்கையும் மெல்லிய தொப்பையுமாக நாற்பது முதல் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்திருந்தார். கூடவே தங்கராசுவும் வந்திருந்தார். கண்ணாடிப் பாட்டியின் மூத்த மகன் சரவணன் என்று தன்னை அவர் அறிமுகம் செய்துகொண்டார். கூட வந்திருந்த பெண்தான் அவருடைய மனைவியாக இருக்க வேண்டும். அவள் மேசையில் பெருமையாக வைத்த தட்டில் பூ, பழம் ஆகியவற்றின் அடியில் ஒரு பட்டுப் புடவையும் ஒரு சிறிய நகைப் பெட்டியும் இருந்தன. ராதிகா கேள்வியாகப் பார்த்தாள்.

சரவணன் சில நொடிகள் அமைதிக்குப் பிறகு தொண்டையைச் செருமிக் கொண்டு பேசினார். அவர் இந்தச் சொற்களைப் பல முறை மனதில் ஒத்திகை பார்த்திருக்க வேண்டும்.

“மேடம்… அம்மாவுக்குக் கடைசி நேரத்துல ரொம்ப சப்போர்ட்டா இருந்தீங்களாம். உங்களுக்கு நாங்க எப்படி நன்றி சொன்னாலும் போதாதுன்னு தெரியும். ஆனா நீங்க தப்பா எடுத்துக்காம இதை ஒரு சின்ன கிஃப்டா நினைச்சுக்கணும். எங்க அம்மாவும் இதுதான் விருப்பப்பட்டிருப்பாங்க” என்றார்.

“சாரி சார்… இதை வாங்கிக்கிட்டா நான் பாட்டி மேல வெச்சிருந்த பாசத்துக்கு அர்த்தம் இல்லாம போயிடும்” என்றாள் நிதானமாக. தனக்குக் கோபம் வரவில்லை என்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“மேடம்…” என்று அவர் பதறி மறுபடி சமாதானமாக ஏதோ சொல்ல ஆரம்பிக்க “சார்.. ப்ளீஸ்.. இதை மட்டும் வற்புறுத்தாதீங்க. உட்காருங்க டீ கொண்டு வரச் சொல்றேன். ஹேப்பியா ஏதாவது பேசுவோம். உங்க பசங்களைப் பத்தி சொல்லுங்க. உங்க தம்பியையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே?” என்று மறுபேச்சுக்கு இடமில்லாமல் உரையாடலைத் தடம் மாற்றி விட்டாள்.

சிறிது நேரம் சம்பிரதாயத்துக்குப் பேசி விட்டு அவர்கள் விடை பெற்று எழுந்தார்கள். பிறர் வெளியேற சரவணன் மட்டும் தயங்கி நின்றார்.

“என்ன சொல்லுங்க சார்”

“மேடம்… அம்மாவுக்குத் திடீர்னு இப்படி ஆயிடும்னு நான் எதிர்பார்க்கலை. அவங்களைக் கூட்டிட்டுப் போயிடணும்னுதான் நினைச்சிருந்தோம். அம்மாதான் வரமாட்டேன்னு புடிவாதம். ஆனா இவ்வளவு சீக்கிரமா…”

ராதிகா சரவணன் மேற்கொண்டு பேசுவதை இடைமறித்தாள்.

“சார்.. இது உங்க குடும்ப விஷயம். பாட்டி உங்க அம்மா. நான் ஒரு மூணாவது மனுஷி. நீங்க எதையும் எனக்கு நியாயப்படுத்தணும்னு அவசியம் இல்லை. எனக்கு நேரமும் வாய்ப்பும் இருந்துச்சு. உங்களுக்கு அது அமையலை. ஒரு வகையில சொல்லப் போனா எனக்குப் பாட்டியோட அத்தனை அன்பும் மொத்தமா கிடைக்க அவங்க இப்படி தனியா இருந்தது கூட காரணமா இருக்கலாம். அதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இன்னொன்னும் தெரிஞ்சுக்கங்க. கண்ணாடிப் பாட்டிக்கு உங்க மேல எல்லாம் எந்தவிதமான கோபமோ வருத்தமோ எப்பவுமே இல்லை. நிம்மதியா போயிட்டு வாங்க” என்றாள்.

மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் சில நொடிகள் தவித்து நின்றவர் ஒரு மெல்லிய நன்றியுடன் வெளியேறியபோது கதவருகே அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டதைக் கவனித்தாள்.

அவள் பார்வை நேர் எதிரே அலமாரியில் இருந்த ஒரு கண்ணாடிப் பேழைக்குச் சென்றது. அங்கே கண்ணாடிப் பாட்டியின் மூக்குக் கண்ணாடி ஒரு பெட்டியில் அழகாகப் பாடம் செய்து வைக்கப்பட்டிருந்தது.