தனித்தனிச் சொற்களாகப் பார்த்தால் ஜார்ஜ் எனப்படும் அந்த பிரித்தானியன் எழுதியிருந்த அனைத்தும் நாகரிகமான சொற்கள்தான். ஆனால் ஒன்றாக சேர்த்துப் படிக்கும்போது அந்த மின்னஞ்சலில் கோபமும் வன்மமும் தெறித்தன. தான் மிகப்பெரிய ஏமாற்றமடைந்திருப்பதாகவும் விமல் வேலை செய்யும் நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு இழுக்கப் போவதாகவும் பெரிய அளவில் நஷ்டஈடு கேட்கப் போவதாகவும் எழுதியிருந்தான். இத்தகைய துரதிருஷ்டவசமான ஒரு நிலைக்குத் தன்னைத் தள்ளியதற்காக வருந்திருந்தான்.

“பாருங்க விமல். சீ இட் யுவர்செல்ஃப். நம்ம மேல கேஸ் போடப் போறதா எழுதியிருக்கான்”

தன்னுடைய பெரிய கணினித் திரையை விமலின் பக்கமாக ஆவேசமாகத் திருப்பினார் சுந்தர். சுந்தர் அவனுடைய மேனேஜர். இன்று வழக்கத்தைவிடப் பல மடங்கு கோபமாக இருந்தார்.

ஜார்ஜின் நிறுவனத்துக்கு நீண்ட காலமாக ஒரு சாப்ட்வேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணிக்கு விமல்தான் பொறுப்பாளன். சென்ற வாரம் அதை ரிலீஸ் செய்தார்கள். அதுவே பல மாதங்கள் தாமதங்களுக்குப் பிறகு நடந்தது. ஆனால் வெளியான மென்பொருள் பலருக்கு வேலையே செய்யவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஜார்ஜின் நிறுவனத்தில் பல புதிய பாதுகாப்பு மென்பொருட்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அதை விமலின்
அணி கணக்கில் கொள்ளவில்லை. ஜார்ஜை அவர்கள் நிறுவனத்தில் புரட்டியெடுக்க அவன் இவர்களிடம் சாமியாடிவிட்டான். அந்த உன்மத்தம் சிஈஓ வழியாக சுந்தருக்கு வந்து
விமலுக்கு இப்போது விபூதி அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

விமல் தயங்கித் தயங்கித் தன் தரப்பு நியாயத்தை சொல்ல முயன்றான்.

“சுந்தர்.. அவங்க ஆஃபீஸ்ல ஒரு சேஞ்ச் நடந்தா
அதை சொல்ல வேண்டியது அவங்கதானே? நமக்கு எப்படித் தெரியும்?”

“நாம கேட்டிருக்கணும் விமல். எனக்கு சமாதானம் சொல்லாதீங்க. ஷிட் ஹேஸ் அல்ரெடி ஹிட் தி ரூஃப். இப்ப டேமேஜ் கன்ட்ரோல்தான் பண்ணனும். நீங்க நாளைக்கே லண்டன் கிளம்புங்க. அவன் கைல கால்ல விழுந்தாவது இந்த ப்ராஜக்டைக் காப்பாத்திட்டு வாங்க”

விமல் ஒரு நொடி திகைத்தான்.

“சுந்தர்.. நாளைக்கா?”

“இன்னைக்கே அனுப்பிடுவேன். டிக்கெட் கிடைக்காது. அதான்”

விமலுக்கு எரிச்சல் வந்தது. யாரைக் கேட்டு இவர் முடிவு செய்தார் என் பயணத்தை?

“நான் போக முடியாது சுந்தர்”

சுந்தரின் முகம் கோபத்தில் சிவக்கத் தொடங்கியிருந்தது.

“விமல் இது சிஈஓகிட்டே இருந்து வந்த ஆர்டர்”

“யாரோட ஆர்டரா இருந்தாலும் முடியாது சுந்தத். என் பாஸ்போர்ட் எக்ஸ்பயரி ஆயிடுச்சு. ரினியூவல் பண்ணனும். இந்த மாசக் கடைசியில டிராவல் வரும்னுதான் நம்ம ப்ளான். அதனால அப்ளிகேஷன் கொடுத்திருக்கேன். இப்போ ப்ராசஸ்ல இருக்கு. அது வந்தாதான் என்னால போக முடியும்”

சுந்தர் தலையை இடம் வலமாக அசைத்தார்.

“ஐ டோண்ட் நோ விமல். எட்டு மில்லியன் பவுண்டு கான்ட்ராக்ட். மேல வரைக்கும் எஸ்கலேஷன் போயாச்சு. ஒரு பாஸ்போர்ட்டைக் கூட அப் டு டேட்டா வெச்சுக்கத் தெரியலை உங்களுக்கு. எல்லாமே சொதப்பல் உங்ககிட்டே”

விமலுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. வெளியே காட்ட முடியாது. இருந்தாலும் அவன் வாய் சும்மா இருக்கவில்லை.

“அவ்வளவு அவசரம்னா நீங்க போயிட்டு வரலாமே சுந்தர்”

சுந்தர் கோபத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருந்தார்.

“ஓஹோ.. நீங்க பண்ணின அலங்கோலத்தை நான் போய்ச் சரி பண்ணனுமா? ஏன் நம்ம சிஈஓவை அனுப்புவோமா? யார் பொறுப்பாளியோ அவங்க போனாதான் அவன் கொஞ்சமாவது இரக்கம் காட்டுவான். உங்களுக்கும் இதோட சீரியஸ்னஸ் புரியும்”

சுந்தர் போக மாட்டார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். எல்லாமே நன்றாக நடக்கும் காலங்களில் உல்லாசப் பயணம் போலச் சென்று வாடிக்கையாளர்களை விருந்துக்கு அழைத்து குடித்து சாப்பிட்டுவிட்டு வருவார். இப்படி இக்கட்டான சூழல் என்று வரும்போது விமல் போன்ற பலியாடுகளை அனுப்பி வைப்பார்.

இந்தப் பிரச்னை வரும் என்று விமல் நான்கு மாதங்கள் முன்பே எச்சரித்திருந்தான். ப்ராஜக்ட் இழுத்துக்கொண்டே போவதால் செலவைக் குறைக்கிறேன் என்று ஆட்களை பாதியாகக் குறைத்துவிட்டார்கள். நான்கு பேர் இருந்த இடத்தில் இரண்டு பேர் டெஸ்டிங் செய்தால் இது போல நடக்கத்தான் செய்யும். ஆனால் இப்போது அவன் தரப்பு நியாயத்தை யாரும் கேட்க மாட்டார்கள். அவன்தான் பறந்து அலைந்து இதை சரி செய்ய வேண்டும். அவனுக்கு இது புதிதல்ல. ஆனால் இப்போது எட்டு மாதக் குழந்தை இன்பா வேறு வீட்டில். அவன் மனைவி அன்பரசி வீட்டிலிருந்தபடியே வேலையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனும் கூட இருந்தால்தான் சமாளிக்க முடியும். ஆனால் இந்த ப்ராஜக்ட் முடிக்க வேண்டி சில மாதங்களாக விமல் இரவு பகலாக அலுவலகத்திலேயே கிடந்தான். அவள் இன்பாவுடன் தனியாக
மல்லுக் கட்டுகிறாள். அது அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

ஒரு வழியாக ப்ராஜக் முடிந்ததாக நினைத்து அடுத்த வாரம்தான் விடுப்பில் வெளியே சென்று வரத் திட்டமிட்டிருந்தார்கள். டிக்கெட் எல்லாம் போட்டாயிற்று. இப்போது இந்த செய்தியை சொன்னால் அவள் எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியவில்லை.

“எப்ப வருது உங்க பாஸ்போர்ட்?”

அவன் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து சுந்தர் சற்றுத் தணிந்தது போலக் கேட்டார்.

“போலீஸ் வெரிஃபிகேஷன்ல இருக்கு சார். நானும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை செக் பண்ணிட்டுதான் இருக்கேன். நாலு நாளா அந்த ஸ்டேஜ்லதான் இருக்கு. அவங்களே வீட்டுக்கு வருவாங்கன்னு சொன்னாங்க”

“நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க விமல்? அவங்க யாரும் வர மாட்டாங்க. நீங்கதான் ஸ்டேஷனுக்குப் போய் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்யணும். சரி உடனே இங்கிருந்து கிளம்பி மொதல்ல அந்த வேலையை முடிங்க. ஒரு அஞ்சு நாள் தள்ளி டிக்கெட் போட சொல்றேன். இப்போ எல்லாம் ரெண்டு மூணு நாள்ல பாஸ்போர்ட் வந்துருது”

வேறு வழியில்லாமல் தலையை ஆட்டிவிட்டு எழுந்து வெளியே வந்தான். அவனுடைய அணியினர் ஏதோ ஒன்றைக் கூட்டமாக நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர். தன் பங்குக்கு யாரையாவது பிடித்துக் கடிக்க வேண்டும போல அவனுக்குத் தோன்றியது. ஆனால் எதுவும் பேசாமல் அவர்களைக் கடந்து வெளியே வந்தான். இந்தக் கோபமும் வெறுப்பும் காட்டுத் தீயைப் போன்றவை. வலிய ஒருவரிடமிருந்து எளிய ஒருவரை நோக்கிப் பரவிக் கொண்டே இருக்கும். ஏதோ ஒரு இடத்தில் எரிய மறுக்கும் ஒரு மரக்கூட்டத்தை அடையும் வரை அது பரவும். விமல் போன்றவர்கள் அப்படியானவர்கள். அத்தனை நெருப்பையும் விழுங்கி செரிக்கத்தான் அவர்களுக்கு சம்பளம். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தான்.

தனது மொபைல் போனை எடுத்து பாஸ்போர்ட் சேவைக்கான வலைதளத்தைத் திறந்தான். அவன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மாறாமல் அதே நிலையில் இருந்தது. காவல்துறையின் உறுதிப்படுத்தலுக்காக அது காத்திருந்தது. இணையத்தில் தேடி அவனுடைய பகுதியின் காவல் நிலையத்தின் எண்ணைப் பிடித்தான்.

“ஹலோ போலீஸ் ஸ்டேஷன்”

தன்னைப் பற்றிய விவரம் சொன்னான்.

“பாஸ்போர்ட்டா… நான் ஒரு நம்பர் தரேன். அவர் பேரு காத்தமுத்து. அவர்தான் இதைப் பாத்துக்கறார் அவரைக் கூப்பிடுங்க”

அவர்கள் சொன்ன எண்ணை மனதில் குறித்துக் கொண்டு பிறகு அழைத்தான்.

“ஹலோ”

“சார் என் பேர் விமல். என்னோட பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு வந்திருக்கும்”

“ஓ.. நீங்கதான் விமல் முத்தையாவா?”

“ஆமா சார்”

“உங்களால இப்போ ஸ்டேஷனுக்கு வர முடியுமா? உங்க பழைய பாஸ்போர்ட், ஆதார் ஒரிஜினல் எடுத்துட்டு வாங்க”

“சார் இப்போ நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வீட்டுக்குப் போய் டாகுமெண்ட்ஸ் எடுத்துட்டு வர ரெண்டு மணி நேரம் ஆகிடும்”

“அப்படியா… சரி வாங்க. நான் இங்கேதான் இருப்பேன்”

வெளியே வந்து பைக்கை எடுக்கப் போனவனை முருகானந்தம் பார்த்து நிறுத்தினான். முருகானந்தம் அவன் அலுவலக நண்பன். இன்னொரு அணியின் பொறுப்பாளன். இருவருக்குமான துன்பங்கள் பொதுவானவை என்பதால் அவர்களுக்குள் நிறைய நெருக்கம். நடந்துகொண்டிருக்கும் அத்தனையும் அவனுக்குத் தெரியும்.

“என்னடா போட்டுப் பொளந்துட்டாங்களா உன்னை?” என்றபடி என் தோளில் ஆதரவாகக் கை வைத்தான். அவனிடம் சுந்தர் சொன்னதையும் பாஸ்போர்ட் விவகாரத்தையும் சொன்னான் விமல்.

“என்னடா.. உடனே லண்டன் கிளம்பணுமா? இதை அன்பரசிகிட்டே பேசிட்டியா?”

“ப்ச்.. இன்னும் இல்லை. சொன்னா அவ வேற அப்செட் ஆவா” என்றபடி தலையாட்டினான் விமல்.

“மச்சி இதுக்கெல்லாம் ஒர்ரி பண்ணிக்காதே. அவங்க புரிஞ்சுக்குவாங்க. நாங்க இருக்கோம்ல. வீட்ல என்ன ஹெல்ப் வேணும்னாலும் பாத்துக்கலாம். நீ மொதல்ல அந்த பாஸ்போர்ட் விஷயத்தைப் பாரு”

அவன் தோளில் ஆதரவாகத் தட்டினான் முருகானந்தம்.

“தேங்க்ஸ்டா”

விமல் வீட்டுக்குச் சென்று பழைய பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துக் கொண்டான்.

“எங்கே வந்ததும் கிளம்பறீங்க” என்றாள் அன்பரசி லேப்டாப்பிலிருந்து பார்வையை எடுக்காமலே. இன்பா தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாள். அலுவலகத்தில் நடக்கும் பிரச்னையையும் உடனே லண்டன் செல்ல வேண்டியிருப்பதையும் சொன்னான். அவளிடம் சில நொடி மவுனம்.

“எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அன்பு… இந்த ப்ரேக்குக்காக நீ காத்துக்கிட்டு இருந்தே”

“தெரிஞ்சதுதானே… நான் நினைக்கறதெல்லாம் என்னைக்கு நடந்திருக்கு”

குரல் உயர்த்தாமல் அவள் சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு எரிமலை கொதித்துக் கொண்டிருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. ஏனோ இப்போதைக்கு அது வெடிக்காமல் காத்திருக்கிறது.

மொத்த உலகத்தின் மீதும் அந்த நொடியில் அப்படி ஒரு கோபம் வந்தது. வேகமாக வந்து பைக்கை உதைத்துக் கிளம்பி காவல் நிலையம் வந்து சேர்ந்தான்.

வரவேற்பு மேசையெல்லாம் வைத்திருந்தார்கள். அதன் மீது மூன்று வாக்கி டாக்கிகள் அட்டென்ஷனில் நின்று கொண்டிருந்தன. ஆணும் பெண்ணுமாக இரு காவலர்கள் அமர்ந்திருந்தார்கள்.

“சொல்லுங்க சார்” என்று சிரித்தபடி வரவேற்றனர். சிரித்த முகத்துடன் போலீஸ்காரர்களைப் பார்க்க சற்று வித்தியாசமாகக் கூட இருந்தது.

“இங்கே காத்தமுத்துன்னு… பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக வந்திருக்கேன்”

“கொஞ்ச நேரம் முந்தி போன் பண்ணியிருந்தீங்களே”

“ஆமாம்”

“நேரா போயி லெப்ட்ல திரும்புங்க. அங்கே தனியா ஒரு ரூம் இருக்கும். அங்கே இருப்பார்”

திரும்பினான். இருந்தது.

அங்கே அமர்ந்திருந்த காத்தமுத்து தமிழ்நாடு போலீஸ் இப்படித்தான் இருப்பார்கள் என்று அவன் உள்ளத்தில் இருந்த சித்திரத்தைப் போலவே இருந்தார். கருத்த நிறம், கருகரு மீசை, தடித்த உதடுகள், சிவந்த கண்கள், ஒட்ட வெட்டிய தலைமுடியில் அங்கும் இங்குமாக நரை. நாற்பத்தைந்து வயது இருக்கலாம். யூனிஃபார்ம் போடவில்லை. நீலநிறத்தில் கட்டங்கள் போட்ட சட்டை போட்டிருந்தார். சட்டையின் கையை முழங்கைக்கு மேலே மடித்து விட்டிருந்தார்.

“சொல்லுங்க”

“சார்.. என் பேரு விமல். விமல் முத்தையா. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் விஷயமா வரச் சொல்லியிருந்தீங்க”

“ஓ.. நீங்கதானா? உட்காருங்க. பழைய பாஸ்போர்ட் கொடுங்க”

கொடுத்தான். அவர் கால்களை தையல் இயந்திரம் ஓட்டுவது போல் ஆட்டிக்கொண்டே அவனையும் அவன் தந்த பாஸ்போர்ட்டையும் பிறகு தன் மொபைல் போனையும் பார்த்தார்.

“இன்னும் இதே அட்ரஸ்லதான் இருக்கீங்களா?”

“ஆமா சார்.. ஆறு வருஷமா”

தையல் இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. அவன் அமர்ந்திருந்த அறை காவல் நிலையத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது. விமல் காத்திருந்தான்.

அவர் மொபைல் போனில் எதையோ நோண்டிக் கொண்டே இருந்தார். தையல் இயந்திரம் நிற்பதாக இல்லை.

“சார்.. ஏதும் ப்ராப்ளமா?”

“நெட்நொர்க் பிரச்னை போல. என்னால உங்க டீடெயில்ஸ் அப்டேட் பண்ண முடியலை”

விமல் காத்திருந்தான். அவர் காலாட்டிக்கொண்டே அமர்ந்திருந்தார். அங்கிருந்த முருகன் காலண்டர். அதிலிருந்த வாடிய சாமந்தி, சற்றுத் தள்ளியிருந்த இரும்பு பீரோ, அதன் மறைவிலிருந்து இவனைப் பார்த்துக்
கொண்டிருந்த பல்லியின் சிறு குண்டுக் கண்கள் என்று
அனைத்தையும் பத்து பத்து நொடிகள் பார்த்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்தான்.

“கனெக்டே ஆக மாட்டீங்குது” என்றார். என்னுடைய அப்ளிகேஷனாச்சே எப்படி ஆகும் என்று விமல் நினைத்துக்கொண்டான். மீண்டும் பத்து நிமிடங்கள் சாமந்தி, பீரோ, பல்லி, முருகன்.

அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. ஒரு வேளை இவர் தன்னிடம் பணம் ஏதும் எதிர்பார்க்கிறாரோ? செய்யவேண்டிய மரியாதையை செய்தால்தான் வேலை நடக்கும் என்று சுந்தர் சொன்னது நினைவுக்கு வந்தது.

அதையடுத்து அடுத்த ஒரு மனப் போராட்டம் தொடங்கிவிட்டது. எப்படி அவரிடம் பணம் வேண்டுமா என்று கேட்பது? கேட்டு விட்டாலும் எவ்வளவு தருவது? நூறா, இருநூறா, ஐந்நூறா? முருகானந்தத்திடம் விசாரித்துக்கொண்டு வந்திருக்கலாம். குறைவாகக் கொடுத்தால் கோபப்படுவாரா? ஒரு வேளை அவர் நேர்மையான அதிகாரியாக இருந்துவிட்டால்? பணம் கொடுத்தால் பொளேரென்று அறைந்து விடுவாரா? அது வேறு குற்றமாயிற்றே? ஆனால் பணம் தராவிட்டால் பாஸ்போர்ட் கிடைக்காதபடி அறிக்கையில் எழுதி விடுவாரா? ஒரு அரசு அதிகாரி அவர் வேலையை செய்ய எதுக்குப் பணம் கொடுக்கணும்? கேள்விகள் சுனாமி போல வந்துகொண்டேயிருக்க அவன் ஒரு கட்டத்தில் சிந்திப்பதையே நிறுத்திவிட்டான்.

கைவிடப்பட்ட ஒரு சதுரங்க ஆட்டத்தின் காய்கள் போல இருவரும் பதினைந்து நிமிடங்கள் அமர்ந்திருந்தார்கள். அவரும் எதுவும் பேசவில்லை. இவனும் மூச்சு விடவில்லை. பிறகு காத்தமுத்து பெருமூச்சுடன் சொன்னார்.

“இன்னிக்கு என்னன்னு தெரியலை. நான் கொஞ்ச நேரம் கழிச்சு பாக்கறேன் சார். கனெக்‌ஷன் கிடைச்சதும் அப்ரூவல் போட்டு அனுப்பறேன்”

பணம் தந்தா கனெக்‌ஷன் கிடைச்சுடுமா சார் என்று கேட்டுவிடலாமா என்று தோன்றினாலும் விமலை ஏதோ ஒன்று தடுத்தது. அவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினான். அவர் தன் முதுகையே பார்ப்பது போல உணர்ந்தான். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தான். அவர் இன்னும் போனைப் பார்த்தபடியே இல்லாத தையல் இயந்திரம்தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.

வீட்டுக்கு வந்து சட்டையைக் கழற்றியவாறே முருகானந்தத்தை அழைத்தான். நடந்ததைச் சொன்னான்.

“மச்சி அவருக்கு ப்ரபோஸ் பண்ணவாடா போறே… இதுக்கெல்லாமாடா தயக்கம்? பட்டுன்னு கேட்டுக் காரியத்தை முடிச்சுட்டு வராம.. உன்னையெல்லாம் வெச்சுக்கிட்டு..”

“டேய் உங்களுக்கு லஞ்சம் வேணுமான்னு எப்படிடா ஒருத்தர்கிட்டே கேக்கறது? அவர் அனுப்பிடறேன்னு சொன்னாருடா… பாக்கலாம்”

“நீயும் அதை நம்பிட்டு வந்திருக்கே… போடா” அவன் போனை வைத்துவிட்டான்.

குழந்தை இன்பா ஓயாமல் அழுதுகொண்டிருந்தாள். விமல் உள்ளே திரும்பிக் கத்தினான்.

“அவ ஏன்டி இப்ப கத்தறா?”

பதில் இல்லை. அன்பரசி எங்கே என்று தெரியவில்லை. தொட்டிலில் கிடந்த இன்பாவை எடுத்து அமைதிப்படுத்த முயன்றான். பலனில்லை. யாருடா நீ புதுசா என்பது போல் இன்பா துள்ளினாள். ஏற்கனவே இருந்த எரிச்சல் இன்னும் அதிகரித்தது.

அன்பரசி குளித்துவிட்டு வெளியே வந்தாள்.

“தூங்க வெச்சிட்டு குளிக்கப் போயிருக்கலாம்ல. எப்படி கத்தறா பாரு”

“குழந்தைன்னா அழத்தான் செய்யும்”

அன்பரசி அலட்சியமாகத் துண்டை உதறி எடுத்துக் கொண்டு போனாள். இன்பா இன்னும் அதிகமாக அழுதாள்.

எரிமலை புகைய ஆரம்பித்து விட்டது. இதற்கு மேல் பேசினால் பிரச்னை பெரிதாக வளரும் என்று அனுபவத்தால் புரிந்துகொண்டு இன்பாவை சமாதானம் செய்ய அவளைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனான் விமல்.

அன்பரசியும் அங்கே துண்டைக் காயப்போட வந்தாள். சோப்பு வாசத்துடன் அவனைக் கடந்து சென்றாள். முன்பெல்லாம் இந்த சூழலில் சில அணைப்புகள், முத்தங்கள், சிணுங்கல்கள் நடந்திருக்கும். துண்டைக் காயப் போட்டுவிட்டு சலனமில்லாமல் அவள் இறங்கிச் செல்வதைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். என்ன நடந்து கொண்டிருக்கிறது அவன் வாழ்க்கையில்?

அடுத்த நாள் சுந்தர் அவரது கேபினுக்கு அழைத்தார். இன்னும் பாஸ்போர்ட் போலீஸ் வெரிஃபிகேஷனில்தான் இருப்பதாக சொன்னதும் தன் பங்குக்குக் குதித்தார்.

“நான் போய்ப் பாத்து டாகுமெண்ட்ஸ் கொடுத்துட்டு வந்துட்டேன் சார். ஏனோ இன்னும் மூவ் ஆகலை”

“என்ன விமல்… இப்படி கேர்லெஸ்ஸா இருக்கீங்க. இன்னும் நாலு நாள்ல டிக்கெட்டை போட்டு வெச்சுட்டு. கேன்சல் பண்ணீனா ரீஃபண்ட் கூட கிடையாது தெரியும்ல?”

‘எது நான் டிக்கெட் போட்டு வெச்சேனா? என்னைக் கேக்காம நீங்கதானே போட்டீங்க பாஸ்’ என்று கேட்க நினைத்தான். மாதம் அறுபதாயிரம் ஈஎம்ஐ இருப்பவர்களால் நினைக்க மட்டுமே முடியும். அன்று மாலை வரை காத்திருந்தான். பாஸ்போர்ட் இன்னும் அதே நிலையில்தான் ஆன்லைனில் காட்டியது.

அடுத்த நாள் காலையிலும் இதே கதைதான். தமிழரசி அவனிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தாள். இவன் ஏதும் கேட்டால் பதில் பேசினாள்.

அலுவலகத்தில் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் சிகரெட் பிடிக்கும்போது பாஸ்போர்ட் குறித்துக் கேட்ட  முருகானந்தம் சலித்துக் கொண்டான்.

“சொன்னேன்ல… கெடப்புல போட்டு வெச்சிருவாங்கடா. ஒரு இருநூறு ரூபாய்ல முடிஞ்சு போயிருக்கற மேட்டர்.. ”

தன் இயலாமையை நினைத்து அவனுக்குக் கோபமாக வந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் சுந்தர் வந்து விடுவார். இது தெரிந்ததும் அவன் மேல் பாய்ந்து பிறாண்டுவார்.

உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த கோபத்தோடு காத்தமுத்துவை அழைத்தான்.

“சார்.. என் பேர் விமல் முத்தையா”

“அந்த பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்தானே? சொல்லுங்க..”

விமல் வெடித்தான்.

“சார் ஆறு நாள் ஆகப் போகுது. என்னோட பாஸ் போர்ட் வெரிஃபிகேஷன் நீங்க இன்னும் அனுப்பலை. எனக்கு இன்னும் நாலு நாள்ல டிராவல் இருக்கு. உங்களுக்கு ஏதாவது பணம் வேணும்னா நான் வந்தப்பவே சொல்லியிருக்கலாம்ல. நான் உங்களை ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டான ஆளுன்னு நினைச்சுட்டேன். அதனால நானும் கேக்கலை. அதுக்காக இப்படியா பண்ணுவீங்க?”

ஒரு நொடி அந்தப் பக்கம் மவுனம். அவர் இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. விலைன் எதிரே அமர்ந்திருந்த முருகானந்தம் முகம் பேயறைந்தது போலானது. அய்யோ என்று தலையில் அடித்துக்கொண்டான்.

மறுமுனையில் காத்தமுத்து சூடாகிவிட்டார்.

“டேய்.. என்ன ஓவரா பேசறே? நீ இப்பவே கிளம்பி ஸ்டேஷனுக்கு வா”

“தாரளமா வரேன் சார். என் மேல எந்தக் கேசும் இல்லை. எதுக்குத் தேவையில்லாம என் அப்ளிகேசனை இப்படி டிலே பண்ணி வெக்கறீங்க?”

“நீ மொதல்ல நேர்ல வாடா”

“வரேன் சார். எனக்கென்ன பயம்? இப்பவே வரேன்”

போனை வைத்ததும் முருகானந்தம் அவனைப் பிடித்து உலுக்கினான்.

“அடேய்.. என்னடா பைத்தியம் மாதிரி அவர்கிட்டே போய்க் கோபப்பட்டுட்டு இருக்கே? உனக்கு பாஸ்போர்ட் வேணுமா வேண்டாமா? அவர் போலீஸ்டா”

“போலீஸ்னா தப்பு பண்ணவங்கதான்டா பயப்படணும்? அவர் ஒரு கவர்மெண்ட் சர்வண்ட். அந்தாள் வேலைய அவர் பாக்க நாம எதுக்குடா பணம் கொடுக்கணும்?”

“அய்யா நியாயவாதி, அவர்தான் உன்னை எதுவுமே கேக்கலையே? நீயாதானே அவர்கிட்டே இப்போ வாயை விட்டிருக்கே? இதையே ஒரு ரிமார்க்கா எழுதி மொத்தமா உன் பாஸ்போர்ட்டை ரிஜெக்ட் பண்ணி அனுப்பிடுவார்”

படபடப்பு குறைந்து விமல் மீண்டும் பூமிக்கு வரத் தொடங்கியிருந்தான். நிதானமில்லாமல் சொதப்பிவிட்டதை உணர்ந்தான். முருகானந்தத்துக்கு அது புரிந்திருந்தது.

“சரி விடு. மொதல்ல அவரைப் போய் பாத்துக் கைல
கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு வா. மேற்கொண்டு எதுவும் உளறி வெக்காதே”

காவல் நிலையத்தை அடைந்தபோது அங்கே ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஏதோ கடைவீதி தகராறு. இரு தரப்பும் கூடியிருந்தது. ஒருவன் பெரிதாக சலம்பிக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். குடித்திருந்தான்.

“எனக்கு நியாயம் கிடைக்காம நான் இந்த இடத்தை விட்டுப் போமாட்டேன் போலீசு… யாரு மேல கை வெச்சிருக்கான் அவன்”

“கொஞ்சம் அமைதியா இருய்யா பேசிட்டு இருக்கேன்ல” என்றார் அவர்களோடு சாந்தமாக உரையாடிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர்.

“நீ பேசிக் கிழிச்சே…”

அவர் லத்தி உயர்ந்து குறிபார்த்து ஒரு நொடி நின்று அதிகம் பாதிப்பு ஏற்படாத இடம் தேடி அவன் பிட்டத்துக்குக் கீழே இருந்த தொடைப்பகுதியில் சத்தென்று இறங்கியது. விமலுக்கு அடி வயிற்றில் ஏதோ சுருண்டது.

“ராஸ்கல். மரியாதையாப் பேசு. கொன்னுடுவேன்”

அடித்துவிட்டு அதே சாந்தமான குரலில் சொன்னார் அந்த கான்ஸ்டபிள். அடி வாங்கியவன் சில நொடிகள் வலியால் கதகளி ஆடிக் கொண்டிருக்க கூட்டம் இப்போது அந்தக் காவலருக்கு கூடுதல் மரி யாதை தரத் தொடங்கியிருந்தது.

கூட்டத்தின் ஓரமாகக் கிடைத்த சந்தில் நுழைந்து உள்ளே வந்தான். காத்தமுத்துவின் அறையில் அவர்மட்டும்தான் இருந்தார். அவனை ஒரு முறை பார்த்துவிட்டு மறுபடி தனது மொபைல் திரையில் மூழ்கினார். தயக்கமாக எதிரே சென்று அமர்ந்தான். அவன் கோபமெல்லாம் வடிந்து இப்போது உதறல்தான் எஞ்சியிருந்தது.

“சார்.. சாரி சார்” என்றான். அவர் எதுவும் பேசவில்லை.

“சார்.. கொஞ்சம் வேலை பிரஷர். ரெண்டு மூணு மாசமாவே. எமர்ஜென்சியா லண்டன் போகணும். இல்லாட்டி வேலையே போயிடும் மாதிரி ஒரு நிலைமை. வீட்டுலயும் நிறைய டென்ஷன். அதான் என்ன பேசறேன்னு தெரியாம பேசிட்டேன். சாரி சார்..”

“அதுக்கு என்ன வேணா பேசுவியா?”

“சார் நான் அந்த மாதிரி ஆள் இல்லை. திடீர்னு ஒரு அவுட்பர்ஸ்ட். என் தப்புதான். அதுக்காக என் பாஸ்போர்ட்டை ஏதும் ப்ளாக் பண்ணிடாதீங்க. ப்ளீஸ்”

அவர் போனைத் தூக்கி டேபிள் மீது போட்டார்.

“என்னைப் பாத்தா உனக்கு எப்படி இருக்கு?”

இப்போது அவர் முகத்தில் நிஜமான கோபம்.

வெளியே கூட்டமும் இரைச்சலும் மறுபடி அதிகரித்திருந்தன. புதிதாக ஆட்கள் சேர்ந்திருந்தார்கள். இன்னும் சில காவலர்கள் உள்ளே புகுந்து அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்கள்.

மேற்கொண்டு பேச முயன்று இரைச்சல் தாளாமல் காத்தமுத்து சேரைத் தள்ளி எழுந்தார். தன்னை ஓங்கி அறையப் போகிறாரோ என்று ஒரு நொடி யோசித்தான் விமல்.

“என் கூட வா”

அவர் வெளியே நடக்க ஒரு ஆட்டுக்குட்டி போல அவர் பின்னால் தொடர்ந்தான். அடுத்தது
லாக் அப் தான் என்று அவன் நினைத்தபோது அவர் வெளியே நடந்தார்.
சற்றுத் தள்ளியிருந்த ஒரு டீக்கடையில் வந்து நின்றார். டீக்கடைப் பையன் அவருக்கு பெரிய சலாம் வைத்தான். கடை காலியாக இருந்தது. உள்ளே உட்கார இடம் கிடைத்தது. கடைப்பையன் ஓடிச்சென்று ஃபேனைப் போட்டான்.

காத்தமுத்து அவனை எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொன்னார். விமல் மறுபடி ஆரம்பித்தான். காவல் நிலையத்துக்கு வெளியே வந்துவிட்டதால் கொஞ்சம் துணிச்சல் வந்திருந்தது.

“இப்போ சொல்லு.. என்னைப் பாத்தா லஞ்சம் வாங்கற ஆள் மாதிரி தெரியுதா?”

“எனக்கு இதெல்லாம் கொடுத்துப் பழக்கம் இல்லை சார். அதான்”

“சரி சொல்லு. மொதல்ல என்னைப் பாத்ததும் என்ன தோணுச்சண்ணு சொன்னே?”

“நீங்க ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். பணம் வாங்க மாட்டீங்கன்னு தோணுச்சு”

அவர் மீசைக்குள் மெல்லிய புன்னகை.

“ரெண்டு டீ போடுடா” என்றார் கடைப் பையனைப் பார்த்து.

“சமோசா சார்”

“கொண்டா.. இவருக்கும் சேர்த்து. ஸ்டேஷனுக்கு வழக்கமான பார்சல் போட்டுக் கட்டி வை.”

சொல்லிவிட்டு அவன் பக்கம் திரும்பினார்.

“இங்கே சமோசா நல்லா இருக்கும். அப்புறம் வேலைல ப்ரஷர்னு சொன்னீங்க இல்ல?”

“ஆமாம் சார். ப்ராஜக்ட்ல நிறைய பக். க்ளையன்ட் கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேக்கப் போறதா மிரட்டறான். என்னை உடனே லண்டன் போகச் சொல்றாங்க. வீட்டுல எட்டு மாசக் குழந்தை. பாத்துக்க ஆளில்லை. வைப்கூட பேசறதில்லை. மண்டை காயுது”

டீ வந்தது. எடுத்துக் கொண்டார். கொண்டு வந்த பையனிடம் சொன்னார்.

“இன்னொரு நாலு சமோசா தனியா கட்டு”

பிறகு கட்டம் போட்ட சட்டையின் காலரை இழுத்துப் பின்னங்கழுத்தைக் காட்டினார். ஒரு பெரிய பூரானைப் போல தழும்பு ஒன்று இருந்தது.

“பட்டப்பகல்ல ஒரு ஜவுளிக்கடை ஓனரை ஓட ஓட வெட்டிக் கொன்ன ஒரு கேங்கை ஒரு மாசம் சேஸ் பண்ணி புடிச்சேன். அவங்களைக் கோர்ட்டுக்கு கொண்டுபோகும்போது ரைவல் கேங் சுத்துப் போட்டு நாலு பேரையும் வெட்டிட்டாங்க. எனக்கும் சேர்த்து வெட்டு.
ரத்த சகதியில கிடந்தேன். ரெண்டு வாரம் நினைவே இல்லாம ஆஸ்பத்திரியில. எப்படியோ ரெடியாகி வந்தப்போ பணியில் கவனக்குறைவுன்னு சொல்லி மெமோ கொடுத்தாங்க. இந்த பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் எனக்கு பனிஷ்மென்ட் போஸ்டிங். எங்க வேலைல தினமும் சாவைப் பாக்கறோம் தம்பி. அதுக்கு நடுவுலதான் உங்களை மாதிரி ஆளுங்களையும் பாக்கறோம். சமோசா எடுத்துக்கங்க. நிஜமாவே இங்கே நல்லா இருக்கும்.”

அவர் பேச்சுக்குச் சொல்லவில்லை. சமோசா சூடும் சுவையுமாக நன்றாகவே இருந்தது. ஒரு ஈமெயில் வந்ததாக மொபைல் காட்டியது. பாஸ்போர்ட் சேவை மையத்தி
லிருந்து வந்திருந்ததால் அவசரமாக எடுத்துப் பார்த்தான். திடீரென்று ஒரு பாதாளத்தில் சரிவது போன்ற ஒரு உணர்வு.

வந்திருந்தது நல்ல செய்திதான். அவன் பாஸ்போர்ட் போலீஸ் வெரிஃபிகேஷன் முடிந்து அச்சுக்குப் போய் விட்டதாகச் செய்தி. இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்துவிடும் என்று சொன்னது அந்த ஈமெயில். அவன் லண்டன் பயணம் திட்டமிட்டபடி நடந்துவிடும்.

சங்கடமாக நிமிர்ந்து காத்தமுத்துவைப் பார்த்தான். அவரிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“சார்…”

“என்ன?”

“என் பாஸ்போர்ட் பிரின்ட் ஆப்க போயிட்டதா செய்தி வந்திருக்கு. நான்தான் அவசரப்பட்டுட்டேன். ரொம்ப ரொம்ப சாரி சார்”

அவர் சமோசாவை விழுங்கிவிட்டுச் சிரித்தபடி சொன்னார்.

“உங்க அப்ளிகேஷனை அன்னிக்கே அப்ரூவ் பண்ணி அனுப்பிட்டேன். ஆன்லைன்ல ஏனோ ரிஃப்ளெக்ட் ஆகலை போல”

காத்தமுத்து சமோசா துகள்களைத் தட்டியபடி எழுந்தார். கடைக்காரன் கொண்டு வந்து கொடுத்த சமோசா பொட்டலங்களை வாங்கிக்கொண்டார். கண்களை மூடி முகர்ந்து அதன் சூடான வாசத்தில் லயித்தார்.

“எல்லா வேலையிலும் பிரஷர் இருக்கு தம்பி. பிரஷர் இல்லாட்டி அந்த வேலைக்கே தேவை இருக்காது பாருங்க”

இரண்டாவதாகக் கட்டிய பொட்டலத்தை அவனிடம் கொடுத்தார்.

“நல்லபடியா பயணம் போயிட்டு வாங்க. இதைக் கொண்டு போய் ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுங்க. எல்லாம் சரியாயிடும்”

அவன் தோளில் தட்டிவிட்டு வெளியே போகும்போது கடைக்காரப் பையனிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.

“டேய் இது எல்லாத்துக்கும் சார்கிட்டே காசு வாங்கிக்க”

விமல் முகத்தில் அன்றைய தினத்தின் முதல் புன்னகை மலரத் தொடங்கியிருந்தது.