என்னுடைய பிறந்தநாள் விழா முடிந்துவிட்டிருந்தது. தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நாற்பத்து-ஐந்து வயதுப் பெண்மணி நான்…
என்னைச் சுற்றிலும் பார்த்தேன். பழுப்புநிற இரவு முழுக்க அமைதியில் உறைந்திருந்தது. விருந்தாளிகள் கலையத் தொடங்கியிருந்தனர், ஒவ்வொரு குழுவும் அவரவருக்கான தனிப்பட்ட திசையில் போகத் தலைப்பட்டனர். சில மனிதர்கள் தங்களின் நிதானத்தை தங்களுடைய கண்ணாடிக்கோப்பைகளின் அடியில் மிதக்க விட்டு உற்சாகமாகத் தட்டுத்தடுமாறி வெளியேறினார்கள். அறையில் இருந்த யாவும்
கலைந்திருந்தன, காலைப்பொழுதுக்காகக் காத்திருந்தபடி, அவற்றைச் சுத்தப்படுத்தும் பணியாளின் கரங்கள் வந்து பணியைத் தொடங்குவதற்கென. வெள்ளியிலும் தங்கத்திலும் அலங்காரத்தாள்கள் எங்கும் சிதறிக்கிடந்தன அல்லது உயிரற்ற கம்பளிப்பூச்சிகளைப் போல உத்தரத்திலிருந்து தொங்கின.
காலியான, வறண்ட கண்ணாடிக்கோப்பைகளும் அங்கிருந்தன, கையில் அவற்றை ஏந்தியிருந்தவர்களின் தீராத தாகத்துக்குச் சாட்சியாக. மற்ற கோப்பைகளில் பானங்களின் மீதங்களோடு ஒன்றாகக் கலந்திருந்த பாதி-கரைந்த ஐஸ்கட்டிகள் நிறைந்திருந்தன. ஏதோ ஒவ்வொரு கரைசலில் இருந்தும் அதைக் குடித்தவரின் மூச்சுக்காற்று மணம் வெளிப்படுவதாகத் தோன்றியது. மிச்சம் மீதிகளால் மேசை நிரம்பி வழிந்திட, அவற்றுள் பெரும்பாலும் பாழாகி யாரும் தீண்டாமல் கிடந்தன. அனேகமாக செரிமானமின்மையின் தாக்கத்தை விருந்தாளிகள் உணர்ந்திருக்கலாம் கட்டுப்பாடின்றி சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. முழுக்கச் சிகரெட்டுகளும் சுருட்டு முனைகளும் நிரம்பிய எண்ணற்ற கிண்ணங்கள் ஒவ்வொரு சிறிய மேசையின் மீதுமிருந்தன. அந்தச் சங்கதிகள் வினோதமான நறுமணத்தை வெளிப்படுத்தின. சிலர் அந்த மணத்தை வெறுத்தார்கள், ஆனால் எப்போதும் நானதை விரும்பினேன். திகைப்பூட்டும் உணர்வை அது எனக்கு வழங்கியது, மாலைநேர ஓய்வுத்தருணத்துக்கான ஒருவித ஏக்கத்தை என்னுடம்பெங்கும் செலுத்துவதைப்போல.
தனியாக… தங்கநிறச் சட்டகத்துடன் கூடிய கண்ணாடியின் முன் நான் நின்றேன். அது பிரகாசித்தது. எனது முகமும் உடலில் பாதியும் அதில் பிரதிபலித்தன. நான் இன்னுமின்னும் நெருங்கிச் சென்றேன், அந்தக் கண்ணாடி முழுக்க எனது முகம் நிறையுமட்டும். நெருக்கத்திலிருந்து எனது முகத்தை நான் உற்றுப்பார்த்தேன். அப்போது தான் என் கணவருக்கு உண்மையில்லாதவளாக இருக்கத் தீர்மானித்தேன்.
விழாவுக்கு வந்திருந்த மனிதர்களுள் எவரிடமும் நான் ஈர்க்கப்படவோ அல்லது அச்சப்படவோ இல்லை, அங்கிருந்த பெண்களுள் சிலர் – அற்புதமான நறுமணங்களைப் பரப்பும் – வெம்மையான ஆற்றுப்படுகை போன்ற மார்புப்பிளவுடன் கூடிய பருத்த மார்பகங்களோடு இருந்தார்களெனும் சங்கதியை மீறி. ஒரு சில வாசனைத்திரவியங்களை நான் ரசித்தேன்; மற்றவற்றின் மீது எனக்கு வெறுப்பும் இருந்தது. எனது முதல் கர்ப்பத்தோடு வளர்ந்த மிகுவிருப்பங்களோடு இணைந்து அந்த வெறுப்பும் வளர்ந்தது, மேலும் இந்நாள் வரைக்கும் அது தொடர்ந்தது.
ஓரங்கட்டி நடந்தபடி ஆண்கள் மோப்பம் பிடித்தார்கள், தங்களுடைய ஓரப்பார்வைகளில் காமத்தோடும் பசியோடும், வேறொருவரின் வீட்டிலிருக்கிறோம் என்பதை முற்றிலும் மறந்தவர்களாக. நட்புகள் உருவாகின, உடன் பெரும்பாலும் ஒரேயொரு பார்வையில், அது முடிவு செய்யப்பட்டது… நேரமும் இடமும்.
எந்த முகமும் எனக்குக் கிளர்ச்சியூட்டவில்லை, தற்போது நான் தொடர்ந்து கொண்டிருந்த ஒன்றைத்தவிர – என் கணவரின் முகம்: சுருக்கங்களுடன் கூடிய அவரின் நெற்றியும், அவருடைய கண்களுக்கிடையே இருந்த இடைவெளியைப் பிரித்த பக்க அணிமை (Juxtapose) எண்களைப்போன்ற இரண்டு ஆழமான பள்ளங்களும், அவரின் இயல்புக்கு ஒவ்வாத சற்றுக் கொடூரமான தோற்றத்தை அவை அவருக்களித்தன. அவரது உடல் உயரமாகவும் உருண்டையாகவும் இருந்தது; அவரது கேசம் முன்புறம் மெலிதாகவும் நெற்றிப்பொட்டில் அடர்ந்துமிருந்தது, குளிர்கால இரவில் பொழியும் பனியின் ஒளிவட்டத்தைப்போல; அவரது மூக்கு நீளமாயிருந்தது, சிதறுண்டிருந்த சில பழைய தழும்புகளோடு; உடன் அவரது உதடுகள் பெரிதாயிருந்தன, அவற்றுள் மேற்புற உதடு அடர்த்தியான வெள்ளிநிற மீசையால் பாதி மறைக்கப்பட்டிருந்தது.
என் கணவரின் முகம் எனது ஆர்வத்தைத் தூண்டியது. அதில் தோய்ந்திருந்த புன்னகை, ஆழ்ந்த சிந்தனை, சில சமயங்களில் கடுமையும் குழப்பமும் கூட, கூடவே நிறைய கவர்ச்சியும்…
மேலும் எனது சொந்த முகத்தை என்ன செய்வது, ஆடியில் தற்போது நான் பார்த்துக் கொண்டிருந்ததை? உண்மையை அந்தக் கண்ணாடி என்னிடம் பிரதிபலித்தது. நாசமாய்ப்போன அந்தக் கண்ணாடி என்னிடம் பெருமை பீற்றியது, இப்படிச் சொல்வதைப்போல, “இதுதான் நீ, மேலும் நீ நிராகரிக்க விரும்பும் உண்மை இதுதான். நாற்பத்துஐந்து வயதுப் பெண்மணி நீ, இன்னும் உனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில் உன் கணவன் விருப்பங்கொண்டிருக்கிறான், ஏதோ நீயொரு சின்னப்பெண் என்பதைப்போல. அனேகமாக அவன் உன்னைக் காதலிக்கிறான் அல்லது அனேகமாக ஒன்றன் பின் ஒன்றாக வருடங்கள் கடந்து போவதை உனக்கு உணர்த்துவதற்காக அவன் இதைச் செய்கிறான், வருவதும் போவதுமாக அவை உனது வாழ்க்கையை விழுங்குகின்றன, சிறிது சிறிதாக, அவற்றோடு உனது புதுமையையும் உயிர்த்திறனையும் இளமையையும் அழகையும் கூட.”
எனது முகம் அப்படியொன்றும் அவலட்சணமில்லை, ஆனால் உண்மையைச் சொன்னால், என் கணவரின் முகத்தோடு ஒப்பிட அது சற்றுக் குறைவான அழகோடும் ஈர்ப்போடும்தான் இருந்தது. சுருக்கங்கள் எனது கண்களைச் சூழ்ந்திருந்தன – அவரின் கண்களைப் போலல்லாது, அவற்றைச் சுற்றியிருந்த தோல் இன்னும் இறுக்கமாக இருந்தது, வயது அவருக்கு ஐம்பத்துமூன்றைத் தாண்டியிருந்தபோதும்.
இதுதான் எனது முகம், மேலும் இதுதான் அதைப்பற்றிய உண்மையும்கூட. கலகத்துக்கான ஒரு விபரீத உணர்வை எனது ஆன்மாவுக்குள் சட்டென்று தட்டியெழுப்பிய ஓர் உண்மை.
நான் ஒரு தீர்மானத்தை வந்தடைந்தேன்: என் கணவருக்கு உண்மையில்லாதவளாக இருக்க.
எப்படி? எப்போது? யாரோடு? தீவிரமான இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுபிடிப்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. தீர்மானத்தின் தற்கணத்தில் நான் நின்றிருந்தேன். ஒரு சாகசப்பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தேன் – எனக்கு அது தேவைப்
படுவதாக உணர்ந்தேன். இளமைக்கால உணர்வுகளை மீண்டும் கொண்டு வரக்கூடிய ஒரு சாகசப்பயணம். நாற்பத்து-ஐந்து வயதான ஒரு பெண், ஆனால் அவள் விரும்பினாள், ஏங்கினாள். அவளுக்கு மற்றோர் ஆண் இருப்பான். அவளைப் பற்றி அவன் கனவு காணுவான், அவளைப் பற்றியே நினைப்பான், அவளிடம் அக்கறை காட்டுவான். அந்த மற்ற பெண்கள் போல, என் கணவரின் கவனத்தை ஈர்த்தவர்கள் போலவே. அனேகமாகக் கணநேரத்தின் தற்காலிக மகிழ்ச்சியால் அவர்கள் அவரை ஆக்கிரமித்திருக்கலாம் அல்லது அனேகமாக எனக்குத் தெரியாமலேயே அவ்வுறவுகள் பல மாதங்கள் நீடிக்கவும் செய்திருக்கலாம். எல்லாவற்றுக்குப் பிறகும், எனது அழகு மற்றும் உடற்கவர்ச்சி குறித்து நான் மிகுந்த நம்பிக்கையோடிருந்தேன்.
இன்றைய இரவு வேறெந்த இரவைப்போலவும் இருக்கவில்லை – எனது மனதின் தொடுவானங்களுக்கு இடையேயான ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் அது. எனது கணவரிடமிருந்து மீட்டு இதுவரைக்கும் நான் அறிந்திராத குணாம்சங்களைக் கொண்ட மற்றொரு மனிதனின் அணைப்புக்குள் அது என்னை இட்டுச் செல்லும்… அவனோடு இணைந்து என் கணவரை ஏமாற்ற வேண்டுமென்று நான் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த இந்த ஆண் யார்?
படுக்கைக்குச் சென்று நான் போர்வையின் கீழே சுருண்டு படுத்தேன். குளிராக இருந்தது. எனக்கு முன்னாலேயே என் கணவர் தூங்கியிருந்ததோடு குறட்டையும் விட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை அவர் சுவாசித்தபோதும், அவருடைய மீசை நடுங்கியது. அவரது கண்கள் தளர்ந்திருந்தன, அவற்றினிடையே இருந்த பள்ளம் சற்றே நிரவி பார்வைக்குத் தட்டுப்படாமல் இருந்தது.
எனது விரல்நுனிகளைக் கடித்தபோது நான் குளிராக வுணர்ந்தேன். கதகதப்புக்காக அவரருகே நெருங்கிப் படுத்துக்கொள்ள எண்ணினேன். எனது பாதங்களை அவருடைய வெதுவெதுப்பான கால்களுக்குக் கீழே நகர்த்த ஆரம்பித்தேன், ஆனால் பிறகு பின்வாங்கினேன். ஒரு கணம், தெளிவற்றதோர் உணர்வு என்னை அலைக்கழித்தது. எத்தனை பெரிய கோழை நான்.முதன்முறையாக எனது கணவரால் பகிர்ந்துகொள்ள முடியாத பயணத்தைத் தொடங்குவதென்று நான் ரகசியமாகத் தீர்மானித்திருந்தேன் அல்லவா? அவரை விட்டு விலகினேன், என்னை விடுவித்துக்கொண்டு, ஒரு வினோதமானத் தீர்மானத்துக்கு வந்தவளாக, எனது சதித்திட்டம் குறித்து எவ்விதக் குற்றவுணர்வுமின்றி. வெகுசீக்கிரமே, அந்தக் கலகவுணர்வு மீண்டும் எனக்குள் பொங்கிப்பெருகுவதை அறிந்தேன், எனது அமைதியைக் குலைத்து, என்னை அது கடிந்து கொண்டது. ஏன் இன்னொரு ஆணை நான் வரித்துக் கொள்ளக்கூடாது? எனது வாழ்வின் மிகவும் அந்தரங்கமான உறவாக அவன் மாறுவான். வேறொரு இளமையான பெண்ணுக்காக என் கணவர் என்னை விட்டுப் பிரிந்துபோன மறுதினம் அவனை நான் சந்திப்பேன். உண்மையைச் சொன்னால், அவருக்கு – காத்திருப்பில் இருந்த – வேறொரு பெண்ணோடு போகும் எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை, ஏனென்றால் எப்போது விரும்பினாலும் அவரால் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவியலும். அவருக்கென்றே நிறைய பெண்கள் அங்கு இருந்தார்கள், ஒரு சமிக்ஞைக்குக் காத்திருப்பவர்களாக. ஆனால் நானோ, தனக்கும் ஓர் ஆணுக்குமிடையே ஒரு பாலத்தை உருவாக்கிட நீண்டகாலம் காத்திருக்கக்கூடிய பெண்ணாயிருந்தேன், தனது தேர்வுகளில் மிகவும் கவனமாயிருந்த பெண்ணாக, எந்தச் செயல்களிலும் அவசரம் காட்டாதவளாக, ஓர் ஆணுக்காகப் பிச்சை எடுக்காதவளாக.
இந்தப்புள்ளியில் நான் நிறுத்தினேன், ஆச்சரியத்தோடு. அவரது ஆசைகள் தீர்ந்தபிறகு யாரைக்கொண்டு என் கணவரை நான் ஈடுசெய்வேன்? இந்த மனிதனோடு என்ன மாதிரியான உறவை வளர்த்துக்கொள்ளும் திறன் எனக்கிருந்தது? மேலும் இந்த உறவை என் கணவரால் கண்டுபிடிக்க முடியாதென்று என்னால் உறுதிபடச் சொல்லவியலுமா?
மீண்டும் நான் அவரைப் பார்த்தேன். இந்த மனிதர், உறங்கிக்கொண்டிருந்தார், தலையணையில் தலையை வைத்து, தனது தினசரி கடுமுயற்சிகளில் இருந்து மீள்பவராக. நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி அவர் கனவு காண்பாரா என்ன?
என்னைப்பற்றி? என்ன மாதிரியான முட்டாள்தனம் எனக்குள் நுழைந்திருந்தது? இதுபோன்ற சோம்பலான பேச்சையெல்லாம் எண்ணி நான் வெட்கப்பட வேண்டாமா – அதுவும் தனது நாற்பத்துஐந்தாவது பிறந்தநாளுக்கு விடைதந்திருக்கும் ஒரு பெண்ணாக?
காலைப்பொழுதில், முந்தையநாளின் முடிவுறாத அந்த விவாதத்தைத் திரும்பிப்பார்க்கும் உந்துதலை நானுணர்ந்தேன். என்னுடைய தீர்மானம் என் மனதைச் சவாலுக்கு அழைத்தது, எனது உள்ளுணர்வையும்.
தற்செயலாகவோ அல்லது தேவையின் பொருட்டோ என்னோடு தொடர்புறுத்தப்பட்ட மற்ற ஆண்களின் பெயர்களை மதிப்பிட்டுப் பார்த்தேன். என் கணவரின் எண்ணற்ற ஆண் நண்பர்களின் பெயர்களையும் நான் மீளநோக்கினேன். ஏனதை நான் செய்யக்கூடாது? அனேகமாக அவரும் எனது பெண்தோழிகளில் ஒருத்தியோடு ஏதேனும் ஒரு வகையிலான சாகசப்பயணத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அவற்றுள் எனது ஆத்மா வேண்டிய ஒரு முகத்தைக்கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் எனக்குள் அதிர்ந்தவாறிருந்த பெருவிருப்பத்தின் மணியிழையைத் தீண்டவும் யாருக்கும் இயலவுமில்லை.
நான் மிகவும் அமைதியானேன், ஆனாலும் எனது மனம் விரைந்தோடிக் கொண்டிருந்தது. கலகத்தில் ஈடுபடும் உணர்வு தொடர்ச்சியாக எனக்குள் நீடித்திருந்தது. சலிப்பினால் நான் இயக்கப்பட்டேன், ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்குத் துரத்தப்பட்டேன், அலமாரியிலிருந்து இழுப்பறைக்கு. நான் செய்வதெற்கென ஏதேனுமொன்றைத் தேடினேன். ஒழுங்கு படுத்தவேண்டிய அல்லது தூசுதட்டக்கூடிய பொருட்கள் யாவும் சட்டென்று கச்சிதமான ஒழுங்கில் இருப்பதாகத் தோன்றியது. என்னைச் சூழ்ந்திருந்த யாவையும் நான் வெறுத்தேன். வீடும் என்னைப் புறக்கணித்தது. நான் வெளியே செல்லத் தீர்மானித்தேன்.
குழப்பமான ஒரு மனநிலையோடு நான் மகிழுந்தில் ஏறினேன். முந்தைய மாலையில் நான் அணிந்திருந்த கனமான ஒப்பனையின் சுவடுகள் இன்னும் என் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தன, சுருக்கங்களை நிறைப்பவையாக.
சூரியன் தகித்தது, என்னுடைய முகத்தை எரிப்பதுபோல. எனது முகக்களிம்பின் எண்ணெயையும் தங்கநிறக் கண் அலங்காரத்தையும் அது உருக்குவதாக உணர்ந்தேன்.
என்னை நான் பொறுப்பற்றவளாக உணர்ந்தேன். ஏதேனும் ஒரு வகையிலான சாகசப் பயணத்தைத் தேடியவாறிருந்த பெண்மணி நான், ஏதோவொரு அற்பமான கனவை. எனது நம்பிக்கையையும் அமைதியையும் மீட்டெடுக்கும் ஏதோவொன்றை என்னுடைய ஆன்மாவுக்குள்ளாகத் தேடினேன், ஆனால் எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது தோல்வியின் கடுப்பை வண்டியின் வாயு மிதிக்கட்டையின் மீது வெளிப்படுத்தினேன். மகிழுந்து பறந்தது, அனைத்தையும் புறக்கணிப்பதாக, சிவப்பு விளக்குகளைக் கூட.
மத்திய சந்தைக்களத்தில் சென்று நிறுத்தினேன். தற்செயலாக எனது கண்கள் ஒரு முகத்தைக் கண்டன. அதனிடம் இருந்து நான் விலகினேன். நான் விரும்பிய முகம் அதுவல்ல, தற்செயலாகப் பார்ப்பதற்குக் கூட. எனது பார்வை வேறு பலரின் மீதும் படர்ந்தது. ஆனால் அந்த முகங்கள் யாவும் சாதாரணமானவை. ஓரு ஆணைத் தேடிய பெண்ணின் ஆன்மாவுக்குள் எதையும் அவை தூண்டவில்லை. அவனைப் பற்றிய விவரணைகளை அந்தப் பெண்ணாலும் கூடத் தரமுடியாத ஓர் ஆண்மகன்.
சந்தைக்குள் விரைந்தபோது, ஒரு பெண்ணின் மீது மோதி மன்னிப்பு கேட்பதற்காக நான் நின்றேன். ஓ, இந்த முகம்! ஏற்கனவே இதை நான் பார்த்திருக்கிறேனா? எங்கே பார்த்தேன்? அந்த முகத்தை நான் ஆர்வத்தோடு வெறித்துப்பார்த்தேன், அந்தப் பெண்மணியின் கவனத்தை ஈர்ப்பதாக.
உண்மையாகவே நான் இந்த முகத்தை அறிவேனா?
கிட்டத்தட்ட ஐம்பது வயதான இந்தப் பெண்ணை முன்னமே சந்தித்திருப்பதாக நான் உறுதியாக நம்பினேன். அவளுடைய முகம் பரிச்சயமானதாகத் தெரிந்தது. அடக்கடவுளே! கோபமும் ஆச்சரியமும் கலந்த பார்வையோடு அந்தப் பெண்மணி என்னைப் பார்த்தாள். அவள் நகர்ந்து சென்றாள், ஆனால் அவளுடைய முகம் எனது நினைவுகளில் நிழலாடியது.
சந்தைக்குள் நான் சுற்றித்திரிந்தேன், எனக்குத் தேவையில்லாத அத்தனை வகைச் சங்கதிகளையும் தூக்கிச் சுமப்பவளாக, எனது மனம் வேறெங்கோ இருந்தது. எங்கு நான் அவளைப் பார்த்திருக்கிறேன்?
திடீரென்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை நான் நினைவுகூர்ந்தேன். என் மகன் – அவன் வெளிநாட்டில் படித்து வந்தான் – எனக்கு அனுப்பக்
கூடியக் கடிதங்களுள் ஒன்றோடு சேர்ந்து அதுவும் வந்திருந்தது, தன்னைப் பற்றிய தகவல்களை அவற்றின் மூலம் என்னிடம் அவன் பகிர்ந்து கொள்வான், பெண்களுடனான அவனுடைய அனுபவங்களைப் பற்றியும். கடிதம் இப்படிச் சொன்னது:
“தயவுசெய்து, அம்மா, கோபப்படாதே. மறக்கவேயில்லாத ஓரிரவை ஒரு நடுத்தர வயதுப்பெண்ணோடு நான் கழித்தேன். ஒரு சின்னப்
பெண்ணைப் போலக் கொண்டாட்டமாயிருப்பதை அவள் விரும்பினாள், அவளுடைய இளமையின் நாட்கள் முடிந்து வெகுகாலங்கள் ஆகி
விட்டன என்றாலும் கூட. ஒவ்வொரு வருடமும் இந்தப் பருவத்தின்போது மலர்களின் திருவிழாவைக் கொண்டாடும் ஒரு தொலைதூர நகருக்கு நான் தொடர்வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். அங்கிருக்கும் மனிதர்கள் மலர்களை நேசிக்கிறார்கள், அம்மா, ஆகவே அவற்றை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். மலர்களின்மீது எனக்கு எத்தனை விருப்பமென்பது உனக்குத் தெரியும்தானே, உடன் ‘அழகுகளின்’ மீதும்.
இந்தப் பெண்மணி எனக்கருகே அமர்ந்திருந்தாள். தனது இளமைக்காலங்களைப் பற்றி அவள் என்னிடம் உரையாடினாள். நேர்மையாகச் சொல்வதெனில், அவள் அனேகமும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அவள் சொன்ன சங்கதிகள் ஆச்சரியமூட்டுபவையாக இருந்தன, குறிப்பாகத் தன்னுடைய திருமணம் குறித்து என்னிடம் அவள் சொன்னபோது, கூடவே அவள் கணவனைப் பற்றியும், அவனுடனான மோச
மான திருமண வாழ்க்கை பற்றியும். அந்த நீண்ட பயணத்தை நிஜமாகவே அவள் என்னை மறக்கச் செய்தாள். அதன்பிறகு திரும்பிச்செல்லும் எனது தொடர்வண்டியின் புறப்பாட்டு நேரத்தையும் அவள் என்னை மறக்கச்செய்தாள். அதன்பிறகு அன்றைய இரவைத் தன்னுடன் கழிக்க எனக்கு அழைப்பு விடுத்தாள்.
நான் குடிப்பது வழக்கம்தான், ஆனால் அவளோடு சேர்ந்து வழக்கத்துக்கு மாறாக நான் அதிகமாகக் குடித்தேன். எனக்கு போதை தலைக்கேறியது, அத்தோடு அந்தப் பெண்மணியும் குடித்தாள், தன்னுடைய நிதானத்தை அவளும் இழந்திருந்தாள். திடீரென்று, ஒரு பழங்காலக் கம்பளியின் மீதிருந்த ஒரு தளர்வான உடலை, நான் அணைத்திருந்ததை உணர்ந்தேன். தொடர்வண்டியில் வந்தபோது இந்தக் கம்பளியைப் பற்றி அவள் என்னிடம் சொல்லியிருந்தாள், அதற்கென அவள் செலவழித்த தொகையை அழுத்திச் சொன்னதோடு எவ்வாறு அதை வாங்குவதற்கு மற்றவர்களோடு தான் போட்டியிட நேர்ந்ததென்பதையும் விளக்கினாள். எனக்கு முன்பு எத்தனை ஆண்கள் இந்தக் கம்பளியின் மீது படுத்துறங்கினார்களென்பதை நானறிய மாட்டேன். எப்படியாகிலும், எனது கடமையைச் செய்தேன். எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தபோது, சங்கதிகள் மீண்டும் எனக்குள் மேலெழுந்து வரத் தொடங்கின. நான் அசிங்கமாக உணர்ந்தேன்: அவளின் உடல் வியர்வையில் நனைந்திருக்க மூட்டுப்பகுதிகள் வற்றி சதைப்பற்றில்லாமல் இருந்தன, மேலும் ஒப்பனைப்பொருட்களால் தீண்டமுடியாத அவளுடைய உடலின் சில அங்கங்களில் இருந்து முதுமையின் வாசனை வீசிக்கொண்டிருந்தது. ஒரு தரிசுநிலத்துக்கு நான் நீர் பாய்ச்சியிருந்தேன். என்னை நானே கேட்டுக்கொண்டேன், ‘இந்த முதிய பெண் எந்தவொரு ஆணையும் தொட்டு எத்தனை காலம் ஆகியிருக்கும்?’ எவ்வகையிலும், அதுவொரு அனுபவம் மட்டுமே. தொடருந்து நிலையத்தில் என்னை இறக்கிவிட்டபோது, தனது புகைப்படத்தை என்னிடம் தருவதில் அவள் குறிப்பாயிருந்தாள், புன்னகையோடு இதைச் சொன்னாள், ‘ஒருவேளை என்னை நீ நினைவில் வைத்திருந்து, விரைவில் என்னிடம் திரும்பி வரலாம்.’ ஆகவே அவளை நினைவில் வைத்திருக்கக்கூடாது என்பதற்காக, அவளின் புகைப்படத்தை நான் உனக்கு அனுப்புகிறேன்.”
ஓ… அவளின் புகைப்படம்… நான் திரும்பி நடந்தேன், என் மீது மோதிக்கொண்ட பெண்ணின் முகத்தைத் தேடியபடி. அவளை நான் கண்டுபிடிக்கவில்லை. அந்த புகைப்படம் எனது சிந்தனையை அச்சுறுத்திய அதேவேளையில் ஆத்திரம் என்னுடைய மார்புக்குள் ஊற்றெடுப்பதை நான் உணர்ந்தேன்.
மத்திய சந்தைக்களத்தை விட்டு விரைந்து வெளியேறி நடுங்கியவாறிருந்த எனது உடலை மகிழுந்துக்குள் வீசியெறிந்தேன், கிட்டத்தட்ட உலைக்களம் போல அது கொதித்துக் கொண்டிருந்தது. எனது பாதத்தை பதற்றத்தோடு வாயு மிதிக்கட்டையின் மேல் வைத்தேன். என்னைப் பற்றிய காட்சிகள், என்னுடைய உடல் குறித்த நுண்ணிய தகவல்கள் உட்பட, எனது மனதுக்குள் அலையாடின. வண்டியின் பின்காட்டிக் கண்ணாடியில் நானொரு மகிழுந்தைப் பார்த்தேன். அதற்குள் ஒரு பழகிய முகம் தென்பட்டது. நான் வேகத்தைக் குறைத்தேன். நான் விலகிச்சென்ற சமயத்தில், மெல்ல அந்தப் பெண்மணியின் முகத்தை நான் மறந்தேன்… அதன் கூடவே, அந்த புகைப்படத்தையும்.
karthickpandian@gmail.com