As if the actual state were not the people. The state is an abstraction. The people alone is what is concrete.
-Karl Marx
இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு குடியரசுகளாக பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, சில மன்னராட்சி பிரதேசங்கள் இரண்டில் எதனுடன் இணைவது என்ற கேள்வியை எதிர்கொண்டன. அதில் காஷ்மீரும் ஒன்று.
சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அழுத்தத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இது மன்னரின் இசைவாக இருந்ததே தவிர மக்களின் குரலாக இல்லை. சில தனித்த உரிமைகளை அந்த மாநிலத்திற்குக் கொடுப்பதன் மூலம் மக்களைத் திருப்திபடுத்தவே இந்தியா முனைந்தது.
இருப்பினும் காஷ்மீரின் முக்கிய பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்கள், இன்றைய நிலையில் எழுபது இலட்சம் பேர், இந்தியாவுடன் முழுமையாக அடையாளப் படுத்திக்கொள்வது தொடர்ந்து கடந்த எழுபதாண்டுகளாக சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. காஷ்மீரின் ஒரு பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாகிஸ்தானும் தன் பங்கிற்கு இந்தியப் பகுதி காஷ்மீரில் தீவிரவாத முனைப்புகளை வளர்த்தது. காஷ்மீரில் ‘ஆஸாதி’ என்னும் விடுதலை விழைவுக்குரல் கேட்கத் துவங்கியது. அதை பாகிஸ்தானின் தூண்டுதல் என்றே கருதிய இந்திய அரசு எப்படியாவது அந்த குரலை எழவிடாமல் தவிர்க்க நினைத்தது. அரசியல்ரீதியாகவும், ராணுவரீதியாகவும் பல முன்னெடுப்புகளைச் செய்தது. இந்திய அரசின், ராணுவத்தின் நடவடிக்கைகள் மேலும் பலரை அந்நியப்படவே வைத்தன. தீவிரவாதிகள் காஷ்மீர் பண்டிட்களை அங்கிருந்து வெளியேற்றியது காஷ்மீர் மக்களின் சுதந்திர வேட்கையின் கரும்புள்ளி ஆகியது. பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளின் இறையாண்மை விழைவுகளின் வெற்றுக்குறியீடாக காஷ்மீர் மாறியபோது, காஷ்மீர் மக்களின் விழைவு என்பதை யாரும் கருத்தில் கொள்ளவே தயாராக இல்லாத நிலை உருவானது.
இப்போது காஷ்மீர் மாநிலத்தையே பிரித்து மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்திய அரசு மாற்றியதுடன், காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட தனித்த உரிமைகளையும் இந்திய அரசு அகற்றிவிட்டது. ராணுவத்தை அங்கே குவித்து தகவல் தொடர்புகளைத் துண்டித்து அரசியல் தலைவர்களை கைது செய்து ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் மேலும் அந்நியப்படவே வாய்ப்பு அதிகம் என்பது தெளிவு.
இந்த நிலையில் இந்தக் கட்டுரை மூன்று விஷயங்களை விரிவாகப் பரிசீலிக்க விழைகிறது.
ஒன்று: ஏன் இந்தியாவும், பாகிஸ்தானும் தமிழகத்தின் இரண்டு மூன்று பெரிய மாவட்டங்களின் பரப்பளவே கொண்ட பதினேழாயிரம் சதுர கிலோமீட்டர் அளவிலான எழுபது இலட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு என்ற நிலப்பகுதியை இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாற்றுகின்றன? அந்த மக்களின் எண்ணிக்கை சென்னை மக்கள் தொகை அளவு கூட இல்லையே? ஏன் இந்தியா அந்த நிலப்பகுதி தன்னுடன் இருந்தே தீரவேண்டும் என்று நினைக்கிறது? ஏன் பாகிஸ்தான் அதை எப்படியாவது இந்தியாவிலிருந்து துண்டிக்க வேண்டும் என நினைக்கிறது?
இரண்டு: ஏன் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் இவ்வளவு ஒடுக்குமுறை, வன்முறைகளை சந்தித்த பிறகும் சுதந்திர விழைவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்? அந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன பொன்னுலகை சாதித்துவிடப் போகிறார்கள்?
மூன்று: ஏன் இந்தியா முதலில் உறுதியளித்தபடி அந்த மக்களின் விருப்பத்தை ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது?
இதற்கான பதில்களை 1947 மற்றும் அதற்கும் சிறிது முன்னும் பின்னுமான காஷ்மீர் வரலாற்றில் மட்டும் வைத்து தேட முடியாது. அதைவிட விரிவாக தேசிய அரசுகள் என்றால் என்ன, நிலப்பரப்பிற்கும் அவற்றின் இறையாண்மைக்கும் என்ன தொடர்பு போன்றவற்றை ஆராய்வதன் மூலமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
நவீன தேசிய அரசுகளைப் பொறுத்தவரை என் பார்வையில் எல்லைகளும், நிலப்பரப்பும் மாயக்கண்ணிகள். மாயக்கண்ணி என்றால் ஆங்கிலத்தில் ஃபெட்டிஷ். தன் பிரியத்திற்குரியவருக்குப் பதிலாக அவருடைய கைக்குட்டையை வைத்துக்கொண்டு அதைப் பார்த்து மகிழ்வது போன்றது. இறையாண்மை என்பது மக்கள் சார்ந்தது. அதை நிலப்பரப்பு சார்ந்ததாகப் பார்ப்பதுதான் மாயக்கண்ணி என்ற ஃபெட்டிஷின் செயல்பாடு. Territory is the necessary fetishization of sovereignty in the modern nation state form. அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று சிந்திக்கும் முதிர்ச்சி இன்னமும் மானுடத்திற்கு சாத்தியமாகவில்லை என்று சொல்லலாம். இந்தக் கட்டுரையில் அந்த மாயக்கண்ணி எப்படி வரலாற்றில் உருவானது, காஷ்மீர் பள்ளத்தாக்கு எப்படி அதன் பகுதியானது என்பதைப் பரிசீலிப்போம்.
மண்ணாசை: அந்தக்கால இறையாண்மை
‘மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை’ என்ற மூவித ஆசைகள் அழிவைத் தேடித் தரும் என்று பண்டைய மொழிதலாகச் சொல்வார்கள். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களை ஆசைக்குரிய பொருளாகக் கூறுவதை நாம் கண்டித்தாலும், அந்த மனோபாவத்தை அறிவோம். ஹெலன் என்ற பெண்ணின் புன்னகையின் பொலிவினால் ஆயிரம் போர்க்கப்பல்கள் புறப்பட நேர்ந்ததாக கவிஞன் சுவைபடக் கூறிய கிரேக்க புராணக் கதையை அறிவோம். பொன்னாசை என்பது பணம் அல்லது செல்வத்தைக் குறிக்கும். அதையும் புரிந்துகொள்ள முடியும். அது என்ன மண்ணாசை? அதனாலென்ன பயன்? பெண்ணை ஒருவர் நேசிக்கலாம், உறவு கொள்ளலாம்; பொன்னை, பண்டங்களை வாங்கி நுகரப் பயன்படுத்தலாம். மண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் இந்தக் கட்டுரையின் மைய அச்சு சுழல்கிறது. காஷ்மீர் பிரச்சினையை அதற்குரிய தகவல்களை மட்டுமே வைத்து அணுகாமல் எத்தகைய மானுட சிந்தனைப் புலங்கள் அந்தப் பிரச்சினையினை உருவாக்கியுள்ளன என்பதையே இந்தக் கட்டுரை பேச முயல்கிறது. மிகப்பெரிய மானுட சோகங்களெல்லாம் மனிதர்களின் உருவாக்கிய கருத்துக்களாலும், கருத்தியல்களாலுமே விளைகின்றன. எனவே ‘மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை’ என்ற சொற்சேர்க்கையில் நம் விசாரணையைத் துவங்குவோம்.
மண்ணாசை என்பது இங்கே ஆட்சி அதிகார விழைவைக் குறிக்கிறது. ஒருவர் அரசனாக விரும்புவது என்பதையே மண்ணாசை என்று குறித்தார்கள்; சில இடங்களில் ஒரு அரசன் மேலும் பல நாடுகளைக் கைப்பற்ற நினைப்பதையும் மண்ணாசை என்றே குறிக்கலாம். அதாவது அதிக அதிகாரம். குலசேகர ஆழ்வார் பாசுரத்தில் “ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ, வானாளும் அரசும் மண்ணரசும் யான் வேண்டேன்; தேனார் பசுஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே” என்று ஒரு வரி வரும். இதில் தெளிவாக இறையாண்மை என்பது மண்ணரசு என்று குறிக்கப்படுகிறது. இறையாண்மை என்பது நிலத்தின்மீதான ஆதிக்கமாக குறிக்கப்படுகிறது.
நிலத்தின் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறுவது பொருளற்றது. நிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? அதில் யாராவது உழைத்தால்தானே பொருளுற்பத்தி என்பது சாத்தியமாகும்? அந்த உழைப்பைக் கட்டுப்படுத்துபவன், வழிநடத்துபவன்தானே அரசன்? அந்த அடிப்படையில் சக மனிதர்கள் மீது ஒருவன் செலுத்தும் அதிகாரம்தானே இறையாண்மை? பிறகு ஏன் அதை மண்ணாசை என்று குறிக்க வேண்டும்?
சுழன்றும் ஏர் பின்னது உலகம்
புவிப்பரப்பில் மானுடம் வசிக்கத் துவங்கியபோது ஆதியில் வாழ்ந்த முறையில் தொடர்ந்து வாழ்பவர்களாக நாம் கருதும் சமூகங்களை ஆதி-வாசி சமூகங்கள் என்கிறோம். இவற்றில் கூட தலைமை ஏற்பவராக ஒருவர் இருந்ததைக் குறித்து அறிவோம். சென்ற இதழில் எழுதிய “வெகுஜன இறையாண்மையும், வாரிசுத் தலைமையும்” கட்டுரையில் நம்பிக்வாரா என்ற ஆதிவாசி இனக்குழுவைக் குறித்த லெவிஸ்டிராஸ் என்ற மானுடவியல் அறிஞரின் ஆய்வுகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அது போல பல்வேறு ஆதிவாசி இனக்குழுக்களிலும் தலைமைப் பொறுப்பு என்பது முக்கியமாகக் கருதப்பட்டது. இந்த இனக்குழுக்கள் பல ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவற்றில் பல ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் இடம் பெயரக்கூடியவை. அவர்களை உணவைத் தேடிக்கொள்ளும் முறையில் அவ்வப்போது இடப்பெயர்ச்சி நிகழும். அந்தக் குழு உறுப்பினர்கள் இணைந்து இயங்குவது பாதுகாப்பு கருதி அவசியமானது. இணைந்து இயங்குவது என்றாலே ஒரு முடிவுக்கு அனைவரும் உடன்படுவதுதானே. அப்படியான ஒற்றை முடிவை உறுதிசெய்யக்கூடியவரே தலைவர். இந்த ஒற்றை முடிவு என்பதுதான் இறையாண்மையின் உள்ளடக்கத்தின் வடிவம் (form of content) என்றும், அதை வெளிப்படுத்தும் அரசனோ, மூத்தார் சபையோ அல்லது வேறு எந்த அமைப்புமோ இறையாண்மையின் வெளிப்பாட்டின் வடிவம் (form of expression) என்றும் கூறியிருந்தேன். இந்த உள்ளடக்கத்தின் வடிவம், வெளிப்பாட்டின் வடிவம் என்பது தெல்யூஸ் என்ற ஃபிரெஞ்சு தத்துவவாதியிடமிருந்து நான் எடுத்துக்கொள்ளும் வகைப்பாடு. அதை இறையாண்மைக்குப் பொருத்திப்பார்ப்பதன் மூலம் நான் கோட்பாட்டாக்கம் செய்கிறேன்.
இத்தகைய ஆதிவாசி இனக்குழுக்களில் இறையாண்மை வடிவங்கள் இன்றியமையாததாக விளங்கினாலும் யாரும் அதை மண்ணாசை என்றோ, மண்ணரசு என்றோ குறிப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. பின் எப்படி மண் என்பது இறையாண்மையின் குறியீடாக மாறியது என்பதை யோசிக்க வேண்டும். அவ்வளவு கடினமான காரியம் இல்லை அது. வேட்டையாடியும், தாவரங்கள் தானாக உற்பத்தி செய்ததை உண்டும் வாழ்ந்த சமூகங்கள், நிலத்தை உழுது சில ஆற்றல் மிக்க விதைகளை உணவுக்கான தானியமாக உற்பத்தி செய்யத் தொடங்கியபோதுதான் நிலம் முக்கியமான உற்பத்திச் சாதனமாக மாறியது. அன்றாடம் உணவைத்தேடுதல் என்ற நிலையிலிருந்து உபரியாக உணவை உற்பத்தி செய்து வைத்துக்கொள்ளும் சாத்தியம் உருவானது. இந்த உபரியிலிருந்துதான் சற்றே விரிவான அரசமைப்பு உருவாகும் சாத்தியமும் பிறந்தது என்று கூறலாம்.
பொதுவாக தாவரங்களில் உயிராற்றல் பல பகுதிகளில் பிரிந்திருக்கும். கிளைகள், இலைகள், காய்கனிகள் என்று வளர்ச்சியுற்று கனியினுள் விதைகள் இருக்கும். அவை கீழே விழுந்து வேர்பிடித்து மீண்டும் ஒரு தாவரமாக முளைக்கும். ஆனால் அரிசி, கோதுமை, சோளம், கம்பு முதலிய பயிர்கள் தானாகவே எங்கும் முளைப்பதில்லை. அவை வெள்ளத்தில் மூழ்கிய நிலத்தில், மண்ணின் உயிர்ச்சக்தி முழுவதையும் விதைகளாக்கித் தோன்றும் பயிர்கள். இத்தகைய ஆபத்துக்கால தாவரத்தின் உயிராற்றல் முழுவதும் தாவரம் உருவாக்கும் விதைகளில் இருக்கும். இதைக்கண்ட மனிதர்கள், நிலத்தில் நீரைத் தேக்கி, வெள்ளம் போன்ற நிலையை ஏற்படுத்தி, இந்த விதைகளை விதைத்து பன்மடங்கு ஆற்றல் மிக்க உணவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையினைக் கண்டார்கள்.
இப்படி உபரியாக உற்பத்தியான உணவு கிடைத்துவிடுவதால் பலருடைய உழைப்பு பல்வேறு விதங்களில் பயன்படும் சாத்தியம் பிறந்தது. துணிகளை நெய்வது, உலோகங்களைப் பயன்படுத்தி பாண்டங்கள், ஆயுதங்கள் செய்வது, கட்டடங்களைக் கட்டுவது, எழுதுவது, கற்பது, சிந்திப்பது, ஆராய்வது எனப் பல காரியங்களில் இந்த உபரி உணவை உண்பவர்கள் ஈடுபட முடிந்தது. இவ்வாறு பல்வேறு தொழில்களை நெறிப்படுத்தவும், உழவர்களின் விளைநிலங்களைப் பாதுகாக்கவும் அரசமைப்பும், அரசர்களின் கட்டுப்பாட்டில் ஆயுதம் தாங்கிய வீரர்களும் உருவானார்கள். ஆனால் சிறிய இனக்குழுக்களாக இருந்த நிலையிலிருந்து உடனடியாக எல்லோரும் இணைந்த அரசமைப்பாக மாற இயலவில்லை. இனக்குழுக்களுக்கிடையே இருத்தலியல் சார்ந்த பகைமை இருந்தது. பிற உயிரினங்கள் போலன்றி மனிதர்கள் தங்கள் இனத்தவரையே கொல்வது இயல்பாகவும், சுலபமாகவும் இருந்தது. அதிலிருந்து விவசாய வாழ்க்கை என்ற நிலைத்தன்மை அடைந்தாலும், பல அரசர்கள் அவர்களுக்குள் ஓயாத போர் என்பதாகவே மாறியது. சிறிய அரசர்களுக்கு இடையிலான போர்களைக் குறைத்து சமநிலையை உருவாக்க பேரரசுகள் தேவைப்பட்டன. இப்படியாக உருவான ஒரு மாற்றத்திற்கு நிலத்தில் பயிரிடப்பட்டு உபரியாக உருவாகும் உணவு முக்கிய அடிப்படையாக இருந்ததால்தான் ”சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என திருக்குறள் கூறியது எனலாம்.
உழவர்களை குடியானவர்கள் என்று சொல்வோம். அரசனால் ஆளப்படுபவர்கள் குடிகள் என்பதால் குடி ஆனவர்கள். “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்” என்று பாடினார் திருநாவுக்கரசர். ஒருவரது வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களைக் குடியிருப்பவர்கள் என்கிறோம். இதிலிருந்து பெறப்படுவது ஒருவருக்கு நிலத்தில் உழுது பயிர் செய்யும் உரிமை இருந்தது. அந்த உரிமையை உறுதி செய்பவர் அரசர். நிலம் ஒருவருக்கு அரசரால் தரப்பட்டாலும், சுலபத்தில் அதை அதே அரசரோ அல்லது அந்த பகுதியைக் கைப்பற்றும் வேறொரு அரசரோ பறித்து, மற்றொருவருக்கு உரிமையைத் தருவது சுலபம். ஒரு பெரிய நிலப்பரப்பை ஆளும் அரசரால் எல்லா குடியானவர்களிடமிருந்து விளைச்சலில் உபரியை வரியாகப் பெற முடியாது. அங்கங்கே இருக்கும் சிற்றரசர்கள், நிலப்பிரபுக்கள் வரியை வசூலித்து அதில் அவர்கள் கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதத்தை அரசர்களிடம் கொடுப்பார்கள். சிற்றரசர்கள், பேரரசர்களுக்கு கப்பம் கட்டுவார்கள்.
இப்படியெல்லாம் நிலம் சார்ந்து அரசு இருந்தாலும், மண் இறையாண்மையின் அடிப்படையாகக் கருதப்பட்டாலும் மன்னர்கள் ஆண்ட நாடுகளுக்கு எல்லைகள் கிடையாது; எல்லைக் காவலும் கிடையாது. இயற்கையாக அமைந்த நதிகள், காடுகள், மலைகள் போன்ற நிலவியல் அம்சங்களை எல்லையாகக் குறித்துக்கொள்வார்கள். மற்றபடி எந்த குடியானவர் எந்த மன்னருக்கு வரி செலுத்துகிறார் என்பதுதான் நாட்டின் எல்லை. சோழ மன்னருக்கு கப்பம் கட்டும் சிற்றரசர் அவர் மகளைப் பாண்டிய மன்னர் மணந்தால் பாண்டிய மன்னருக்குக் கப்பம் கட்டுவார். மகளை மணக்காமலேயே கூட பாண்டிய மன்னர் வலுவானவர் என்று தோன்றினால் கட்சி மாறுவார். அவருக்குக் கீழுள்ள குடிகளைப் பொருத்தவரை இரண்டிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இப்படியான முறை நிலைபெறும்போது குடியானவர்களுக்கும், அரசர்களுக்கும் நேரடியாகப் பெரிய தொடர்பொன்றும் இருக்காது. ரஜனி பால்மே தத்தின் வரலாற்று நூலை ஒட்டி பாதல் சர்க்கார் எழுதிய “இந்திய சரித்திரம்: ஒரு நகைச்சுவை நாடகம்” என்ற நாடகத்தில் “ராஜா வருவான், ராஜா போவான், நாங்கள் இருப்போம் எப்பொழுதும்; ராஜ்ஜியம் வெல்லும், ராஜ்ஜியம் அழியும், நாங்கள் இருப்போம் எப்பொழுதும்” என்று குடியானவர்கள் பாடுவதாக வரும் (மொழியாக்கம் கோ.ராஜாராம், நிகழ்த்தியவர்கள் சுதேசிகள், மதுரை). பஞ்சம் முதலிய இயற்கைப் பேரிடர்கள் வரும்போது அரசர்கள் தாங்கள் சேகரித்த உபரிகளைக் கொண்டு குடியானவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதைத் தவிர பெருமளவில் குடியானவர் வாழ்க்கை தனித்தியங்கியே வந்தது எனலாம்.
இதனால் பெறப்படுவது: நிலம் (land) சார்ந்த இறையாண்மை நிலப்பரப்பு (Territory) சார்ந்த இறையாண்மையாக இருக்கவில்லை.
நிலப்பரப்பு இறையாண்மையின் தோற்றம்
எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது இறையாண்மை வடிவமாக மாறியது எப்படி என்பதுதான் நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது. இதில் முக்கியமான முரணே நிலத்தில் பயிர் செய்வதால் கிடைக்கும் உபரி என்பது அரசுருவாக்கத்தில் தனது முக்கியத்துவத்தை இழந்தபின்னரே நிலப்பரப்பு இறையாண்மை வடிவமாக மாறியது எனலாம். முதலீட்டாளர்கள் என்ற இனம் பல்வேறு தொழில்களில், வர்த்தகத்தில், பண்டங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு முதலீட்டைப் பெருக்குவதன் மூலம் உற்பத்தி -நுகர்வு சுழற்சியை அதிகரித்ததால் அதுவே அரசின் வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக மாறியது. பண்டம், பணம், பண்டம் என்ற ஆதிகால வர்த்தக நிலை மாறி பணம், பண்டம், மேலும் பணம் என்று முதலீட்டிய வடிவம் கொண்ட பிறகு நிலம் சார்ந்த உற்பத்தியிலிருந்து எல்லாமே முதலீட்டியத்தின் கைக்குள் வந்தது.
இதற்கு இணை நிகழ்வாக மானுட சுதந்திரம் குறித்த கற்பனைகளுடன் மானுடவாதம் உருவானது. அச்சுக்கலையின் தோற்றத்தால் கல்வி பரவலாகி எத்தகைய நெறிகள் வாழ்க்கைக்குத் தேவை என்பதெல்லாம் பரவலாக சிந்திக்கப்பட்டது. இதனால் அரசன் என்பவனது இறையாண்மை உள்ளபடியே மக்களால் உருவாக்கப்படுவது என்பதும், ஒவ்வொரு தனிநபருக்குமே இறையாண்மையில் பங்கு இருக்கிறது என்பது போன்ற சிந்தனைகளும் தோன்றின. அரசனிடமும், நிலப்பிரபுக்களிடமும் குவிந்திருந்த அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பிய தொழில் முனைவோர்கள் புதிய இறையாண்மை சிந்தனையை ஆதரித்தார்கள்.
வட அமெரிக்காவில் குடியேறிய பிரிட்டிஷ்காரர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், 1776-ஆம் ஆண்டு தங்களை சுதந்திரக் குடியரசாக அறிவித்துக்கொண்டார்கள். அரசருக்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்யலாம் என தீர்மானித்தார்கள். பிரான்சில் 1789 ஆம் ஆண்டு “சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம்” என்ற கோஷத்துடன் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ஃபிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இங்கிலாந்தில் ஏற்கனவே நிலவி வந்த பார்லிமெண்ட் என்ற பிரதிநிதிகள் சபையின் அதிகாரமும், மக்கள் பிரதிநிதித்துவமும் அதிகரித்து வந்தது. பிரபுக்களின் சபையும், பொதுமக்கள் சபையும் பிரிந்திருந்தாலும் மெள்ள மெள்ள பொதுமக்கள் சபையின் அதிகாரம் கூடியது. இப்படியாக மன்னராட்சியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மக்களாட்சி நோக்கி உலகெங்கும் தங்கள் ஆட்சியை விரிவாக்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் நகரத் துவங்கின.
கார்ல் மார்க்ஸ் பண்டங்களின் பயன் மதிப்பு அவற்றை உருவாக்கத்தேவையான உழைப்பின் மதிப்புதான் என்று கூறினார். இதன் மூலம் எல்லா உபரியும் மனித உழைப்பினால் பெறப்படுவது என்றானது. நிலவுடைமைச் சமூகம் மூடி மறைத்திருந்த இந்த உண்மையை தொழிற்புரட்சி உடைத்து வெளிப்படுத்தியதாகவே அவர் கருதினார். இதன் வழியில் நின்று யோசிக்கும்போது அரசுருவாக்கத்திற்குத் தேவையான உபரி என்பது மனித உழைப்பு சார்ந்து உருவாகிறது என்பதும், நிலம் என்பது அதிக பட்சம் உழைப்பின் களம் மட்டும்தான் என்பது பெறப்படும். இதனால் மார்க்ஸிய நோக்கு தொழிலாளர் வர்க்கமே அரசமைக்கும் சாத்தியத்தையும், அந்த தொழிலாளர் வர்க்கம் தேசம், தேச எல்லை என்ற மாயக்கண்ணியை மறுத்து சர்வதேச மானுடப் பொதுமையை சாதிக்கும் என்றும் கருதியது. கம்யூனிஸ்டுகள் உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொன்னார்கள். கம்யூனிஸ்டு அகிலம் என்ற அமைப்பினை உருவாக்கினார்கள்.
சுதந்திரவாதம், கம்யூனிஸம் இரண்டுமே இறையாண்மை என்பது மக்களுடைய சுயாட்சி உரிமை என்றே கருதின. அதாவது ஒரு மக்கள் தொகுதி சட்டதிட்டங்கள் படி தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்வார்கள்; பொது முடிவுகளை எடுப்பார்கள், அதற்காக அரசன் என்றொருவன் தேவையில்லை என்பதுதான் அந்த முடிவு. அரசர்கள் இறைவனின் பிரதிநிதி என்பது, வம்சாவழியாக அரசர்கள் பதவியேற்பது போன்றவை பிற்போக்கு அம்சங்களாக கருதப்படலாயின. அதேபோல மானுடப் பொதுமையை முற்போக்காகக் கருதுவதும் தோன்றியது. கவி ரவீந்திரநாத் தாகூர் “Where the world has not been broken up into fragments By narrow domestic walls” என்ற புத்துலகில் அவர் நாடு விழித்தெழ வேண்டும் என்றார். ஜான் லெனன் என்ற பீட்டில்ஸ் பாடகர் “Imagine There is no Country; A Brotherhood of Man” என்று பாடினார். ஆனால் அரசனிடமிருந்து மக்களுக்கு வந்த இறையாண்மை, மானுடப் பொதுமையை நோக்கி நகரமுடியவில்லை.
இப்படி இறையாண்மை அரசர்களிடமிருந்து மக்களுக்கு வரும் முன்னரே (அதாவது சித்தாந்த ரீதியாக), ஓயாத போர்களிலிருந்து தப்பிக்க ஒரு அரசரின் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பை தீர்மானம் செய்துகொண்டு எல்லைகளை வகுத்துக்கொள்ளலாம் என்ற தீர்மானம் உருவானது. குறிப்பாக 1648-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நடந்த முப்பதாண்டு யுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்த வெஸ்ட்பாலியா உடன்படிக்கையை நாடுகளுக்கிடையிலான எல்லைகளை நிர்ணயிக்கும் முறைக்கான துவக்கமாகக் கூறுவார்கள். பின்னர் வரைபடங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தபோது தேச வரைபடங்களும், எல்லைகளும் தேசங்கள் என்ற கற்பிதங்களின் முக்கிய அச்சாக மாறத் துவங்கின.
பண்டைக்கால அரசர்கள் பெரும்பாலும் எதேச் சதிகாரிகளாக இருந்தார்கள். அவர்கள் போருக்குச் செல்வதற்கு வரி வருவாயை அதிகரித்துக்கொண்டு தாங்கள் மேலும் அதிகாரமிக்கவர்களாக மாறும் மண்ணாசை காரணமாக இருந்தது. சில சமயங்களில் மன்னர்கள் தங்கள் தனிப்பட்ட மனமாச்சர்யங்களால் கூட போர்களில் ஈடுபட்டு அண்டை நாடுகளைத் தாக்கினார்கள். மக்களாட்சியில் அதிகாரம் மக்களிடம் வந்துவிட்டதால் ஒரு தேசத்து மக்கள் இன்னொரு தேசத்தைக் கைப்பற்றினால் அந்த மக்களின் அதிகாரத்தைப் பறித்துக்கொள்வது சாத்தியமில்லை என்பதால் மண்ணாசை என்பது அர்த்தமிழக்கும் சாத்தியமே அதிகரித்தது.
உதாரணமாக 1858-ஆம் ஆண்டு இந்தியாவைத் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த இங்கிலாந்து அரசு, இந்திய மக்களின் உரிமைகளுக்கும், தன்னாட்சி கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்குள் ஐரோப்பாவினுள் உலகின் பிற பகுதிகளைக் காலனியாதிக்கத்திற்குக் கொண்டு வராத நாடான ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளையே காலனியாக்கிக்கொள்ள முனைந்தது. இதனால் இரண்டு உலகப்போர்கள் மூண்டன. அதன்பின் ஒருவழியாக உலகம் முழுவதையும் தனித்தனி சுதந்திர தேசங்களாக எல்லைகளை வகுத்து அந்தந்த மக்கள் அவர்களையே ஆண்டுகொள்வார்கள் என்ற உடன்படிக்கை ஏற்பட்டது. எல்லா இடங்களிலும் பேரளவிலாவது சட்டத்தின் ஆட்சி என்பது அமலானது.
இந்த நிலையில் இறையாண்மை என்பது மக்களின் சுயாட்சி என்றான பிறகு அதை மண்ணாசை என்று குறிப்பதோ, அதன் காரணமான நிலத்தின் உபரியினால் உருவாகும் அரசு வடிவம் என்பதோ சாத்தியமற்றுப்போயிற்று. ஆனால் அதே சமயம் நவீன தேசத்தை எப்படி வரையறுப்பது என்ற கேள்வியும் எழுந்தது? தேசம் தூலமான அளவில் எல்லைகளுள்ள நிலப்பரப்பாக இருக்க வேண்டிய இன்றியமையாமை நவீன தேசிய அரசிற்கு உண்டு. நிலம் முக்கியமல்ல; நிலப்பரப்பு, அதன் எல்லைகள் முக்கியம். இப்போது ஒரு புதிய பிளவு அல்லது முரண் ஏற்படுகிறது. இறையாண்மை என்பதன் அடிப்படை மக்கள் தொகுதியா, நிலப்பரப்பா என்பதே அந்த முரண்.
இதிலிருந்து பெறப்படுவது: நவீன இறையாண்மையின் உள்ளடக்கத்தின் வடிவம் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதி. அதன் வெளிப்பாட்டின் வடிவம் எல்லைகளைக்கொண்ட நிலப்பரப்பு.
பிரிவினை எதைப் பிரிக்கிறது?
ஒரு நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகுதி தேசிய அரசாக ஒரு இறையாண்மை வடிவம் கண்ட பிறகு அவர்களில் ஒரு பிரிவினர் தனியாக ஒரு அரசை அமைக்க விரும்பினால், பிறர் அவர்கள் “தங்களுடைய” நிலப்பரப்பை பிரித்து எடுத்து செல்வதாக நினைக்கும் விநோதமான சூழ்நிலை உருவாகிறது. அதாவது மக்களால் உருவான இறையாண்மை பிரிக்கப்பட முடியாத நிலப்பரப்பாக வடிவம் கொள்கிறது. அப்போது அரசு என்பது மக்களால் உருவானதா, நிலப்பரப்பால் உருவானதா என்ற கேள்வி எழுகிறது. மக்களாட்சியில் இறையாண்மை என்பது மக்களிடம் இருப்பதால் எந்தவொரு தொகுதியும் மொத்தத்திலிருந்து பிரிந்து சென்று புதிதாகத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு தங்களையே ஆட்சி செய்யும் உரிமையுடன்தானே இருக்க வேண்டும்? அப்படி ஒரு நிலத்தின் மக்கள் நினைத்தால் நிலப்பரப்பினைப் பிரிக்க முடியாதது என்று எப்படி பிறர் சொல்லமுடியும்? ஆனால் நிலப்பரப்பே இறையாண்மையாகக் கருதப்படுவதால் அந்த நிலத்தின் மக்களின் உரிமைகள் மறுக்கப்படக்கூடியதாக, பிரிவினைவாதமாக மாறுகிறது.
மேலும் தேசங்களின் எல்லைகளை வரைவது என்பது எப்போதுமே சிக்கலான காரியம்தான். சதத் ஹசன் மண்டோ “டோபா தேக் சிங்” என்ற தன் புகழ்பெற்ற கதையின் மூலம் தேச எல்லை உருவாக்கத்தின் அபத்தத்தை உருவகப்படுத்தினார். எப்படியோ விதிவசமாக ஒரு எல்லை அமைந்துவிட்டாலும், அது இறையாண்மையின் புனிதக் குறியீடாக மாறிவிடுகிறது. ராணுவ வீரர்கள் உயிரைக்கொடுத்தேனும் அதைக் காக்கும் தியாகிகளாகிறார்கள்.
தேசிய அரசுகள் தங்கள் நிலைத்தன்மை குறித்து அஞ்சுகின்றன. உபரியைக் கட்டுப்படுத்த பெரிய நிலப்பரப்பு தங்கள் வசம் இருப்பதே நல்லது என ஆளும் வர்க்கமாக உருவாகும் பகுதியினர் நினைக்கிறார்கள். அடித்தட்டு மக்களுக்கோ சிறிய மக்கள் தொகுதியாக தேசம் இருந்தால் அது அதிகாரத்தை தங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒவ்வொரு தேசிய அரசும், தேசம் குறித்த கருத்தியலை, வரலாற்றை அனைவருக்கும் போதித்து மக்களை தேசத்தின் குடிகளாகக் கட்டமைக்க கடுமையாக முயல்கின்றன. தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய விளையாட்டு அணிகள் என்று தேசியப் பெருமிதம் மக்களிடையே தொடர்ந்து விதைக்கப்படுகிறது. தேசத்தினுள் இருக்கும் ஒவ்வொரு பிரதேசத்து மக்களும் தங்களைப் புதிய தேசமாகக் கூறிக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தேசிய அரசுகளைத் துன்பப்படுத்துகிறது. ஒரு காலத்தில் கூட்டுக்குடும்பத்தில் இருந்து மணமான பிள்ளைகள் மனைவியுடன் பிரிந்து தனிக்குடித்தனம் செல்வது பெரும் சோக நிகழ்வாகப் பார்க்கப்பட்டது போல, ”தேசப்பிரிவினை”, “பிரிவினைவாதம்” என்பது பெரும் சோகமாக, துரோகமாக, பாவகாரியமாக நினைக்கப்படுகிறது.
மக்களாட்சி தத்துவத்தில் ஒரு நிலப்பரப்பிலிருந்து வரும் உபரி, அந்த மக்களின் நலனுக்காக செலவு செய்யப்படத்தான் வேண்டும். எனவே ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் வருவாயும் இருக்கிறது, செலவும் இருக்கிறது. பண்டைய காலம் போல நிலத்திலிருந்து கிடைக்கும் உபரி மட்டுமே அரசுருவாக்கத்திற்கு அடிப்படை என்று இல்லாதபோது, அரசு என்பதே மக்களின் அதிகாரம் என்னும்போது, தன்னாட்சி கோரும் ஒரு மக்கள் தொகுதியின் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்துக்கொள்வதால் என்ன நன்மை ஒரு தேசத்தின் இறையாண்மைக்கு கிடைக்கிறது என்ற கேள்வி ஆழமாகப் பரிசீலிக்கப்படவேண்டும்.
இதிலிருந்து பெறப்படுவது: ஒரு தேசிய அரசின் இறையாண்மைக்கு எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு இன்றியமையாதது என்றாலும், இந்த நிலப்பரப்பு கூடுவதாலோ, குறைவதாலோ அந்த இறையான்மை பலம் அடைவதோ பலவீனம் அடைவதோ கிடையாது. மக்கள் தொகைக்கேற்ற, அவர்கள் உழைப்பிற்கேற்ற வருவாய், அதற்கேற்ற செலவு என்பதுதான் சூத்திரம்.
உதாரணமாக, இரண்டாம் உலகப்போரில் ஆசியாவையே பிடித்து ஆளவேண்டும் என்று நினைத்த ஜப்பான், போரில் தோற்ற பிறகு ஒரு தீவாக மட்டுமே இருந்து, அதன் உற்பத்தித் திறனால் உலகின் பொருளாதார ஆதிக்கமிக்க நாடாக மாறியது. பொருளாதார ஆற்றலுக்கும் நிலப்பரப்பிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
விடுதலை என்றால்தான் என்ன?
இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. ஏன் ஒரு மக்கள் தொகுதி ஏற்கனவே தாங்கள் அங்கம் வகிக்கும் தேசிய அரசிலிருந்து பிரிந்து தனி தேசமாக விரும்ப வேண்டும் அல்லது முயல வேண்டும்? அதற்கு ஏதாவது காரணங்கள் இருக்க வேண்டுமல்லவா? அப்படி ஒரு மக்கள் தொகுதியைத் தனித்து வித்தியாசப் படுத்திக் காட்டுவது எது? இனம், மொழி, மதம், வரலாறு என பல தனித்துவமிக்க காரணிகள், தனியாகவோ, ஒன்றோடொன்று சேர்ந்தோ ஒரு மக்கள் தொகுதியை வித்தியாசப்படுத்துகின்றன. அந்த வித்தியாசம் அவர்களுக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கித் தருகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் இறையாண்மை ஏக்கம் கொள்கிறார்கள். தங்கள் தனித்துவம் மறுக்கப்படுவதாகத் தெரியும்போது, ஏற்கனவே உள்ள பொது அடையாளத்திலிருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டும், விடுதலை வேண்டும் என்று கூறத்தொடங்குகிறார்கள்.
எல்லா தேசங்களுமே கலவையான அடையாளங்களால் உருவாகி இருப்பதால், இவ்விதமான அடையாளச்சிக்கல், விடுதலைக் கோரிக்கைகள் உலகின் பல நாடுகளிலும் எழத்தான் செய்கின்றன. இதனால் ஒரு நாட்டிற்குள் தனித்துவ நீக்கம் செய்து மக்களையெல்லாம் கலந்துவிட தேசிய அரசுகள் முயல்கின்றன. சில சமயங்களில் பெரும்பான்மைவாதம் சிறு எண்ணிக்கையில் உள்ளவர்களை ஒரேயடியாகத் தங்களுக்குள் உட்செரிக்க முயலும்போது அந்த மக்கள் வெடித்தெழுந்து விடுதலைக் கோரிக்கையை வைத்துப் போராடுகிறார்கள். இலங்கை என்ற அழகிய சிறிய தீவில், இந்தியாவின் பெருநகரங்களின் மக்கள் தொகை அளவேயான ஒன்றரைக்கோடி மக்களைக்கொண்ட நாட்டில் அதுதான் நடந்தது. ஏராளமான உயிரிழப்பும், பொருட்சேதங்களும் அந்த சிறிய நாட்டை சீரழித்தன. மக்கள் வாழ்க்கையின் அமைதியும், நிம்மதியும் சீர்குலைந்தன. அதற்கு மொழி மற்றும் மத அடையாளங்கள், இனம் மற்றும் வரலாறு குறித்த கற்பிதங்கள் இணைந்து பங்காற்றின.
ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. ஒரு மக்கள் தொகுதிக்குத் தேவை தங்கள் மாறுபட்ட வாழ்க்கை முறையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உரிமைகளா அல்லது இறையாண்மையா? முழு சுதந்திரமுள்ள தனி நாடாக மாறிவிட்டால் மட்டும் அந்த மக்கள் தொகுதி அந்நியர் தலையீடு இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? முதலீட்டையும், வர்த்தகத்தையும், நுகர்வுக் கலாசாரத்தையும் தவிர்த்துவிட முடியுமா? இவையெல்லாமும் இன்று முக்கியக் கேள்விகள்.
இலங்கையின் சோகம் சிங்களப் பேரினவாதத்தால், அதன் நிலப்பரப்பு சார்ந்த பிடிவாதத்தாலும், தமிழர்களின் இறையாண்மைக் கோரிக்கையாலும் விளைந்ததென்றால், இந்தியா விடுதலை அடைந்தபோது நடந்த மகத்தான சோக நாடகத்தைப் புரிந்துகொள்ள நாம் அரசிற்கும், மதத்திற்குமான தொடர்பை பரிசீலிக்கவேண்டும். இந்திய விடுதலையின் நிறைவுபெறாத நிகழ்ச்சி நிரலே இன்றைய காஷ்மீர் பிரச்சினை. unfinished Business என்பார்கள்.
அரசும், மதமும்
ஆதிவாசி சமூகங்களிலேயே அரசனுக்கும், பூசாரிக்கும் கூட்டணியும் நெருங்கிய உறவும் இருப்பதை மானுடவியல் ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. அரசன் இறைவன் அருள் பெற்றவன், அதனால் அதிகாரம் செலுத்தும் உரிமை கொண்டவன் என்பதைக் கூறும் பணி பூசாரியிடம் இருக்கும். இதுவே விரிவான மதக் கட்டமைப்பு, பெரிய நாடுகள் என்று வரும்போது பல நுட்பமான வடிவங்களை எடுத்தன. கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய இரு மதங்களுமே அரசுகளை உருவாக்குவதிலும், கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றின. மதகுருமார்கள், போப்பாண்டவர், கலீபா போன்ற அனைத்துக் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களின் தலைவர்கள் போன்றவர்கள் அரசுகளுடன் இறையாண்மையைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்து மதம் என்பதற்கு ஒற்றை நிறுவனமோ, தலைவரோ கிடையாது என்றாலும், பல்வேறு காலகட்டங்களில் துறவிகள், மகான்கள் அரசர்களுக்கு அணுக்கமாக இருந்துள்ளார்கள். இறைமையும், இறையாண்மையும் சமூகங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தின் இரு பக்கங்களாக இருந்துள்ளன.
இதில் ஐரோப்பாவில் போப்பாண்டவரின் பங்கு தனித்துவமிக்கது. ஒவ்வொரு கிராமத்திலுமே விவசாயிகள் சர்ச்சிற்கு நேரடியாகவே விளைச்சலில் ஒரு பகுதியைத் தரவேண்டும் என்பதால், மத அமைப்பும் உபரியை சேர்ப்பதாக, வலுவானதாக இருந்தது. அரசர்களுக்கிடையிலான போர்களில் போப்பின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது. இந்த நிலையில் பதினைந்தாம் நூற்றாண்டில் போப்பிற்கு எதிராக எழுந்த இயக்கம் புரொடெஸ்டண்ட் மதமாகவே நிலைபெற்றது. கிறிஸ்துவத்தின் இரு பெரும் பிரிவுகளாக கத்தோலிக்கமும், புரொடெஸ்டெண்ட் சமயமும் மாறின. நாம் மேலே குறிப்பிட்ட வெஸ்ட்பாலியா உடன்படிக்கையில் முடிந்த முப்பதாண்டுகால போரில் இந்த இரு மதங்களுக்குமான முரண் முக்கிய பங்கு வகித்தது. அந்த போருக்குப் பிறகு புரொடெஸ்டண்ட் கிறிஸ்துவ சமயம் பல நாடுகளில் நிலைபெற்றது. அதன்பிறகு மக்களாட்சி முறை வளர்ந்தபோது புரொடொஸ்டண்ட் நாடுகளில் கத்தோலிக்கர்களின் உரிமை என்ன, கத்தோலிக்க அரசர்களுக்குக் கீழே வசிக்கும் புரொடெஸ்டுண்டுகளின் நிலை என்ன என்பதெல்லாம் கேள்விகளானது. இந்த முரண்களின் விளைவாகவே அரசிற்கும், மத அமைப்பிற்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்ற மதச்சார்பின்மை என்ற நவீன கருத்தாக்கம் வலுப்பெற்றது.
அரசு மதச்சார்பில்லாமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் மதம் சாராமல் இருக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த மக்கள் தங்கள் உரிமைகள், கலாசார வேறுபாடுகள் சார்ந்து தங்களுக்கு இறையாண்மை வேண்டும், தாங்கள் தன்னாட்சி பெற்ற அரசுடன் இருக்கவேண்டும் என்று நினைப்பதும் சாத்தியமானது. தேசிய அரசுகள் என்ற வடிவம் தோன்றி நிலப்பரப்பு எல்லைகள் வகுக்கப்பட்டபோது மதமும் அதில் ஒரு நிர்ணயிக்கும் கூறாக மாறியதைத் தவிர்க்க முடியவில்லை. உலகம் முழுவதுமே இதனால் பல பிரச்சினைகள் உருவாகத்தான் செய்தன என்றாலும், இந்தியாவில் அதன் தாக்கம் பெறும் விபரீதத்தை உருவாக்குவதாக மாறியது.
இந்தியா, பாகிஸ்தான் தோன்றிய கதை
கிழக்கிந்திய கம்பெனியாக இந்தியாவில் கால்பதித்த பிரிட்டிஷ்காரர்கள் பிற ஐரோப்பியர்களான போர்த்துக்கீசிய, டச்சு, ஃபிரெஞ்சு கம்பெனிகளின் உள்நுழைவைக் கட்டுப்படுத்தி, ஃபிரெஞ்சுக்காரர்களைப் போர்களில் வீழ்த்தி தங்கள் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். மெள்ள மெள்ள மொகலாய மன்னர் உட்பட்ட அனைத்து மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோருடன் பல ஒப்பந்தங்கள் செய்துகொண்டு பல நிலப்பகுதிகளை நிர்வகிக்கத் துவங்கினார்கள். அவர்களுடைய நிர்வாகத் திறன்கள், ராணுவ பலம், வர்த்தக ஆற்றல் ஆகியவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இந்தியாவின் பல்வேறு அரசர்களுக்கு இல்லை. சிற்றரசர்கள், குறுநில மன்னர்களுக்கு அறவே இல்லை. கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்கள் கலகக்காரர்களாகவே கருதப்பட்டு போர்களில் கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். திப்பு சுல்தான் போன்றவர்கள் போரிட்டுத் தோற்றார்கள். இறுதியாக சிப்பாய் கலவரம் என்று அழைக்கப்பட்ட 1857 எழுச்சியில் மொகலாய மன்னர் உட்பட பல மன்னர்களும் இணைந்து போரிட்டு முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டார்கள். இந்தியா நேரடியாக இங்கிலாந்து அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விக்டோரியா மகாராணியின் இறையாண்மையின்கீழ் இந்தியாவும் இடம்பெற்றது.
ஐரோப்பாவின் கத்தோலிக்க, புரொடெஸ்டண்ட், இஸ்லாமிய மோதல்களின் வரலாற்றினால் உருவான உலகப்பார்வையில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் மத அமைப்பினைப் புரிந்துகொள்ள முயன்றது. இஸ்லாமியர்கள் அவர்களுக்குப் பரிச்சயமானவர்கள். குரான் என்ற புனித நூல், அதற்கான விளக்கங்கள் சுன்னி, ஷியா போன்ற பிரிவுகள், இமாம்கள், உலேமாக்கள் சபை, ஷரியா என்று இஸ்லாமிய மத நிறுவன கட்டமைப்பு புரிந்துகொள்ள சுலபமாக இருந்து. ஆனால் அவர்கள் இந்துக்கள் என்று பெயரிட்டு அழைத்து வந்த ஜனத்திரளின் பன்மையை எப்படிப் புரிந்துகொள்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பொதுவான நூலோ, மத நிறுவனமோ, குருமார்கள் சபையோ இல்லாமல் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக வழங்கி வந்த எண்ணற்ற வழிபாட்டு முறைகள், சிந்தனை முறைகளை ஒற்றை மதமாக தொகுப்பது பெரிய சவாலாக இருந்தது. இதனால் அவர்கள் கற்றறிந்த வகுப்பினரான பிராமணர்களின் உதவியை நாடினார்கள். அவர்களின் துணையுடன் இந்துக்களின் புனித நூல்கள், சாஸ்திரங்கள், கலாசாரங்கள், விதிமுறைகள் இவைதான் என தொகுத்தார்கள். அதனால் பல்வேறு முரண்பாடுகளுடனும், நெகிழ்வுடனும் இயங்கி வந்த ஜாதிகளின் தொகுதிகளை பார்ப்பனீய கருத்தியிலின் இறுக்கமான சட்டகத்தில் பிரிட்டிஷ்காரர்களே தொகுத்து சட்ட திட்டங்களாக மாற்றினார்கள். உபகண்டத்தின் பல பகுதிகளில் பல்வேறு நெகிழ்வுத் தன்மைகளுடன் விளங்கி வந்த வழிபாட்டு முறைகள், சமூக நடைமுறைகளை ஒற்றை சட்டகம் கொண்ட இந்து அடையாளமாக, ஜாதீய படிநிலை சமூகமாக திட்டவட்டமாக வடிவம் கொள்ளச் செய்வதில் பிரிட்டிஷ் ஆட்சி கணிசமான பங்காற்றியது என்றால் மிகையாகாது. பார்ப்பனர்களுக்கு இதில் பெரிய மகிழ்ச்சி என்பதால் அவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அதிலேயே நவீன கல்வி பயின்ற பார்ப்பனர்கள் சீர்திருத்தவாதிகளாகவும் மாறினார்கள். அதனால் ஒரு கட்டத்தில் மரபுவாதம், சுதந்திரவாதம், புரட்சிவாதம் ஆகிய எல்லா அரசியல் போக்குகளையும் பார்ப்பனர்களே முன்னெடுத்ததும் நிகழ்ந்தது. பார்ப்பன கருத்தியல் ஆதிக்கமும், பனியா மூலதனமும் இந்திய தேசியத்தின் அடிநாதங்களாக மாறின. இன்றளவும் விளங்கி வருகின்றன. இந்தியாவின் கார்ப்பரேட் உலகை, முதலீட்டியத்தை நிர்வகிப்பது தொன்னூறு சதவீதம் பார்ப்பன, பனியா வகுப்பினரே என்கிறது புள்ளிவிவரம்.
இப்படி ஒரு இந்து மதத்தைக் கட்டமைக்க உதவிய காலனீய ஆட்சி, இந்திய வரலாற்றை இந்து வரலாறு என்றும், இஸ்லாமிய வரலாறு என்றும் பிரித்தது. இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனித்தனி சிவில் சட்டங்களைத் தொகுத்தது. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இருந்த பன்முக உறவுகளைப் புறக்கணித்து வரலாற்றை இந்த மதங்களுக்கு இடையிலான மோதலாகக் கட்டமைத்தது பிரிட்டிஷ் வரலாற்று இயங்கியல். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பாக இந்தியாவில் தோன்றிய மற்றொரு அந்நிய ஆட்சியாக இஸ்லாமிய ஆட்சியை பிரிட்டிஷ்காரர்கள் கட்டமைத்தார்கள். ஐரோப்பியக் கிறிஸ்துவர்களின் நெடுங்காலப் பகைவர்கள் இஸ்லாமியர்கள் என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். சமஸ்கிருதத்திற்கும், ஐரோப்பிய மொழிக்குடும்பத்திற்கும் உள்ள தொடர்புகளை மொழியியல் கண்டதும் ஐரோப்பிய, இந்திய நாகரீகங்கள் உறவு முறை கொண்டதாகவும், பார்சி, இஸ்லாமிய பண்பாடுகள் அவற்றிற்கு அந்நியமாகவும் கருதப்படக் காரணமாயின.
ஆட்டோமான் பேரரசின் காலிபேட் என்ற இஸ்லாமிய உலகத் தலைமையைக் காப்பாற்றக் கோரி நிகழ்ந்த கிலாபத் இயக்கமும், காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கமும் இணைந்தாலும் பின்னர் காங்கிரஸும் முஸ்லிம் லீகும் தனி அடையாளங்களாக மாறின. காங்கிரஸின் தேசியத்தில் இந்து மத மீட்புவாத சிந்தனைகள், சக்திகள் கணிசமாக கலந்து இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியும் அனைவரும் நன்கு அறிந்தது போல இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தது. இவையெல்லாம் பாகிஸ்தான் என்ற கோரிக்கை எழுவதற்கான பின்புலம்.
சுயமும், இறையாண்மையும்
அரசனிடம் இருந்த இறையாண்மை மக்களிடம் கருத்தியல் ரீதியாக வந்தபிறகு மக்கள் தொகுதிகளின் சுயாட்சியே இறையாண்மை என்று பார்த்தோம். இந்த இறையாண்மைக்குத் தனிநபர் வடிவம் கிடையாது என்பதால் மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. மக்களும் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த அடையாளம், நம்பிக்கை கொண்டிருந்தாலும் பொதுவாழ்க்கையில் குடிநபர்களாக மட்டுமே செயல்படவேண்டியது இந்த நவீன இறையாண்மையின் அவசியம். இது நல்ல திட்டம்தான். ஆனால் அப்படி செய்யும்போது மக்கள் எந்த அடிப்படையில் தங்கள் சமூக வாழ்வை அமைத்துக்கொள்வார்கள் என்பது ஒரு கேள்வியாகிறது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்றும் மத நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் சமூக வாழ்க்கையின் மதிப்பீடுகளும் உருவாகும் என்பதால் இறையாண்மையின் அடிப்படையாக கலாசாரம், மதம், இனம், மொழி எல்லாமே இடம்பெறத்தான் செய்யும்.
இந்திய முஸ்லிம்களுக்கு தாங்கள் பத்தாம் நூற்றாண்டு முதலே ஆட்சி செய்தவர்கள் என்ற வரலாறு ஒரு சிக்கலை ஏற்படுத்தியது. ஒரு இந்து பெரும்பான்மை நாட்டில் தங்களுடைய இறையாண்மை என்பது எப்படி சாத்தியமாகும் என்பதுதான் அது. என்னதான் மதச்சார்பற்ற அரசு என்றாலும், இந்து மீட்புவாதம் அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற ஐயம் தோன்றத்தானே செய்யும். நவீன தேசிய அரசுகள் உருவாகும்போது இந்த இறையாண்மை வேட்கை பல்வேறு அடையாளங்களுக்கும் ஏற்படத்தான் செய்தது. பார்ப்பனீய இந்து மதத்தின் கருத்தியல் மேலாண்மை அம்பேத்கரை இரட்டை வாக்குரிமை கோரச்செய்தது. பெரியாரை திராவிட நாடு கோரச்செய்தது. ஜின்னாவை பாகிஸ்தான் கோரச்செய்தது. அன்றைய நோக்கில் நாம் இதைப் புரிந்துகொண்டாலும், தனி மனித, கலாசார உரிமைகளை, வித்தியாசங்களைப் பாதுகாக்க இறையாண்மை மட்டுமே ஒரே தீர்வல்ல என்பதையும் இன்றைய நோக்கில் நாம் கருத வேண்டும். (இரட்டை வாக்குரிமை கோரிக்கை நிலப்பரப்பு சார்ந்ததல்ல; நேரடியாக இறையாண்மையில் பங்கு கேட்பது என்பது முக்கியம்).
பாகிஸ்தான் கோரிக்கையின் முக்கிய சிக்கலே அதுவும் நிலப்பரப்பு, எல்லை சார்ந்துதான் உருவாக்கப்பட முடியும் என்பதுதான். இந்தியாவெங்கும் பரவி வசிக்கும் இஸ்லாமியர்கள் எல்லாம் குடிபெயர்ந்து பாகிஸ்தான் என அடையாளப்படும் பகுதிக்கு செல்ல முடியாது என்பது வெளிப்படை. தமிழ் பேசும், மலையாளம் பேசும் இஸ்லாமியர்கள் அந்த மொழி தெரியாதவர்களுடன் மத அடிப்படையில் மட்டும் எங்காவது சென்று வசிக்க முடியாது. அவர்கள் வாழ்வாதாரங்களையும், நிலபுலங்களையும் விட்டுவிட்டு செல்ல முடியாது. அதனால் இஸ்லாமியர்கள் பெருவாரியாக உள்ள நிலப்பகுதிகளை அடையாளப்படுத்தி அதைத்தான் பாகிஸ்தான் என அறிவிக்க முடியும் என முடிவானது. இதற்குப்பதில் இந்தியாவைப் பல சுயாட்சி பெற்ற மாகாணங்களின் கூட்டாட்சியாக யோசித்திருந்தால், மத அடிப்படையிலான பிரிவினையைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஒற்றை இந்தியா என்பதில் பிடிவாதமாக இருந்தது. இந்தியர்களெல்லாம் சமஸ்கிருதவயப்பட்ட இந்தியைக் கற்றுக்கொண்டு அதைத் தேசிய மொழியாக்கிவிடலாம் என நம்புமளவு அதன் ஒற்றைத் தேசிய விழைவு இருந்தது. அதனால் மத அடையாளம் சார்ந்து பாகிஸ்தான் உருவாக அனுமதிக்க நேர்ந்தது.
இஸ்லாமியப் பெரும்பான்மை பகுதிகள் பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகளிலிருந்து இந்துக்களும், இந்தியப் பகுதியிலிருந்து ஏராளமான முஸ்லிமகளும் குடிபெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரங்களுக்கும், எண்ணிறைந்த கொடுமைகளுக்கும், கொலைகளுக்கும் காரணமாகியது. உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க மானுடத் துயர கணங்களில் ஒன்றாகியது.
வரலாற்றுத் துயரத்தின் எச்சம்: காஷ்மீர்
பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின்கீழ் உபகண்டத்தின் பெரும்பகுதி இருந்தாலும் பல சிறிய பெரிய மன்னராட்சி பகுதிகள், சமஸ்தானங்கள் அவர்கள் பாதுகாப்பில், மேற்பார்வையில் இருந்தன. புதிய இந்தியக் குடியரசிலோ, பாகிஸ்தான் குடியரசிலோ இணைவதற்கும், தனி நாடுகளாகத் தொடர்வதற்கும் அவற்றிற்கு உரிமை வழங்கப்பட்டது. எல்லோருக்குமே இறையாண்மை ஒரு ஆசைதான் என்றாலும் இந்தியாவின் உட்பகுதியில் இருந்த பல சமஸ்தானங்களில் மக்கள் ஏற்கனவே காங்கிரஸில் இணைந்து தேச பக்தர்களாக இருந்ததால் முடியாட்சிக்குத் திரும்புவதெல்லாம் சாத்தியமில்லை என்று மன்னர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுக்கு வேண்டிய சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இந்தியாவில் துரிதமாகச் சேர்ந்துவிட்டார்கள். எல்லைப்புற மன்னராட்சி பகுதிகளைப் பொறுத்தவரைதான் குழப்பம் நிலவியது.
இந்தியா, பாகிஸ்தான் இரண்டின் அரசியல் தலைமைகளும் எந்த அடிப்படைகளில் ஒரு மன்னராட்சிப் பகுதி தங்கள் குடியரசில் சேரலாம் என்பது குறித்து தெளிவான கொள்கை முடிவுகளை எடுக்கத் தவறின. அதைவிட மோசம், முழுக்கவும் சந்தர்ப்பவாத நோக்கிலும், பழைய மண்ணாசை நோக்கிலும் நடந்துகொண்டன. மிக முக்கியமான கேள்வி இதுதான்: எந்த குடியரசில் சேர்வது என்ற தீர்மானத்தை மன்னர் எடுக்கலாமா அல்லது மக்கள் எடுக்க வேண்டுமா? மன்னராட்சி என்பது இறந்தகாலம்; மக்களாட்சி என்பது எதிர்காலம். எதிர்காலத்திற்கான முடிவை எப்படி இறந்தகாலத்தின் அரசியல் அடிப்படையில் எடுக்க முடியும்? இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே குடியரசுகளாயிற்றே? மக்களாட்சியை மேற்கொள்ளப் போகும் நாடுகளாயிற்றே? இறையாண்மை மன்னரிடம் உள்ளதா, மக்களிடம் உள்ளதா?
இதில் கூடுதல் சிக்கல் மன்னர் ஒரு மதமாகவும், மக்களில் பெரும்பான்மையினர் இன்னொரு மதமாகவும் இருப்பது. இந்தியா தன்னை இந்து நாடென்று கருதிக்கொள்ளாவிட்டாலும், பாகிஸ்தான் முஸ்லிம் அடையாளம் கொண்ட நாடு என்பதால் இந்தியாவும் இந்து பெரும்பான்மை நாடெனும் யதார்த்தம் தவிர்க்க முடியாமல் இருந்தது.
ஜின்னா முதலில் மன்னர்களே முடிவெடுக்கலாம் என்று சொன்னார். ஜோத்பூர் அரசருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேரு, படேல் கூட்டணியும் மன்னர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் திடீரென்று ஒரு பிரச்சினை ஏற்பட்டது அதுதான் ஜூனாகாத்.
ஜூனாகாத்தின் மன்னர் முஸ்லிம். பெரும்பாலான மக்கள் இந்துக்கள். ஜூனாகாத் காஷ்மீர் மக்கள் தொகையில் பாதி இருந்திருக்கலாம். ஜூனாகாத் மன்னர் பாகிஸ்தானுடன் தன் நாட்டை இணைத்துவிட்டார். பாகிஸ்தானும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஜூனாகாத்திற்கு பாகிஸ்தானுடன் நில எல்லை கிடையாது என்றாலும் கடல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றார் மன்னர். ஆனால் ஜூனாகாத்தின் மக்கள் தலைவர்கள் வெளியேறி இடைக்கால அரசை துவங்கினார்கள். இந்திய அரசும் அவர்களுக்கு ஆதரவு அளித்தது. ஒரு கட்டத்தில் ‘உள்நாட்டு’ கலவரம் அதிகமாகி அரசர் பாகிஸ்தான் சென்றுவிட, இந்தியா ஜூனாகாத்தை ஆக்ரமித்தது. பிப்ரவரி, 1948 இல் பொதுவாக்கெடுப்பு நடத்தியது. பெருவாரியான மக்கள் இந்தியாவுடன் இணைய வாக்களித்தார்கள். ஜூனாகாத் இந்தியாவுடன் இணைந்தது.
இதற்கிடையில் மன்னர்கள் ஆளுகையில் இருந்த சிறிய நாடுகள் தனி நாடுகளாக விளங்குவது சாத்தியமற்றது என்று நேரு சொன்னார். ஒன்று அவை இந்தியாவில் இணையவேண்டும் அல்லது பாகிஸ்தானில் இணையவேண்டும்; அதுதான் யதார்த்தம் என்றார்.
காஷ்மீரில் ஜூனாகாத்திற்கு தலைகீழ் நிலை. காஷ்மீரில் இந்து மன்னர். பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள். காஷ்மீரின் பெருமளவு எல்லை பாகிஸ்தானை ஒட்டியே இருந்தது. ஜூனாகாத் விஷயத்தில் இந்தியா சொன்ன நியாயங்களின்படி பார்த்தால் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தி மக்கள் விருப்பத்தைக் கேட்டிருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு மேற்சொன்ன காரணங்களால் காஷ்மீர் தன்னுடன் இணைவதுதான் சரியானது என்று தோன்றியதில் வியப்பில்லை. பழம் கனிந்து விழுவதுபோல காஷ்மீர் பாகிஸ்தானில் இணையும் என்று ஜின்னா எதிர்பார்த்தார்.
மன்னர் ஹரிசிங்கும், மக்கள் தலைவர் ஷேக் அப்துல்லாவும் தனிநாடாக நீடிப்போம் என்று சொன்னாலும், இந்தியாவுடன் இணைவதைக் குறித்தே அதிகம் யோசித்தார்கள். காஷ்மீரின் வட எல்லையிலிருந்த இனக்குழு தலைவர்களுக்கு இந்தியாவில் இணைவது சிறிதும் பிடிக்கவில்லை. அவர்கள் தலைநகரின் மீது படையெடுப்போம் என்று சொன்னார்கள். இரு நாடுகள் தோன்றியபோது இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜம்முவில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும் அவர்களை கோபப்படுத்தியது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத் தலைவர்கள் சிலர் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இறுதியாக அவர்கள் அக்டோபர் 1947இல் காஷ்மீர் தலைநகர் மீது படையெடுத்தனர். அவர்களிடமிருந்து ஸ்ரீநகரைக் காப்பாற்ற ஹரிசிங் அக்டோபர் 26, 1947 அன்று இந்தியாவுடன் இணையும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்தியப் படைகள் காஷ்மீர் சென்று ஆக்கிரமிப்பு படையைத் தடுத்து நிறுத்தியது. பாகிஸ்தான் இந்தியாவுடன் முழுதாகப் போரில் இறங்கும் வலிமையற்று இருந்தாலும், காஷ்மீரின் வடமேற்குப் பகுதியைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்தியா அந்த சிறிய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்றும், பாகிஸ்தான் அதை விடுதலையடைந்த காஷ்மீர் என்றும் கூறிவருகின்றன. இந்திய கட்டுப்பாட்டு பகுதிக்கும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையிலான எல்லைக்கோட்டை இரு நாடுகளும் அங்கீகரித்து அதை கட்டுப்பாட்டு எல்லை என்று குறிப்பிட்டு வருகின்றன.
இப்படியாக காஷ்மீர் மக்களின் விருப்பமில்லாமல் இந்தியாவுடன் இணைந்தது, ஜூனாகாத்தில் இந்தியா பேசிய நியாயத்திற்கும். மவுண்ட்பேட்டன் போன்றவர்கள் மக்கள் விருப்பமே கருதப்படவேண்டும் என்று கூறியதற்கும் எதிராக இருந்ததால், ஜவஹர்லால் நேரு மீண்டும் மீண்டும் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதி காஷ்மீர் மக்களை இந்தியாவுடன் மனமொப்பி இணைவதற்குத் தடையான ஒரு பாரமாக மாறியது. இந்திய அரசும், அரசியல் வாதிகளும் அதற்குப் பின்னாலான எழுபதாண்டுகளில் அந்த மக்களின் மனதை வென்றெடுக்க முடியாமல், மேலும் மேலும் அவர்களை அந்நியப்படுத்தவே செய்தனர். இந்த எழுபதாண்டுகளில் காஷ்மீர் அரசியல், அங்கு நடத்தப்பட்ட தேர்தல்கள், மக்கள் கிளர்ச்சிகள், ஒடுக்குமுறை என்பதையெல்லாம் எழுதினால் மிக நீண்ட நூலாகவே மாறிவிடும். ஆங்கிலத்தில் அப்படி பல நூல்கள் இருக்கின்றன. இந்திய அரசு முதலில் ஒரு தவறு செய்தது; அதை தெரிந்தே செய்தது. மேலும் பல தவறுகளைத் தொடர்ந்து செய்தது; அவற்றையும் தெரிந்தே செய்தது.
பாகிஸ்தானும் அந்த அந்நியமாதலைத் தொடர்ந்து எல்லைக்கப்பாலிருந்து ஊக்குவித்து வந்தது. ஏனெனில் பாகிஸ்தானால் இந்தியா காஷ்மீரை இணைத்துக்கொண்டதை தன் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே கருத முடிந்தது. இந்தியாவிலோ, அதன் இறையாண்மை கற்பிதங்கள் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தி, ஒருவேளை அந்த மக்கள் பிரிந்துபோய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தையே வளர்த்தன. இந்துத்துவ சக்திகளோ காஷ்மீருக்கு அது இணையும்போது அளிக்கப்பட்ட தனித்துவமான நிலை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் விதி 370 ஆகவும், விதி 35-A ஆகவும் இடம்பெற்ற அந்த தனித்துவத்தை வரையறுக்கும் விதிகளை நீக்கி, இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட வேண்டும் என ஓயாமல் பிரச்சாரம் செய்தனர். அதை இப்போது அவர்கள் பெரும்பான்மை அரசான பிறகு நிகழ்த்தியும் காட்டிவிட்டனர்.
ஆனால் அறுபது, எழுபது இலட்சம் மக்களை அவர்கள் விருப்பத்திற்கெதிராக எத்தனை நாள் ராணுவ பலம் கொண்டு அடக்கியாள முடியும் என்பதும், அவர்கள் மனங்களை இனியும் வென்றெடுக்க முடியுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அதையெல்லாம் விட முக்கியமான கேள்வி இப்படி ராணுவ ஆட்சி செய்வதால் யாருக்கு என்ன பலன் என்பதுதான். இந்திய முதலாளிகள், வர்த்தகர்களைப் பொறுத்தவரை காஷ்மீர் தனி நாடாக இருந்தால் அதனால் எந்த இழப்புமில்லை. ஏற்கனவே அவர்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று முதலீடுகளை செய்துதான் வருகிறார்கள் என்பதால் சுதந்திர காஷ்மீரில் முதலீடு, தொழில், வர்த்தகம் செய்வதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. நேபாள், பூடான் போல இன்னொரு குட்டி அண்டை நாடு இந்தியாவுடன் நல்லுறவில்தான் வாழ வேண்டும். இந்தியாவின் பெரும்பான்மையான நலிவுற்ற விவசாயிகள், தொழிலாளர்களுக்கோ காஷ்மீர் என்பது ஒரு பெயர்தானே தவிர அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. சியாச்சின் கிளேசியரில் பனியால் வாடும் ராணுவத்திற்கும் நிச்சயம் பெரிய ஆறுதல்தான். பலியாகும் ராணுவ வீரர்களெல்லாம் நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்.
பின் யாருக்காக நாம் காஷ்மீரை ராணுவத்தைக் குவித்து பிடித்து வைத்திருக்கிறோம் என்றால் இறையாண்மையின் மாயக்கண்ணியாக நிலப்பரப்பைக் காணும் தேசியக் கற்பித மனோபாவம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. உயிரைப் பணயம் வைத்துப் போராடும் மக்கள் இறையாண்மை பெறுவதை விடுதலை என்று நினைப்பது ஒரு கற்பிதம் என்றால், அந்த இறையாண்மை இந்திய இறையாண்மையின் ஒரு பகுதியைப் பிய்த்து எடுத்துவிடும் என்று மயங்குவது அதைவிட பெரிய கற்பிதம். மாபெரும் மானுட சோகங்களெல்லாம் இதுபோன்ற கற்பிதங்களால் நிகழ்வதை எப்படித் தவிர்ப்பது என்பதை மானுடம் இன்னம் பயிலவில்லை.
“மனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள்; ஆனால் அவர்கள் விரும்பிய்படியெல்லாம் உருவாக்க இயலுவதில்லை. அவர்கள் வாழநேரும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் எல்லைகளுக்குட்பட்டே உருவாக்குகிறார்கள்” என்ற கார்ல் மார்க்ஸ் தொடர்ந்து “இறந்தகால மரபுகளின் எச்சங்களெல்லாம் உயிரோடிருப்பவர்களின் ஆன்மா சுமக்கும் துர்க்கனவுகளாக கனக்கின்றன” என்றார். இறையாண்மையை நிலப்பரப்பாகக் காணும் துர்க்கனவு கலைய இன்னம் எத்தனை காலமாகும் என யூகிக்க முடியவில்லை.