1.கனலும் பனியும்

மார்ச் 7, 2020 அன்று சென்னையின் ஷாஹீன்பாக் என்றழைக்கப்படும் வண்ணாரப்பேட்டையில் எங்கள் சென்னை கலைக்குழுவின் ‘இடம்’ நாடகத்தை நிகழ்த்தினோம். குஜராத் வன்முறைகளின் பின்னணியில் தோழர் பிரளயன் எழுதிய நாடகம் அது. இன்றைக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் டில்லி வன்முறைகளுக்குப் பிறகு அந்த நாடகம் கூடுதலாகப் பொருந்திப் போகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் இஸ்லாமியர்களுக்கு முன்னால் அந்த நாடகத்தை நாங்கள் நடத்தியபோது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பெரும் உணர்வெழுச்சியைக் காண முடிந்தது. தங்களுக்கு நிகழ்ந்ததை ரத்தமும்சதையுமாக மேடையில் நாடகமாகக் காணும்போது, அந்த நாடகம் அவர்களால் மறக்க முடியாததாகிறது. தங்கள் பாடுகளை, தங்கள் போராட்டங்களை, காயங்களை, சந்தித்த கொடூரங்களை நாடகம் மூலம் மீண்டும் காண்கையில் அவர்கள் அதை தங்களுக்கான நாடகமாகப் பார்க்கிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். கலையின் அற்புதங்களுள் ஒன்று இது. அரசியலாக மிகச்சரியாக தங்கள் பக்கம் நிற்கிறது ஒரு கலைப் படைப்பு என்கையில் அவர்கள் அதைத் தங்களுக்கானது எனக் கொண்டாடுகிறார்கள். உணர்வுவயப்படுகிறார்கள். போராட்டக்களத்தில் அந்த உணர்வெழுச்சியைக் கண்ணுற்றபின் அங்கிருந்து புறப்பட்டு நேராக ‘ஜிப்ஸி’ பார்க்கச் சென்றேன்.

‘ஜிப்ஸி’யும் தன் களமாக தேர்ந்தெடுத்திருப்பது இஸ்லாமியர்களின் வாழ்வைத்தான். அதே குஜராத் வன்முறைகளை மாதிரியாகக் கொண்டுதான் ‘ஜிப்ஸி’ உருவாக்கப்பட்டிருக்கிறது. குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் முகமாக நம் கண்முன் இப்போதும் நிழலாடும் முகம் கொல்லவருவோரிடம் உயிருக்காகக் கைகூப்பி மன்றாடும் அன்சாரியின் முகம். அப்புகைப்படம் நாளிதழ்களில் வெளியானபோது அப்படம் இந்த தேசத்தின்மீது காறி உமிழ்ந்தது. ஒருவராலும் மறக்க முடியாத அந்தப் புகைப்படம் ‘ஜிப்ஸி’யின் கதைக்கருவுக்குப் பங்களித்திருக்கிறது. போலவே, கலவரங்களை நிகழ்த்திய அசோக் மோச்சியின் புகைப்படமும் பத்திரிகைகளில் வெளிவந்தது. கரும்புகைகள் சூழ கலவரப் பின்னணியில் கைகளை உயர்த்தி ஆவேசக் கூச்சலுடன் நிற்கும் அசோக் மோச்சியின் புகைப்படத்தில் தெரிந்த கொலைவெறி அதிரச் செய்வதாய் இருந்தது.

உயிருக்கு மன்றாடிய அன்சாரி அதன்பின்னர், குஜராத்தில் இருக்க முடியாமல் மேற்கு வங்கத்திற்கு இடம்பெயர்ந்து் வாழ்ந்தார். அசோக் மோச்சி மனம் திருந்தி, இந்து மதவெறியைத் துறந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பைவிட்டு வெளியேறி வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த இருவரும் ஒரே மேடையில் இணைந்த காட்சி ஊடகங்களில் வந்தது. மக்களை நேசிக்கும் எவருக்கும் கண்ணீர் வரவைக்கும் காட்சி அது. இந்தக் காட்சி அப்படியே ‘ஜிப்ஸி’யில் வருகிறது. கலவரங்களில் பாதிக்கப்பட்ட நாயகியும், கொலைவெறியோடு கொல்லவந்தவரும் ஒரே மேடையில் சந்தித்துக்கொள்கின்றனர். நிஜத்தில் அன்சாரியும் அசோக் மோச்சியும் சந்தித்துக்கொள்ளும் புகைப்படத்தை பார்த்தபோதுகூட கண்ணீர் விட்டிருக்கிறேன். ஆனால் திரைப்படத்தில் அதே காட்சியைப் பார்த்தபொழுது அது என்னை எதுவும் செய்யவில்லை. மற்றொரு காட்சியாகக் கடந்து போகிறது. எவ்வளவு முக்கியமான காட்சி அது. பார்வையாளர்கள் நெகிழச் செய்யவேண்டிய காட்சி எதுவுமே செய்யாமல் கடந்துபோகும் அவலம் கலைக்கு நேரக்கூடாத ஒன்று. அதற்குப் பார்வையாளர்கள் காரணம் அல்ல. சரியாக எடுக்கப்பட்டிருந்தால், ‘ஜிப்ஸி’ அதன் அரசியல்ரீதியான சரி தவறுகளைத் தாண்டி சில காட்சிகளிலாவது மனதைத் தொட்டிருக்கவே செய்யும். அதற்கான வாய்ப்புகளும் அற்புதமான அதன் கதையில் இருக்கின்றன. ஆனால் எல்லா வாய்ப்புகளையும் தவறவிட்டுவிட்ட ஒரு திரைப்படமாகவே ‘ஜிப்ஸி’ எஞ்சி நிற்கிறது.

‘ஜிப்ஸி’ சென்சாரில் சந்தித்திருக்கும் இன்னல்களையெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இந்துவெறி ஆட்சியில் கலவரக் காட்சிகளுக்காக பெரும் போராட்டத்திற்குப் பின்னரே சான்றிதழ் பெற முடிந்திருப்பதையெல்லாம் மனதில் வைத்து, ‘ஜிப்ஸி’யைப் பார்க்கவேண்டும் என்கிற அறவுணர்வோடுதான் படத்தைப் பார்த்தேன். அந்த அறவுணர்வுக்கு சவால்விடுகிறது படம். இறுதியில் நம் அறவுணர்வை படம் வென்றுவிடுகிறது. படத்தின் போதாமைகள் வென்றுவிடுகின்றன. ‘ஜிப்ஸி’யை கைவிடவேண்டிய கட்டாயத்துக்கு நம்மை ‘ஜிப்ஸி’ தள்ளுகிறது. ஏனெனில் படம் கலையாகவும் அரசியலாகவும் நம்மை கைவிட்டுவிட்டது, ஒரு திரைப்படம் கலையாக மாறி இருக்கிறதா என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. கலைவெற்றியை சாத்தியப்படுத்த கூடுதல் உழைப்பும், நம்பகத்தன்மையும் தேவை. இப்படம் கூடுதல் உழைப்பைக் கோருகிறது. அது என்ன கூடுதல் உழைப்பு? இஸ்லாமியர்களின் வாழ்வியலை கதைக்களமாக எடுத்தபின், அதுசார்ந்த வாசிப்பு அல்லது அது சார்ந்த உற்றுநோக்கல்.

பிற மதத்தினருக்கு இஸ்லாமியர்களின் வாழ்வியல் தெரியாமல் போவது இயல்புதான். ஓர் இஸ்லாமியரின் வீட்டுக்குள் வாழ்நாளில் ஒருமுறைகூட நுழைந்திராத இந்துக்கள் இங்கு பலருண்டு. ஆகவே வாழ்வியல் தெரியாமல் இருப்பதில் அதிசயமில்லை. ஆனால் அதுதான் கதைக்கான களம் என்றபின்னர், அதை அறிய அதிகம் உழைத்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் நம்பகத்தன்மையை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் ‘ஜிப்ஸி’யோ, இஸ்லாமியர் வாழ்வியலை அறிந்தவர்களால் ஒன்றவே முடியாதபடியான காட்சியமைப்புகளால் நிரம்பியிருக்கிறது. ஒருவகையில் பார்வையாளர்களுக்கு இஸ்லாமியர் வாழ்வியல் தெரியாது, அவர்கள் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கவருவார்கள் என்கிற பொறுப்போடு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். அதைவிட முக்கியமாக இஸ்லாமியரல்லாதவர்கள் இதுதான் இஸ்லாமிய வாழ்முறை போல என்று நினைத்துக்கொள்ளும் அபாயம் உண்டு. ஒரு கலைப்படைப்பிற்கு முக முக்கியமான தேவை நம்பகத்தன்மை. அது இல்லாமல் போகும்போது அப்படைப்பின்மீது நம்பிக்கை இழக்க நேரிடும். அது படம் தொடங்கி சிறிது நேரத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது.

காஷ்மீரில் குண்டுவெடிப்பில் கொல்லப்படும் இந்து-முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைதான் ஜிப்ஸியாக வளர்கிறான். ‘ரோஜா’ தொடங்கி நம் தமிழ் சினிமா என்ன சொன்னதோ அதையே ‘ஜிப்ஸி’யும் சொல்கிறது. முஸ்லிம் தீவிரவாதிகளால் தன் பெற்றோர் கொல்லப்பட்டதாக ஜிப்ஸி ஒரு வசனத்தில் சொல்கிறான். காஷ்மீருக்காகப் போராடுவோர் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால் இது யாருடைய பார்வை? ‘வானமே எல்லை’ திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் தன் பெயரை ‘மாஸ்கோ’ எனச் சொல்லும். ஏனெனில் அதுதான் சாதி மத அடையாளமற்ற பெயராம். ஆனால் அந்தப் படம் கடைந்தெடுத்த பார்ப்பனியத்த்தை பறைசாற்றும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனங்கள் கொண்ட ஒரு படம். பெயரை மட்டும் மாற்றி வைத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது? இப்படி பெயர் மாற்றி வைத்துக்கொள்வது பாலச்சந்தர் டெக்னிக். அதுவும் இப்படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. நாயகனின் பெயர் ஜிப்ஸி.

எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்கிவிடாத பெயர் வேண்டும் என்பதற்காக இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவின் மொழிகள் அத்தனையையும் அவன் பேசினாலும் அவன் தாய்மொழி என்று ஒன்று இருக்கும்தானே? தன்னை வளர்க்கும் சீனியரோடு அவன் தமிழில்தான் பேசுகிறான். ஆகவே தாய்மொழி தமிழ் என முடிவுக்கு வரலாம். தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒருவன் என்கிற அடையாளம் இருக்கையில், காவிரிக்கான போராட்டத்தில் மக்களைப் பாதுகாப்பாக அழைத்துவர அவன் தமிழனாகவும், கர்நாடகாவைச் சேர்ந்தவனாகவும் மாறி மாறி அவதாரம் எடுப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த முக்கியமான பிரச்சனையில் ஒரு தரப்பின் நியாயம் என்கிற ஒன்று இருக்கவே செய்யும். அது என்னாயிற்று? ஜிப்ஸி அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறான். ஜிப்ஸியை அடையாளமற்றவனாகக் காட்டவேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்ட காட்சி அது என்பதால் அக்காட்சி திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் தாய்மொழி தமிழ் என்றால் நான் தமிழச்சிதான். அந்த அடையாளத்தைத் தூக்கிப்பிடிப்பதும் பிடிக்காததும் என் விருப்பம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் எனக்கு அடையாளமே கிடையாது என நான் மறுக்கமுடியாது. அவனை ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிவிட்டும் இந்தப் படம் எடுப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் ஏன் அவன் ஏதோ ‘I am from nowhere’ என்பதாகக் காட்டிக்கொள்கிறான்? இந்து-முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்ததால் ஒரு குழந்தைக்கு எந்த மதமும் இல்லை என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் தன்னை மீறி ஜிப்ஸி இஸ்லாமியரான நாயகியிடம் ஒருமுறை ‘கிரிக்கெட்டில் உங்க ஆளுங்கதான் ஜெயிப்பாங்க’ என்று பாகிஸ்தானைச் சொல்கிறான். இது ஓர் இந்து உளவியல் இல்லையா? அப்போது ஜிப்ஸி ஓர் இந்துவாகவே வெளிப்படுகிறான்.

அதற்கு முந்தைய காட்சியிலும் கூட நாகூரில் ஒரு பிரம்மாண்ட திரையில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் இந்திய அணியை ஆதரிக்காமல், பாகிஸ்தானை ஆதரிப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாகூரில் வந்து பாகிஸ்தானை ஆதரிக்கும் ஒரு முஸ்லீமைக் காண்பித்துவிட முடியுமா யாராலும்? இந்தக் காட்சியின் விபரீதம் புரியாமல் நாயகி ‘இந்தியாதான் எங்க நாடு’ என்று சொல்லும் ஒற்றை வசனத்துக்காக நம்மில் சிலர் கைதட்டுகிறோம். நாயகி இங்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்று நம் மன சமாதானத்துக்கு வைத்துக்கொள்ளலாம்தான். ஆனால் அந்த சமாதானத்துக்கு, பாகிஸ்தானை நாகூர் இஸ்லாமியர்கள் ஆதரிப்பதாகக் காண்பிக்கும் முந்தைய காட்சி தடையாக இருக்கிகிறது. கிரிக்கெட்டில் ஜிப்ஸி் நன்றாக விளையாடும் எந்த நாட்டையும் ஆதரிப்பான், அவனுக்கு பாகிஸ்தான் இந்தியா பேதம் விளையாட்டில் கிடையாது என்று உணர்த்த, ஒரு சமூகத்தை பாகிஸ்தான் ஆதரவாளர்களாகக் காண்பிப்பது எப்படி நியாயம்? பாகிஸ்தானுக்கு ஆதரவு என்றால் தேசத்துரோகம் என்று இந்தியாவில் பொருள். இஸ்லாமியர்கள் தேசத் துரோகிகள் என முந்தைய அர்ஜூன், விஜய்காந்த், மணிரத்னம் படங்கள் நேரடியாகச் சொன்னதை விடுத்து ‘ஜிப்ஸி’ தேன் தடவி வேறு மாதிரி சொல்கிறது.

என் தந்தையின் சகோதரி மகன். (தகவலுக்காக: என் தந்தை இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர்) கிரிக்கெட் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவைப் பிடிக்கும். தன் மகனுக்கு அந்தப் பெயரைத்தான் வைத்தார். ஆனால் கிரிக்கெட் போட்டியின்போது ரமீஸ் ராஜாவே பாகிஸ்தான் அணியில் இருந்தாலும் இந்தியாதான் ஜெயிக்கவேண்டும் என எண்ணி பௌலிங் செய்யும் வாக்கர் யூனுஸை திட்டிக்கொண்டிருப்பார். இப்படியான இஸ்லாமியர்களைத்தான் எங்கள் ஊரில் நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ‘ஜிப்ஸி’யில் வரும் இஸ்லாமியர்கள் நாகூரில் கிடையவே கிடையாது.
‘இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்
யாரடா சொன்னது
நம்மை அந்நியன் என்று
யாரடா சொன்னது’
என்று சீனிமுகமதுவின் பாடல் தமிழமெங்கும் நடக்கும் ஷாஹீன்பாக் போராட்டக்களங்களில் தேசியகீதம்போல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதுவே நிஜமான காட்சி. இந்தப் பாடலை மேடையில் பாடகர்கள் பாடினால் கண்ணீர்விடும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை நேரில் பார்த்த சில நாட்களில் ஜிப்ஸியின் இந்த ‘பாகிஸ்தான் ஆதரவு காட்சி’யையும் காண நேர்கையில் மனம் வலிக்கிறது.

முஸ்லீம்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படங்களில்கூட காட்சிகளில் சமன் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லீமையாவது நல்லவராகக் காட்டிவிடுவார்கள். ஆனால் ‘ஜிப்ஸி’யில் அப்படியும் இல்லை. பிடிவாதமான, கட்டுப்பெட்டித்தனமான, கண்டிப்பான தந்தையாக வரும் முஸ்லிம்தான் படத்தின் வில்லனாகிறார். இறுதிவரை காதலை ஏற்காத பெண்ணின் தந்தையாக வருகிறார். இமாமை ஜிப்ஸியின் குதிரை உதைத்துவிட்டது என்பதற்காக ஜிப்ஸியையும் இன்னும் இருவரையும் தன் வீட்டு வளாகத்திற்குள் கட்டிப் போடுகிறார் அவர். அவர்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்கிறார்கள். தண்ணீர் எடுத்துவரச் செய்து அவர்களுக்குத் தராமல் நாயகியின் அண்ணனே குடித்துவிடுவார். பின் மது குடிக்கச் சென்றுவிடுவார். தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அளவுக்கு அவர் மோசமாமானவராகக் காண்பிக்கப்படுகிறார். கொரானா வைரஸ் வந்து இறந்த ஒருவரின் சகோதரர் இறந்த உடலுக்கு அருகில் நின்று இறுதிச் சடங்குக்காகக் கூட யாரும் உதவ வரவில்லை என்று வருத்தப்படும் வீடியோ ஒன்றை முகநூலில் ஒருவர் பதிவிட்டு, தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை வந்துவிட்டால் என்ன ஆகும் என அச்சமாக இருக்கிறது என எழுதியிருந்தார் ஒருவர். அந்தப் பதிவில் ஓர் இஸ்லாமியர் வந்து இப்படி எழுதியிருந்தார். “மழை, வெள்ளம், புயல் என எல்லா நேரங்களிலும் வந்து வேலை பார்த்த துலுக்கன் அப்போதும் உயிரைப் பணயம் வைத்து வருவான். எங்கள் மார்க்கம் அதையே போதித்திருக்கிறது”. ஆம்! உண்மைதானே? பேரிடர் காலங்களில் அவர்கள்தானே பம்பரமாய் சுழன்று உணவும் நீரும் அளித்தார்கள்? “மறைத்துவிட்டார்கள். நன்றியை மறந்துவிட்டார்கள்” – மீண்டும் சீனிமுகமது பாடலின் இந்த வரி செவிகளில் ஒலிக்கிறது. நாயகியின் அண்ணன்போல இஸ்லாமியர்களில் இப்படி ஒருவர் இருக்கமாட்டாரா என்று கேட்டால், இருப்பார் என்றே சொல்லலாம்.. ஆனால் ஒரு படத்தில் எல்லா இஸ்லாமியர்களும் இப்படியானவர்களாகவே காட்டப்பட்டால்? அதிலும் நெற்றியில் திலகமிட்ட இந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் நாயகியைக் காப்பாற்றி அவள் தந்தையின் வீட்டுக்கு கோழிக்கோடு வரை வந்து பத்திரமாக சேர்க்கிறார். வன்முறையில் ஈடுபட்டு கலவரங்களை அரங்கேற்றும் மனிதரும் மனந்திருந்தி விடுகிறார். ஆனால் இறுதிவரை பெண்ணின் இஸ்லாமியத் தந்தையின் இறுக்கம் குறையவில்லை. அவர் பற்றி கேரளாவில் ஒரு சி.பி.எம். தோழர் வேறு இப்படிச் சொல்கிறார். “அவன் ஒரு fundamentalist.”. இஸ்லாமியர்களில் அடிப்படைவாதிகள் இல்லையா… அதைத்தானே இப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒரேயொரு நல்ல முஸ்லிமைக்கூட காட்டாமல், ஒருவரை fundamentalist என்று வரையறுக்கும்போது அது சிக்கலாகிறது. என் கதாபாத்திரம் இப்படித்தான்… இதை ஏன் அரசியலாகப் பார்க்கிறீர்கள் என்றும் இயக்குநர் கேட்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்படத்தின் அரசியலுக்காகவே படத்தைக் கொண்டாடுகிறோம் என்று பலர் கொண்டாடும்போது இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டவேண்டியது அவசியமாகிறது.

இந்து பெரும்பான்மை கோலோச்சும் ஒரு நாட்டில், சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக அணுதினமும் கொலைகளும் கொடூரங்களும் கும்பல்\கொலைகளும் நடக்கும் நாட்டில், துப்பாக்கிக் குண்டுகள் இஸ்லாமிய உடல்களை மட்டும் துளைக்கும் நாட்டில், இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது அநீதியானது. ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒன்றா என்ன? பைபிளும் குரானும் பகவத்கீதையும் ஒன்றுதான் என்றும் அவை யாவும் அன்பையே போதிக்கின்றன என்றும் வேறு ஒரு வசனம் வருகிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும், சாதி வர்ணமுறையை உயர்த்திப்பிடிக்கும், ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்று அடிமைத்தனத்தை போதிக்கும் பகவத்கீதையும் பிற மதத்தின் புனித நூல்களும் ஒன்றாக எப்படி இருக்க முடியும்? ‘அல்லாவின் பேரால் பாம் வைப்பதும் ராமனின் பெயரால் மசூதியை இடிப்பதும்’ என்று வேறு ஒரு வசனம். இப்படி சமமாக இரு தரப்பையும் பாவிப்பதே இங்கு பிரச்சனைக்குரிய விஷயம். அப்படி இருக்கையில் படத்தின் நல்லவர்கள் எல்லாம் இந்துக்களாகவும், தீமை செய்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருப்பதும் எப்படி நியாயமாக இருக்க முடியும்?

தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. எண்பதுகளில் வந்த சினிமாக்களை எடுத்துக்கொண்டால், கதாநாயகி கதாநாயகனிடம் ‘உன் கையால ஒரு தாலி மட்டும் கட்டிவிடு’ என கேட்டுக்கொண்டே இருப்பாள். நம் தமிழ் திரைப்படப் பாடல்களில் ஆண் மிஞ்ச நினைப்பதும், பெண் தாலி கட்டும் வரை பொறுமையாய் இருக்கவேண்டும் எனக் கேட்பதுமாக ஏராளமான டூயட்கள் உண்டு. அதுபோலவே ஜிப்ஸியின் ஒரு காட்சியில் நாயகியும் கேட்கிறாள். அவள் இஸ்லாமியர் என்பதால் தாலிக்குப் பதில் ஒரு கருகமணியை மட்டும் கழுத்தில் மாட்டிவிடக் கேட்கிறாள். இந்து மதத்தில் உள்ள தாலி செண்டிமெண்ட் போல நானறிந்த வரை கருகமணி செண்டிமெண்ட் எல்லாம் இஸ்லாமியரிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

நிக்காஹ் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இஸ்லாமிய திருமணத்திற்கு முதன்முறையாக புகைப்படமெடுக்க வரும் இஸ்லாமியரல்லாத தொழில்முறை புகைப்படக் கலைஞர் குழம்பிவிடுவார். மணப்பெண் ஓர் அறையிலும் மணமகன் இன்னோர் அறையிலும் இருப்பார்கள். வயதில் மூத்தப் பெண் ஒருவர் மணமகளுக்கு கருகமணியை அணிவித்துவிடுவார். திருமணம் முடிந்துவிட்டதென எல்லோரும் பிரியாணி சாப்பிடக் கிளம்பிவிடுவார்கள். புகைப்படக் கலைஞர் திருமணக் காட்சியை படம்பிடிக்க இன்னமும் காத்துக்கொண்டிருப்பார். மணமகனும் மணமகளும் நிக்காஹ் முடியும்வரை ஒன்றாக அமரமாட்டார்கள். இதுவே வழக்கம். ஆனால் ஜிப்ஸியோ நாயகிக்கு இந்து மணமகன் தாலி கட்டுவதைப் போல கருகமணியைக் கட்டுகிறான். ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை, வெறுமனே ஓர் இஸ்லாமியரிடம் எப்படி உங்கள் திருமணம் நடக்கும் என கேட்டிருந்தால் கூட அவர் சொல்லி இருப்பார். ஆக, இப்படி இஸ்லாமியர் தொடர்பான எல்லா காட்சிகளிலும் நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையும் இல்லாமல் இருக்கிறது. பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட இந்து உளவியலின் வெளிப்பாடாகவே இஸ்லாமியர்களை சித்தரிப்பதும் இப்படத்தில் உள்ளது. படத்தின் இந்தச் சிக்கல்கள் எல்லாம் கவனக்குறைவென்று ஒதுக்கிவிட முடியாதபடியான சிக்கல்கள்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் நபர் பின்னாளில் மனந்திருந்தி பேசுவதாக ஒரு வசனம் வருகிறது. அவ்வசனப்படி அவர் ஒரு தலித். கலவரங்களில் தலித்துகள் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டு பகடைக்காய் ஆக்கப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இக்கலவரங்களில் பிற்படுத்தப்பட்டோரோ, மிகப் பிற்படுத்தப்பட்டோரோ ஈடுபடுத்தப்படுவதில்லையா என்ன? ஏதோ தலித்துகள் மட்டுமே கலவரங்களில் முன்னிற்கிறார்கள் என்கிற பிம்பத்தை ஜிப்ஸி தருகிறது. அந்த தலித்தும் நாயகியும் சந்தித்துக்கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சியில் உண்மையில் நம் விழிகள் கண்ணீரை சொரிந்திருக்கவேண்டும். படத்தின் போதாமைகளால் அற்புதமாக வந்திருக்கவேண்டிய இந்தக் காட்சி சாதாரணமானதாக திரையில் தெரிகிறது.

சாதி மத வன்முறைகளில் பாதிக்கப்படுவோருக்கு இருக்கக்கூடிய உளவியல் சிக்கல்கள் அதிகம். நாயகிக்கு இருப்பது அப்படியான ஒரு உளவியல் தாக்கம். அவள் ஒரு கூட்டு வன்புணர்வை பார்க்க நேர்கிறது. அந்தக் காட்சியும் மேலோட்டமானதாக இருக்கிறது. அதுபோலவே, அவளுடைய மனச்சிக்கலும் போகிறபோக்கில் சொல்லப்படுவது சரிதானா?

இறுதிக்காட்சியில் நாயகனின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி புரட்சி செய்வதாகக் காட்டப்படுகிறது. ஆனால் அவன் அப்படியான ஒரு மக்கள் `பாடகனாக அதற்குமுன் காட்டப்படவில்லை. நாயகன் தன் குதிரையுடன் இடது, நடு, வலது என எல்லா அரசியல் கட்சி ஊர்வலங்களுக்கும் பிழைப்புக்காக செல்பவனாக காட்டப்படும்போது எல்லாம் அடிபட்டுப் போகிறது. திடீரென அவன் கேரளாவில் பொதுமக்கள் மத்தியில் பாடுவது, அதற்கு கூட்டம் கூடுவது என ஏதேதோ காட்சிகள். இதில் சுசீலா ராமன் போன்றோர் ஏன் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அவர் ஜிப்ஸியோடு சுத்தமாகப் பொருந்தாத தன்மையில் இருக்கிறார். தேசாந்திரி என தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஜிப்ஸியும் உண்மையில் நாடோடியாகவும் காட்சிப்படுத்தப்படவில்லை. புரட்சிக்காரனாகவும் இல்லை. எப்படி செங்கொடி மட்டும் இருந்தால் புரட்சி என்றில்லையோ அதுபோலவே வெவ்வேறு ஊர்களுக்குச் செல்பவன் என்கிற ஒரு தகுதி மட்டுமே ஒருவரை நாடோடி ஆக்குவதில்லை. அது ஒரு மனநிலை. அந்த மனநிலை இன்னும் சரியாக சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் ஆதங்கம்.

அரசியல்ரீதியாக சரியான காட்சிகள் என்றால் அவை மத வன்முறை தொடர்பான காட்சிகள்தாம். அவை ஆழமாக சொல்லப்படவில்லை. ஆனால் அரசியல்ரீதியாக தவறாக சொல்லப்பட்டிருப்பவை ஆழமாக சொல்லப்பட்டிருக்கின்றன. இதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய சிக்கல். நன்றாக வந்திருக்கவேண்டிய படம், அரசியல் போதாமைகளாலும் இஸ்லாமியர்கள் குறித்த இந்திய தேசியம் மற்றும் இந்துத்துவத்தின் கண்ணோட்டத்தில் காட்சிகள் அமைந்துவிட்டதாலும் ‘ஜிப்ஸி’ நம்மைக் கவராமல் போகிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்: