சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 15 & 16
15 ) செஸ் விளையாட்டுக்காரன்
நூற்றுக்கணக்கான அந்தப்புரப் பெண்களை வைத்திருப்பவனும் ஆயிரக்கணக்கான படை வீரர்களை வைத்திருப்பவனும் பலமான கோட்டையில் வசிப்பவனுமான அரசனைக் கொல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.. நான் ஒரு செஸ் விளையாட்டுக்காரன். என் எஜமானர் என்னை ஏன் இந்த வேலைக்குத் தேர்வு செய்தார் என்ற காரணத்தை என்னால் அறிய முடியவில்லை. எப்படி என்றாலும் மரணம் நிச்சயம் என்ற தைரியத்தில் நான் அந்த கேடு கேட்ட அரசனின் சபைக்குச் சென்றேன். நான் ஒரு புது விளையாட்டை மேன்மை மிகுந்த அரசனுக்கு அறிமுகம் செய்ய வந்திருப்பதாகக் கூறினேன் விளையாட்டின் விதிகளைக் கூறினேன். அரசனுக்கும் மந்திரிக்கும் கற்றுக் கொடுத்து அவர்கள் இருவரையும் விளையாடச் செய்தேன். இதற்கு சில நாட்கள் ஆகின.
இரண்டு அரசர்கள் படையுடன் மோதும் இந்த விளையாட்டை என் நோக்கம் அறியாமல் இருவருமே ரசித்தார்கள். மதி கெட்ட மந்திரியும் கொடுமைக்கார அரசனும் ஆடும் விளையாட்டில் மந்திரி தோற்றுக் கொண்டேயிருந்தார். . அரசனை மந்திரி ஜெயிக்கக் கூடாது என்பதை அந்த முட்டாள் மந்திரியும் அறிந்திருந்தார். கொடுமையாக வரி விதிப்பவனும் சொந்த மக்களை இரக்கமில்லாமல் கொல்பவனுமான அந்த அரசன் என்னுடன் விளையாட விரும்பினான். நான் அந்த அபாயமான விளையாட்டில் நுழைந்தேன் .நான் இந்த விளையாட்டில் நிபுணத்துவம் உள்ளவன். என் படைகள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகப் போக்கு காட்டினேன். அரசன் என்னைத் தோற்கடிக்கும் உற்சாகத்தில் இருந்தான். திடீரென்று விளையாட்டில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினேன் . கொடுமைக்கார அரசன் தொடர்ந்து விளையாடினான்.
எதிர்பாராத ஒரு நகர்வில் அந்த அரசனின் செஸ் ராஜாவை எங்கும் நகர முடியாமல் அடைத்துக் கைது செய்தேன். செஸ் ராஜா கைது செய்யப்பட்டு தான் தோல்வி அடைந்ததை அறிந்த அந்தக் கல் இதயம் கொண்ட அரசன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தான். அவன் உயிர் போய் விட்டது. இப்படித்தான் நான் அந்த கெட்ட அரசனைக் கொன்றேன்.
16)சியாமளா
நான் பொள்ளாச்சியில் நடந்த எம் கே டி பாகவதரின் கடைசிக் கச்சேரியைக் கேட்ட பாக்கியம் பெற்றவன். 1959 ஆம் ஆண்டு அந்தக் கச்சேரி நடந்தது . செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் என்று நினைவு. .பாகவதருக்கு நீரழிவு நோயும் உயர் ரத்த அழுத்த நோயும் இருந்தன. அவர் இருந்த இருப்பென்ன.? தங்கத்தாம்பாளத்தில் சாப்பாடு . அவரை பார்க்கப் பெண்கள் கூட்டம் அலைகள் போல் மோதியதை ரயில்வே பிளாட்பாரத்தில் கண்டேன். அவர் சிரித்த முகத்துடன் ரயில் வாசலில் நின்று கை ஆட்டினார். பெண்கள் முகங்களில் அப்படி ஒரு பரவசம். பெண்களின் ரகசியக் காதலன். திரை உலகின் உச்சத்தில் இருந்தபோது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ் கே யுடன் கைதானார். ஹரிதாஸ் படம் அக்டோபர் 1944 இல் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.அந்த நேரத்தில் லட்சுமிகாந்தன் நவம்பர் 1944 இல் கொலை செய்யப்பட்டார். பாகவதர் கைது செய்யப்பட்டு பல சட்டப் போராட்டங்களுக்குப்பின் 1947 இல் விடுதலை செய்யப்பட்டார். நன்றாக இருக்கும்போது இப்படித்தான் சிலர் மதி மயங்கி பொறியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
நான் அன்று பொள்ளாச்சிக்கு கச்சேரிக்கு வந்த பாகவதரை அருகில் பார்த்தேன. பழைய வசீகரம் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. வேறு ஆள் போல் இருந்தார் . நான் அவரிடம் சியாமளா படத்தில் வரும் ‘ என் ஜீவப் பிரியயே சியாமளா ‘ பாட்டைப் பாடுமாறு கேட்டேன். அவர் தலையாட்டினார். அவருக்குக் கண் பார்வை மங்கியிருந்தது . மேடை ஏறும்போது தடுமாறினார். நான் அவரைத் தொட்டு மேடை ஏற உதவினேன். அவரைத் தொட்டது எனக்குப் பட படப்பை ஏற்படுத்தியது. சற்று நேரம் உடல் நடுக்கம் கண்டது. ‘ சியாமளா ‘ பாட்டை அவர் பாடினார. எவ்வளவு அழகாகப் பாடினார் ? என்ன குரல்? ஆள் மங்கினாலும் குரல் மங்கவில்லை. நான் கச்சேரி கேட்ட அதே ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பாகவதர் இறந்தார். சியாமளா பாட்டை இப்போது கேட்க்கும்போதும் உடல் சிலிர்க்கிறது.