உத்தர பிரதேச பரேலியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சமீபத்தில் தன் தந்தையிடமிருந்து தன்னைக் காப்பற்றுமாறு வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் காணொளியில் அவர்தான் ஒரு தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை ராஜேஷ் மிஷ்ரா மற்றும் அண்ணன் விக்னேஷ் ஆகியோரால் தனக்கும் தன் கணவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு வழக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் தங்களைக் கொலைசெய்ய ஆட்களை ஏவியுள்ளனர் என்றும் பரேலியைச் சேர்ந்த பிற எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் தன் தந்தைக்கு உதவக்கூடாது என்றும் குறிப்பிட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இதனை மீறி அவர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தன் தந்தை உள்ளிட்டோர் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காவல்துறை துணைத்தலைவர் ஆர்.கே.பாண்டே பேசுகையில், காவல்துறை கண்காணிப்பாளர் முனிராஜை அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பதிலளித்த காவல்துறை கண்காணிப்பாளர் முனிராஜ், “அவர்களது காணொளியை பார்த்தோம்; நாங்கள் பாதுகாப்புக் கொடுக்கத் தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

இதனைப் பற்றி பரேலி மாவட்டத்தின் பிதாரி சைன்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ரா என்ற பப்பு பர்தால் (அப்பெண்ணின் தந்தை), ஊடகங்கள் பொய்யுரைகளை பரப்புவதாகக் குற்றம்சாட்டினார்; மேலும் தனது மகளுக்கு விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டெனவும் “நாங்கள் யாரும் அவரை அச்சுறுத்தவில்லை, அவள் எங்கிருந்தாலும் வாழ்க” என்றும் தெரிவித்தார்.