ஐ.ஐ.டியில் துணை பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் பொதுப்பிரிவினருக்கே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டியில் காலியாக இருந்த 900 பணியிடங்களில் 684 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் வெறும் 12.43% – 85 இடங்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின்கீழ் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட 50%க்கும் அதிகமாக பொதுப்பிரிவினர் இடஒதுக்கீட்டு வரையறையை மீறி நிரப்பப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஐ.ஐ.டி மாணவர் முரளிதரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற தகவலில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பேராசிரியர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவில் 154 பேர் நியமிக்கப்பட வேண்டிய இடத்தில் 273 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஓ.பி.சி 84 பேர் நியமிக்கப்படவேண்டிய இடத்தில் வெறும் 29 பேரும், எஸ்.சி பிரிவில் நிரப்பப்பட வேண்டிய 47 இடங்களில் வெறும் 5 பேரும், எஸ்.டி பிரிவினருக்கான 23 காலிப்பணியிடங்களில் ஒரே ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஓ.பி.சி, எஸ்.சி, ஏஸ்.டி பிரிவினர்களை நிரப்பவேண்டிய இடத்தில் பொதுப்பிரிவினரை நியமித்துள்ளனர்.

இதேபோல துணைப்பேராசிரியர்கள் மற்றும் இணைப்பேராசிரியர்கள் பணியிடங்களிலும் தில்லுமுல்லு செய்து பொதுப்பிரிவினரை நுழைத்துள்ளது ஐ.ஐ.டி. இது சென்னையில் மட்டுமல்ல; நாடெங்கிலும் உள்ள ஐ.ஐ.டிக்களிலும் இதே நிலைதான். நாட்டிலுள்ள மொத்த ஐ.ஐ.டிக்களிலும் வெறும் 2.8% சதவீத இடங்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்படுகின்றன.

2008ஆம் ஆண்டு எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவர ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாட்டிலுள்ள உயரிய கல்வி நிறுவனங்களில் பணியிடங்கள் நிரப்பும்போது எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டது. மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்மசோதா மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்படாததால் அது சட்டமாகவில்லை. ஆனால் அம்மசோதாவின் ஆரம்பகட்டத்தில் இருந்தபோதே அப்போதைய உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆர்.பி.அகர்வால் ஜனவரி 2008ல் நடந்த 39வது ஐ.ஐ.டி சபைக்கூட்டத்தில் (IIT council meeting) இனி ஐ.ஐ.டி மற்றும் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்றத் தேவையில்லை என்று பேசியிருக்கிறார்.

மேலும் 2019 ஜனவரியில் ஐ.ஐ.டிக்களில் இடஒதுக்கீடு வழங்காதது பற்றிய நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐ.ஐ.டிக்களில் துணைப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போன்ற நுழைவுப்பணிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும்; நிர்வாகம் மற்றும் துப்புறவுப் பணிகளில் 49.5% இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி/எஸ்.டி மக்கள் இன்னமும்கூட புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரிய ஒன்று. அதனை அரசும் ஆமோதித்து அதன் கண்முன்னே இத்தனையும் நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. விண்ணப்பித்தவர்கள் தகுதியானவர்களாக இல்லாததால் பிறரை நியமித்தோம் என்று ஐ.ஐ.டியோடு சேர்ந்து அரசும் சப்பைக்கட்டுக் கட்டும். இதுபோல இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் இன்னும் எத்தனை அரசு நிறுவனங்கள் உள்ளன என்று தெரியவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய எஸ்.சி ஆணையம் மற்றும் எஸ்.டி ஆணையம் இத்தனையும் என்ன செய்துகொண்டுள்ளன? என்ற கேள்வி மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது.