இன்று காலை ஒன்பது மணிக்கு நமது பிரதமர் பேசிய உரை சற்று கோமாளித்தனமானது; அதை அவரே ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அவர் ஏன் டிரையிலர்கள் வெளியிட்டு முன்னறிவுப்புடன் இந்த சாதாரண விசயத்தை பேசியிருக்க வேண்டும்? அவர் முட்டாளா? நிச்சயமாக இல்லை. அண்மையில் தன் நிர்வாகத் திறனை முழுக்க இழந்து விட்டாரா? இல்லை, ஏனெனில் அவரது இந்த போக்குக்கு ஒரு தொடர்ச்சி கடந்த காலத்தில் உண்டு.

மோடியின் நிர்வாகம் என்பது மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதோ (அவருக்கு மக்கள் நலத்திட்டங்களில் நம்பிக்கை இல்லை) அல்லது அரசு எந்திரத்தை மக்களின் மேம்பாட்டுக்காக முடுக்கி விடுவதோ அல்ல. மோடி ஒரு சுய-விளம்பரத் தலைவர். மக்கள் தலைவர் அல்ல. அன்றும் இன்றும் அவர் அவ்வாறே இருந்திருக்கிறார்; நாம் தான் கவனிக்கத் தவறி விட்டோம்.

குஜராத் முதல்வராக மோடி அங்குள்ள வணிக சமூகம் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டிருக்கிறார். ஆனால் பனியாக்களைத் தவிர்த்துப் பார்த்தால் மோடிக்கு அங்குள்ள ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரிடத்து ஆதரவு குறைவு. ரெண்டாயிரத்துப் பத்தின் துவக்கத்தில் உலக பொருளாதார தேக்க நிலையின் தாக்கம் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தலைமை வெற்றிடம் ஆகிய காரணங்களால் காங்கிரஸ் படுபாதாளம் நோக்கி சரிந்து கொண்டிருந்த காலத்தில் இந்திய வணிக நிறுவனங்களை மேலும் வளரவும் உற்பத்தியை இங்கு பெருக்கவும் கொள்கை அமைக்கிற ஒரு தலைவர் நமக்குத் தேவைப்படுவதாக ஒரு பிரச்சாரம் தோன்றியது. அதுதான் மோடியின் குஜராத் வளர்ச்சி மாடல். ரெண்டு நிமிட நூடில்ஸ் போல மோடி ஒரு உடனடித் தீர்வாக வாக்காளர்களுக்குத் தோன்ற அவரது இந்துத்துவா பிரச்சாரமும் கைகொடுக்க அவர் (அதாவது பாஜக) பெரும் வாக்குகளைப் பெற்று பிரதமர் ஆனார். அதன் பிறகே நாம் ஒன்றைப் புரிந்து கொண்டோம் – குஜராத்தில் மோடி வணிகர்கள் செழிக்க உதவினாரே ஒழிய அவர் குஜராத்தை மிகவும் வளர்ந்த மாநிலமாக ஒன்றும் மாற்றவில்லை.

குஜராத் தொண்ணூறுகளில் இருந்தே வளர்ந்து வருகிற, தொழில் உற்பத்தியில் முன்னேறிய ஒரு மாநிலமாக இருந்தது. மோடி அதன் முகத்தை இன்னும் பளபளப்பாக்கினார். ஆனால் அந்த பளபளப்புக்குப் பின்னால் வேலை வாய்ப்பு, மனிதவள வளர்ச்சி, குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம், மக்களின் சமத்துவம் என பல அலகுகளில் அவர் பெரும் தோல்வியாக இருந்தார். மோடியின் நிர்வாகம் என்பது எளிய மக்கள் திரள்களைப் பொருட்படுத்துவதே அல்ல. வணிகர்கள், அவர்களை மையமிட்ட மத்திய வர்க்கம் இவர்களுக்கான ஒரு முகவராக மோடி வெற்றிகரமாகத் திகழ்ந்தார். ஆனால் இந்தியா என்பது வணிகர்களின் சமூகம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவில் வணிக சமூகம் ஒரு சிறுபான்மையான ஆனால் அதிகாரமும் பணமும் படைத்த சமூகம். ஆனால் ஒரு பிரதமராக மோடியால் வணிக நிறுவனங்களின் முகவராக இருந்தால் போதாது. சொல்லப் போனால் நிர்வாகம் என்பது வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது என அவர் தவறாக நினைத்திருந்தார் என நினைக்கிறேன். வாக்காளர்களும் மோடிக்குப் பொருளாதாரத்தின் ஆவன்னா கூடத் தெரியாது என்பதை பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்ற அவரது முடிவுகளைக் கொண்டு புரிந்து கொண்டார்கள். மோடிக்கும் இது தெரியும். அவரது கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம் சாமி போன்றவர்களே இதை பலமுறை சொல்லி இருக்கிறார்கள். அவரது ஆதரவாளர்களுக்கும் இது புரிந்தது. அதனால் அவர்கள் மெல்ல மெல்ல மோடியின் நிர்வாகத் திறனைக் கொண்டாடுவதை கவனமாய் விடுத்தார்கள். அதற்கு மாற்றாக அவரை ஊழலற்ற, தன்னலமற்ற ஒரு தலைவராக முன்னிறுத்தினர். ஆனால் ஒரு தலைவர் தன்னலமற்றவராக இருந்தால் மட்டும் போதாது. ஆகையால் இந்தியாவின் பிரதமர் ஆனதும் மோடி தன்னுடைய பிம்பத்தை தொடர்ந்து பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தினார்.

மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் மனித வளம், சமத்துவம் போன்ற அலகுகளில் மட்டுமல்ல தொழில் உற்பத்தியில் கூட குஜராத்தை விட அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழகம் போன்றவை இருந்தன. ஆனால் குஜராத் அளவுக்கு அவை விளம்பரப்படுத்தப்படவில்லை. விளம்பரமே அவரை இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது – இந்திய வரலாற்றில் தலைவர்கள் குடும்ப அரசியலால் பிரதமர் ஆகியிருக்கிறார்கள்; கட்சித் தலைமையுடனான நெருக்கத்தால் பிரதமர் ஆகியிருக்கலாம்; கூட்டணிக் கட்சிகளின் தயவினால் பிரதமர் ஆகியிருக்கலாம். ஆனால் சுய-விளம்பரம் மூலமாக பிரதமர் ஆன முதல் அரசியல்வாதி மோடி தான். 2005இல் அமெரிக்க விசா மோடிக்கு மறுக்கப்பட்டது (குஜராத் கலவரங்களில் அவரது பங்கைக் காட்டி) உங்களுக்குத் தெரிந்திருக்கும்; அது குறித்து நியுயார்க் டைம்ஸ் நிருபர் ஒருவர் மோடியிடம் அப்போது கேள்வி கேட்டிருக்கிறார். “நீங்கள் உங்களுடைய நடவடிக்கைகளுக்காக வருந்துகிறீர்களா?”

அதற்கு மோடியின் பதில் விஷேசமானது. மோடி சொல்கிறார்: “இல்லை, ஊடகங்களை நான் சரியாக கட்டுப்படுத்தவில்லை என்பதைப் பற்றியே வருந்துகிறேன்.” அவரது புத்திசாலித்தனத்தை நாம் இங்கு மெச்சியாக வேண்டும் – அவர் தொண்ணூறுகளின் இறுதியில் இருந்து நமது ஊடகங்கள் பெற்ற பிரமாண்ட வளர்ச்சியை, அது மக்களின் பார்வையை எப்படி வடிவமைக்கிறது எனப் புரிந்து கொண்டவர். டிவியில் பார்ப்பதை, பத்திரிகையில் படிப்பதை, சினிமாவில் காண்பதை அப்படியே உண்மை என நம்புகிற சமூகம் நாம். ஆக எது உண்மை என்பது முக்கியம் அல்ல. ஒரு அரசியல்வாதியாக அவரால் தன் நடவடிக்கைகளை பெரிதும் கட்டுப்படுத்தவும் முடியாது. அவருக்குள் இருக்கும் கீழ்மையும் பலவீனங்களும் வெளிவந்து தான் ஆகும். ஊடகங்கள் மீது இரும்புப்பிடி உங்களுக்கு இருந்தால் மட்டுமே ஒரு அரசியல் தலைவராக நீங்கள் ஜெயிக்க முடியும். அத்தோடு ஊடகங்களில் தனது நடவடிக்கைகள் மற்றும் தோற்றத்தை முன்வைக்கும் விதம் குறித்தும் அதீத கவனமும் வேண்டும்.

ஆக மோடி பிரதமர் ஆன பிறகு நாட்டை ஆள்வதை விட்டு தன் சுயபிம்பத்தை ஆள்வதிலே அதிக கவனம் காட்டினார். பணமதிப்பு இழப்பு போன்ற ஒவ்வொரு தகிடுதித்தத்தின் போதும் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் அதை மறைத்து தன்னுடைய புகழை தொடர்ந்து விளம்பரம் பண்ணுவதிலே உழைப்பைச் செலுத்தினார். எல்லா ஊடக நிறுவனங்களையும் தன்னைப் பற்றி உயர்வாகப் பேசும்படி வற்புறுத்தினார். ஒத்துழைக்காத நிறுவனங்களின் விளம்பரங்களைத் துண்டித்து, வழக்குத்தொடுத்து, வற்புறுத்தி மிரட்டி ஓட விட்டார். கடந்த தேர்தலில் இந்த சுய-விளம்பரத்துடன் பாகிஸ்தானை முன்வைத்த இந்து தேசியவாதமும் அவருக்கு உதவிட மீண்டும் பெரும் வெற்றி பெற்று பிரதமரானார். இப்போது மோடி ஆட்சி, நிர்வாகம், தலைமை என்றாலே தன்னுடைய ஒவ்வொரு அங்குலத்தையும் விளம்பரப்படுத்துவது, தன்னுடைய ஆளுமையின், ஆட்சியின் குறைகளை சாமர்த்தியமாக மறைப்பது என நம்ப ஆரம்பித்து விட்டார். ஊடகங்கள் நேர்மறையான சேதிகளையே மக்களுக்கு அளிக்க வேண்டும் என வெளிப்படையாக பேசிய அவர் இப்போது மக்களும் தன்னைப் பற்றி நேர்மறையாகவே பேச வேண்டும் எனக் கோர ஆரம்பித்து விட்டார் – கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மோடி திரும்பத் திரும்ப பேசுவது “என்னைப் பாராட்டுங்கள்” என்பதையே. ஆனால் அதை நேரடியாகச் சொன்னால் அசிங்கம் என்பதால் மறைமுகமாக பலவழிகளில் சொல்கிறார்.

கொரோனாத் தொற்று சமூகத்தில் பரவாதிருக்க தனிமைப்படுத்தல் அவசியமே. ஆனால் அது மட்டும் போதாது. ஒட்டுமொத்த சமூக எந்திரமும் முடங்கும் போது மக்களுக்கு வருமான வழிகளைப் பெருக்க அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆனால் மோடி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. மாறாக கொரோனாவை வைத்து எப்படி தன் ஆட்சியின் ‘புகழைப்’ பெருக்கலாம் என்றே அவர் கவலைப்படுகிறார். ஒருநாள் ஊரடங்கின் போது பேசிய அவர் “நீங்கள் வீட்டுக்குள் பத்திரமாக இருந்தால் மட்டுமே நம் சமூகத்தை ஒரு பெரிய ஆபத்தில் இருந்து நீங்கள் காப்பாற்ற முடியும்” என்று ரொம்ப பணிவாகக் கேட்டுக் கொண்டதுடன் இறுதியில் கைதட்டி மக்கள் செய்து தம் ஆதரவை மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். (மக்கள் இதனுடன் மணியடிப்பது, சங்கு முழங்குவது, சாப்பாட்டுத்தட்டுகளை அடிப்பது போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டார்கள்) இந்த கைத்தட்டு என்பது மருத்துவர்களுக்கு எனும் பெயரில் ஆரம்பத்தாலும் இது மோடி அரசுக்கான மக்களின் பாராட்டு என்றே இறுதியில் பார்க்கப்படும் என மோடி நினைக்கிறார். அவரது வெட்கமற்ற ஆதரவாளர்களும் அப்படியே சித்தரித்து அன்று மாலையே ஊர்வலமாக சென்று கொரோனா எதிர்ப்பு கொண்டாட்டத்தை நிகழ்த்தினர். இப்போது அவர் கொரோனாவை நாம் ‘வெற்றி கொண்டதன்’ குறியீடாக ஐந்தாம் தேடி இரவு நம்மிடம் ஒன்பது மணிக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சி ஆதரவு காட்ட சொல்வது ‘மக்களுக்கே’ எனத் தோன்றினாலும் அது இயல்பாகவே அவருக்கு ‘மக்கள்’ ஆதரவு தெரிவிப்பதாகவே பார்க்கப்படும். “நீங்க முதன்முதலாக என்னை எப்போது பார்த்தீர்கள்?” என்னும் பேஸ்புக் டிரண்டில் நிறைய பேர் சென்று தம் அனுபவத்தை எழுதுவார்கள். ஆனால் கருத்தூட்டம் இடுகிறவர்களை விட இதில் கவனம் அதிகமாக கிடைப்பது அக்கேள்வியை கேட்பவருக்கே. பேஸ்புக்கில் நாம் பயன்படுத்துகிற இந்த உத்தியைத் தான் மோடி கொரோனா நிர்வாகம் எனும் பெயரில் நம் மீது பிரயோகிக்கிறார்.

இந்த விளையாட்டின் முடிவு எப்படி இருக்கும்?

தற்சமயம் வரை கொரோனோவுக்கு பலியாகி உள்ளோர் எண்ணிக்கை ஐநூற்று சொச்சம் பேர். அடுத்த பதினோரு நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரும் என நான் நம்பவில்லை. இந்தியாவின் சில லட்சம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, அந்த எண்ணிக்கை கணிசமாக மறைக்கப்பட்டு, ஆயிரத்துக்குள் உயிர்பலி இருக்கும் என நான் கணிக்கிறேன். கொரோனா இந்தியாவை பெருமளவில் பாதிக்காது என்பதையும், அத்தொற்று இப்போது உலகம் முழுக்க இறங்குமுகத்தில் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகளே கூறி விட்டார்கள். மோடியும் இதை அறிவார். கொரோனாவின் இந்த இறங்குமுகத்தை அவர் தனக்கு சாதமகமாக பயன்படுத்திக் கொள்வார். நிச்சயம் நமது பிரதமர் ஊரடங்கு முடியும் நாளுக்கு முன் மீண்டும் தோன்றி நம்மிடம் “கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். அதற்கு நீங்கள் இந்த அரசின் கோரிக்கை ஏற்று வீட்டுக்குள் முடங்கியது தான் காரணம்.” என்று சொல்லி இதைப் பாராட்டும்படி எதையாவது செய்யக் கேட்பார். இதன் மூலம் உலகையே கலங்கடித்த கொரோனாவை மோடி தனது நிர்வாகத்திறனால் வென்று விட்டார் என ஊடகங்கள் அவரைக் கொண்டாடும். ஒன்றுமே செய்யாமல் வெறும் சுயவிளம்பரத்தால் மோடி ஜெயித்து விடுவார். (அல்லது அவர் அப்படி நம்பிக்கொள்வார்) இதுவே அவரது திட்டம். இதனால் தான் பல நிபுணர்கள் பரிந்துரைக்கும் மக்கள் நலத்திட்டங்களை அவர் கொண்டு வராமல் இருக்கிறார். ஏழைகளைக் கூட்டங்கூட்டமாய் பல்லாயிரம் மைல்கள் நடந்தே ஊருக்குப் போகச் செய்கிறார். பலர் பசியிலும் களைப்பிலும் சாவதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார். ஏனென்றால் அவரது உலகில் எதையும் “ஊடகங்களைக் கட்டுப்படுத்தி” சரி செய்து விடலாம்.

கைதட்ட சொல்லும் போதும், விளக்கை அணைத்து ஒளியைப் பாய்ச்சக் கேட்கும் போதும் நம்மில் சிலர் அவரை முட்டாள் என பரிகசிக்கிறோம். ஆனால் அவர் முட்டாள் அல்ல, நம்மை எல்லாரையும் முட்டாளாக்கும் ஒரு புத்திசாலி. இதே கைத்தட்டும் வியூகம் கொண்டு இரு தேர்தல்களில் அதை ஜெயித்திருக்கிறார். நாம் தொடர்ந்து முட்டாளாகவும் அவர் புத்திசாலியாகவும் இருப்பாரா என்பதை அறிய, அல்லது குறைந்தது இம்முறையாவது நாம் முட்டாளாகிறோமா என அறிய ஒரு சிறிய வாய்ப்பு: ஐந்தாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு வெளியே வந்து பார்த்தால் போதும். அன்று ஊடகங்களிலும் பேஸ்புக், டிவிட்டரிலும் மக்கள் இருட்டில் ஒளியைப் பாய்ச்சுகிற புகைப்படங்கள் பரவலாகுமா எனப் பார்த்தால் போதும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக் காத்திருக்க வேண்டாம்.