மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர். தமிழகம் இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒரு மாற்றம் தேவை என்றும் அது மு.க.ஸ்டாலின் மூலம்தான் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்

2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக – பாமக – பாஜக கூட்டணியில் இணைந்து மக்களைவை தேர்தலை சந்திக்கவுள்ளது. தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணையும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் இன்று (மார்ச் 2) கையெழுத்தானது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுகவுக்கே ஆதரவு

வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், திமுகவும் தங்களுடைய கூட்டணியை பலபடுத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, மதிமுக, விசிக ம்ற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் இன்று (மார்ச் 2) சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஐஜேகேவின் ஆதரவை தெரிவிக்கிறோம். எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பேச திமுக அழைப்புவிடுக்கும்போது, தொகுதி பங்கீட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். தமிழகம் இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒரு மாற்றம் தேவை. அது ஸ்டாலின் மூலம்தான் நடைபெறும். எனவே நாங்கள் திமுகவிற்கு ஆதரவு தருகிறோம். தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் அந்த கூட்டணியில் ஐஜேகேவால் தொடரமுடியாது. “ என்று தெரிவித்தார்.