மதுரையில் உள்ள அழகர்கோயில் அமைந்திருக்கும் மலைப் பகுதி தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மதுரையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகர்கோவில் மலைப்பகுதி. கள்ளழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில், ராக்காயி திர்த்தம், அறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை ஆகிய மிகவும் புகழ்பெற்ற பக்திச்சுற்றுலாத் தளங்கள் அங்கு அமைந்துள்ளன.
அங்கு மரம் வெட்டுதல் போன்ற விவகாரங்களில் மலைப்பகுதி தங்களுக்கே சொந்தம் என்று கோவில் நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 2014-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் மலைப்ப்பகுதி கோவில் நிர்வாகத்துக்கே சொந்தம் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கினை மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘கோவில் நிர்வாகத்துக்கே சொந்தம்’ என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவை ரத்து செய்து, ‘அப்பகுதி வனத்துறைக்கே சொந்தம்’ என்று உத்தரவிட்டுள்ளது. ஆகவே அப்பகுதியில் மரம் வெட்டுதல் போன்ற சகல விவகாரங்களிலும் வனத்துறைக்கே அதிகாரமுண்டு. இனி அப்பகுதிக்கு அழகர்கோவில் நிர்வாகம் சொந்தம் கொண்டாடமுடியாது.