அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து நாளுக்குநாள் தன்னுடைய அசூர வளர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. மிகப்பெரிய சாதனங்கள் அனைத்தும் மிகச் சிறியதாகி தற்போது நமது கையடக்கத்தில் கிடைக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சி, விவசாய ஆராய்ச்சி, மொபைல் தொழில்நுட்பம் இப்படி ஏகப்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் நொடிக்குநொடி  உருமாறிக்கொண்டே இருக்கின்றன. பல ஆராய்ச்சியாளர்கள் புதிதுபுதிதாக உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியாளர்களில் இந்தியாவைச் சார்ந்த மனுபிரகாஷை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் உயிரிப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிற மனுபிரகாஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு (2012) மடிப்பு நோக்கி (Foldscope) என்ற ஒரு காணியல் நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். இது எளிய வகையான காகிதங்கள் மற்றும் மற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு அமெரிக்க டாலருக்கு($1) குறைவாக உருவாக்கப்பட்டது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த நுண்ணோக்கி இருந்ததால் இந்திய உள்ளிட்ட  பல்வேறு நாடுகளில் இதன் மதிப்பரிந்து விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மனுபிரகாஷ் இவ்வுருவாக்கத்தைப் பற்றி கூறும்போது, “நான் தாய்லாந்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும்போது அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் பெரும்பான்மையானோர் ஆய்வக நுண்ணோக்கியைப் பயன்படுத்த தயங்கினர், அதிக விலையுள்ள அந்நுண்ணோக்கியை அவர்கள் கையாளுவதற்கு தயங்கியதால் குறைந்த விலையில் நுண்நோக்கியை உருவாக்கவேண்டும்  என்று நினைத்தேன். இதன் பிறகு எனது குழுவுடன் இணைந்து மடிப்பு நுண்நோக்கியை உருவாக்க நினைத்தேன். இத்தகைய சிறப்பான நுண்நோக்கியை உருவாக்குவதற்கு பல நிறுவனங்களில் இருந்து பெற்ற நிதிஉதவி பெரும் கொடையாக அமைந்தது.” என்றார்.

இந்த நுண்ணோக்கியின் எடையானது 8-10 கிராம், கிட்டத்தட்ட 150 முதல் 20000மடங்கு வரை உருப்பெருக்கி காண்பிக்கக்கூடியது. இதைப் பயன்படுத்தி மிக சிறிய அளவிலான ஒட்டுண்ணிகளைக்கூட காண முடிகிறது. அது மட்டுமல்லாமல் நமது கைபேசி புகைப்பட(Mobile Camera) கருவியைப் பயன்படுத்தி இன்னும் தெளிவாக காண முடியும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நுண்ணோக்கியின் மூலம் நாம் நுண்ணுயிரிகளை எளிதாக காண முடியும், விவசாயம் போன்ற ஆராய்ச்சிகளில் செடிகளைப் பாதிக்கும் பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணி காரணிகளைக்  மிக எளிதாக காண உதவும்.  வேதியியல், இயற்பியல், உயிரியல், மருத்துவம், விவசாயம் மற்றும் பொறியியல் போன்ற ஆய்வங்ககளில் ஆராய்ச்சிகளுக்கு இதை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அறிவியல் தொழில்நுட்ப உலகில் பல பெரிய நுண்ணோக்கிகளிலிருந்து மிக எளிமைப்படுத்தி உருவாக்கப்பட்ட  இச்சிறிய நுண்ணோக்கி ஒரு இந்தியரால் உருவாக்கப்பட்டது என்பது நாம் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

(ஆண்டன்வான் லூவன்ஹூக் என்பவரால் (1632-1723) முதன்முதலில் எளிய கோள ஆடிகளைப் பயன்படுத்தி ஒருநுண்ணோக்கி உருவாக்கப்பட்டது. அவர் அந்நுண்ணோக்கியை பயன்படுத்தி முதன் முதலாக ஓரணு உயிரினங்களை கண்டவராவார் தெரிந்துகொள்வோம்)