இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இந்தியா சார்பில் ரோகித் சர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான எல்கர், ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்தில் முகமது ஷமியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக் 4 ரன்களுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. ஹம்சா(62), பாவுமா(32) மற்றும் ஜார்ஜ் லின்டே(37) ஆகிய வீரர்களைத் தவிரப் பிற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. இதனால் தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், ஷமி, ஜடேஜா, நதீம் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் பின் தங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் செய்து மீண்டும் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை தென்னாப்பிரிக்க அணி 22 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 62ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.

இன்னும் இரண்டு நாள் மிச்சமுள்ள நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.