எங்கே நாங்கள் போவது? – இத்தாலி விமான நிலையத்தில் இந்தியர்கள் பரிதவிப்பு

……………..

உலகில் கொரோனோ வைரஸின் கொடும் தாக்குதலுக்கு ஆனான நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இத்தனைக்கும் மருந்து உற்பத்தியின் தலைமையகம்போல திகழும் அந்த நாடு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் இறப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . அங்கிருந்து அயல்நாட்டவர்கள் பெருமளவு வெளியேறி வருகின்றனர்.

அப்படி வெளியேறுவதற்காக மிலான் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த கேரளாவைச் சேர்ந்த 300 இந்தியர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. காரணம் இந்திய அரசு வெளியிட்டிருக்கும் ஒரு அறிவிப்புதான்.

இந்திய அரசு ஏற்கனவே  கடும் விஸா கட்டுபாடுகளுடன் ’’சீனா மற்றும் கொரிய குடியரசிலிருந்து வரக்கூடியவர்கள் ’ கேவிட் 19’ வைரஸ் பாதிப்பில் என்ற மருத்துவச் சான்றோடுதான் வரவேண்டும். வைரஸ் தாக்கம் குறையும் வரை இது அமுலில் இருக்கும்’’ என அறிவித்துள்ளது

இதனால் விமான நிலையத்திற்கு வந்த இந்தியர்களை விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டனர். ‘ அயலில் வாழும் இந்தியர்களாகிய நாங்கள் எங்கே போக முடியும்? விமானம் ஏறுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இப்படி ஒரு அறிவிப்பைச் செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ என அவர்கள் உணர்ச்சி பொங்க கேட்டது மனதை உருக்குவதாக இருந்தது. மேலும் ‘’ கேரளாவில் வெள்ளம்  வந்தால்  நிவாரணம் திரட்ட நாங்கள் தேவையா?  நாங்கள் எங்கேயும் ஓடிப்போய்விட மாட்டோம். மேலும் 14 நாட்கள்  முதல் 28 நாட்கள்வரை தனிமைப்படுத்தப்பட்டு எல்லா பரிசோதனைகளுக்கும் ஆட்படுவதிலும்  எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை’’ என்று அவர்கள் தெரிவித்தனர். மற்றொருவர் இதுபற்றிக்கூறும்போது  ‘’ கொரோனோ வைரஸ் தங்களுக்கு இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழைப்பெற வேண்டும் என்றால் கொரோனோ பாதிக்கபட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய அபாயம் இருக்கிறது. அப்படியே போனாலும் மருத்துவமனைகள் ஏற்கனவே ‘ கோவிட் – 19 பாதிப்புக்கு ஆளானவர்களால் நிரம்பி வழிகிறது. நமக்குநோய் பாதித்த அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டால் நம்மை பரிசோதனையே செய்ய மாட்டார்கள் ‘’ என்றார்.

இதுகுறித்து இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பிரனாயி விஜயன் ‘ இத்தாலியில் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியர்கள் இந்திய அரசின் இந்த சுற்றறிக்கையால் கடும் சிரமத்தில் இருக்கின்றனர். அவர்களை இங்கே வர அனுமதியுங்கள். நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர்கள் பயணம் செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தடுத்து நிறுத்துவது என்பது முற்றிலும் தேவையற்ற ஒன்று. அவர்கள் இங்கே வந்ததும் அவர்களை முழுமையாக பரிசோதித்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் தனிமைப்படுத்தியும் வைக்கலாம். அதற்கான எல்லா  வசதிகளும் இங்கு உள்ளன. எனவே இத்தாலி விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டுள்ள அவர்களை உடன் இங்கு வர அனுமதியுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சற்று முன் ஏர் இந்தியா விமானம் AI-138  எண்பது பயணிகளுடன் ‘ கோவிட் – 19 சான்றிதழ் எதுவும் இல்லாமலேயே இத்தாலியிலிருந்து  டெல்லி  வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் உடமைகளும் பாதுகாபாக  வைக்கபட்டுள்ளன.

அபாயத்தில் இருக்கும் தங்கள் குடிமக்களை ஒரு நாடு ஆற்றுப்படுத்த வேண்டுமே தவிர அவர்களை புதிய நெருக்கடிகளுக்கு ஆட்படுத்தக்கூடாது.