நேற்று அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் 56 நிமிட கவுண்டவுன் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அது நிறுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருக்கும் விண்வெளி ஏவுதளத்தில் இதனை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காத்திருந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “ஏவப்படும் ஒருமணி நேரத்துக்கு முன்பாகக் கண்டறியப்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்படடுள்ளது.

“இஸ்ரோ இதுவரை செய்த பணிகளிலேயே மிகவும் கடினமானது இது” என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும் இதுபற்றி மிகவும் பெருமிதம் தெரிவித்திருந்தார். இச்சூழலில் சந்திராயன் 2 ஏவப்படுவது நிறுத்திவைக்கப்படுவது சற்றே பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சந்திராயன் 2, தொழில்நுட்பரீதியாக மிகவும் உயர்ந்த்து. ஏனென்றால் இதுவரை இந்தியா, விண்ணில் செலுத்தியவை ஆர்பிட்டர் வகையைச் சார்ந்தவையே. ஆனால் சந்திராயன் 2 – ஆர்பிட்டர் (வலம் வருதல்), லேண்டர் (தரையிறங்கி ஆய்தல்), ரோவர் (தரையிறங்கி வலம் வந்து ஆய்தல்) என்ற முப்பரிமாணங்கள் கொண்டது. லேண்டரின் பெயர் – விக்ரம்; ரோவரின் பெயர் – பிரக்யான்.

இதனை இந்தியா சாதிக்குமானால் இந்திய விண்வெளித்துறைக்கு மைல்கல்லாக அமையும். இதற்கு முன்னர் அமெரிக்கா, சோவியத் ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இம்முயற்சியில் வெற்றிபெற்றுள்ளன. நிலவின் தோற்றம் மற்றும் உருவாக்கம், தண்ணீர் உள்ளதா என்பவற்றைக் கண்டறியும் நோக்கிலும் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவும் இவ்விண்கலம் அனுப்பப்படுகிரது. உலகம் உற்றுநோக்கும் இப்பணியில் இந்தியா வென்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் விஞ்ஞானிகள் அயராது பாடுபட்டு உருவாக்கிக் கொண்டிருக்கும் சந்திராயன் 2 வெற்றிபெற வாழ்த்துகள்.