டெல்லி மின்னியக்க பேருந்துகளுக்கு மானியம்:

டெல்லி போக்குவரத்துக் கழகம் 1000 தாழ்தள – மின்னியக்கப் பேருந்துகளை வாங்குவதற்கு மத்திய அரசின் நிதியுதவியைக் கோரியிருந்தது. டெல்லி போக்குவரத்துக் கழகம் தாழ்தள மின்னியக்கப் பேருந்துகளை வாங்க மானியம் வழங்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று இதுதொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஆகஸ்டு 5- அன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் முடிவெடுக்க நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி போக்குவரத்துத் துறை இணை ஆணையர் சமர்ப்பித்த உறுதிச்சான்றில் ஏற்கனவே 1000 பேருந்துகளுக்கான ஒப்பந்தக் கோரிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் 650 பேருந்துகள் தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகிழிக் கழிவு மேலாண்மை:

டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு, நெகிழி மற்றும் நெகிழிக் கழிவுகளை அறிவியல்பூர்வமற்ற முறையில் கையாளும் தொழிற்சாலைகளை தடுப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும் அதன் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆக்ஸ்டு 5 அன்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கான டெல்லியின் சிறப்புச் செயலாளரும் மற்றும் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவின் செயலாளரும் இதற்கான உறுதிச் சான்றை வழங்கியுள்ளனர்.

சட்டத்திற்குப் புறம்பாக சுகாதாரமற்ற முறையில் இயங்கிவரும் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. டெல்லி மேம்பாட்டு ஆணையம் இரண்டு நாட்களில் மங்கோல்புரியிலிருந்து 627 டன்கள் நெகிழிக் கழிவுகளையும் ஜஹான்கீர்புரியிலிருந்து 400 டன்கள் நெகிழிக் கழிவுகளையும் அகற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரதீபா ராணி தலைமையிலான மேற்பார்வை ஆணையம் தனது இறுதி அறிக்கையை அக்டோபர் 31-ற்குள் சமர்ப்பிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய இந்திய வரையளவு செயலகம்:

Bureau of Indian Standards எனப்படும் இந்திய வரையளவு செயலகம் மாசுக்கட்டுப்பாட்டு வரையறைகளை மீறும் வகையில் தங்கத்தைப் பரிசோதித்து ஹால் மார்க்கிங் செய்ததாக புகார் எழுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்டு 5 அன்று புகாரினை மத்திய மற்றும் கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் விசாரித்து ஒரு மாதத்திற்குள் செயல்பாட்டு அறிக்கை தாக்கல் செய்யவும் பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்று ரத்து:

உத்தர பிரதேச மாநிலம் சோன்பந்திரா பகுதியில் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துவந்த நான்கு சுரங்க அலகுகளின் சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றுகளை கடந்த ஆகஸ்டு 5-அன்று ரத்து செய்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

அந்நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய கேட்டினை ஒரு மாதகாலத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.