காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இரண்டாவது பகுதியாக “தாம் – அனைவருக்குமான பொருளாதாரம்” என்ற தலைப்பின் கீழ் 7 உட்பிரிவுகளில் பல்வேறு திட்டங்களையும் செயல்வடிவங்களையும் பேசுகிறது.
தாம் (Dhaam)- அனைத்து மக்களுக்குமான பொருளாதாரத் திட்டம்
வேளாண் துறை, விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள்:
“எதனையும் காத்திருப்பில் வைக்கலாம், ஆனால் விவசாயத்தை அப்படிச் செய்யக்கூடாது” என்று நேரு அவர்களின் வாசகத்தோடு தொடங்குகிறது.
தேர்தல் அறிக்கையில் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் இரத்து செய்யப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 3 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த காங்கிரஸ் அம்மாநிலங்களில் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இத்திட்டத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும் விவசாயக் கடன்களைத் திரும்பச் செலுத்தாதோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தடைசெய்யப்படும் என்பதோடு விவசாயிகள் கடனற்று வாழ பல்வேறு திட்டங்களையும் வழிகளை முன்னெடுக்கிறது.
விவசாயிகளின் நலன் காக்க திட்டங்கள் வகுத்து அரசுக்கு ஆலோசனை வழங்க சிறு விவசாயிகள் மற்றும் விவசாயப் பணியாளர்கள் ஆணையம் அமைக்கப்படும்; மேலும் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள் கொண்ட “ தேசிய வேளாண் வளர்ச்சி மற்றும் திட்டமிடல் ஆணையம்” நிரந்தரமாக அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் வேலைநாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு நீர்நிலைகள் பாதுகாத்தல், ஆரம்ப பள்ளிகள், சுகாதார நிலையங்கள் ஆகிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என திட்டம் வகுக்கிறது காங்கிரஸ்.
நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளித்தல் மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்திலும் வன உரிமைகள் சட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட பிறழ்வுகள் நீக்கப்பட்டு அவை உண்மையான நோக்கத்தில் இயங்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறது.
பொருளாதரக் கொள்கைகள்:
மக்கள் நலம் காத்தலும் வளங்களை உருவாக்குதலுமே தங்கள் 2 முக்கியக் கொள்கைகளெனக் குறிப்பிடும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று தொடங்கி நிதிக்கொள்கை, பொருளாதார திட்டமிடல் என்று பலவற்றையும் விவரிக்கிறது.
முதலீடுகளை நிர்வகிக்கும் சட்டங்கள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் 3 மாத காலத்திற்குள் மறுசீராய்வு செய்யப்பட்டு காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படும். தனியார் முதலீடுகள், அரசு செலவினங்கள் மற்றும் உள்நாட்டு நுகர்வு போன்றவற்றைப் பற்றியும் விளக்குகிறது. வெளிநாட்டு வாணிபக் கொள்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும் என உறுதியளிக்கிறது.
Fortune 500 எனப்படும் உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்;
முக்கியத்துவம் இல்லாத துறைகளிலும் பாதுகாப்புசாரா துறைகளிலும் இருந்து அரசின் முதலீடுகள் திரும்பப்பெறப்படும்;
புதிய தொழில்களுக்கான “ஏஞ்சல் வரி” ரத்துசெய்யப்படும். போதிய பணக்கையிருப்பு இல்லாமல் செய்யப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சீரமைக்கப்படும்; மேலும் நிதி ஒதுக்கப்படாமல் முடக்கப்பட்ட MSME கடந்த ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீண்டுவர புத்துணர்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும், என பல திட்டங்களை காங் அறிக்கை விவரிக்கிறது.
குறைந்தபட்ச ஊதிய திட்டம் – NYAY:
மிகவும் வறுமையில் வாடும் 5 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூபாய் 72,000 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கிறது தேர்தல் அறிக்கை. திட்டமிடல் பணிகள் 3 மாதங்களும், வெள்ளோட்ட பணிகள் 6 முதல் 9 மாதங்களும் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் பலகட்டங்களாக இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கென சுதந்திரமாக செயல்படும் ‘வல்லுநர் – குழு’ அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பற்றி பல்வேறு கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டன. பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன் கூட இதனை ஆதரித்து ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். மேலும் இத்திட்டம் ப்ற்றி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தீர்க்கமாகத் தெரிவிக்கிறது.
NYAY திட்டத்தில் குறிப்பிடத்தக்க பகுதி என்னவெனில் ஊதியம் வழங்கப்படும்போது அது அக்குடும்பத்தின் பெண்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்வகையில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கிறது. இது உண்மையில் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஒரு பெரும் உந்துதலாக அமையும்
வரிவிதிப்பு மற்றும் வரிச்சீரமைப்பு:
ஆட்சியமைத்தால் முதல் ஆண்டிலேயே எளிமையான வெளிப்படையான “நேரடி வரிகள் தொகுப்புச் சட்டம்” அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கிறது தேர்தல் அறிக்கை. ஜி.எஸ்.டி சட்டம் மறுசீரமைக்கப்படும்.
ஜி.எஸ்.டி 2.0 – சில முக்கியக் குறிப்புகள்:
• அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சீர்திருத்தப்பட்டு நிலையான, மிதமான, ஒற்றை ஜி.எஸ்.டி முறை அமலாக்கப்படும்.
• சிதைவுப் பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும்;
• பெட்ரோலியம், மது, புகையிலை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவையும் ஜி.எஸ்.டியின் கூழ் கொண்டுவரப்படும்.
• மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கும், ஏற்றுமதிப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
• பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கும் ஜி.எஸ்.டியின் பலன்கள் பகிர்ந்தளிக்க முயற்சிக்கப்படும்.
• காலாண்டு வருமானத் தாக்கல் ஆண்டுக்கு ஒருமுறையும் ஆண்டு வருமானத் தாக்கல் ஒருமுறையும் செய்தால் போதுமானது;
காங். அறிவித்துள்ள இந்த திட்டங்கள் மக்கள் பலநாட்களாக அரசுக்கு கோரிக்கைகளாக வைத்தவை என்பது உற்று நோக்கப்பட வேண்டியது.
வங்கிகள் மற்றும் நிதித்துறை:
2 அல்லது அதற்கு மேற்பட்ட சில பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன்மூலம் போதுமான நிதியும் முதலீடுகளும் ஒதுக்கப்பட்டு 6 முதல் 8 பொதுத்துறை வங்கிகள் நாடெங்கும் இருக்கும் வண்ணம் அமைக்கப்படும். மேலும் ரிசர்வ் வங்கியோடு இணைந்து வாடிக்கையாளர் சரிபார்ப்பு (KYC) முறை திரும்பத் திரும்பச் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு எளிமையாக்கப்படும்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவிலான நிறுவனங்களாக வளர அதற்கென பிரத்யேக நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலும் பிராந்திய அளவிலும் சிறு வங்கிகள் அமைக்கப்பட்டு MSME நிறுவனங்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கிட வழிவகை செய்யப்படும் எனவும் ஊரக வங்கிகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள்:
உள்நாட்டு உற்பத்தியில் அறீவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்குச் செலவிடப்படும் தொகை 2%மாக அதிகரிக்கப்படும் என உறுதியளிக்கிறது. மேலும் காப்புரிமைச் சேர்மங்கள் (Patent Pool) உருவாக்கப்பட்டு, காப்புரிமை கொண்டுள்ளவர்கள் மலிவு விலையில் தொழில் தொடங்க வழிசெய்யப்படும்.
வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களான 3D Printing, Machine learning (இயந்திரக் கற்றல்), Big data (பெரிய தரவுகள்) போன்றவற்றில் கவனம் செலுத்த தேசிய ஆணையம் அமைக்கப்படுமெனவும் “தேசிய தரவு அறிவியல் நிறுவனம்” அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NAAC அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் அறிவியல் துறை மேம்படுத்தபடுமெனவும் உறுதியளிக்கிறது.
மீன்பிடித்துறை மற்றும் மீனவர்கள்:
மீனவர் நலம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்துளது காங்கிரஸ். உள்நாட்டு மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு வேளாண் தொழில்களாக கருத்தில் கொள்ளப்பட்டு வேளாண் துறைகளுக்கான அனைத்து நன்மைகளும் அவற்றுக்கும் வழங்கப்படும்.
பலகாலமாக நிலவி வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தானுடனான மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என உறுதிபடத் தெரிவிக்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
இப்படியாக அனைத்து மக்களுக்குமான தீர்வுகளைக் காணூம் வகையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பொருளாதார திட்டங்களையும் கொள்கைகளையும் பேசியுள்ளது. இதில் தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான மீன்வளத்துக்கான தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறுமை ஒழிப்புத் திட்டமாக குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத் திட்டத்தினை செயல்படுத்தவும் காங்கிரஸ் உறுதியளிக்கிறது.
மேலும் உள்நாட்டு பாதுகாப்பு, பொறுப்பான நிர்வாகம் போன்ற பலவற்றையும் தனது தேர்தல் அறிக்கையில் காங் குறிப்பிட்டுள்ளது. அதுபற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் விவரிப்போம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: manifesto.inc.in