இந்த புயல் கடந்து செல்லும். ஆனால் இக்கட்டான இந்த காலகட்டத்தில் மனித சமூகம் செய்யும் தேர்வுகள், அடுத்த பல வருடங்களுக்கு நம் வாழ்க்கையை மாற்றக்கூடும்.

மனித குலம் தற்போது உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது, நம் தலைமுறையின் மிகப்பெரிய நெருக்கடி. அடுத்த சில வாரங்களில், மக்களும் அரசாங்கங்களும் எடுக்கப்போகும் முடிவுகள் வரவிருக்கும் ஆண்டுகளின் உலகை வடிவமைக்கும். அவை நமது சுகாதார அமைப்புகளை மட்டுமல்ல, நமது பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தையும் வடிவமைக்கும். நாம் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும். நமது செயல்களின் நீண்டகால விளைவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாற்று வழிகளை தேர்ந்தெடுக்கும்போது, ​​உடனடி அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்பது மட்டுமல்லாமல், புயல் கடந்தவுடன் நாம் எந்த வகையான உலகில் வசிப்போம் என்பதையும் நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆமாம், புயல் கடந்து செல்லும், மனிதகுலம் உயிர்வாழும், நம்மில் பெரும்பாலோர் உயிருடன் இருப்போம் – ஆனால் நாம் வேறு உலகில் வசிப்போம்.

பல அவசரகால நடவடிக்கைகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறும். அதுதான் அவசரகால நிலைகளின் தன்மை. அவை வரலாற்றுச் செயல்முறைகளை வேகமாக முன்னெடுத்துச் செல்கின்றன. ஆபத்துக்கள் இல்லாத அமைதிக் காலங்களில் பல வருடங்கள் விவாதிக்கக்கூடிய முடிவுகள், அவசர நிலைகளில் சில மணிநேரங்களில் நிறைவேற்றப்படுகின்றன. முதிர்ச்சியடையாத மற்றும் ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் எதுவும் செய்யாது விடுவதினால் ஏற்படும் அபாயங்கள் மிகப் பெரியவை. உலகில் இருக்கும் அணைத்து தேசங்களும் தங்களை தாங்களே சோதனை எலிகளாக மாற்றி, அவரவர் மீதே   பெரிய அளவிலான சமூகச்சோதனைகளில் ஈடுபடுகின்றன. எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்து, சகமனிதர்களுக்குள்ளான தொடர்புகளின் இடைவெளிகள்அதிகமானால் என்ன நடக்கும்? எல்லா  பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் தொடர்புகள்மூலம்மட்டுமே நடைபெறும்போது என்ன நடக்கும்? சாதாரண காலங்களில், அரசாங்கங்களும், வணிகக் குழுமங்களும், கல்வி நிறுவனங்களும் இது போன்ற சோதனைகளை நடத்த ஒரு போதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் நாம் இப்போது சாதாரண நேரங்கள் வாழவில்லை.

நெருக்கடியான இந்த நேரத்தில், நாம் குறிப்பாக இரண்டு முக்கியமான தேர்வுகளை எதிர்கொள்கிறோம். முதலாவது தேர்வு, சர்வாதிகார கண்காணிப்புக்கும் மக்களின் அதிகாரத்திற்கும் இடையில் உள்ளது. இரண்டாவது தேசியவாத தனிமைக்கும் உலகளாவிய ஒற்றுமைக்கும் இடையில் உள்ளது.

‘தோலின் கீழ்’ கண்காணிப்பு

தொற்றுநோயைத் தடுக்க, முழு மக்களும் சில வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டிஇருக்கிறது. இதை அடைய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. மக்களை கண்காணிப்பதும், விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதும் ஒரு முறை. இன்று, மனித வரலாற்றில் முதல்முறையாக, தொழில்நுட்பம் அனைவரையும் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, கேஜிபியால் இருபத்திநாலு கோடி சோவியத் குடிமக்களையும் 24 மணி நேரமும் கண்காணிக்கமுடிந்தது இல்லை, அல்லது சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் திறம்பட செயலாக்குவதற்கான சாத்தியம் இருக்கவில்லை. கேஜிபி அன்று மனித உளவாளிகளை மற்றும் ஆய்வு வல்லுநர்களை நம்பி இருந்தது. மேலும் ஒவ்வொரு குடிமகனையும் கண்காணிக்க ஒரு உளவாளியை நியமிப்பது என்பது யதார்த்தத்துக்கு புறம்பான கணக்கீடு. ஆனால் இப்போது அரசுகள் சதையும் ரத்தமுமான மனிதர்களுக்கு பதிலாக எங்கும் நிறைந்த உணரிகள் ஊடாகவும் மற்றும் சக்திவாய்ந்த கணிப்பு வழிமுறைகளையும் கொண்டு நம்மைக் கண்காணிக்கின்றன.

கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கு எதிரான போரில் பல தேசங்களின் அரசுகள் ஏற்கனவே பல புதிய கண்காணிப்புக் கருவிகளை நிறுவியுள்ளன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க நாடு, சீனா. மக்களின் அலைபேசிகள் கூர்ந்து கண்காணிப்பதன் மூலமும், கோடிக்கணக்கான  முகங்களை அடையாளம் காணும் கேமராக்களைப் பயன்படுத்துவதன் மூலமும், மக்களின் உடல் வெப்பநிலை மற்றும் மருத்துவ நிலையை சரிபார்த்து அரசுக்குத் தெரிவிக்க மக்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலமும், சீன அதிகாரிகள் நோய்க்கடத்திகளை விரைவாக அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர்களின் இயக்கங்களையும் கண்காணிக்க முடியும். அவர்கள் தொடர்பு கொண்ட யாரையும் அடையாளம் காணவும் முடியும்.  சிலஅலைபேசிசெயலிகள் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அருகாமையில் இருப்பதைப் பற்றி எச்சரிக்கின்றன.

இந்த வகையான தொழில்நுட்பம் கிழக்கு ஆசியாவில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பயங்கரவாதிகளுடன் போரிடுவதற்கு பயன்படுத்தும் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு முகமைக்கு அங்கீகாரம் வழங்கினார். சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் துணைக்குழு இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்தபோது, ​​நெத்தன்யாகு அதை “அவசரகால ஆணை” மூலம் காட்டாயப்படுத்தினார்.

இவை பற்றியெல்லாம் புதிதாக பேசுவதற்கு எதுவும் இல்லை என்று நீங்கள் வாதிடலாம்.  கடந்த சில ஆண்டுகளாக, அரசாங்கங்களும், பெருநிறுவனங்களும் மக்களைக் கண்காணிக்கவும், கையாளவும் பல அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. ஆயினும், நாம் கவனமாக இல்லாவிட்டால், இந்தத் தொற்று கண்காணிப்பு அதிகாரத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையை இருக்ககூடும். இதுவரை  வெகுஜன கண்காணிப்புக் கருவிகளைப் நிராகரித்த நாடுகள் கூட கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தகூடும். இங்கு குறிப்பிட்டப்பட வேண்டிய விடயம் கண்காணிப்பு கருவிகளின்பயன்பாட்டை இயல்பாக்குவது குறித்து மட்டுமல்ல, அதைவிட அதிகமாக  “தோலுக்கு மேல்” இருந்து “தோலின் கீழ்” கண்காணிப்புக்கு மாறக்கூடும்.

இதுவரை, உங்கள் விரல் உங்கள் அலைபேசியின் திரையைத் தொட்டு ஒரு இணைப்பைக் சொடுக்கிய போது, ​​உங்கள் விரல் எதைக் சொடுக்கியது என்பதை அரசாங்கம் அறிய விரும்பியது. ஆனால் கொரோனா வைரஸுடன், அரசுகளின் ஆர்வத்தின் கவனம் மாறுகிறது. இப்போது அரசாங்கம் உங்கள் விரலின் வெப்பநிலையையும் அதன் தோலின் கீழ் உள்ள இரத்த அழுத்தத்தையும் அறிய விரும்புகிறது.

நாம் சந்திக்கும் மிக முக்கிய சிக்கல் நாம் கண்காணிப்பில் எந்த கட்டத்தில் நிற்கிறோம், நாம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறோம், வரவிருக்கும் ஆண்டுகளில் என்ன வரக்கூடும் என்பது தான். இதற்கான பதில்கள் நம்மில் எவருக்கும் சரியாகத் தெரியாது. கண்காணிப்பு தொழில்நுட்பம் மின்னல்  வேகத்தில் வளர்ந்து வருகிறது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு  எது அறிவியல் புனைகதையாகத் தோன்றியதோ இன்று அது பழைய செய்தியாக மாறியுள்ளது. ஒரு பரிசோதனைக்காக, ஒவ்வொரு குடிமகனும் 24 மணிநேரமும் உடல் வெப்பநிலையையும் இதயத் துடிப்பையும் கண்காணிக்கும் ஒரு கண்காணிப்பு காப்பு அணிய வேண்டும் என்று கோரும் ஒரு கற்பனையான அரசாங்கத்தைக் யோசித்து பாருங்கள். இதன் விளைவாக உங்களின் தகவல்களை அரசுகள் பதுக்கிவைக்கக்கூடும், கணிப்பு வழிமுறைகளை கொண்டு பகுப்பாய்வு செய்யக்கூடும். நீங்கள் அறிந்து கொள்வதற்கு முன்பே நீங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதை அந்த கணிப்பு  வழிமுறை அறிந்து கொள்ளும், மேலும் நீங்கள் எங்கிருந்தீர்கள், யாரை சந்தித்தீர்கள் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். நோய்த்தொற்றின் சங்கிலிகள் கடுமையாக சுருக்கப்பட்டு, முழுவதுமாக வெட்டப்படலாம். இத்தகைய அமைப்பு சில நாட்களில் தொற்றுநோயையும்  அதன் தடங்களையும் நிறுத்தக்கூடும். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது தானே?

இதனின் இன்னொரு பக்கம் என்னவென்றால், நிச்சயமாக இது ஒரு திகிலூட்டும் புதிய கண்காணிப்பு அமைப்புக்கு சட்டபூர்வமான தன்மையைக் கொடுக்கும். உதாரணமாக, நான் ஒரு  சிஎன்என் (CNN) இணையத்தை காட்டிலும், ஃபாக்ஸ் நியூஸ்சை (fox news) அதிகம் பயன்படுத்து உங்களுக்குத் தெரிந்தால், அது எனது அரசியல் பார்வைகளைப் பற்றியும், ஒருவேளை எனது ஆளுமையைப் பற்றியும் உங்களுக்கு அறியத்தரும். நான் ஒரு காணொளியை பார்க்கும்போது எனது உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்புகளில் என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் கண்காணிக்க முடிந்தால், என்னை சிரிக்க வைப்பது என்ன, என்னை அழ வைப்பது என்ன, என்னை உண்மையிலேயே கோபப்படுத்துவது எது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

கோபம், மகிழ்ச்சி, சலிப்பு,  காதல் ஆகியவை  கூட காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற உயிரியல் நிகழ்வுகள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இருமலை அடையாளம் காணும் அதே தொழில்நுட்பம்  சிரிப்பையம் அடையாளம் காணக்கூடும். நிறுவனங்களும் அரசாங்கங்களும் நம் உடலின் தகவல்களை பெருமளவில் அறுவடை செய்யத் தொடங்கினால், அவர்களால் நம்மை நாம் அறிந்ததை விட மிகச் சிறப்பாக அறிந்து கொள்ள முடியும், மேலும் அவர்களால் நம் உணர்வுகளைக் கணிப்பது மட்டுமல்லாமல், நம் உணர்வுகளைக் கையாளவும், அவர்கள் விரும்பும் எதையும் நமக்கு விற்கவும் முடியும் – அது ஒரு பொருளாக அல்லது ஒரு அரசியல் தலைவராகவும் இருக்கலாம். இந்தபுதியவகை கண்காணிப்பு கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் தகவல் திருட்டு தந்திரங்களை கற்காலத்திலிருந்து வந்ததைப் போல தோற்றமளிக்க செய்யகூடும். 2030ஆம் ஆண்டில் வட கொரியாவை கற்பனை செய்து பாருங்கள், ஒவ்வொரு குடிமகனும் 24 மணி நேரமும் ஒரு உடல்கண்காணிப்பு காப்பு அணிந்திருக்க வேண்டும். “பெரிய தலைவரின்” உரையை நீங்கள் கேட்கும்போது, உங்களின் கோபத்தை அந்த காப்பு  வெளிப்படுத்தினால்,  நீங்கள் முடிந்தீர்கள்!

அவசரகால சூழ்நிலையில் எடுக்கப்பட்ட ஒரு தற்காலிக நடவடிக்கையாக நீங்கள் பயோமெட்ரிக் கண்காணிப்புக்கு ஒரு வடிவத்தை கொடுக்க முடியும். அவசரநிலை முடிந்ததும் அது போய்விடும். ஆனால் தற்காலிக நடவடிக்கைகள் அவசரகாலங்களை மீறுவதற்கான மோசமான பழக்கத்தைக் கொண்டுள்ளன, குறிப்பாக ஒரு புதிய அவசரநிலை எப்போதும் அடிவானத்தில் பதுங்கியிருப்பதால். உதாரணமாக, எனது சொந்த நாடான இஸ்ரேல், 1948 ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது அவசரகால நிலையை அறிவித்தது. இது பத்திரிகை தணிக்கை மற்றும் நிலத்தை பறிமுதல் செய்வதிலிருந்து புட்டிங் தயாரிப்பதற்கான (உண்மையாக தான் சொல்கிறேன்) சிறப்பு விதிமுறைகள் வரை பல தற்காலிக நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. சுதந்திரப் போர் வென்றது, ஆனால் இஸ்ரேல் ஒருபோதும் அவசர கால நிலை முடிந்தது என்று  அறிவிக்கவில்லை, மேலும் 1948 இன் பல “தற்காலிக” நடவடிக்கைகளை ரத்து செய்யத் தவறிவிட்டது (அவசரகால புட்டிங் ஆணை 2011 ல் இரக்கத்துடன் ரத்து செய்யப்பட்டது).

கொரோனா நோய்த்தொற்று பூஜ்ஜியமாக இருக்கும்போது கூட, சில தகவல் பசிகொண்ட  அரசாங்கங்கள் பயோமெட்ரிக் கண்காணிப்பு முறைகளை வைத்திருக்க வேண்டியதின் தேவைகள் குறித்து வாதிடலாம், ஏனெனில் கொரோனா தொற்றின் அடுத்த அலைஉருவாகக்கூடும், அல்லது மத்திய ஆபிரிக்காவில் ஒரு புதிய எபோலா கிருமி உருவாக்கூடும் அல்லது…  நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். எங்கள் தனியுரிமை தொடர்பாக சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய யுத்தம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் இந்த நெருக்கடி போரின் முனைப்புள்ளியாக இருக்கலாம். அந்தரங்கத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையில் மக்களுக்கு ஒரு தேர்வு வழங்கப்படும் போது, ​​அவர்கள் பொதுவாக ஆரோக்கியத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அந்தரங்கத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையில் தேர்வு செய்யுமாறு மக்களைக் கேட்பது உண்மையில் சிக்கலின் மூலமாகும். ஆனால் உண்மையில் போலியான ஒரு தேர்வுமுறை. அந்தரங்கம் மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் நாம் ஒருசேர அனுபவிக்க முடியும். நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிறுத்தவும் நாம் சர்வாதிகார கண்காணிப்புகளை தேர்ந்தெடுக்கதேவை இல்லை, மாறாக குடிமக்களுக்கு அதிகாரம் தருவதன் மூலம் இதை சாத்தியப்படுத்தலாம். சமீபத்திய வாரங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மிக வெற்றிகரமான முயற்சிகளில் சில தென் கொரியா, தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றால் திட்டமிடப்பட்டன. இந்த நாடுகள் கண்காணிப்பு பயன்பாடுகளில் சிலவற்றைப் பயன்படுத்தினாலும், இந்த தேசங்கள் விரிவான சோதனைகள், நேர்மையான அறிக்கைகள் மற்றும் முழுமையான மற்றும் அறிவார்ந்த வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகம் சார்ந்து நோய்தோற்று தடுப்பினை சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளன.

மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே  மக்களை நலம்தரும் வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதற்கான ஒரே வழி அல்ல. மக்களுக்கு அறிவியல் உண்மைகள் சொல்லப்படும்போது, ​​இந்த உண்மைகளைச் அறிவிக்கும்  அரசு அதிகாரிகளை மக்கள் நம்பும்போது, ​​ஒரு ‘பெரிய சகோதரர்’ எப்போதும் கண்காணிக்காமல்  கூட குடிமக்கள் சரியானதைச் செய்ய முடியும். பொதுவாக, கண்காணிப்புக்கு  உட்படுத்தப்பட்ட அறியாமையால் நிறைந்த மக்கள் கூட்டத்தை  விட  ஒரு சுய-உந்துதல் மற்றும் அறிவார்ந்த மக்கள் கூட்டம் ,மிகவும் சக்திவாய்ந்ததாகவும்  பயனுள்ளதாகவும் இருக்கும்.

சோப்பு எனும் காவலர்

உதாரணமாக, சோப்பு பயன்படுத்தி   கைகளை கழுவுவது. இது மனித சுகாதாரத்தின் மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றாகும். இந்த எளிய செயல் ஒவ்வொரு ஆண்டும் கோடிகணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. சோப்பால் கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தனர். முன்னதாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட ஒரு  அறுவை சிகிச்சை முடிந்த பிறகு  மற்றொருவரின் அறுவை சிகிச்சையை கை கழுவாமல் தொடர்ந்தனர். இன்று தினமும் கோடி கணக்கான மக்கள் கைகளைக் கழுவுகிறார்கள், அவர்கள் சோப்பு எனும் காவலருக்கு பயப்படுவதால் அல்ல, மாறாக அவர்கள் உண்மைகளை புரிந்துகொள்வதால்தான். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைப் பற்றி தெரிந்ததால் நான் கைகளை சோப்பு போட்டு கழுவுகிறேன், இந்த சிறிய உயிரினங்கள் நோய்களை ஏற்படுத்துகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன், சோப்பு அவற்றை அகற்றும் என்பதை நான் அறிவேன்.

ஆனால் அத்தகைய இணக்கம் மற்றும் ஒத்துழைப்பை அடைய, உங்களுக்கு நம்பிக்கை தேவை. மக்கள் அறிவியலை நம்ப வேண்டும், பொது சுகாதார வல்லுநர்களை நம்ப வேண்டும், ஊடகங்களை நம்ப வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அறிவியலிலும், பொது சுகாதார வல்லுநர்களிலும், ஊடகங்களிலும் உள்ள நம்பிக்கையை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர். இப்போது இதே பொறுப்பற்ற அரசியல்வாதிகள் சர்வாதிகாரத்திற்கு உயரும் பாதையில் பயணிக்க ஆசைப்படக்கூடும், சரியானதைச் செய்ய பொது மக்களை நீங்கள் நம்ப முடியாது என்று வாதிடுகின்றனர்.

பொதுவாக, பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டுவிட்ட நம்பிக்கையை ஒரே இரவில் மீண்டும் உருவாக்க முடியாது. ஆனால் இவை சாதாரண நேரங்கள் அல்ல. நெருக்கடியின் தருணத்தில், மனங்களும் விரைவாக மாறக்கூடும். உங்கள் உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக நீங்கள் சண்டையிட்டிருக்கலாம், ஆனால் சில அவசரநிலை ஏற்பட்டால், நீங்கள் திடீரென்று நம்பிக்கையையும் நட்பையும் மறைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தைக்  கண்டுபிடித்தது போல் ஒருவருக்கொருவர் உதவ விரைந்து செல்கிறீர்கள்.  கண்காணிப்பு ஆட்சியை  முறையினை கட்டுவதற்குப் பதிலாக, அறிவியலிலும், பொது சுகாதார வல்லுநர்களிலும், ஊடகங்களிலும் மக்கள் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும், அதற்கு இன்னும் நேரம் உள்ளது . புதிய தொழில்நுட்பங்களையும் நாம் நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டும், ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். எனது உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க நான் ஆதரவாக இருக்கிறேன், ஆனால் அந்தத் தரவு ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை உருவாக்க பயன்படுத்தப்படக்கூடாது. மாறாக, அந்தத் தரவு எனக்கு தனிப்பட்ட தேர்வுகளைச் செய்ய உதவுவதோடு, அரசுகளை அவர்களின் முடிவுகளுக்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

எனது சொந்த மருத்துவ நிலையை 24 மணி நேரமும் என்னால் கண்காணிக்க முடிந்தால், நான் மற்றவர்களுக்கு உடல்நலக் கேடாக மாறிவிட்டேன் என்பதை மட்டுமல்லாமல், எந்தப் பழக்கவழக்கங்கள் எனது ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன என்பதையும் கற்றுக்கொள்வேன். கொரோனா வைரஸ் பரவுவது குறித்த நம்பகமான புள்ளிவிவரங்களை என்னால் அணுகவும் பகுப்பாய்வு செய்யவும் முடிந்தால், அரசாங்கம் என்னிடம் உண்மையைச் சொல்கிறதா என்பதையும், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான கொள்கைகளை அது பின்பற்றுகிறதா என்பதையும் என்னால் தீர்மானிக்க முடியும். மக்கள் கண்காணிப்பைப் பற்றி பேசும்போதெல்லாம், அதே கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழக்கமாக அரசாங்கங்கள் தனி நபர்களைக் கண்காணிக்க மட்டுமல்லாமல் – தனிநபர்களால் அரசாங்கங்களை கண்காணிக்கவும் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குடியுரிமைக்கான ஒரு பெரிய சோதனை. அடுத்த நாட்களில், நாம் ஒவ்வொருவரும் ஆதாரமற்ற சதிக் கோட்பாடுகள் மற்றும் சுய சேவை செய்யும் அரசியல்வாதிகளை நம்புவததற்கு பதிலாக  அறிவியல் தரவு மற்றும் சுகாதார நிபுணர்களை நம்புவதற்குத் தேர்வு செய்ய வேண்டும். சரியான தேர்வை எடுக்கத் தவறினால், நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி இதுதான் என்று நினைத்து, நம்முடைய மிக அருமையான சுதந்திரங்கள்  பறிபோவதை   காணலாம்.

ஒரு உலகளாவிய திட்டம் தேவை

நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது முக்கியமான தேர்வு தேசியவாத தனிமைக்கும் உலகளாவிய ஒற்றுமைக்கும் இடையில் உள்ளது. தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பொருளாதார நெருக்கடி இரண்டும் உலகளாவிய பிரச்சினைகள். உலகளாவிய ஒத்துழைப்பால் மட்டுமே அவற்றை திறம்படத் தீர்க்க முடியும்.

முக்கியமாக, வைரஸைத் தோற்கடிக்க நாம் உலகளவில் தகவல்களைப் பகிர வேண்டும். இது தொற்றுக்களை வெல்ல மனிதர்களுக்கு மிக பெரிய ஆயுதமாக இருக்கும். சீனாவில் எப்படி மனிதர்களை தாக்கலாம்  அல்லது அமெரிக்காவில் எப்படித்  தாக்கலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகளை ஒரு கொரோனா வைரஸ் இன்னொரு கொரோனா வைரஸ்க்கு பகிர முடியாது. ஆனால் கொரோனா வைரஸ் மற்றும் அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பல மதிப்புமிக்க பாடங்களை அமெரிக்காவிற்கு சீனா கற்பிக்க முடியும். ஒரு இத்தாலிய மருத்துவர் அதிகாலையில் மிலனில் கண்டுபிடித்தது மாலைக்குள் தெஹ்ரானில் உயிர்களைக் காப்பாற்றக்கூடும். பல கொள்கைகளுக்கு இடையில் இங்கிலாந்து அரசாங்கம் தத்தளிக்கும்போது, ​​ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்ட தென்கொரியர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம். ஆனால் இது நடக்க, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் உணர்வு நமக்கு தேவை.

நாடுகள் தகவல்களை பகிரங்கமாக பகிரவும் அவற்றை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளவும் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். மேலும் தரவுகளையும் அவர்கள் பெறும் நுண்ணறிவுகளையும் நம்புவதற்கு தயாராக இருக்க வேண்டும். மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் உலகளாவிய முயற்சி தேவை, குறிப்பாக சோதனை கருவிகள் மற்றும் சுவாச இயந்திரங்கள். ஒவ்வொரு நாடும் உள்நாட்டில் அதைச் செய்ய முயற்சிப்பதற்கும், உற்பத்தி செய்யும் எந்தவொரு சாதனத்தையும் பதுக்கி வைப்பதற்கும் பதிலாக, ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சி, உற்பத்தியை பெரிதும் துரிதப்படுத்தக்கூடும், மேலும் உயிர்காக்கும் கருவிகள் மிகவும் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும். ஒரு போரின் போது நாடுகள் முக்கிய தொழில்களை தேசியமயமாக்குவது போலவே, கொரோனா வைரஸுக்கு எதிரான மனிதப் போரும் முக்கியமான உற்பத்திகளை “மனிதமயமாக்க” தேவைப்படலாம். குறைந்த அளவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு பணக்கார நாடு மிகவும் மோசமாக பாதிக்கட்டப்பட்ட ஒரு ஏழை நாட்டிற்கு விலைமதிப்பற்ற உபகரணங்களை அனுப்ப தயாராக இருக்க வேண்டும், அதற்கு உதவி தேவைப்பட்டால், பிற நாடுகள் அதன் உதவிக்கு வரும் என்ற  நம்பிக்கையில்.

மருத்துவ பணியாளர்களை ஒன்றுசேர்ப்பதற்கும் இதேபோன்ற உலகளாவிய முயற்சியை நாம் கருத்தில் கொள்ளலாம். தற்போது குறைவாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், மருத்துவ ஊழியர்களை உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு , தேவையான நேரத்தில் அவர்களுக்கு உதவுவதற்காகவும், மதிப்புமிக்க அனுபவத்தைப் பெறுவதற்காகவும் அனுப்பலாம். பின்னர் தொற்றுநோய்களின் மாற்றங்களில் கவனம் செலுத்தினால், உதவி மறு திசையிலும் பாய ஆரம்பிக்கலாம்.

பொருளாதார ஒத்துழைப்பிலும் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் உலகளாவிய தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அரசாங்கமும் மற்றவர்களை முற்றிலும் புறக்கணித்து தனது சொந்த காரியத்தைச் செய்தால், இதன் விளைவாக குழப்பம் மற்றும் ஆழமான நெருக்கடி மட்டுமே உருவாகும். நமக்கு ஒரு உலகளாவிய செயல் திட்டம் தேவை, அது  விரைவாகத் தேவை.

பயணத்தின் உலகளாவிய உடன்பாட்டை எட்டுவது மற்றொரு தேவை. அனைத்து சர்வதேச பயணங்களையும் பல மாதங்களுக்கு இடைநிறுத்தினால் பெரும் கஷ்டங்கள் ஏற்படும், மேலும் கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு இடையூறு ஏற்படும். அறிவியலாளர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள் போன்ற அத்தியாவசிய பயணிகளின் தடையை தளர்த்தி எல்லைகளைத் தாண்டி அனுமதிக்க நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். பயணிகளை தங்கள் சொந்த நாட்டால் முன்கூட்டியே மருத்துவ சோதனை செய்வது குறித்து உலகளாவிய உடன்பாட்டை எட்டுவதன் மூலம் இதைச் செய்யலாம். ஒரு விமானத்தில் கவனமாக சோதனை செய்யப்பட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அவர்களை உங்கள் நாட்டிற்கு ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருப்பீர்கள்.

துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய நாடுகள் இந்த விஷயங்கள் எதையும் செய்யவில்லை. ஒரு கூட்டு முடக்கம் சர்வதேச சமூகத்தை தாக்கியுள்ளது. அறையில் பெரியவர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது. ஒரு பொதுவான செயல் திட்டத்தை கொண்டு வர ஏற்கனவே உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தை சில வாரங்களுக்கு முன்பே ஒருவர் எதிர் பார்த்திருக்கக்கூடும். ஜி7 தேசங்களின் இந்த வாரம் காணொளி காட்சி மூலம் ஒரு கூட்டத்தை நடத்தின, ஆனால் எந்த ஒரு செயல் திட்டமும் நிறைவேறவில்லை.

முந்தைய உலகளாவிய நெருக்கடிகளில் – 2008 நிதி நெருக்கடி மற்றும் 2014 எபோலா தொற்றுநோய் போன்றவை – அமெரிக்கா உலகளாவிய தலைவரின் பங்கை ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போதைய அமெரிக்க நிர்வாகம், தலைவரின் வேலையை கைவிட்டுவிட்டது. மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பற்றி விட அமெரிக்காவின் மகத்துவத்தைப் பற்றி அது அக்கறை கொண்டுள்ளது என்பதை அது தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிர்வாகம் அதன் நெருங்கிய கூட்டாளிகளைக் கூட கைவிட்டுவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அனைத்து பயணங்களையும் தடைசெய்தபோது, ​​ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்கூட்டியே அறிவிப்பைக் கொடுக்க அது கவலைப்படவில்லை – அந்த கடுமையான நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசிக்ககூடவில்லை. ஒரு புதிய கோவிட்19 (COVID19) தடுப்பூசிக்கு ஏகபோக உரிமைகளை வாங்க ஒரு ஜெர்மன் மருந்து நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டாலர் வழங்கியதாகக் கூறி ஜெர்மனிக்கு எதிராக ஒரு பெரும் ஊழலை நிகழ்த்த முயற்சி செய்தது. தற்போதைய நிர்வாகம் தனது நிலையை மாற்றி உலகளாவிய செயல் திட்டம் ஒன்றை கொண்டு வந்தாலும், ஒருபோதும் தவறுகளை ஒப்புக் கொள்ளாத, எந்தபொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள முன்வராத மற்றும் எல்லா குற்றச்சாட்டுகளையும் மற்றவர்களிடம் விட்டுவிட்டு, பாராட்டுக்கள் அனைத்தையும் தனதாக பாவிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கும் தலைவரை ஒரு சிலர் மட்டுமே பின்பற்றகூடும்.

அமெரிக்கா விட்டுச்செல்லும் வெற்றிடத்தை மற்ற நாடுகளால் நிரப்பவில்லை என்றால், தற்போதைய தொற்றுநோயைத் தடுப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல், அதன் மரபு பல ஆண்டுகளாக சர்வதேச உறவுகளை தொடர்ந்து விஷமாக்கும். இருப்பினும், ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பாகும். உலகளாவிய ஒற்றுமையின்மையால் ஏற்படும் கடுமையான ஆபத்தை உணர தற்போதைய தொற்றுநோய் மனிதகுலத்திற்கு உதவும் என்று நாம் நம்ப வேண்டும்.

மனித சமூகம் இப்போது ஒரு தேர்வினை செய்ய வேண்டும். நாம் பிரிவினைப்பாதையில் பயணிப்போமா, அல்லது உலகளாவிய ஒற்றுமையின் பாதையை ஏற்றுக்கொள்வோமா? நாம் பிரிவினையை தேர்வுசெய்தால், இது நெருக்கடியை நீடிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இன்னும் மோசமான பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். உலகளாவிய ஒற்றுமையை நாம் தேர்வுசெய்தால், அது கொரோனா வைரஸுக்கு எதிராக மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தை பாதிக்கக்கூடிய அனைத்து எதிர்கால தொற்றுநோய்களுக்கும் நெருக்கடிகளுக்கும் எதிரான வெற்றியாக இருக்கும்.

(Originally published in Financial Times by Yuval Noah Harri)

தமிழில் :ஆர்த்தி வேந்தன்

(யுவால் நோவா ஹராரி ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டியூஸ்’ மற்றும் ‘21 ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் ’எழுதியவர்.)