கொரோனா பாதிக்கப்பட்டவர்களை எப்படி தனிமைப்படுத்துவது என்பது பற்றிதான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனிமைப் படுத்தப்படுகிறவர்கள் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளாவர்கள் என்பதை யோசிக்க வேண்டும். இந்தத் தனிமைப்படுத்தப்படும் சூழலை எதிர்கொள்வதற்கு ஒருவருக்கு மிகுந்த உளவலிமை தேவை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? நிச்சயமாக புத்தகங்கள் அதற்கு ஒரு சிறந்த மருந்து என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவிதத்தில் வாசிப்பதற்குத் தேவையான அவசியமான தனிமையும்கூட.

இந்த விஷயத்தில் கேரள அரசு நமக்கு வழிகாட்டுகிறது. கேரள அரசு கொரோனோவில் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்காக ஒரு வாசிப்பு இயக்கத்தையே துவங்கியியுள்ளது. கேரள முதல்வர் பினரயி விஜயன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை இது,

“வாசிப்போம், கோவிட்டை எதிர்கொள்வோம்”

“கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படும் சூழலில் அவர்களது மனஆராக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. நாம் அவர்களுக்கு மனோரீதியாக உற்சாகமும் தைரியமும் வழங்க வேண்டும். நல்வாழ்வுத்துறையும் சுகாதாரப் பணியாளர்களும் இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் புத்தகங்கள் முக்கிய பங்காற்ற முடியும். வாசிப்பில் ஈடுபாடுள்ளவர்களுக்கு பலர் புத்தகங்கள் வழங்க முன்வந்துள்ளனர். டிசி புக்ஸ் பதிப்பகம் இது தொடர்பாக சில முன்முயற்சிகளை எடுத்துள்ளது. அவர்கள் தங்களது வெளியீடுகளை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி, பத்தனம்திட்டா பொது மருத்துவமனை, கோழஞ்சேரி மாவட்ட மருத்துவமனை, மஞ்சேரி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கொரோனோ சோதனைக்காக தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் மற்றும் கோட்டயத்தில் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் வழங்கியுள்ளார்கள். பதிப்பாளர்களும் நூலகர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.”

-பினரயி விஜயன், (கேரளமுதல்வர்)

சமீபத்தில் சீனாவில் உள்ள வூகான் மாநிலத்தில் கொரோனோ பாதிக்கபட்டவர்கள் அனுமதிக்கபட்டிருந்தவர்கள் மருத்துவமனையில் ஒருவர் புத்தகம் படித்தும்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது. அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகம் ப்யூகிமா எழுதிய The Origins of Political Order (2011) என்ற நூல் பற்றியும் கூட நெட்டிசன்கள் விவாதித்தனர்.அந்தப்புகைப்படம் இந்த மோசமான சூழலில் தங்களுக்கு மிகப்பெரிய உளவலிமையை தருவதாக பலரும் எழுதியிருந்தனர். இருண்ட காலத்தில் விளக்காக இருக்கக்கூடியவை புத்தகங்களே என்பதை இது உணர்த்துகிறது.

கொரோனோ தமிழகத்தில் இதுபோன்ற ஒரு சூழல் உருவானால் தமிழ் பதிப்பாளர்களுக்கும் இதுபோன்ற ஒரு முக்கியபணி இருக்கிறது. கொரோனாவால் தனிமைப்படுத்தபடுகிறவர்கள் உளவியல் ரீதியாக தனிமைப்பட்டுவிடக்கூடாது. புத்தகங்கள் அவர்களை சமூகத்தோடும் வாழ்வோடும் நெருக்கமாக இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும்.