நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணிபுரம் பகுதியில் தோட்டத்துடன் கூடிய வீட்டில் வசித்து வருபவர் சண்முகவேல். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இருவரும் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த மர்ம நபர்கள், அதிகாலை சுற்றுச்சுவர் வழியாக ஏறிக் குதித்து வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சண்முகவேலைத் துண்டால் கழுத்தை நெறித்துள்ளனர். இதனைக் கண்ட முதியவரின் மனைவி செந்தாமரை கணவனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது கொள்ளையன் ஒருவன் அரிவாளால் செந்தாமரையை வெட்டி 5 சவரன் நகையைப் பறித்துள்ளான். இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் கையில் கிடைத்த சேர் மற்றும் செருப்பை எடுத்து கொள்ளையர்களைத் தாக்கி விரட்டி அடித்தனர்.

இதனால் கொள்ளையர்கள் வீட்டில் நுழைவதைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல தரப்பட்ட மக்களும் இந்த தம்பதிகளின் வீரமிக்க செயலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கைப் பற்றியும் கேள்வி எழுப்பத் தவறவில்லை. இது தொடர்பாக வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

வீடியோ உதவி நன்றி பாலிமர் செய்தி சேனல் : https://youtu.be/DjMyXE6VYBQ