பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் “சௌகிதார் நரேந்திர மோடி” என்று பெயரை மாற்றி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
தனது அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அதைப் பின்பற்றவும் கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் “சௌகிதார் ரவிசங்கர் பிரசாத்”, #நானொருசௌகிதார் (#MainBhiChowkidar) பிரச்சாரத்தில் இணைந்திருப்பவர்களின் எண்ணிக்கை பற்றி தற்பெருமை பேசிக்கொண்டார். மோடி பிரச்சாரம் செய்கின்ற ஒரு காணொளிக்காட்சிகூட வெளியிட்டிருந்தார்கள்.
சௌகிதார் என்றால் ‘காவல்காரன்’ என்று பொருள். இதன்மூலம் தாங்கள் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக பறைசாற்றுகிறார்கள். சௌகிதார் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டைப் பாதுகாப்பதாக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
1) குஜராத் – உனா நகரில் தோல்பதனிடும் தலித் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்:
ஜூலை 11, 2016 அன்று பசுக் காவலர்கள் கும்பல் ஒன்று, பாலு சரவைய்யா என்பவர் இறந்த பசுவின் தோலை பதனிட்டார் என்பதற்காக அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியிருக்கிறார்கள். உலக மாட்டுத்தோல் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியாவில் தோல் தொழிற்சாலையில் தோல்பதனிடும் வேலைபார்த்து தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த அந்தக் குடும்பத்தை இரும்புக் குழாய்கள், கட்டைகள் மற்றும் கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கிய அந்தக் கும்பல், அந்த குடும்பத்தின் நான்கு பேரையும் ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக்கி, அடித்துத் தெருக்களில் இழுத்துச்சென்றார்கள்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியானவர்களில் ஒருவன் மீண்டும் அதே குடும்பத்தை 2018 ஜூன் மாதம் அவர்கள் புத்த மதத்துக்கு மாறியதைக் காரணமாகச் சொல்லி தாக்கினான். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல், 2018 ஆகஸ்டு மாதம் விசாரித்து 43 பேர் குற்றம்சாட்டப்பட்டார்கள். அவர்களில் 21 பேர் பிணையில் வெளியாகிவிட்டனர்.
2) காதல் ஜிஹாத் – இஸ்லாமிய இளைஞரை கத்தியால் வெட்டி உயிரோடு எரித்துக் கொன்ற இந்துத்துவர்கள்:
டிசம்பர் 6, 2017அன்று ராஜஸ்தானின் ராஜ்சமந்த் பகுதியில் முகமது அஃப்ரசல் என்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் கத்தியால் வெட்டப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த சாம்புலால் ரெகார் என்றவன், அஃப்ரசல் இந்துப் பெண்ணை காதலிக்கிறார் என்று சந்தேகித்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளான். இதனை வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி தனது செயலைப் புனிதப்படுத்தி நியாயம் பேசியுள்ளான்.
மற்றொரு வீடியோவில் இஸ்லாமியர் அனைவரையும் மிரட்டும்விதமாக “எங்கள் நாட்டில் லவ் ஜிஹாத் செய்தால் இதுதான் உங்கள் கதி” என்று பேசியுள்ளான். லவ் ஜிஹாத் என்ற வார்த்தை உருவாக்கியதே இந்துத்துவா கும்பல்தான். அச்சொல்லை இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை மயக்குகிறார்கள் என்ற அர்த்தத்தைக் கற்பித்துப் பயன்படுத்திவருகிறார்கள்.
3) கால்நடை வியாபாரிகள் இருவரைத் தாக்கி மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுக் கொன்ற சம்பவம்:
மார்ச் 17, 2016 அன்று ஜார்கண்டில் இரண்டு இஸ்லாமிய கால்நடை வியாபாரிகள் – 32 வயதான மஸ்லம் அன்சாரி மற்றும் 13 வயதேயான இம்தியாஸ் கான் என்ற சிறுவன் – இருவரது உடல்களும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டறியப்பட்டன. இருவரும் தமது கால்நடைகளை சந்தைக்கு கொண்டுசெல்லும் வழியில் இந்துத்துவா கும்பலால் தாக்கப்பட்டனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி இது பணத்தையும் கால்நடைகளையும் களவாடுதற்காக நடைபெற்றதாக தெரிவித்தனர். (திருடுவதுதான் நோக்கம் எனில் அடித்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுக் கொல்லவேண்டிய அவசியமில்லையே?)
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் பசுக் காவலர்கள் என்று சொல்லித்திரியும் பாரதிய கௌ க்ரந்தி மன்ச் என்ற அமைப்பின் போதகர் ஆச்சார்யா கோபால் மஞ்சில் மகராஜ் என்பவர் மீது குற்றம் சுமத்தினர்.
இவ்வழக்கில் 8 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.
4) ஜம்மு காஷ்மீர் – கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது:
ஜனவரி 2018, ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 சிறுமி கடத்திச்செல்லப்பட்டு கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். மயக்கமுறச் செய்து அச்சிறுமியை கோயில் கருவறைக்குள் அடைத்துவைத்துள்ளனர். அச்சிறுமி இந்து ஆதிக்கம் நிறைந்த கத்துவா மாவட்டத்தில் பக்கர்வால் என்ற இஸ்லாமிய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி வலதுசாரி இந்துத்துவா குழுக்கள் “ஏக்தா இந்து” என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வனத்துறை அமைச்சர் லால் சிங் சௌதரி மற்றும் தொழிதுறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் ஆகிய பாஜகவின் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர். மேலும் இச்சம்பவத்தில் சாட்சியங்களை அழிக்க முயன்ற அப்பகுதியின் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் சிறுமியின் குடும்பத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தீபிகா ராஜவத், தனக்குக் கொலைமிரட்டல்கள் வந்ததாகத் தெரிவித்தார்.
நாடெங்கிலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் நடந்த பின்பு தாமதமாக ‘சௌகிதார் நரேந்திர மோடி’ சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு ட்விட்டரில் கண்டனம் வெளியிட்டார்.
5) குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலைகாரர்களுக்கு மாலையிட்டு தன் வீட்டிற்கு வரவேற்ற பாஜக அமைச்சர்:
ஜூன் 29, 2017 அன்று மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லப்பட்டு அலிமுதின் என்ற அஸ்கர் அன்சாரி எனும் நபர் ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்காரில் ஒரு கும்பலால் கொலைசெய்யப்பட்டார். அவரது வாகனம் தீயிட்டுக் கொழுத்தப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 8 பேர் பாஜக மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
8 நபர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டும் மேல்முறையீட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஜூலை 2018ல் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அக்குற்றவாளிகளுக்கு தனது இல்லத்தில் மாலையிட்டு வரவேற்புக் கொடுத்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
6) பாஜக சட்டமன்ற உறுப்பினரையே செருப்பாலடித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்:
இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தில் சந்த் கபீர் நகரில் நடந்த மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. அதில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் திரிபாதி, சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டதில் தனது பெயர் ஏன் இடம்பெறவில்லை அங்கிருந்த கட்டுமானப் பொறியாளர்களிடம் கேள்வியெழுப்பினார்.
அப்போது அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் பாகேல், நான்தான் அடிக்கல் நாட்டினேன், என்னிடம் கேளுங்கள் என்று இடைமறித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காரசார விவாதத்தினிடையே திரிபாதி தனது காலணியைக் கழற்றி பாகேலை சரமாரியாகத் தாக்கினார். பதிலுக்கு தனது செருப்பையெடுத்து பாகேல் திரிபாதியின் கன்னங்களைப் பதம்பார்த்தார். இவையனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மோடி ‘சௌகிதார்’ பெயர் மாற்ற அழைத்தபோது முதல் ஆளாக மாற்றிக்கொண்டவர் இந்த “சௌகிதார் சரத் திரிபாதி” தான்
2014லிருந்து மட்டும் பாஜகவின் நேரடிப் பார்வையின் கீழ் நடக்கும் மதவெறி மற்றும் சாதி வெறிச் சம்பவங்கள் 140. அவற்றுள் 41 கொலைச் சம்பவங்கள். மதவெறிச்செயல்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளின்மீது கட்டவிழ்கப்படும் வெறிச்செயல்களும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசு குற்றங்களுக்கெதிராக உடனடியாகவும் நம்பகத்தன்மையோடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியிருக்கிறது. இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய ‘சௌகிதார்கள்’ குற்றவாளிகளை ஆதரித்தும் அரவணைத்தும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
(Source: https://thewire.in/rights/in-illustrations-five-times-our-chowkidars-could-not-prevent-hate-crimes)
The Wire இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை தமிழில்-இந்திர குமார்