மிகுந்த எதிர்பார்பிற்கு மத்தியில் நடந்த விம்பிள்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தனது கள எதிரி நடாலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரோஜர் பெடரர்.

இதற்கு முன்னர் 2006, 2007, 2008ஆம் ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் பெடரரும் நடாலும் நேருக்கு நேர் எதிர்கொண்டுள்ளனர். இவற்றுள் 2007ஆம் ஆண்டு நடந்த போட்டி, 1980ம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க போர்க் – மெக்கென்ரோ இடையிலான விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. அடுத்து இவர்கள் மோதிய 2008ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் இறுதி ஆட்டம் விம்பிள்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட நேரம் நடைபெற்ற இறுதிப்போட்டி ஆகும்; 4 மணிநேரம் 48 நிமிடங்கள் நீடித்த அப்போட்டியில் வெற்றிபெற்ற முதன்முறையாக நடால் விம்பிள்டன் தொடரைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே பல்வேறு க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஏ.டி.பி சுற்றுப்பயணங்களிலும் நேருக்குநேர் இருவரும் எதிர்கொண்டிருந்தாலும் பெடரரின் சாதனைக் களமான விம்பிள்டன் தொடரில் அரையிறுதிப்போட்டியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மோதிக்கொள்வது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

நேற்று நடைபெற்ற அட்டத்தில் வென்றதன் மூலம் 12வது முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுகிறார். இறுதிப்போட்டியில் நோவா ஜோகோவிச்சை எதிர்கொள்ளும் பெடரர் தனது 9வது விம்பிள்டன் தொடர் வெற்றியை எதிர்நோக்கியிறுக்கிறார்