உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆளும் பாஜக அரசு கூறி வருகிறது. மேலும் தேசம் தங்கள் கைகளில் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகப் பிரதமர் மோடி உறுதியளிக்கிறார். ஆனால் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது!
இந்த மாத ஆரம்பத்தில் வந்த அரசின் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் கடந்த மூன்று காலாண்டுகளாக பொருளாதாரம் மந்தமாகிவிட்டது என்று தெரிவிக்கின்றன. பல மாதங்களாக மறுத்து வந்த அரசு இறுதியில் நாட்டில் வேலையின்மை நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளதாக ஒப்புக்கொண்டது. கடந்த வருடம் வரை பிரதமர் மோடியின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்த அர்விந்த் சுப்ரமணியன் நன்கு மதிக்கப்படும் பொருளாதார நிபுணர் ஆவார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், அரசு கூறும் எழு சதவீத வளர்ச்சி விகிதம் தவறு என்று சொன்னார். உண்மையில் அது 4.5 % வேகத்தில் தான் உள்ளது என்றார்.
அரசு சொல்வது போல இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றால் ஏன் பெரும்பாலான குறியீடுகள் பொருளாதாரம் வீழ்வதைக் குறிப்பிடுகின்றன. கடன் வளர்ச்சி, வாகனங்கள் வாங்குதல், ஏற்றுமதி அல்லது முதலீடு போன்றவற்றில் தேக்கங்களைப் பார்க்கும்பொழுது இந்தியப் பொருளாதாரம் வளர்கின்றது எனும் அரசின் கூற்றை நம்ப முடியவில்லை.
கடந்த காலத்தில் அரசாங்கம் இந்த சிக்கலை தீவிரமாக எடுத்துக் கொண்டது – மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு பற்றியும், பொருளாதாரம் பற்றிய தரவு வெளியிடுவதைப் பற்றி கவலை தெரிவித்தது.
இப்போது வரை அரசு வேலையின்மை பற்றிய தகவலை மறுக்கிறது. சில புள்ளிவிவர நிபுணர்கள் அரசியல்வாதிகள் உண்மையை மறைக்கின்றனர் என்று பதவி விலகினார்கள். அதிகாரத்திற்கு ஆதரவான சில அரசு அதிகாரிகள் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதால் வேலையின்மை தரவு நம்பகமானதாக இருக்க முடியாது என்றனர்.
ஆனால் அரசு தனது நம்பகத்தன்மை வீழ்வதை உணரவேண்டும். மூத்த அதிகாரிகள் கூட இந்த தகவல்களை நம்ப மறுக்கின்றனர். விரைவில் மற்றவர்களும் நம்ப மறுப்பார்கள். இது அதிகார மையத்திலிருப்போருக்கு பெரும் அவமானத்தையே தரும். ஏனெனில் அவர்கள் தங்கள் சாதனைகள் எனச் சொல்லிக்கொள்பவை இவை. எந்த அரசியல் நெருக்கடி வந்தாலும் இந்த விவகாரத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
பின்னர் பொருளாதாரம் பற்றிய தவிர்க்க முடியாத கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டியிருக்கும். அது உண்மையில் 5 சதவீதத்திற்குக் குறைவாகவே உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 15 நாட்கள் ஆகி விட்ட நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு அரசின் பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்று இதுவரை தெரியவில்லை.
நாட்டிலுள்ள ஒவ்வொரு பொருளாதார நிபுணருக்கும் தெரியும் இந்தியாவின் பொருளாதாரத்தில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தம் பல ஆண்டுகளாகவே தேவை என்று. அவற்றில் சில, நிலம் மற்றும் உழைப்பாளர்களுக்கான சந்தை சுமூகமாக இல்லை. நிறுவனங்களுக்கு போதுமான சுதந்திரம் இல்லை, நீதிமன்றங்கள் இதை முறைப்படுத்துவதில் மெத்தனமாக இருக்கின்றன. நாட்டின் நிதி அமைப்பு அதன் வங்கிகளை நம்பி இருக்கிறது போன்றவையாகும்.
இத்தகைய பெரும் சிக்கல்கள் மிக விரைவாகவும், ஓட்டு மொத்தமாகவும் தீர்க்கப்படவேண்டும். 1990 இல் இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் கொண்டு வந்தபோது, இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டன. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசுகள் அரசியல் நெருக்கடிகளுக்கு அஞ்சி இப்பிரச்சனைகளை ஒதுக்கி வைத்தன. ஆனால் தற்போது மோடிக்கு இருக்கும் தனிப்பெரும்பான்மையோ அரசியல் அதிகாரமோ யாருக்கும் சமீபத்தில் கிடைத்ததில்லை ஆகவே இதைச் சரி செய்யாமலிருக்க அவர்கள் எந்த காரணத்தையும் கூற இயலாது.
இந்தியா மிக நெருக்கடியான நேரத்தில்தான் மிளிரும் என்று ஒரு பிரபலமான கூற்று உண்டு. அது உண்மையென்றால் நாம் இப்போது அதைவிட மோசமான நிலைமையில் தான் இருக்கிறோம். நம்முடைய வளர்ச்சி 4.5 % தான் என்பது உண்மையெனில் 1990க்கு பிறகு எந்தவித கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றே பொருள்.
அரசு உண்மைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. வளர்ச்சியைப் பற்றி அதன் கூற்று என்னவாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் தங்களுக்குச் சாதகமான முடிவுகளே எடுப்பார்கள். நாட்டின் பொருளாதாரம் பற்றிய நம்பிக்கை தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. இதே போல இன்னும் சில காலாண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்தால் மக்கள் முற்றிலும் நம்பிக்கையை இழப்பார்கள். தான் உருவாக்கின போலி பிம்பம் உடைந்து நொறுங்குவதற்கு முன் அரசு இப்போதே உண்மையை உணரவேண்டும்.