முதல்முறையாக பெண்கள் மட்டுமே பயணிக்கும் விண்வெளி பயணம் வரும் மார்ச் 29 ம் தேதி நடைபெறப் போவதாக நாசா அறிவித்திருக்கிறது.

முதன்முதலில் 1968 ஆம் ஆண்டு சோவியத்தை சேர்ந்த “வேளன்டினா டெரிஷ்கொவா” என்பவர் தான் முதல்முறையாக விண்வெளியில் பயணம் செய்த முதல் விண்வெளி வீராங்கனை ஆவார். அதனையடுத்து 1978 ஆம் ஆண்டு முதல் நாசா பெண் விண்வெளி வீராங்கனைகளைத் தேர்வு செய்து வருகிறது, அதற்கடுத்து ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு “சல்லி ரைட்” எனும் பெண் சென்றார், அதற்கடுத்து நிறைய பெண்கள் சென்றாலும், ஏதேனும் ஒரு ஆண் இயக்கும் விண்கலத்திலேயே இதுவரை பெண்கள் பயணித்து வந்தனர்.

இந்நிலையில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் முதல் விண்வெளி பயணம் வரும் மார்ச் 29 ம் தேதி நடக்க உள்ளதாக நாசா நேற்று அறிவித்தது. இந்த பயணத்தை விண்கல இயக்குநர் “மேரி லாரன்ஸ்” விண்கல கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் “கிரிஸ்டன் ஃபாசியோல்” ஆகிய இருவரின் தலைமையின் கீழ், அமெரிக்க விண்வெளி வீராங்கனைகள்  “அன்னெ மெக்லைன்” மற்றும் “கிரிஸ்டினா கோச்” ஆகிய பெண்கள் குழுவினர் பயணப்படப் போவதாகவும், நாசா தெரிவித்தது.

மேலும் விண்வெளிக்குப் பெண்களை அனுப்பும் 60 ஆண்டுக்கால வரலாற்றில் முழுவதும் பெண்கள் மட்டுமே பயணிப்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு எனவும் தெரிவித்தனர். இது ஒரு திட்டமிடப்படாத எதேச்சையான நிகழ்வு எனவும், 2013ம் ஆண்டு 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பயிற்சியில் இருந்தாலும், இன்று இந்த நிகழ்வு நடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நாசா தெரிவித்தது. முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, மற்றும் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்குப் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.