புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ-மாணவிகளில் தங்கள் மதத்ததை குறிப்பிட விரும்பாதவர்களுக்காக மேற்கு வங்கத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்கள் ஆன்லைன் படிவங்களில் ‘மதம்’ என்று குறிப்பிடும் இடத்தில் ‘மதச்சார்பற்றோர்’, ‘யதார்த்தவாதி’ மற்றும் ‘மனிதநேயம்’ உள்ளிட்டவற்றை கல்லூரி நிர்வாகம் சேர்த்துள்ளது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கை கொண்ட நாடு இந்தியா. இங்கு மொழி, இனம், மதம், நிறம்,வாழிடச் சூழல் போன்ற பல பிரிவுகளால் நாம் பிரிந்துள்ளோம். முக்கியமாக பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை ஒவ்வொரு இடத்திலும் நாம் மதத்தை குறிப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருந்து வருகின்றது. சிலர் கடவுளின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர் என்ற அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இப்படி வாழ்க்கையில் ஒவ்வொருக் கட்டத்திலும் மதம் என்ற சொல் நம்முடம் பயணித்து வருகின்றது. மதச்சார்பற்றோராக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை போன்ற இடங்களில் எந்த சான்றிதழ்களை நிரப்பும்பொழுது ஒருவர் இந்துவா? கிறித்துவா? இஸ்லாமியரா? இல்லை வேறு மதத்தினரா? என்று குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இந்தாண்டு பன்னிராண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள், கல்லூரியின் ஆன்லைன் படிவங்களில் ‘மதம்’ என்று குறிப்பிடும் இடத்தில் ‘மதத்தின்மேல் நம்பிக்கை இல்லை’, ‘மதத்தைக் கூற விருப்பமில்லை’ என்று நிரப்பியுள்ளனர். இதனை கண்ட 50 மேற்பட்டக் கல்லூரி நிர்வாகங்கள், தங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் ‘மதச்சார்பற்றோர்’, ‘யதார்த்தவாதி’ மற்றும் ‘மனிதநேயம்’ உள்ளிட்டவற்றை சேர்த்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சகாரிகா சென் என்ற மாணவி,”இது மிகவும் ஒரு முற்போக்கான முடிவாகும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடாக நான் கருதுகிறேன். பிறப்பில் நான் இந்துவாக இருந்தாலும், நான் என் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை” என்றார். மேலும், நூற்றாண்டு பழமையான பெதுன் கல்லூரி சேர்க்கைக் குழுவில் பணிப்புரிபவர் கூறும்பொழுது,”விண்ணப்பித்த அநேக மாணவர்களும் மதத்தின்மேல் விருப்பமில்லை என்று தெரிவித்ததால் கல்லூரி நிர்வாகம் இந்த முடிவை எடுத்தது” என விளக்கமளித்தார்.