மனவெளி திறந்து-16 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்





கேள்வி: வணக்கம் டாக்டர் நான் சில ஆண்டுகளாக எனது மனநோய் பிரச்சினைக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகிறேன். இப்போது எனக்கு எதுவும் தொந்தரவு இல்லை. இன்னும் எவ்வளவு காலம் நான் எனது மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? நீண்டகாலமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

டங்க்ஸ்டன் பிரபு, செங்கல்பட்டு

பதில்: வணக்கம். ஒரு காலகட்டத்தில்மனநோய்கள் என்றாலே குணப்படுத்த முடியாதவை’ என்ற நிலைதான் இருந்தது. அப்போதெல்லாம் மனநோயாளிகளை பொதுசமூகத்திலிருந்து பிரித்து அவர்களைத் தனிமைப்படுத்தி அதன்வழியாக அவர்களினால் பொதுசமூகத்திற்கு ஆபத்து வந்துவிடாமல் காப்பதே நடைமுறையாக இருந்தது. ஒருவரின் நடவடிக்கைகளில் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கும் பட்சத்தில் அவர் மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டார். அப்போது மனநல காப்பகம் என்பது மனநோயாளிகளைக் காப்பதற்காக தொடங்கியது அல்ல மன நோயாளிகளிடமிருந்து பொதுசமூகத்தை காப்பதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் மனநல மருத்துவத்துறையில் நடந்த ஏராளமான அறிவியல் வளர்ச்சிகளின் விளைவாகத்தான் இந்த நடைமுறை மாறியிருக்கிறது. மனநோய் தொடர்பாக பொது சமூகம் கொண்டிருந்த பிம்பமும் இதன்வழியாக மாறத் தொடங்கியது. மூளை மற்றும் நரம்பியல் துறையில் ஏற்பட்ட சில நுட்பமான அறிவியல் வளர்ச்சிகளின் விளைவாக மனம் பற்றிய பல புதிய புரிதல்கள் மருத்துவத்தில் ஏற்பட்டன. ‘மனநோய்கள் குணப்படுத்தக்கூடியவையேஎன்ற புரிதல் அதில் முக்கியமானது.

மனநோய்கள் உடலில் ஏற்படும் சில உயிரியல் சமநிலையின்மையால் வருவதுஎன்பது சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய காலங்களில் சொன்னதுபோல மனநோயாளிகள் சபிக்கப்பட்டவர்கள், சாபம் விடப்பட்டவர்கள், முந்தைய பிறவியில் குற்றமிழைத்தவர்கள், பெற்றோர்களால் சரியாக வளர்க்கப்படாதவர்கள் போன்ற கருத்தாக்கங்கள் பொய் என அறிவியலால் நிரூபிக்கப்பட்டன. உடலில் வரும் ஆரோக்கிய குறைபாடுகளையும், நோய்களையும் போலவே மனதிலும் ஆரோக்கிய குறைபாடுகளும் நோய்களும் வரலாம் என்ற புரிதலுக்கு மனநல மருத்துவம் இன்று நகர்ந்து வந்திருக்கிறது. ‘ஏன் மனநோய்கள் வருகின்றன?’ என்ற கேள்விக்கான பதில் உயிரியல் பிரச்சினைகளே மனநோய்களை தோற்றுவிக்கின்றன என்பதாக மாறி இருக்கிறது. மன நோய்களுக்கு காரணமான உயிரியல் பிரச்சனைகளை சரிசெய்யும்போது மன நோய்களும் குணமாகிறது என்பதுதான் இன்று அறிவியல் சொல்லக்கூடிய செய்தி.

உடலில் வரும் நோய்களைப் போலவே மனதிலும் ஏராளமான நோய்கள் வரலாம். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு வைத்தியமுறைகள் உண்டு. சில பிரச்சினைகளுக்குக் குறுகிய காலம் வைத்தியம் போதுமானது; சில பிரச்சனைகளுக்கு நீண்ட கால வைத்தியம் தேவையானது. எந்தவிதமான மன நோய் என்பதைப் பொருத்தே அதற்கான வைத்திய தன்மைகளும், கால அளவும் மாறுபடும்; உதாரணத்துடன் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வைத்தியம் செய்யப்பட வேண்டும்; ஒரு சாதாரண காய்ச்சலுக்கு நான்கைந்து நாள் வைத்தியம் போதுமானது. அதேபோலவே, சாதாரணமான மனநோய்கள் எளிதில் குணப்படுத்தக்கூடியவை, குறுகிய கால வைத்தியம் போதுமானது.  அதுவே தீவிரமான மனநோய்களுக்கு நீண்டகால வைத்தியம் அவசியமானது. உங்களுக்கு என்னவிதமான மன நோய் என்பதை பொறுத்தே அதற்கான கால அளவையும் நாம் முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவது பக்கவிளைவுகளைப் பற்றிய உங்களது கேள்வி. எந்த வைத்திய முறைகளாக இருந்தாலும் அந்த வைத்திய முறைகள் தேவையான விளைவுகளை மட்டும் ஏற்படுத்தாமல் சில பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். காய்ச்சலுக்கு என்று ஒரு மாத்திரை எடுத்தால் அது வயிறு எரிச்சல் என்னும் பக்கவிளைவை ஏற்படுத்தலாம், வயிறு எரிச்சல் வருமே என்பதற்காக காய்ச்சலுடன் நாம் நீண்ட காலம் படுத்துகிடக்க முடியாது. எதை நாம் சரி செய்ய வேண்டும் என்றால் எது நம்மை துயரப்படுத்துகிறதோ, எது நம்மைப் பாதிக்கிறதோ அதை சரி செய்ய வேண்டும். அதை சரி செய்தபிறகு பக்கவிளைவுகளை சரி செய்து கொள்ளலாம். நீண்ட காலங்களாக சொல்லிக் கொண்டிருப்பதுபோலமனநோய்க்கான வைத்திய முறைகள் தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்’, ‘தூங்க வைக்கும்என்பது உண்மையல்ல. இன்றைய காலகட்டத்தில் மிக எளிமையான மிக சாதாரணமான வைத்திய முறைகள் வந்துவிட்டன; அதனால் பக்க விளைவுகள் பற்றி நாம் அவ்வளவாக கவலைப்பட தேவையில்லை.

மனரீதியான பிரச்சனைகள் நமது வாழ்க்கையின் தரத்தைப் பாதிக்கும், ஒரு சாதாரண பக்கவிளைவுகள் வந்துவிடும் என அச்சப்பட்டு தரம் இல்லாத ஒரு வாழ்க்கையை, அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்வது அபத்தம். அதனால் எந்த மனநோய்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டியது அவசியம். பக்கவிளைவுகள் என்பது பக்கவிளைவுகள்தான் அதை சரி செய்துகொள்ளலாம்.

அதேபோல மன நோய்க்கான வைத்தியத்தில் நாம் செய்யக்கூடிய இன்னொரு தவறும் இருக்கிறது. மனநல பிரச்சினைகளுக்கான வைத்தியத்தை தொடங்கியவுடன் நமது மனநல பிரச்சனைகள் குறையத் தொடங்கும், அப்படி குறையும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு பிரச்சனைகள் குறைந்துவிட்டது என நினைத்துக்கொண்டு மாத்திரைகளை உடனடியாக நிறுத்தவிடுவதுதான். எந்த ஒரு மனநல பிரச்சனையையும் முழுமையாக வைத்தியம் செய்து குணப்படுத்த வேண்டும்; இப்படி பாதியிலேயே நிறுத்திவிட்டால் அந்தப் பிரச்சினைகள் நீண்ட காலம் தொடரக்கூடிய ஆபத்து இருக்கிறது. மாத்திரைகளை நிறுத்துவது என்பதை உங்கள் மருத்துவரிடம் விட்டுவிடுங்கள். மாத்திரைகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு வாழ்க்கையைத் தரமானதாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தரமான வாழ்க்கையை நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் உங்களுக்கு மீட்டுக் கொடுக்கும்.

முந்தையை கேள்வி -பதில்:https://bit.ly/2MfW7by

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
டாக்டர். சிவபாலன் இளங்கோவன், மனநோய் பிரச்சினை, தொந்தரவு