டியர் டாக்டர், ‘நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி’ என்றால் என்ன? அந்த பர்சனாலிட்டியை கொண்டவர்களிடம் நாம் இணைத்து வாழ முடியுமா? அவர்களோடு இருப்பது நம்மை எந்தவகையிலாவது பாதிக்குமா?

சுபா, சென்னை

பதில்: பர்சனாலிட்டி என்றால் தமிழில் ‘ஆளுமை’ என சொல்லலாம். நம் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஆளுமை இருக்கும். அதாவது நமக்கிருக்கும் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை. நமது எண்ணங்கள், சிந்தனைகள், மதிப்பீடுகள், பழகும்முறைகள், விருப்பங்கள், வெறுப்புகள், அணுகுமுறைகள் என அத்தனையிலும் நமது ஆளுமை பண்புகளே வெளிப்படும். உதாரணத்திற்கு ஒரே சூழ்நிலையை எதிர்கொள்ளும் எல்லோரும் ஒன்றுபோல அதை எதிர்கொள்வதில்லை. ஒரு தோல்வி நேருகிறது. எதிர்பாராத தோல்வி என வைத்துகொள்வோம். அதை எதிர்கொள்வதில் நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. சிலர் அந்த தோல்வியிலேயே துவண்டுவிடுவார்கள், சிலர் அதிலிருந்து பாடங்களைக் கற்றுத் தங்களைப் பக்குவப்படுத்திக்கொள்வார்கள், அதையே பெருமிதமாகவும் சிலர் சொல்லிக்கொள்வதுண்டு. இந்த வேறுபாட்டிற்கு காரணம் நமது ஆளுமையே. நமது அனுபவங்கள், கற்றல் போன்றவைதான் நம்மை பக்குவப்படுத்துகிறது என்று சிலர் சொல்வார்கள் அது உண்மையில்லை. ஒரு நிகழ்வை நீங்கள் கடக்கும்போது அதிலிருந்து எந்த அனுபவத்தை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. அதை உங்கள் ஆளுமைதான் தீர்மானிக்கிறது. ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம். அதில் நாம் விரும்பும் அணி தோற்றுவிடுகிறது அந்த இழப்பை மட்டுமே அனுபவமாக கொல்வதற்கும், தோல்வியை அத்தனை இயல்பாக எடுத்துக்கொண்ட அந்த அணியினரின் பக்குவத்தை ஒரு அனுபவமாக எடுத்து கொள்வதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது. நாம் யாராக இருக்கிறோமோ அவராகவே சிந்திப்போம், அவராகவே இந்த உலகத்தினரோடு உரையாடுவோம். நாம் என்பது நமது ஆளுமையே. ஆளுமை பண்புகள் என்பது நமது மரபணுவில் உள்ளன. அதனால் நாம் யார் என்பதை நமது மரபணுக்களே தீர்மானிக்கின்றன.

நமது ஆளுமையின் பண்புகள் நம்மையோ அல்லது நம்மை சார்ந்தவர்களையோ தொடர்ச்சியாக காயப்படுத்தினால் அதுவே ஆளுமை குறைபாடு (Personality Disorder). உதாரணத்திற்கு எதையும் முழுமையாக, திருப்தியாக செய்ய வேண்டும் என்பது எனது பண்பாக இருக்கலாம். அதனால், நான் அத்தனை வேலைகளையும் கச்சிதமாக, நேர்த்தியாகச் செய்கிறேன் என்பது அந்தப் பண்பின் விளைவு, அது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது, என்னை இன்னும் மேம்படுத்துகிறது என்பதுவரை பிரச்சினையில்லை. அதுவே முழுமையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக நாள் முழுவதும் ஒரே வேலையை திரும்பத்திரும்ப செய்துகொண்டிருந்தால் என்னவாகும்? வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக திரும்ப திரும்ப வீட்டில் உள்ளவர்களை எல்லாம் கால்களைக் கழுவுங்கள் என சொல்லிக்கொண்டேயிருந்தால் என்னவாகும்? அதுதான் ஆளுமையின் குறைபாடு. நார்சிசம் என்பது ஒருவகையான சுய மோகம். நார்சிசத்தின் ஏதேனும் சில பண்புகள் நம் எல்லோரிடமும் இருக்கும். முகநூலில் நமது பதிவிற்கு எத்தனை விருப்பக்குறிகள் வந்திருக்கின்றன என திரும்பத்திரும்ப பார்ப்பது ஒரு நார்சிச பண்பே. எத்தனை விதமான பண்புகள் ஒருவரிடம் இருந்தாலும் அந்தப் பண்புகளை நமக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமானதாக மாற்றிக்கொள்வதே முதன்மையான, பிரதானமான பண்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நார்சிசம் என்னும் பண்பு முதன்மையாக மாறிப்போய் அதன் நிமித்தம் மற்றவர்களின்மீது எந்தவித மதிப்புகளும் இல்லாமல் தன்னைப் பற்றியே எப்போது சிந்தித்து, தன்னைப் பற்றியே எப்போதும் சிலாகித்துக்கொண்டு, ஒரு பரஸ்பர புரிதல்களும், அங்கீகாரங்களும் இல்லாமல் சுய மோகத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தால் அதுதான் நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி.

எனது கல்லூரியில் எனக்கு நண்பன் ஒருவனிருந்தான் மிக திறமையாக கூடைப்பந்து விளையாடுவான். ஒவ்வொருமுறை அவன் சிறப்பாக விளையாடிவிட்டு வரும்போதும் அவனைப் பாராட்டுவதற்கு நாங்கள் தயாராக இருப்போம். ஆனால் அதைகூட எங்களைச் செய்யவிடாமல் மணிக்கணக்காய் அவனே அவனை பாராட்டிக்கொள்வான், அவனது திறமையெல்லாம் மறந்துபோய் அவன்மீது எங்களுக்கு வெறுப்பு வரும் அளவிற்கு அவனைப் புகழ்ந்துகொள்வான். அதுதான் நார்சிசம். புகழ்ச்சி மட்டுமல்ல அவர்கள் மீதான சிறு விமர்சனத்தைகூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்களுக்கு இந்த தற்புகழ்ச்சி இருக்கும். அது ஒரு திகட்டாத போதையாக இருக்கும். அதனால் மற்றவர்களோடு ஒரு இணக்கமானப் பிணைப்பை அவர்களால் எப்போதும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. அவர்களின் பலவீனங்களை யாரேனும் சுட்டிக்காட்டிவிட்டால் அவர்களின்மீது வெறுப்பையும், வன்மத்தையும் எந்த இரக்கமும் இல்லாமல் காட்டுவார்கள். பொதுவாகவே நார்சிஸ்டுகள் தங்களை பாராட்டும் நபர்களையே தங்களைச் சுற்றி வைத்துகொள்வார்கள். ஏதேனும் சில சாதகங்களுக்காக பாராட்டுபவர்களும் அவர்கள் உடன் இருப்பார்கள். அந்த சாதகங்களுக்காகவே அவர்கள் நம்மை பாராட்டுகிறார்கள் என்பதைகூட உணராதவகையில்தான் நார்சிஸ்டுகள் இருப்பார்கள். நார்சிஸ்டுகளுடன் இணக்கமாக வாழ்வதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் இருக்கிறது அவர்களை சகித்துக்கொள்ளும் பொறுமை நமக்கு இருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து இந்தவித ஆழமான பிணைப்பையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் அவர்களை நம்மால் சகித்துக்கொள்ள முடியுமென்றால் நாம் அவர்களோடு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

முந்தைய கேள்வி -பதில்: https://bit.ly/2Q4y1Pf

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com