மனவெளி திறந்து-8 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்

கேள்வி: நான் சில நேரங்களில் பணம், செல்போன், ஏடிஎம் கார்டு, வீட்டு சாவி போன்ற பொருள்களை வேறு ஏதாவது சிந்தனையில் இருக்கும்போது தொலைத்துள்ளேன் இதை எவ்வாறு தவிர்ப்பது?

கார்த்திகேயன், சென்னை

பதில்: சில நேரங்களில் நம் எல்லாருக்கும்கூட இதுபோன்று நிகழ்வதுண்டு. “வர வர நிறைய நிறைய மறதிகள் இருக்கு” என்று நாமே கூட நினைபதுண்டு. ஆனால் இது மறதி அல்ல ‘கவனக் குறைபாடு’. நாம் ஒரு செயல் செய்யும்போது நம் முழு கவனமும் செய்யும் அந்தச் செயலில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது நம் மூளையில் ஒரு நினைவாக தங்கும். இப்படி சேகரிக்கப்பட்ட நினைவுகளைத்தான் நாம் தேவையான போது வெளிக்கொணர முடியும். உதாரணத்திற்கு புதிதாக நாம் ஒருவரைப் பார்க்கிறோம் என்றால் உடனடியாக நாம் அவரது நினைவுகளைச் சேகரிக்க மாட்டோம். பார்க்கும் அனைவரையும் நாம் நமது நினைவடுக்குகளில் சேகரிப்பது கிடையாது. இதுவே ஏதோ ஒருவகையில் அந்த மனிதர் நமது கவனத்தை கவர்ந்தால் அவரின் நினைவு நமக்குள் சேமிக்கப்படும். ஒரு நினைவு மூளையில் சேகரிக்கப்படவேண்டுமென்றால் நமது கவனம் அத்தியாவசியமான ஒன்று. சேமிக்கப்பட்ட நினைவுகளை வெளிக்கொணர முடியவில்லை என்றால்தான் அது மறதி. ஒரு தகவல் அல்லது ஒரு செயல் மூளையில் சேமிக்கப்படவே இல்லை என்றால் அது கவனக்குறைபாடு.

ஏன் கவனக்குறைபாடு வருகிறது என்றால் இரண்டு வகையான காரணங்களினால் வருகிறது. ஒன்று ஒரு செயலை செய்யும்போது வேறு சிந்தனைகளில் நமது மனம் இருக்கும்போது அந்தச் செயலில் நமது கவனம் இருக்காது மற்றொன்று அந்தச் செயல் நமக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லையென்றால் அல்லது அதில் நமக்கு அந்தளவிற்கு ஈடுபாடு இல்லையென்றால் அதன்மேல் கவனமும் இருக்காது.

இந்தக் கவனக்குறைபாடு என்பது எல்லாருக்கும் சில நேரங்களில் வருவதுண்டு. சில நேரங்களில், சில செயல்களில் அப்படி கவனக்குறைபாடு வருவது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் செய்யும் எல்லாச் செயல்களிலும் கவனம் இருப்பதில்லை. எந்தச் செயலை செய்தாலும் அதில் ஈடுபாடு வருவதில்லை. எப்போதும் ஏதோ தேவையற்ற சிந்தனைகளிலேயே இருப்பது அதன் விளைவாக எதிலும் கவனமற்று இருப்பதுதான் பிரச்சினை. இப்படி இருந்தால் நாம் முதலில் கவனக்குறைபாடு நமக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வதின் வழியாகவே அதில் இருந்து மீள்வது குறித்து யோசிக்க முடியும். அல்லது அதற்கு ஏற்றார்போல திட்டமிட முடியும். உதாரணத்திற்கு காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போது நான் சிலவற்றை மறந்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்பதை உணர்ந்தால் அதற்கு ஏற்றவாறு திட்டமிடலாம், எந்தெந்தப் பொருட்களை மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஒரு அட்டவணையைத் தயாரிக்கலாம், அதை நாம் வீட்டில் இருந்து வெளியேறும் இடத்தில் ஒட்டிவைக்கலாம். இப்படி நமது பலவீனங்களுக்கு ஏற்றவாறு நமது அன்றாடங்களை திட்டமிடுவதின் வழியாகத்தான் நாம் அந்தப் பலவீனங்களைக் கடந்துவர முடியும். இந்தக் கேள்வியில் நீங்க சொல்வது அன்றாடம் நீங்கள் செய்ய கூடிய செயல்களில் உள்ள கவனக்குறைபாடு. அதற்கும் மேல்சொன்னதுபோல திட்டமிட வேண்டும். இந்தப் பொருட்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்து எடுப்பதன் வழியாக அதாவது இவைகளுக்கென்று பொதுவான இடத்தை ஏற்படுத்தி அந்த இடத்தைதவிர வேறு எங்கும் இந்த பொருட்களை வைக்ககூடாது என்று திட்டமிடுவதின் வழியாக இந்தச் செயல்களின்மீதான கவனக்குறைவில் இருந்து நாம் வெளியேறலாம்.

முந்தையை கேள்வி -பதில்: https://bit.ly/2JHyhm7

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
மறதி, சிந்தனை குறைபாடு, டாக்டர்.சிவபாலன் இளங்கோவன், கவனக்குறைபாடு