கடந்த மாதம் மொபைல் ஃபோன் உலகம் பெரும் அதிர்வைச் சந்தித்தது. அமெரிக்க அரசின் உத்தரவின்படி  கூகிள் தனது ஆண்டிராய்டு மென்பொருளை ஹுவாவே நிறுவனம் பயன்படுத்தத் தடை விதித்தது. உலகின் இரண்டாவது பெரிய மொபைல் நிறுவனமான ஹுவாவேவுக்கு இது பலத்த அடியாகும். இது அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகப் போரின் விளைவாகும்.

ஹுவாவே ஃபோன்கள் மூலம் சீனா உளவு பார்ப்பதாக ஏற்கனவே அமெரிக்காவில் ஹுவாவே ஃபோன்களுக்கு தடை இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் எந்த ஒரு அமெரிக்கத் தயாரிப்பையும் பயன்படுத்தக் கூடாது எனக் கடந்த மாதம் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

அதன்படி பல அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாவேவுடனான தங்கள் உறவை முறித்துக் கொண்டன, இதனால் தனித்து விடப்பட்ட ஹுவாவே பல அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறது. அதில் முதன்மையானது ஆண்டிராய்டுக்கு மாற்று மென்பொருளை பயன்படுத்துதல்.

தற்போது கிடைக்கும் தகவல்களின்படி ஹுவாவே செல்ஃபிஷ் எனும் ஆபரேட்டிங் சிஸ்டத்தை தனது ஃபோன்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதுவும் ஆண்டிராய்ட் போலவே லினக்ஸை அடிப்படையாகக் கொண்டது.

ஹுவாவே ஹாங்க்மெங்க் எனத் தனது சொந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதாகச் செய்திகள் வந்தபோதும் அது தற்போது செல்ஃபிஷ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை சோதனை செய்வதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்த ஹாங்க்மெங்க் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்டிராய்டை விட 60% வேகமானதாக இருக்கும் என  ஹுவாவேயின் ஸ்மார்ட்போன் பிரிவு தலைவர் ரிச்சர்ட் யூ தெரிவித்தார். இந்த கூற்று உண்மையா  இன்னும் யாரும் இதை பரிசோதித்து பார்க்கவில்லை. இதைப் பற்றிய தகவல்களை  ஹுவாவே மிக ரகசியமாக வைத்துள்ளது.

இதில் சுவாரஸ்யமான திருப்பமாக ஹுவாவே தனது நாட்டைச் சேர்ந்த மற்ற நிறுவனங்களான ஒப்போ, விவோ மற்றும் சியோமி போன்ற மொபைல் நிறுவனங்களும் டென்செண்ட் எனப்படும் கூகிள் போன்ற சேவைகள் தரும் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனத்தையும்  ஹாங்க்மெங்க் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பரிசோதிக்க அழைப்பு விடுத்ததின் பேரில் அந்நிறுவனங்கள் தற்போது சோதனைகளில் பங்குகொண்டுள்ளன.  சீனாவை சேர்ந்த எல்லா நிறுவனங்களும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு ஆதரவு அளிக்கப் போவதாக “தி குளோபல் டைம்ஸ்” பத்திரிக்கை தெரிவிக்கிறது. இது உண்மையென்றால் அமெரிக்காவிற்கு இது பெரும் அடியாகும். ஏனெனில் இன்று சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களே உலகெங்கும் மொபைல் ஃபோன்கள் விற்பனையில் வேகமான முன்னேறி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்து வருகிறார். அவருடைய இந்த முடிவைக் கூகிள், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற பெரும் அமெரிக்க நிறுவனங்கள் கூட விரும்பவில்லை, இந்த யுத்தத்தால் அமெரிக்காவிற்குத்தான் நீண்ட காலத்தில் இழப்பு அதிகம் என அவர்கள் தங்கள் அரசைச் சமாதான பேச்சுவார்த்தைக்கு நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.