கர்நாடகாவில் பிஜேபி சார்பில் பெங்களூரு தெற்கு வேட்பாளரா அறிவிக்கப்பட்டவர், தேஜஸ்வி சூர்யா. இவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இவர்  அடுத்த எம்.ஜே அக்பராக உருவாகுகிறாரா? என்றும் கர்நாடகா காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூர் தெற்கு தொகுதி, பாஜக வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் தேஜஸ்வி சூர்யா அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆறு முறை தொடர்ந்து பெங்களூர் தெற்கு தொகுதி எம்பியாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து அவர் மனைவி தேஜஸ்வினிக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளைஞரான தேஜஸ்வி சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தேஜஸ்வினி அனந்தகுமாரின் பாஜக ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்நிலையில், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில்,  சோம் தத்தா என்ற பெண் தேஜஸ்வி சூர்யாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

“சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக நான் அவரால் கஷ்டப்பட்டுள்ளேன். நான் அவரால் பாதிப்படைந்த பெண். ஆனால், இந்த வரிசையில் நான் முதல் பெண் கிடையாது. இந்துக்கள் எல்லாருமே தர்மப்படிதான் வாழ்வார்கள் என சொல்லிவிட முடியாது. அதனால், உண்மை தெரியாமல், தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். பெண்களை இழிவாக நினைப்பவரை நம்மை ஆள்வதற்கு அனுமதிப்பீர்களா?” என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதை ட்விட்டரில் பதிவு செய்த கர்நாடகா காங்கிரஸ் கட்சி, “தேஸஜ்வி சூர்யா இன்னொரு எம்ஜே அக்பராக உருவாகுகிறாரா? என்று பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பாஜகவோ, தேஜஸ்வி சூர்யாவோ இதுவரை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் பாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.