மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளி வைக்கக் கோரி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரையில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் கே.கே.ரமேஷ்.

இந்நிலையில், பணப்பட்டுவாடாவால் தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதால் மதுரையில் தேர்தலை ரத்து செய்யக்கோரி ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “சமீபத்தில் மதுரையில் அதிமுகவினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு உணவு, ஸ்ட்வீட் பாக்ஸ் தவிர ரூ.500 பணம் வழங்கப்பட்டது. தேர்தலுக்காக செய்யப்படும் செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் போலியாக சமர்ப்பிக்கின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தல் நேர்மையாக நடக்காது. எனவே மதுரையில்  மக்களவை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே, மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், தேர்தலை தள்ளிவைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.