தில்லி தப்லீகி ஜமாத் கூட்டத்தின் பொறுப்பின்மையை திட்டிக்கொண்டிருந்த அதே நேரத்தில், இந்தியாவில் கொரோனா பரவலுக்கு அதுவே காரணம் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என விவரமறிந்த பலரும் மன்றாடிக்கொண்டிருந்தார்கள். மையநீரோட்ட ஊடகங்கள் உள்ளிட்ட எவரும் அதை பொருட்படுத்தவே இல்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் சவாலுக்கு நடுவில், வகுப்புவாத துவேஷத்தைத் தூண்டுவதைத் தடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்தியா இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.

இரண்டு முறை கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் தனது ஊர்க்காரர்கள் தன்னை “கொரோனா பரப்புகிறவன்” என முத்திரை குத்துவதைத் தாங்க முடியாத முஸ்தஃபா என்ற இரண்டு குழந்தைகளின் தந்தை மார்ச் 31ஆம் தேதி கூட்ஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. மதுரை கப்பலூர் அருகே வசித்து வந்ததாகக் கூறப்படும் 32 வயது முஸ்தஃபா கேரளாவிலிருந்து திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர். தனது தங்கை வீட்டில் தங்கியிருந்த முஸ்தஃபாவினால் கொரோனா பரவும் என அந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்ததால் முதல் முறை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு திரும்பி வந்த அவரை ஒரு குப்பை லாரியில் அள்ளிச் சென்று மீண்டும் பரிசோதனை செய்ததிலும் கொரோனா இல்லை என தெரிய வந்தது. ஆனால் இந்தத் துன்புறுத்தலைத் தாங்க முடியாத அவர் தங்கை வீட்டருகே உள்ள ரயில் இருப்புப் பாதையில் 18 கிலோமீட்டர் நடந்தே சென்று ஒரு சரக்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

இது ஒரு நபர் சார்ந்தது அல்ல. கொரோனா அச்சுறுத்தல் என அவமானப்படுத்தியதால் இந்தியாவில் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஓர் ஊரில் பரிசோதனை செய்யச் சென்ற மருத்துவர்களை மக்கள் அடித்து விரட்டியிருக்கிறார்கள், கொரோனாவை பரப்பிவிடுவார்கள் என… விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் பீதி ஏற்படுத்துவதற்குமான இடைவெளியைக் காட்டுகிறது இந்த சம்பவங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் சாந்து பீதி ஏற்படுவது எப்படிப்பட்ட பின்விளைகள் ஏற்படுத்தும் என்பது அரசுக்கோ, ஊடகங்களுக்கோ தெரியாதது அல்ல. இதன் விளைவாக முஸ்லிம்களில் பலர் நோய் பரிசோதனைக்கு ஆளாகாமல் விரோதப் போக்கு கடைபிடிக்கும் தவறான நிலைபாட்டையும் பார்க்கிறோம். இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.

தப்லீகி ஜமாத் சர்வதேச அளவில் கூடிய கூட்டம், அதன் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அத்தகைய கொரோனோ மீறல்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும் நடக்கத்தான் செய்கிறது. ஆளும் பி.ஜே.பியினரே அதில் முன்னணியில் இருக்கிறார்கள். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தது பழைய செய்தி. உத்தரப் பிரதேசத்தின் வார்தா தொகுதி பி.ஜே.பி எம்.எல்.ஏ தாதாராவ் கேச்சே தனது “பிறந்த நாளைக் கொண்டாட” ஏழைகளுக்கு நிவாரண உதவி அறிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைப் பெற இரு நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதல் ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை மீறியதன் காரணமாக ஸ்காட்லாந்தின் முதன்மை மருத்துவ அதிகாரி கேத்தரின் கேட்டர்வூல்ட் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இந்த வாதங்கள் எவையும் ஒரு தரப்பு மக்களின் செயல்களை கண்மூடிக்கொண்டு ஆதரிக்கும் முயற்சி அல்ல. பிரிட்டனில் முஸ்லிம் சமூகத்தினர் கொரோனா அச்சுறுத்தலுக்கு அதிகம் இலக்காக நேரிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டில் இன்னும் கூட்டுக் குடும்பமாக அதிக உறுப்பினர்களுடன் இல்லங்களில் முஸ்லிம்கள் வாழ்வது அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பல தேவாலயங்கள் ஆரம்பத்தில் மதக் கூட்டங்கள் நடத்தியது போல, அயோத்தியில் ராம நவமியை நடத்தித் தீருவது என முதலில் நினைத்தது போல, இந்தியாவில் பல இடங்களில் மசூதிகளில் தொழுகைகள் நடத்தியது போல தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய பல விஷயங்கள் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தப்லீகி ஜமாத் கூட்டத்தை ஒட்டி ஏற்பட்ட பரவல் என்பது அரசின் நடவடிக்கையின்மையாலும் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள் அவர்கள் என்பதாலும்தான். மாறாக, அது திட்டமிட்ட செயல் என்று சொல்ல முடியாது. முஸ்லிம்கள் கொரோனா கிருமியை பிறரது முகத்தில் துப்பி மிகப் பெரிய “பயங்கரவாதத் தாக்குதலை” நடத்தப் போகிறார்கள் என சில இந்துத்துவ வெறியர்கள் பேசுவதற்கு தப்லீகி கூட்டம் குறித்து ஊடகங்கள் உருவாக்கிய பொது பிம்பமே இடம் கொடுத்தது. அது மட்டுமல்ல, நிஸாமுதீனில் உள்ள தப்லீகி மையம் ஒரு ஹாஸ்டல் போலவும் இயங்குகிறது என்ற நுணுக்கத்தை யாரும் கணக்கில் காட்டவே இல்லை.

நிஸாமாபாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வெளியேறுவதற்கான கோரிக்கைகள் தப்லீகி ஜமாத் சார்பில் வைக்கப்பட்டதாகவும் தில்லி போலீஸும் நிர்வாகமும்தான் அதில் தாமதித்ததாகவும் இப்போது ஆதாரங்கள் வெளியாகின்றன. “கடவுள் ராமர் கொரோனாவிலிருந்து எங்களைக் காப்பாற்றுவார்” என்று ஆச்சார்யா பரமஹன்ஸ் கூறிய மார்ச் 18 வாக்கில்தான் தப்லீகி கூட்டமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

மோதியின் மின் விளக்குகளை அணைத்து தீபங்களை ஏற்றுவது மறைமுகமாக ராம நவமியைக் கொண்டாடுவது போன்ற காரியம் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படாமல் இல்லை. ஆனால் கொரோனாவுக்கான போராட்டத்தில் ஊக்கம் அளிப்பதற்காக கொண்டு வந்ததாக சொல்லப்படும் அத்தகைய திட்டத்தை மதத்தோடு நேரடியாக இணைத்துப் பேசுவது இந்த போராட்டம் மிக்க காலக் கட்டத்தில் தேவையற்ற, பொருத்தமற்றதாக இருக்கும் என தோன்றுகிறது. அது போலத்தான், தப்லீகி ஜமாத் சார்ந்த கொரோனா அச்சுறுத்தலையும் இந்த அரசும் ஊடகங்களும் மதச் சாயம் இல்லாமல் கையாண்டிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தினரை முன்கூட்டியே பரிசோதனை செய்து, பாதுகாப்பாக அகற்றியிருக்க வேண்டும்.

விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றுவதை மறைமுகமான ராமநவமி கொண்டாட்டம் என சொல்லும் திராணியற்ற ஊடகங்கள்தான், தப்லீகி ஜமாத் இந்திய கொரோனா தொற்றுக்கு அடிப்படை காரணம் என செய்தியில் அரசியல் செய்தது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் ராணுவத்தினர் “வீர மரணம்” என்று புதிய சொல்லாடல்களை உருவாக்கும் இன்றைய ஊடகங்களிடம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை. இந்த பி.ஜே.பி அரசிடமும் எந்த நல்ல எதிர்பார்ப்பும் நமக்கு இல்லை. ஆனால் இத்தகைய தவறுகளால் ஒரு சமூகமே காரணமற்று இலக்காவதாக உணரக்கூடும். ஏற்கனவே மைய நீரோட்டத்திலிருந்து விலகியிருக்கும் முஸ்லிம்கள் இன்னும் சிறு கூட்டுக்குள் ஒடுங்கிக்கொள்வது பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ்ஸின் பெரும்பான்மை மதவாதத்திற்கு அரசியலுக்கு மிக வசதியாக இருக்கும். ஆனால் பல மதங்கள், இனங்கள், மொழி பேசுபவர்கள், பற்பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வாழும் ஒரு நாட்டிற்கு இது நல்ல அறிகுறி அல்ல.

 

ஆதாரம்:

https://thefederal.com/states/south/tamil-nadu/not-covid-stigma-attached-to-the-disease-kills-man-in-tamil-nadu/

Questions Remain About How Delhi’s Nizamuddin Became a Coronavirus Hotspot

https://indianexpress.com/article/india/maharashtra-notice-against-wardha-bjp-mla-for-celebrating-birthday-with-200-people-6348689/?fbclid=IwAR1eBrWklB05ytw8VRa3a8Gv1EYCj5msm3U75W_dmJqERYYSik4X7FPIKDs

https://www.patrika.com/surat-news/ram-navami-celebrated-by-lighting-a-lamp-in-homes-5960362/

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/despite-lockdown-crowd-gathers-at-temples-in-bengal-for-ram-navami/videoshow/74963580.cms?from=mdr

https://www.straitstimes.com/world/europe/scotlands-medical-chief-resigns-after-flouting-own-coronavirus-rules

https://www.news18.com/news/india/facing-social-boycott-himachal-man-hangs-self-to-death-day-after-testing-negative-for-coronavirus-2565349.html

https://www.independent.co.uk/voices/coronavirus-muslim-mosque-closure-prayer-nhs-a9411936.html