அண்மைக் காலமாக என்சிஇஆர்டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு) சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வரலாறு உட்பட சர்ச்சைக்குரிய சில விஷயங்களை நீக்கி வருகின்ற நிலையில் 9-ம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆடைக் காரணமாக நடத்தப்பட்ட சாதியக் குற்றங்கள் குறித்த பாடப் பகுதிகளையும் சேர்த்து 3 பாடப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
முலைக்கு வரி விதித்ததால், தனது மார்பகங்களை அறுத்து இதோ வரி எடுத்துக்கொள்ளுங்கள் என முலை வரிக்கு எதிராக தோள் சீலைப் போராட்டம் துவங்க காரணமாக இருந்த திருவிதாங்கூரைச் சேர்ந்த நாங்கிலியின் கதை உட்பட நாடார்கள் நடத்திய ஆடை புரட்சிகள் கொண்ட வரலாறும் சேர்த்து நீக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வரலாறு, விவசாயிகள் குறித்த பாடப் பிரிவுகளுடன் சேர்த்து இந்த ஆடைக்காக நடத்தப்பட்ட சாதிய போராட்டங்கள் குறித்த பாடப் பிரிவும் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மூன்று பகுதிகள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ள என்சிஇஆர்டி கூறுகையில் , “சுமார் ஒரு லட்சம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்தின் அடிப்படையிலேயே இந்தப் பாடத்திட்டங்களை நீக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தது.