இந்தியாவின் நிலவு கனவு இன்னும் தொடர்கின்றது. சந்த்ராயன்-1 நிலவுக்குச் செலுத்திப் பல சாதனைகளையும் உலக விஞ்ஞானிகளின் பாராட்டையும் பெற்று இந்திய மக்களுக்குப் பெருமிதத்தை தேடித் தந்த இஸ்ரோ, தற்போது மீண்டும் சந்த்ராயன்-2 வுடன் களமிறங்கியுள்ளது.
“600 கோடி செலவில் 3.8 டன் எடையுள்ள சந்த்ராயன்-2 ஆய்வுக்களத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. ஏவும் தேதி நெருங்க நெருங்கப் பதட்டத்துடன் கூடிய ஒரு உற்சாகம் நிலவுகிறது. முதன்முறையாக 1000 கோடி ரூபாய்க்குள் செய்யப்பட்ட இந்த பணி மிகவும் சிக்கலானது பல சவால்களைச் சந்தித்தோம்” எனத் திட்ட இயக்குநர் டாக்டர்.சிவன் தெரிவித்தார்.
சந்த்ராயன்-2 இல் வட்டப்பாதையில் சுற்றும் ஒரு ஆர்பிட்டரும், விக்ரம் எனப்படும் நிலவில் தரையிறங்கும் லேண்டரும், பிரக்யான் எனப்படும் நிலவின் பரப்பில் சுற்றி வரும் ரோவரும் இருக்கும்.
3.8 டன் அதாவது எட்டு முழு யானைகளின் எடை கொண்டது சந்த்ராயன்-2. இந்தியாவின் “பாகுபலி” எனப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 (GSLV Mark III) ஏவுதளத்தின் மூலம் இது ஜூலை 15 அன்று ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட பிறகு பல வாரங்கள் கழித்து நிலவின் தென் துருவத்தில் இறங்கப்படும். இது உலகில் எந்த ஒரு நாட்டு விண்கலமும் நிகழ்த்தியிராதது என இஸ்ரோவின் தலைவர் கூறினார்.
இந்த பணி எதிர்காலத்தில் மற்ற விண்கலங்கள் எப்படி நிலவின் தென் பகுதியில் இறங்க வேண்டும் என்பதை நிகழ்த்திக் காட்டவிருக்கிறது. சந்த்ராயன்-2 தன்னுடன் 13 விஞ்ஞான சாதனங்களை எடுத்துச் செல்கிறது. இதைக்கொண்டு நிலவில் உள்ள மண், தனிமங்கள் போன்றவற்றை ஆராயவும், நிலவின் வரைபடத்தைத் தயாரிக்கவும், நிலவில் நீரைத் தேடவும் பயன்படுகிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் “லேசர் (Leser)” எனும் கருவியையும் சந்த்ராயன்-2 இலவசமாக எடுத்துச் செல்கிறது.
சந்த்ராயன்-2 முழுக்க முழுக்க இந்தியாவில் உருவானதென்றாலும் அது நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கை (Deep space network) வழிகாட்டுதலுக்கு பயன்படுத்துகிறது.
சந்த்ராயன்-2 தான் இஸ்ரோ இதுவரை உருவாக்கியதிலேயே மிகக் கடினமான விண்வெளித் திட்டம் எனவும். லேண்டர் நிலவில் தரையிறங்கும் அந்த திகிலூட்டும் 15 நிமிடங்கள் மிக முக்கியமானது என்றும் அது சிறப்பாக நிகழ அனைவரும் கடினமாக உழைப்பதாக டாக்டர் சிவன் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது சந்த்ராயன்-2 நிலவின் தென் துருவத்தில் இறங்குவதின் மூலம் இதைச் செய்த உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கப்போகிறது.