கேள்வி: இரண்டு வகையான உளவியல் பிரச்சினையில் நான் ஊசலாடியிருக்கிறேன். 1., அறிஞர் அண்ணா எழுதிய ‘சாது’ சிறுகதையில் வருவதுபோல (முதலாளியிடம் திட்டு வாங்கியதில் உள்ளத்தில் எழுந்த கோவத்தை அடக்கித் தன் மனைவியிடம் காட்டி ஆசுவாசப்படும் தோட்டக்காரனின் மனைவி அவன் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு தன் கோபத்துக்கு வடிகாலாய் குழாயடிச்சண்டையில் ஈடுபடுவாள்) உள்ளத்தில் உணர்வெழுச்சிகளைப் புதைத்து அடக்கிவைத்து அதனை சம்பந்தமற்றவர்களிடம் / என் கோபம் செல்லுபடி ஆகக்கூடியவரிடம் வெளிப்படுத்திவிடுவது. நமக்கு ஏற்படும் எதிர்மறை உணர்நிலைகளை ஏன் நாம் வலியவர்களைவிட எளியவர்கள் மீதே காட்டுகிறோம்?
2.) எந்த ஒரு உணர்வானாலும் அதனை பெரும் வீரியத்துடனே வெளிப்படுவது. சமநிலையின்றி ஒரு துருவத்தில் கடைக்கோடி எல்லையிலிருந்து மற்ற எல்லைக்குப் போவது . கிடைத்தால் நிறைய கிடைக்க வேண்டும் இல்லை என்றால் ஒன்றுமே வேண்டாம் என்ற மனநிலை. (Bipolar போல) . இந்த இருவகையான பிரச்சனைகளுக்கான உளவியல் விளக்குமும், இவ்விரு பிரச்சனைகளுக்கும் இடையே காரண காரிய தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும் அறிந்து கொள்ள விழைகிறேன்?
அரவிந்த்.சி , சென்னை முகப்பேர்
பதில்:
வால்டோ டாப்லர் என்ற அறிஞர் புவியியல் சார்ந்த ஒரு கோட்பாட்டை நிறுவியிருக்கிறார், அந்த கோட்பாடு “இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் எல்லாவற்றோடும் ஒரு தொடர்பில் இருக்கிறது. அண்மையில் இருப்பவைகளுக்கு இடையே இந்தத் தொடர்பு அதிகமாகவும், தொலைவில் இருப்பவைகளுக்கு இடையே இந்தத் தொடர்பு குறைவாகவும் இருக்கும்”. இந்தக் கோட்பாடு அப்படியே நமது உணர்வுகளுக்கும் பொறுந்தி போகும்.
‘Mood is infectious’ என்பது உளவியலில் பாலபாடம். அதாவது நம்முடைய உணர்வுகள் அத்தனையும் இன்னொருவருக்கு தொற்றக்கூடிய பண்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கணத்தில் என் மனதில் உள்ள உணர்ச்சிகள் வேறு யாரோ ஒருவரிடம் இருந்து பெற்றதாகவே இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களில் யாரேனும் ஒருவர் மிகுந்த சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தால் அன்றைய நாள் முழுவதும்கூட அந்த மகிழ்ச்சி நம்மிடம் தங்கிவிடுகிறது. ஒருவருடைய உணர்வுகள் என்பது இப்படித்தான் எப்போதும் அடுத்தவருக்கு கடத்தப்படக்கூடியதாகவே இருக்கிறது. எந்த ஒரு முனைப்பும் அல்லாமல் இன்னொருவருடைய உணர்வு என்பது இப்படி தன்னிச்சையாகவே நமக்குள் வந்துவிடுகிறது. இப்படி கடத்தப்பட்டும் உணர்வுகளில் நேர்மறை உணர்நிலைகளைவிட எதிர்மறை உணர்வுகள் மிக வேகமாக தொற்றக்கூடியது. உதாரணத்திற்கு நிறைய நண்பர்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கிருக்கும் நண்பர்களில் யாரேனும் ஒருவர் வருத்தமாக இருந்தால் அனைவரின் சந்தோசமும் வற்றிபோய் அங்கு வருத்தம் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஏனென்றால் எதிர்மறை உணர்வுகள் ஒரு அசெளகரியத்தை கொடுப்பதால் நாம் ஏதோ ஒருவகையில் அதை உடனே வெளிப்படுத்தி விடுகிறோம். ஒருவர் சந்தோசமாக இருக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்தவுடன் சொல்வது கடினம். ஆனால் ஒருவர் கவலையாக இருப்பதை நாம் சுலபமாக கண்டுகொள்ளலாம். அதற்கு காரணம் எதிர்மறை உணர்வுகளைக் கட்டுபடுத்தி வைப்பதும் வெளிப்படுத்தாமல் இருப்பதும் அத்தனைக் கடினமான ஒன்று.
மகிழ்ச்சியையோ அல்லது மற்ற நேர்மறை உணர்வுகளையோ நாம் எல்லோரிடமும் பொதுவாகவே வெளிப்படுத்துகிறோம் ஆனால் எதிர்மறை உணர்வுகளை மட்டும் நாம் எளியவர்கள் மீதே காட்டுகிறோம். நமக்கு மேல் இருக்கும் ஒருவர் நம்மை இகழும்போது அவர் மீது நமக்கு ஏற்படும் கோபத்தை அவரிடம் காட்டாமால் நமக்கு கீழே உள்ள ஒருவரிடமே காட்டுகிறோமே அது ஏன்? ஏனென்றால் ஒரு மனநிலையை நாம் உணர்வது என்பது தன்னிச்சையானது. கோபம் என்பது தன்னிச்சையாகவே நமக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்துவது என்பது நமது தேர்வு. நமக்கு தோன்று உணர்வுகளை நாம் அப்படியே வெளிப்படுத்துவதில்லை இடம், காலம், மனிதர்கள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டே நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் அதுதான் நமக்கும் மற்ற மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாம் நமது உணர்வுகளை மதிப்பிடுகிறோம். அதன் விளைவுகளைக் கவனத்தில் கொள்கிறோம் அதை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம், நமது உணர்வுகளைக் கொண்டே நாம் நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் பிணைப்பை உருவாக்கி கொள்கிறோம். ஒருவர் மீது நமக்கு இருக்கும் அதீத அன்பையோ அல்லது தீவிர வெறுப்பையோ நாம் நமது உணர்வுகளின் வழியாகவே செய்கிறோம். உணர்வுகளை வெளிப்படுத்துவது நமது தேர்வுதான் என்று வரும்போது நாம் அதை எங்கு வெளிப்படுத்த வேண்டும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் யாரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்து கொள்கிறோம். எங்கு நாம் நமது பலவீனங்களுடன் புரிந்துகொள்ளப்படுகிறோமே அங்குதான் இத்தகையை உணர்வுகளை நாம் பொதுவாக வெளிப்படுதுவோம். ஏனென்றால் இத்தகைய எதிர்மறை உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அங்கு நமக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அதேபோல எங்கு நமது மதிப்பை உணர்த்த தேவையில்லையோ அங்கும் நாம் இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.
நமது உணர்வுகள் என்பது தன்னிச்சையாக இன்னொருவரிடம் இருந்து நாம் பெறுவது அதேபோல அது நம்மிடம் இருந்து இன்னொருவருக்கும் கடத்தப்படும். ஒரு உணர்வைப் பெறுவதுதான் தன்னிச்சையானது. ஆனால் அதை வெளிப்படுத்துவது நமது தேர்வு. நமது எதிர்மறை உணர்வுகளை இரண்டு இடங்களில் மட்டுமே நாம் பொதுவாக வெளிப்படுத்துவோம் ஒன்று நம்மை புரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கும் இடங்களில் மற்றொன்று நம்மையும், நமது மதிப்பையும் நிறுவ அவசியமில்லாத இடத்தில். அதனால் நம்மை சுற்றியுள்ள யாரேனும் நமக்குத் தெரிந்த ஒருவர் இப்படி அதீத எதிர்மறை உணர்வை வெளிப்படுத்தினால அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது:
1. அந்த உணர்வை அவர் வேறு யாரோ ஒருவரிடம் இருந்து பெற்றிருக்கிறார்.
2. நாம் அவரை முழுமையாக புரிந்துகொள்வோம் என்று அவர் நம்புகிறார்.
நன்றி.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com