மனவெளி திறந்து-7 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்





கேள்வி: தாழ்வுமனப்பான்மை அதிகமாக இருந்தால் அது ஒரு காலகட்டத்தில் சுப்பீரியாட்டி காம்ப்ளெக்ஸாக மாறிவிடுமா? தாழ்வுமனப்பான்மையில் இருந்து வெளிவருவது எப்படி?

காசிராஜன், திண்டுக்கல்

பதில்: தாழ்வுமனப்பான்மை என்பது ஒரு நோய் அல்ல. சில சந்தர்ப்பங்களில், நாம் செய்யும் செயல்களைச் சார்ந்து நம்மைப் பற்றி, அந்தச் செயல்களைச் செய்து முடிக்கும் நமது திறன்களைப் பற்றி நமக்கு ஒரு கருத்து இருக்கும். அந்தச் செயலை நாம் சரியாகச் செய்து முடிக்கும்போது நம் திறமைகளின் நமக்கு நம்பிக்கை ஏற்படும்; அதுபோன்ற செயல்களை எதிர்காலத்தில் செய்வதற்குரிய முனைப்பை அந்த நம்பிக்கைதான் ஏற்படுத்தும். ஒருவேளை அந்தச் செயலை நாம் சரியாக செய்யவில்லை என்றால் அப்போது நம் திறமைகளின்மீது நம்பிக்கையின்மை ஏற்படும், அந்தச் செயலை மறுபடியும் நாம் செய்ய நேரும்போது இந்த நம்பிக்கையின்மை ஒரு மிகப்பெரிய தடங்கலாக வந்து நிற்கும். ஆகவே நம்மீதும், நமது திறமைகளின்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை பொறுத்தே ஒரு செயலை செய்வதற்கு உண்டான முனைப்பு நமக்கு ஏற்படும்.

ஏதேனும் சில அனுபவங்களின் வாயிலாக, நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைத்துக் கொள்ளும் மனநிலையே தாழ்வு மனப்பான்மை. பொதுவாகவே எல்லோருக்கும் சில நேரங்களில் இந்த மனப்பான்மை சில செயல்களை சார்ந்து வருவது உண்டு; அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. தாழ்வு மனப்பான்மை என்பது சில சந்தர்ப்பங்களில், சில சூழ்நிலைகளில் வரும் வரையில் அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் பொதுவாகவே எப்போதும் எந்த செயல்களை செய்ய நினைக்கும் போதும் இந்த தாழ்வு மனப்பான்மை வந்துகொண்டே இருந்தால் அது நம்மை வெகுவாக பாதிக்கும்.

ஒரு செயலில் இறங்குவதற்கு மிக முக்கியமான தேவை அதன் நிமித்தம் நமக்கு இருக்க வேண்டிய ஆர்வமும், ஈடுபாடும். ஒருமுறை ஒரு செயலை செய்யும் போது அதை நம்மால் சிறப்பாக செய்ய முடியவில்லை என்றால் அதை மீண்டும் மீண்டும் முயற்சிப்பது அவசியம். அந்த முயற்சிகளின் வழியாக நாம் அந்தச் செயலை இன்னும் சிறப்பாக செய்வதற்குத் தேவையான பண்புகளைக் கற்றுக்கொள்கிறோம். ஒவ்வொருமுறை ஒரு தோல்வி நிகழும்போதும் அதன் காரணங்களை நாம் திறந்த மனதோடு பரிசீலிக்கும்போது அந்தக் காரணங்களை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்கிறோம். அதனால் மறுமுறை அதே செயலை முன்னைவிட சிறப்பாகச் செய்வதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும், ஒரு கட்டத்தில் அந்தச் செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது அது மிகப்பெரிய புத்துணர்ச்சியை நமக்கு கொடுக்கும். நம்மீது புது நம்பிக்கைகளை ஏற்படுத்தும், நமக்கே தெரியாத நமது சிறப்பானப் பண்புகளை அதன் வழியே நாம் கண்டுகொள்ளலாம். ஒரு தொடர்ச்சியான தாழ்வுமனப்பான்மையிலிருந்து இப்படித்தான் நாம் வெளியேற முடியும். எதன் நிமித்தம் நமக்கு இந்த மனப்பான்மை வருகிறது என்பதைக் கண்டறிந்து அந்தச் செயலை அதிக கவனத்தோடும், அதிக ஈடுபாடும் செய்யும்போது மட்டும்தான் நாம் இந்த மனப்பான்மையில் இருந்து வெளிவரமுடியும். அதேபோல நம்மை நம்மால் முழுமையாக உணர்வதற்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுப்பது அவசியம்.

உதாரணத்திற்கு உங்களைப் பற்றி, உங்களது பலம் உங்களது பலவீனம் போன்றவற்றை பற்றி முழுமையாக உணர்ந்து இருந்தால், அதற்கு ஏற்றவாறு நாம் செய்ய வேண்டிய செயல்களை நாம் திட்டமிட முடியும். நமது பலவீனங்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் நம்மால் எதையும் திட்டமிட முடியாது. நம்முடைய பலம் பலவீனம், பலவீனம் போன்றவற்றை பொறுத்து நம் செயல்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதை நம்மால் முழுமையாக செய்து முடிக்க முடியும்; அப்படி செய்து முடிக்கும்போதே நம்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கைகள் அதிகமாகும்.

அதன் வழியாக அந்தச் செயலின் மீது ஆர்வமும், ஈடுபாடும் இயல்பாகவே ஏற்படும். அதன்பிறகு எப்போது அந்தச் செயலை செய்ய கொடுத்தாலும் நம்மால் அதை வெற்றிகரமாக செய்துவிட முடியும். ஒருவேளை நம்மை நாம் முழுமையாக அறிந்துகொள்ளாவிட்டால் அல்லது நமது பலவீனங்களில் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளாமல் ஒரு செயலைத் திட்டமிடும்போது நமது பலவீனங்களை அந்தச் செயலை செய்துமுடிப்பதில் மிகப்பெரிய தடங்கலாக வந்து நிற்கும்; அதனால் அந்தச் செயலை நம்மால் முழுமையாக செய்து முடிக்க முடியாது. அது நம்மீதான நம்பிக்கையின்மையை மற்றவர்களுக்கும் ஏற்படுத்தும், நமக்கும் ஏற்படுத்தும். திரும்ப இந்தச் செயலை செய்யவேண்டிய சூழ்நிலை வந்தால் அந்தச் சூழ்நிலை நமக்கு மிகப் பெரிய மன உளைச்சலைக் கொடுக்கும். நம்மீதான தன்னம்பிக்கையைக் குறைக்கும். அதனால் நாம் அதில் பெரிய முனைப்புகாட்ட தயங்குவோம். அந்தச் செயலின்மீதான ஈடுபாடு ஆர்வம் போன்றவை குறைந்துபோய் அது பயத்தையும், பதட்டத்தையும் நமக்கு கொடுக்கும் இந்தப் பயமும், பதட்டமும்தான் தாழ்வு மனப்பான்மையை நமக்குள் ஏற்படுத்தும்.

எப்போதும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் ஒருவரும் அதிலிருந்து வெளியேற செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், நம்மைப் புரிந்துகொள்வது, நமது பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதற்கு ஏற்றார்போல நாம் செய்ய வேண்டிய செயல்களைத் திட்டமிடுவது. தொடக்கத்தில் சுலபமான செயல்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நம்மால் அதை எளிமையாக செய்து முடிக்கும். அதன் விளைவாக கிடைக்கும் நம்பிக்கையைக்கொண்டு அடுத்தக்கட்ட செயல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தாழ்வுமனப்பான்மை அதிகமாக இருக்கும் ஒருவருக்கு பின்னாளில் superiority complex என சொல்லக்கூடிய மேட்டிய மனப்பான்மை வந்து விடுமா என்றால், இரண்டுமே வேறு வேறு மனப்பாங்கு. ஒரு செயலைப் பொறுத்து நமக்கு தாழ்வுமனப்பான்மை வருமென்றால் அதேபோல சில நேரங்களில் ஒரு செயலைச் சார்ந்து மேட்டிமை மனப்பான்மையும் வரலாம். இரண்டு மனநிலையும் ஆரோக்கியமற்றவை. ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க இரண்டு மனப்பான்மையும் பெரும் தடங்கல்கள். நம்மைப் பற்றி அசலான நம்பிக்கையை மட்டும் நாம் கொண்டிருப்பதே ஆரோக்கியமானது. ஒரு தாழ்வுமனப்பான்மையின் விளைவாக மேட்டிமை மனப்பான்மை வரும் என்பது உண்மையல்ல. இரண்டுவித மனப்பான்மையும் ஒருவருக்கு ஏற்படலாம் அது அந்தந்த சூழலைப் பொறுத்தது; அது அந்தந்தச் செயல்களைப் பொறுத்தது. நாம் யார் என்பதை எந்த உணர்ச்சிவசப்படுதலும் இல்லாமல் எந்த ஒரு மிகை கட்டுமானமும் இல்லாமல் அப்படியே புரிந்துகொள்வதுதான் ஒரு ஆரோக்கியமான மனதில் அடையாளம்.

முந்தையை கேள்வி -பதில்: https://bit.ly/2Q6bq4R

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
டாக்டர். சிவபாலன் இளங்கோவன், தாழ்வு மனப்பான்மை