மோடி அரசாங்கம் மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டி ஒரு சாரரை மற்றொருசாரருக்கு எதிராக வளர்த்து மத்திய அரசின் அதிகார வரம்புகளை நீட்டித்து வலுப்படுத்தி மக்களின் மீது எதேச்சாதிகாரத்தை திணித்திருக்கிறது.
அதிகாரங்களைக் கடுமையாக மத்தியிலே குவித்துக்கொள்ளும் வகையில் நாட்டை உருக்குலைத்து, அச்ச உணர்வை உண்டாக்கி மக்கள் உரிமைகளைத் தாக்கும் நரேந்திர மோடியின் இந்த அரசு, இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலையைப் போன்றது. ஆனால் இரண்டிற்குமான ஒப்பீடு இத்தோடு நின்றுவிடுகிறது. சொல்லப்போனால் இரண்டும் அடிப்படையிலேயே வெவ்வேறு வழிகளிலானது.
முதலாவதாக வேறுபடுவது, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது தெருக்களிலோ மக்கள் மீதோ சில குறிப்பிட்ட கும்பல்கள் தாக்குதல் செய்யவில்லை. இன்றுள்ளது போல யாரும் யாருக்கும் “தேசியவாதம்” பற்றி பாடமெடுக்கவில்லை. அப்போது அரசேதான் மக்களை ஒடுக்கியது. ஆனால் இன்று இந்துத்துவா கைக்கூலிக் கூட்டங்கள் அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைப்போரை மிரட்டி அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் கைது நடவடிக்கைகள்வரை ஏவுகின்றன. முகநூலில் அரசை விமர்சித்துப் பதிவிட்டதற்காக பேராசிரியர் ஒருவரை இந்துத்துவா மாணவர் கும்பல் பிடித்துவைத்து அவமதித்து மிகவும் பரிதாபகரமாக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவைத்த சம்பவத்தை நாம் மறந்திருக்கமாட்டோம்.
ஒரு புதிய தேசியவாதம்:
இரண்டாவது வேறுபாடு, நெருக்கடி நிலையைப்போல அல்லாமல் தற்போதைய அடக்குமுறை, இந்துத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட “தேசியவாதம்” என்ற ஒரு திரிபு சித்தாந்தமான “ஹிந்து தேசியம்” என்பதை வலியுறுத்துகிறது, இந்தியாவின் காலனித்துவ-விரோத தேசியவாதத்தைத் திரித்து, அதன்பேரால் சந்தர்ப்பவாத முறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திரா காந்தியின் அடக்குமுறையின் விளைவுகள் விமர்சகர்களை “மக்கள் விரோதிகளாக” சித்தரிக்கவில்லை; மரியாதைக்குரியவர்களாக தோற்றமளிக்கச்செய்தது. ஆனால் தற்போதைய ஆட்சியை விமர்சிப்பவர்களை “மக்கள் விரோதிகளாக” சித்தரிக்கப்படுவதுடன் அவர்கள் மீது அரசு நிறுவனங்கள் மூலம் பயங்கரவாதச் செயல்கள் கட்டவிழ்க்கப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் ஊழல் செய்ததாகவும் புகார்கள் ஜோடிக்கப்படுகின்றன. அரசின் எண்ணமெல்லாம் தன்னை விமர்சிப்பவர்களை மக்கள் முன் தார்மீக நிலையற்றவர்களாக்குவதாகவே இருக்கிறது.
மூன்றாவதுவித்தியாசம் என்னவெனில், ஊடகங்கள் மீதான அடக்குமுறை. நெருக்கடி நிலையின்போது அச்சு ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வெளியான பத்திரிகைகள் எவ்வித அச்சும் இல்லாத சில பகுதிகளைக் கொண்டிருந்தன, அவை தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்திகள் என்று மக்களை உணரச்செய்தன. இது ஊடகங்கள் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது ஊடகங்கள் தாமாகவே அரசுக்கு ஒத்துபோகும் வகையில் பல செய்திகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், இந்துத்துவா கூடாரத்தில் இணைந்துவிட்டன. விமர்சனம் செய்பவர்களது தார்மீக நிலைப்பாட்டைச் சிதைப்பதற்கு ஊடகங்களும் உடந்தையாகச் செயல்படுகின்றன.
அடுத்ததாக ஊடகங்களின் இம்மாறுபட்ட நிலைப்பாடு அன்றைக்கும் இன்றைக்குமான மற்றொரு வேறுபாட்டிற்கும் தொடர்புடையதாகிறது; மோடி அரசு கார்பரேட்களின் நலன்களுக்காகவே செயல்பட்டுக்கொண்டு அதன் சதிவலையில் இருக்கின்றன, ஆனால் இந்திரா காந்தி ஆட்சி கார்பரேட்களுக்கும் அரசுக்குமான வேறுபாட்டைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் கார்பரேட்களுக்கு எதிரான முற்போக்கான சிந்தனைகளுடைய அரசு எனும் பிம்பத்தைக் கொண்டிருந்தது.
நிச்சயமாக விடுதலைக்குப் பிறகான எந்த ஒரு ஆட்சியும் மோடியளவுக்கு கார்பரேட்களோடு நெருக்கமாக இருந்ததில்லை. தான் பிரதமாரக பதவி ஏற்கும் விழாவுக்கே மோடி அதானியின் தனி விமானத்தில்தான் புது தில்லிக்கு வந்தார் என்பதே அதற்கு சாட்சி. (இத்தருணத்தில் ஒரு சம்பவத்தை நினைவுகூற வேண்டும். இந்துத்துவா வெறுப்பாளராகிய முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள், TB நோயால் பாதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்றுவந்த தனது மனைவி கமலா நேருவைச் சென்று பார்க்க போதிய பணமில்லாமலிருந்தபோது, G.D.பிர்லா முன்வந்தளித்த பணவுதவியை மறுத்துவிட்டார். பின் தனது சொந்த முயற்சியால் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்து சென்றுவந்தார்.)
சிறுபான்மையினருக்கு எதிரான அரசு:
ஐந்தாவது வேறுபாடு, மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக அப்பாவி முஸ்லிம்கள் மீது ஏவியிருக்கும் அடக்குமுறை. நெருக்கடி நிலையானது எவ்வித இனக்குழுவுக்கோ, சாதி அல்லது மதத்துக்கோ எதிராக ஏவப்பட்டதல்ல. இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடிநிலை அடக்குமுறை தெள்ளத்தெளிவாக தனது எதிரிகள் மீதும் முறையற்ற வகையில் நடந்துகொண்ட தன்மகனின் எதிரிகள் மீதும் நடத்தப்பட்டது. முந்தைய நெருக்கடிநிலை ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக சித்தரித்துத் திரித்து எழுதும் உள்நோக்கமோ, அப்படி திரிக்கப்பட்ட வரலாற்றை மற்ற மதங்களைச் சார்ந்த தன் சக இந்தியக் குடிமகன் மீதே வெறுப்புக்கொள்ளச் செய்யும்படி பிஞ்சுக் குழந்தைகளின் தொண்டைக்குழிக்குள் திணிக்கும் கொடுமைகளையோ கொண்டிருக்கவில்லை. ஆனால் இன்று இவையெல்லாம் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
ஆறாவது வேறுபாடு, இந்த ஆட்சியின் செயல்கள்அறிவுக்கு ஒவ்வாத செயல்களை ஊக்குவிப்பது, பகுத்தறிவை விடுத்து மூடநம்பிக்கைகளை வளர்ப்பது, ஆதாரங்களையும் சான்றுகளையும் ஏளனம் செய்வது மட்டுமல்லாமல் கருத்துகளின் உள்நிலைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்துவதுமாகவே இருக்கிறது. இதனையே அடிப்படையாக்கொண்டு இயங்கிவந்த RSS தற்போது ஆட்சியதிகாரத்தை ஆக்கிரமித்துள்ளது, இந்திய அறிவியல்மாநாட்டையும் அது விட்டுவைக்கவில்லை.
ஏழாவது, மோடியரசு செய்துவருகின்ற அரசு நிறுவனங்களைச் சீரழிக்கும் பணி – குறிப்பாக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசால் நிர்வகிக்கப்படும் பிற கல்வி நிலையங்கள். தலை விழுந்தால் நான் வென்றேன், பூ விழுந்தால் நீ தோற்றாய் என்பது போன்ற நிலையில்தான் அரசு அந்நிறுவனங்களின் சுயாதின சிந்தனைகளைச் சிதைத்து தனக்குத் தேவையானவற்றைச் செய்துகொள்கிறது. அரசாங்கம் திணிக்கின்ற விஷமத்தனமான கோரிக்கைகளை ஏற்றால் அந்நிறுவனங்கள் தம் அறிவாற்றலை இழந்து அழிந்துபோவதற்குச் சமம். அறிவாற்றலோடு உயிர்த்திருத்தலுக்கு சுயாதீனமான திறனாய்வுச் சிந்தனை தேவை; அவ்வகையில் அவர்கள் எப்போதோ இறந்துவிட்டார்கள். ஆனால் அந்நிறுவனங்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும்பட்சத்தில் அவற்றுக்கான நிதிகளை ஒதுக்காமல் JNUக்கு நடத்தப்பட்டது போல அவை “தேச-விரோதமானவை” என்று முத்திரை குத்திவிடுவதும் நடக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், புனேவிலுள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், டாடா சமூகவியல் நிறுவனம் மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற இந்தியாவில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த நிறுவனங்களெல்லாம் அழிவின்பாதைக்குத் தள்ளப்படும் அறிகுறிகளை நாம் காண்கிறோம். இதற்கு முன்பு இப்படி ஒருபோதும் நடந்ததில்லை. எந்த அரசும் இப்படிச் சிந்தனைகளை ஏளனப்படுத்தியதும் இல்லை.
நெருக்கடி நிலை என்பது மத்தியில் அதிகாரத்தை குவித்து மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் நிகழ்த்தப்பட்ட அரச எதேச்சதிகாரம். அது முதலாளித்துவ வளர்ச்சியின் தர்க்கத்திற்கும் ஒரு ஜனநாயக அரசியலுக்கும் இடையிலான முரண்பாட்டின் வீழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது கார்ப்பரேட் ஆட்சியாக இருக்கவில்லை. மோடியரசு அரச எதேச்சாதிகாரமாகவும் மத்தியில் தீவிர அதிகாரக்குவிப்பதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களின் இன்னொரு பிரிவினருக்கு எதிராகத் தூண்டி தொடர்ந்து வெறுப்பை வளர்த்து வருகிறது; நேரடியாகவே கார்ப்பரேட் நலன்களுக்காக அதன் கைக்கூலியாகவே இயங்கி வருகிறது. இரண்டு ஆட்சிகளுக்குமான வித்தியாசம் என்னவெனில் முன்னது எதேச்சாதிகாரம் பின்னது பாசிசம்! அவசரகாலச் சட்டத்தின்போது அடக்குமுறை புள்ளிவிவரங்கள்,சிறையிலடைக்கப்பட்டோர் எண்ணிக்கை போன்றவை மோசமாக இருந்தன. ஆனால் இந்த ஆட்சியில் அடக்குமுறையின் வீரியம் மிக அதிகமாகவும் மிக அதிகமானோரைப் பாதிப்பதாகவும் இருக்கிறது.
மோடி அரசாங்கம் நிகழ்த்தியதியவையாக மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் பாசிசத்தின் கூறுகள்தான். வன்முறைகளைக் கட்டவிழ்க்கும் கும்பல்கள், “கார்ப்பரேட்டும் அரசும் கைகோர்த்தல்”(முசோலினியின் பாசிசத்திற்கான வரையறை இது), அப்பாவிச் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகள், அறிவுக்கு ஒவ்வாதவற்றைச் செய்யத் தூண்டுதல், கல்வி நிறுவனங்களை அழித்தல் என அனைத்தும் பாசிசத்தின் கூறுகள்தான். பாசிஸ்டுகள் அதிகாரத்தில் இருக்கிறார்கள், ஆனால் நாடும் ஆட்சியும் இன்னும் முழுமையாக பாசிச நாடாக மாறவில்லை. ஆனால் 1930களில் இருந்தது போன்ற பாசிசம் உருவாக சாத்தியமும் இல்லை.
1930களில் நிலவிய பாசிசத்திற்கு ஏதுவான சூழலைபோலவே இப்போது மட்டுமல்ல எப்போதும்முதலாளித்துவத்துக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் பாசிசம் தலைதூக்குகிறது. தன்னலமிக்ககார்ப்பரேட்களின் மேலாதிக்கத்திற்கு ஒரு அச்சுறுத்தல் வரும்போது தனது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அதன் உண்மையான பிரச்சனையை பொதுவெளி கண்டுகொள்ளாத வகையில் மடைமாற்ற அப்பாவி சிறுபான்மையினரின்மீது பிறரின் வெறுப்பைத் திசைதிருப்புதல் போன்ற மற்றொரு பிரச்சனையைத் தேடுகிறது;இத்தகைய சூழ்நிலைகளில் கார்ப்பரேட் மூலதனம் சில “அடிப்படைவாத” குழுக்களை தேர்ந்தெடுத்து நிதியளித்து மக்கள் கவனத்தை அவர்கள் மீது திசை திருப்புகின்றன. போலந்து நாட்டின் பிரபல பொருளாதார நிபுணர் மிக்கேல் கலேகி சொன்னது போல “பெருநிறுவனங்களும் பாசிசத் தோற்றுவாய்களும் கைகோர்க்கிறார்கள்”
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகப் பொருளாதாரம் நுழைந்திருக்கும் நீண்ட தேக்க நிலை காரணமாக, புதிய தாராளவாத முதலாளித்துவத்தின் வீழ்ச்சியால், இந்தியாவிலும் இதுதான் நடைபெறுகிறது.
ஆனால் 1930களில் நிலவிய சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன. அன்றைய கார்ப்பரேட் மேலாதிக்கமானது அந்நாடு சார்ந்ததாக இயங்கி தமது எதிரி நாடுகளிலுள்ள ஒத்த மேலாதிக்க நிறுவனங்களோடு கடும் போட்டியிலிருந்தன. பாசிசத்தைக் கைக்கொண்டிருந்த பேராளுமை மிக்க இராணுவவாதம் கட்டாயமான போர்களுக்குச் சென்றன.
இது இரண்டு தாக்கங்களைக் கொண்டிருந்தது: ஒன்று, அரசின் கடன்களால் இயங்கிவந்த யுத்தத்திற்கான இராணுவ செலவினங்கள், பொருளாதார பெருமந்தநிலை மற்றும் அதனால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தை விரைவில் முடிவுக்குக்கொண்டுவந்தன (1931ல் ஜப்பான்; 1933ல் ஜெர்மனி). பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டெழுந்ததற்கும்- வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவுகட்டி, பாசிச அரசாங்கங்கள் மிகவும் பிரபலமடைந்த அதேவேளையில், யுத்தத்தால் ஏற்பட்ட உடனடி பேரழிவுக்கும் இடையே ஒரு சுருக்கமான இடைவெளி இருந்தது. இரண்டாவது, பேரழிவை நோக்கிச் சென்ற போருக்கு கணக்கிலடங்காத் தொகை செலவிடப்பட்டது மறுக்கமுடியாதது; இவற்றினாலே பாசிசம் தன் அழிவைச் சந்தித்தது.
இன்று அன்று போன்ற சூழலில்லை. பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் உலகமயமாக்கப்பட்ட முதலீடுகளால் ஒரே தளத்திலே உள்ளன. அவை உலகம் மீண்டும் போரால் வெவ்வேறு பொருளாதார மண்டலங்களாகச் சிதறுவதை விரும்பவில்லை. இது உலகம் முதலீடுகளுக்காக குறிப்பாக நிதிபாய்ச்சலுக்காக எப்போதும் திறந்தேயிருக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இது போர்களை அடியோடு ஒழித்துவிடவில்லை; உலகமயமான கார்ப்பரேட் நிதி முதலீடுகளைக் கொண்டிராத நாடுகள் மீது வல்லாதிக்க நாடுகள் தமது அதிகாரப் பாய்ச்சல் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.
அதேபோல, நிதி முதலீட்டாளர்கள் நிதிப்பற்றாக்குறையை விரும்புவதில்லை என்பதாலும் உலகமயமான நிதி முதலீடுகளின் நீதிப்பேராணையானது முதலீடுகள் நிச்சயம் இன்னொரு நாட்டிற்கு எதிராகவே இருக்கவேண்டுமென்பதாலும் (அப்படி இல்லாவிட்டால் பெருநிறுவன முதலீடுகளைப் பெறுவது இயலாதே!?) அரசின் செலவுகளும் அதிகரிக்கின்றன, அதே வேளையில் நிதிப்பற்றாகுறையும் ஏற்படுகின்றன; நிதிப்பற்றாக்குறையால் ராணுவத்திற்கும் சரியாகச் செலவிடமுடியாத சூழலும் உருவாகின்றன. பெருமுதலாளிகளின் வரிகளால் இதனைச் சரி செய்ய இயலுமா என்றால் முதலீட்டாளர்களின் ஒப்புதலின்றி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அதனையும் செய்யவியலாது. ஆனால், அரசாங்க செலவினங்களுக்கு நிதியளிப்பதாக இம்முதலீடுகளே இருப்பதால் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இதுதான் ஒரே வழி (ஊழியர்கள் மீதான வரிகள் அரசாங்கத்தின் மொத்த தேவையை பூர்த்தி செய்யாது). புதிய தாராளமய முதலாளித்துவதினால் இயங்கும் இன்றைய பாசிசம் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு வழங்கவில்லை. கார்ப்பரேட் நிதிகளால் இயங்குவதால் தாராளமய முதலாளித்துவத்தையும் பாசிசத்தால் மறுதலிக்கவியலாது.
இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால் பாசிசம் அரசியல் சட்டப்பூர்வமான அதிகாரத்தை உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலை உயர்த்துதல் மூலமாக அடையவும் முடியாது; முந்தைய காலத்தினைப்போல பாசிசம் போரால் அழிந்தும் போகாது. பாசிசம் பாராளுமன்றத் தேர்தல்களின் அமைப்புடன் இணைந்தும் செயல்பட முடியாது; ஏனென்றால் தேர்தல்கள் உலகமயமாக்கப்பட்ட நிதி மேலாதிக்கத்திற்கு விலைமதிப்பற்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கிவிட்டன. (முற்போக்காக செயல்பட்டு புதிய தாராளமய கொள்கைகளிலிருந்து விலக முடிவு செய்த இலத்தீன் அமெரிக்கா போன்ற நாட்டின் அரசுக்கு எதிராக கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். விளைவு முன்பு ஈரானின் மொசாதே, கௌதமாலாவின் அர்பென்ஸ் அல்லது சிலியின் ஆலந்தே போன்றோருக்கு நடந்ததுபோல CIA மூலமான சதிகளாக அல்லாமல் இம்முறை ‘ஜனநாயகத்தைக் காக்கிறோம்’ என்ற பேரால் அவ்வரசுக்கெதிரான பாராளுமன்ற சதிகள் நடத்தப்பட்டன).
இந்த சூழலில் மக்களைக் காப்பதற்கான கடைசி வழி என்னவென்றால்; தேர்தல் செயல்முறைகளை அவமதித்து அதில் தலையிடும்போதிலும், மக்களது அன்றாட வாழ்க்கையிலிருந்து திசைதிருப்பி போலி தேசப்பேரினவாதத்தை வளர்த்து தேவையெனில் தீவிரவாதத்தையும் வளர்க்கின்ற மோடி அரசை வருகின்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியடைய வைக்க வேண்டும் (பயங்கரவாதத்திற்கும், அரச அதிகாரத்திலுள்ள பாசிச சக்திகளுக்கும் இடையிலான ஒரு இயங்கியல் உள்ளது, ஒன்று மற்றொன்றை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது). அடுத்து வருகின்ற அரசாங்கம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் மற்ற பிரிவுகளுக்கு உதவினாலும் புதிய தாராளவாத முரண்பாடுகளில் இருந்து தன்னை முறித்துக்கொள்ளாவிட்டால், சிறிது காலத்திற்கு பின்னர் அதன் மக்கள் ஆதரவை இழந்து மீண்டும் மீண்டும் பாசிச கூறுகளை அடுத்தடுத்த தேர்தல்களில் அது அதிகாரத்திற்குக் கொண்டுவந்துவிடுகிறது.
எனவே பாசிச சக்திகள் அழியப்போவதில்லை எனும்போது அடுத்து எந்த அரசு அமைய வேண்டும் என்பதில் தடுமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அந்த தடுமாற்றம்தான் பாசிசம் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் வலுப்பெற இடமளித்து சமூகத்தையும் அரசியலமைப்பையும் முழு பாசிசக்கூடாரமாக மாற்றிவிடுகின்றன. உதாரணமாக சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியமைத்த காங்கிரஸ் ஹிந்துத்துவா அமைப்புகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டிருப்பது சமூகம் பாசிசமயமாவதை உணர்த்துகிறது. இதன் காரணம் சமூகம் கொண்டிருந்த தடுமாற்றங்கள்தான். பாசிஸ்டுகள் வேண்டாம் என்று தூக்கியெறியாமல் மக்கள் தேசியவாத பேரினவாதங்களால் பாதிக்கப்பட்டு பிளவுபடும்போது பாசிசம் வேரூன்றிவிடுகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்கூட வலுவாகவே இருக்கும் பாசிஸ்டுகளின் அழுத்தத்தால் இன்னும் சில காலத்தில் சமூகம் பாசிசமயமாவதை நாம் காணப்போகிறோம். இது 1930கள் போல பாசிச நாடாக அல்லாமல் பாசிச சமூகமாக உருவெடுத்துக் கொண்டிருப்பதால் அன்றுபோல பாசிஸ்டுகள் அழிந்துவிடமாட்டார்கள். இனி “நிரந்தர பாசிசம்” உருவாகப்போகிரது. மனமாற்றத்தால் அவர்களாகத் திருந்தினாலேயன்றி பாசிசம் அழியப்போவதில்லை.
இந்த சம்பவங்களுக்குக் காரணம் புதிய தாராளமயவாதம். இந்தியாவில் பாசிசத்தை வேரறுக்க ஒரே வழி; அமெரிக்காமை பாதுகாக்க ட்ரம்ப்பையே வணிக பாதுகாப்பைத் தவிர வேறெதையும் சிந்திக்கவிடாமல் செய்த, உலகையே நெருக்கடிக்குள் சிக்கவைத்த காலாவதியாகிப்போன தற்போதைய புதிய தாராளவாத முதலாளித்துவத்தைத் தாண்டிச் சிந்திக்க வேண்டும் (இதற்கு புதிய தாரளமயவாதத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு எதிர்க்க வேண்டும்).உழைக்கும் மக்கள் வாழ்க்கை நிலையில் உடனடியாக ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தல் என்பது புதிய தாராளமயவாதத்தை எதிர்ப்பதில் ஒருபடிநிலையாகும்.
இதனையெல்லாம் விவாதிப்பது இந்துத்துவாவை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டியது என்பதை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இதனையடைய மதசார்பற்ற எல்லா சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனாலும் இது முதல் படிதான். சமூகத்திலிருந்தும் அரசியலமைப்புகளிலிருந்தும் பாசிசத்தை விரட்ட இதுமட்டும் போதாது. மக்களைச் சுரண்டிக்கொண்டிருக்கும் தாராளமய முதலாளித்துவத்திடமிருந்து அவர்களைக் காக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நிவாரணங்களையும் வழங்க வேண்டும் (அவர்களுக்கான நிரந்தரத் தீர்வையும் வழங்கிட வேண்டும்). அப்போது தான் மோடி ஆட்சியும் பாசிச மரபை வேறோடு பெயர்க்கமுடியும்.
நன்றி: frontline
தமிழில் : இந்திர குமார்