பருவநிலை மாற்றத்தால் இந்த பூமி ஒவ்வொரு நாளும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. கடும் வெப்பமும், பெரும் மழையும், முன்னெப்போதும் இல்லாத வறட்சியும் நம்மை வாட்டுவதைக் காண்கிறோம். உலக நாடுகள் முதலில் அலட்சியமாக இருந்தாலும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் அறிக்கைகளில் இருக்கும் உண்மையைக் கண்டு தற்போது அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கத் துணிகின்றன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் வாகனங்கள் தற்போது 30% பங்கு வகிக்கின்றன. இது இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க உலகநாடுகள் முயல்கின்றன. பல முன்னேறிய நாடுகளில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது அதில் முக்கியமானது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துதல்.

இந்திய அரசு தற்போது அதற்கான செயல் திட்டங்களை வரையறை செய்து வருகிறது. இந்த நிலையில் 2023க்குள் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் 2025க்குள் அனைத்து இரண்டு சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு ஆலோசனை செய்வதாகச் செய்திகள் வந்துள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அரசின் இந்த முடிவுக்கு மோட்டார் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்தக் காலக்கெடு சாத்தியமில்லாதது மற்றும் தவறான நேரம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் இரண்டாவது பெரிய மோட்டார் நிறுவனமான பஜாஜ் இதிலுள்ள சிக்கல்களைச் சொல்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் ஆராய்ச்சிநிலைதான் உள்ளது, அவற்றைச் செயல்படுத்த மிகப்பெரிய முதலீடும் நாடு முழுவதும் அதற்கான கட்டமைப்பும் தேவை, பி‌எஸ்-6 ரக வாகனங்கள் அடுத்த வருடம் வார இருக்கும் நிலையில் தற்போது இது குழப்பத்தை உண்டாக்கும், கார் போன்ற பெரிய வாகனங்களைத்தான் முதலில் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் ஆனால் அதுபற்றி அரசு எதுவும் அறிவிக்கவில்லை என அந்நிறுவனத் தலைவர் ராஜீவ் பஜாஜ் கூறினார்.

டிவிஎஸ் நிறுவனத் தலைவரும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தேவைதான் ஆனால் அதற்கான கால நிர்ணயத்தை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும் அரசு இந்த முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தத் திட்டத்தை முதலில் அதிகம் மாசுபட்டுள்ள நகர்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் பின்னர் நாடு முழுவதும் செயல்படுத்தலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளது.

தற்போது ஹீரோ நிறுவனமும், ஹோண்டா நிறுவனமும் இது மிகவும் குறைந்த காலம் எனவும் நாங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளன.

ஒரு தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய முதலீடும், லாபங்களும் குறைவதை மட்டுமே இங்கு பார்க்கிறார்கள். ஆனால்  பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தப் பூமிக்கு ஏற்படும் பாதிப்பை அவர்கள் உணர வேண்டும். இப்போதாவது விழித்துக்கொண்டு அதைக் காக்க முயல வேண்டும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் நாம் அனைவரும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.