கொரோனோ வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 31

24/04/2020, வெள்ளி மாலை மணி 04 : 00

ஜோதிகாவை ஏனோ பிடிக்காது.  சந்திரமுகி படத்தில் அடிக்கடி காட்டப்படும் அவருடைய குளோஸ் அப் கண்களில் கொஞ்சம் கூட உயிருக்காது.  ஆனால் இறுதிக்கட்டத்தில் அவர் சிறப்பாக நடித்தாரென திரை அரங்கமே எழுந்து நின்று கைதட்டிய போது தலையில் அடித்துக் கொண்டேன்.  மொழி படத்தில் கூட அவ்வளவு ரிஸ்கான கேரக்டரை அவருக்கு கொடுத்திருப்பார் ராதா மோகன்.  அந்தப் படத்தை வெகுவாக ரசித்தாலும், மண்டியிருந்த அந்த ஜோதிகா வெறுப்பு மட்டும் தணியவில்லை !

அவருடையத் திருமணத்துக்கு பின் கொஞ்ச நாள் நடிக்க வராமலிருந்தார். மாறாக சூர்யாவோ இங்கு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.  நன்கு நடித்துக் கொண்டிருந்த மனிதர், சிங்கம் படத் தொடருக்குப் பின், முகம் இறுகி, தீனாவிற்குப் பிறகு அஜீத்திற்கு என்ன நேர்ந்ததோ, அதுவே சூர்யாவுக்கும் நிகழ்ந்தது.  அந்த விறைப்பான முகத்தில் பாவங்கள் வரவில்லை !

மாறாக, விளம்பரங்களில் தலைகாட்ட ஆரம்பித்திருந்த ஜோதிகாவோ, தன் இயற்கையான நடிப்பைக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்.  ஏதேது டான் டீனாயிடுவாங்க, டீன் டானாயிடுவார் போலயே என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் !

ஆனால், சூர்யாவின் சேவை உள்ளம் பற்றி அடிக்கடி வாசித்து மகிழ்வேன்.  அது பாரம்பரியமாக வருவதுதான்.  அவருடையத் தந்தை வழியே தொடர்ந்தாலும், சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் அதை விரிவாக்கினார்.  நிச்சயம் அந்த அறக்கட்டளையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் மேலே வந்திருப்பார்கள் என்பது திண்ணம் !

நீட் தேர்வு, அதை எதிர்கொள்ளத் தேவைப்படும் பிரத்யேக பயிற்சி வகுப்புகள், தேர்வுக்கு முன்னான

அதன் கெடுபிடி விதிமுறைகள், இவைகளால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  மருத்துவக் கல்வி எட்டாமலேயே போய்விடுமென்பதை  உள்வாங்கிய சூர்யா, இந்து தமிழ் திசையில் ஒரு முக்கியமான கட்டுரையை வரைந்திருந்தார்.  மிகச் சரியான பொழுதில் வந்த உன்னதமான கட்டுரை அது.  ஒவ்வொரு வாக்கியமும்  நீட் தேர்வு முறையை ஆதரிப்போரை விளாசும் சாட்டையாக இருந்தன.

ராமாயணம், மகாபாரதம் என மணிக்கணக்கில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றி இந்துத்துவம் போற்றியசிவக்குமாரின் ஏழு பரம்பரைகளும், முதன்முறையாக சங்கிகளின் வசைச் சேற்றால் கறைபட்டன !

வரி ஏய்ப்புச் சோதனைகள் புரிந்து அவரை அஜித்தாக்கி விடுவார்கள் எனப் பயந்தேன்.  வசைகளுக்குப் பின் சூர்யா பதினாறடி பாய்ந்தார்.  தொடர்ந்து கல்வியில் நுழைய முயன்ற பார்ப்பனீயத்தை எதிர்த்து எழுதினார்.  கஸ்தூரிரங்கனின் புதுக் கல்விக்கொள்கையினால் விளையப் போகும் தீங்குகளை மேடையில் ஆவேசமாக எடுத்துரைத்து கண் கலங்கினார் !

அதில், அதிக மாணவர்கள் வருகை இல்லாத பள்ளிகளை மூடி விடப் பரிந்துரை இருந்தது.  அப்படி மூடிவிட்டால், மலைப் பிரதேசங்களில் படிக்கும் மாணவர்கள் படிப்புக்காக பல கிமீ பாதுகாப்பற்ற வழிகளில் நடந்து சென்று படிக்க நேரும்.  அப்படி நேர்ந்தால் அவர்கள் படிப்பை நிராகரித்து, நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போய்விடுவோம் என்று மனம் வெதும்பி ஆவேசமாக எழுதினார்.

அதன்பின் சூர்யாவை பரம வைரியாகவே எச்.ராஜா, எஸ் வி சேகர் வகையறாக்கள் கருதி, இழிவாகப் பேச ஆரம்பித்தார்கள். எரியும் நெருப்பில் கற்பூரக் கட்டிகளைக் கொட்டியது போல ஜோதிகாவின் சொற்பொழிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது !

விருது வழங்கும் விழாவொன்றில் தான் கண்ட இரு இடங்களில் காணப்பட்ட வேறுபாட்டை ஒரு வரியில் சொல்லிக் கடந்துச் சென்றிருந்தார்.  தஞ்சைக்கு படப்பிடிப்பொன்றிற்காகச் சென்றவர், அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கும், அடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கும் சென்றிருக்கிறார்.  அவ்வளவு பெரிய கோவில் மிகப் பிரமாதமாக, சுத்தமாகப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை வியந்துப் போற்றிய ஜோதிகா, ஆனால் அரசு மருத்துவமனை அப்படியில்லாமல் அசுத்தம் மிகுந்து, போதிய இடமின்றி நெருக்கடி மிகுந்து காணப்பட்டிருக்கிறது.  அந்தக் கோயிலைப் போலவே அல்லவா அரசு மருத்துவமனையையும் பராமரித்திருக்க வேண்டும் ?

அவ்வளவுதான்.  அதைத்தாண்டி வேறெதுவும் அவர் இழிவாகப் பேசவேயில்லை.  ஆனால், அரபு நாட்டினர் கொடுத்த கசையடிகளால் தடுமாறிக் கிடந்த பக்தாள் கூட்டம், அப்படியே இதைத் தனக்கேற்பத் திரித்துக் கொண்டு ஜோதிகாவை பழி தீர்க்க ஆரம்பித்தன.  அதற்கான பிரதான காரணி அவர் தாய் ஓர் இஸ்லாமியர்.  உடைந்த வாயில் அவலைக் கொட்டியது போலானது அந்த உரை !

ஜோதிகாவைத் திட்டியோ / புகழ்ந்தோ நான் கண்ட பதிவுகளிலெல்லாம் சமீபத்தைய ஜோதிகாவின் புகைப்படங்களைக் கண்டேன்.  அவ்வளவு அழகாகவும், கம்பீரமாகவும் அவைகள் என் கண்களுக்குத் தெரிந்தன !

பழம் நழுவி தேனில் விழுந்தது போல், கலைஞர் டிவியில் நாச்சியார் படம்.  இன்றுதான் இந்தப் படத்தை முதன்முறையாகப் பார்க்கிறேன்.  காவல்துறை அதிகாரி வேடத்தில் ஜோதிகா.  அட்டகாசமான நடிப்பு.  அநீதி புரியும் அதிகார வர்க்கத்திற்கெதிராக கொதிக்கும் உடல் மொழியையும், வசனங்களையும் பேசி நடிக்க வேண்டும். அற்புதமாக வெளிப்பட்டிருந்தார்.  பாலாவின் இயக்கம்.மெய் சிலிர்க்க வைத்தது !

படத்தின் உச்சகட்டமாக டிஜிபி ஜோதிகாவிடம் ” எம்மா தாயீ, தான் பெத்து வளத்த பெண் குழந்தைகளையே அதுக வேற சாதிப் பையன காதலிச்சிடுச்சிங்கன்னு கழுத்தறுத்து போடுற மிருகங்கள் வாழுற ஊருக்கு உன்னை ட்ரான்ஸ்பர் பண்ணி விடுறேன், நீ அங்க போயி அவனுகள வெளுத்து வாங்கு.  அவன்களுக்கு நீதான் சரி ” என்று முடித்ததுதான் !

சூப்பர் பாலா, நீங்க மீண்டும் எழுந்து நின்னு வென்று காட்டணும் !

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்: